search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    இறைநம்பிக்கையின் திறவுகோல் இறையச்சம்

    “இறைவன் உங்கள் தோற்றத்தையோ, உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
    இஸ்லாம் தனது அனைத்து வழிபாடுகளையும் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கின்றது. இறையச்சமற்ற வழிபாடுகள், சுவரில் வீசிய பந்து போன்று ஏற்கப்படாமல் சென்ற வேகத்தில் திரும்பிவிடுவதைப் ‌பல்வேறு கோணங்களில் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் எச்சரிக்கை மணியாக ஒலிக்கின்றன. இறையச்சம் இல்லா வாழ்க்கை சீரான பாதையில் கடக்காது.

    ‘‘இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு பயந்து வாழ வேண்டுமோ, அவ்வாறு பயந்து வாழுங்கள். மேலும், நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணிக்க வேண்டாம்”. (திருக்குர்ஆன் 3:102)

    இறையச்சம் என்பது உள்ளம் சார்ந்த ஒன்று. உள்ளத்தில் இதன் தாக்கம் அதிகமானால், வெளிப்புற செயல்பாடுகள் செவ்வனே அமைந்துவிடுகிறன. இல்லையேல், வெளிப்புறம் வெறுமையாகக்‌ காணப்படும்.

    ‘முக அழகையோ, ஆடை அலங்காரங்களையோ இறைவன் பார்க்க விருப்பம் கொள்வதில்லை. உள்ளத்தில் எழும் நல்லெண்ணங்கள், இறைவனின் பொருத்தத்தைக் கருதி செய்கின்ற இறையச்ச உணர்வு இவற்றையே காண்கிறான். இதை, அடிப்படையாகக் கொண்டு நன்மைகளை ஏட்டில் பதிவு செய்கிறான்’, என்கின்றன நபி மொழிகள்.

    “இறைவன் உங்கள் தோற்றத்தையோ, உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    “அல்லாஹ்விடத்தில் உங்களில் கண்ணியமிக்கவர் உங்களில் மிகுந்த இறையச்சமுடையவர்களாகும்”. (திருக்குர்ஆன் 49:13)

    இதே பொருளினைக் கொண்டிருக்கும் ஒரு நபி மொழியும் சான்றாக அமைந்துள்ளது.

    “(நபி (ஸல்) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வை) அதிகம் அஞ்சுபவர் தான்’ என்று பதிலளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி).

    இறையச்சத்துடன் தன் வாழ்க்கை முறைகளைக் கொண்டு சென்றால், இம்மை மற்றும் மறுமையில் வெற்றிக்கான வழிகளைத் திறந்து விடுகின்றான். வாழ்வின் அடிப்படைத் தேவைகள் முதல் அனைத்து தேவைகளையும் இறைவன் பொறுப்பெடுத்து செய்து முடிக் கின்றான்.

    “எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 65:2-3)

    இறைநம்பிக்கையின் திறவுகோல் இறையச்சம். நம் வாழ்க்கை முழுவதும் இறையச்சத்தை பேணி இறைவனின் பொருத்தம் பெறுவோம்.

    ஏ.எச்.யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    Next Story
    ×