என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாட்கள் ஒழிந்துபோம். உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
    இறைமைந்தன் இயேசுவின் அருட்பொழிவுகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அவருடைய மலைப்பொழிவு ஆகும். இது மகாத்மா காந்தியடிகளின் மனம் கவர்ந்த பகுதியாகும்.

    இங்கு காணப்படும் ‘உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்’ என்னும் அறிவுறுத்தல் அவருடைய மனதில் மாற்று சிந்தனையை விதைத்தது. அகிம்சை, சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற உயரிய தத்துவங்களுக்கு இப்போதனை அடித்தளமாய் அமைந்தது.

    துயருறுதல் கடவுளின் தண்டனை அல்ல

    ‘துயருறுதல்’ என்ற இவ்வார்த்தை திருமறையில் அதிகமாக மரண இழப்பின் நிமித்தமாக வருகின்ற வேதனையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. தாங்கமுடியாத பேரிழப்பின் வலி, மகா கொடிய துன்பம் போன்றவற்றையும் குறிக்கின்றது.

    துயரப்படுதல் என்பது கடவுளுடைய சினத்தின் பிரதிபலிப்போ, தண்டனையோ, சாபத்தின் வெளிப்பாடோ அல்ல.

    துயரப்படுகிறவர்கள் கடவுளால் சோதிக்கப்படுகிறார்கள், கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் ஆதலால் தான் ஒடுக்கப்படுகிறார்கள், நொறுக்கப்படுகிறார்கள், தங்கள் வாழ்வில் பேரிழப்புகளையும், பேராபத்துகளையும், கொள்ளை நோய்களையும், சொல்லொணா வேதனைகளையும் அனுபவிக்கிறார்கள்.

    இது கடவுளால் அவர்களுக்கென்று நியமிக்கப்பட்டது; எனவே எப்படியாயினும் அதை வேதனையோடு அவர்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இதிலிருந்து விடு படவோ இதை மறுப்பதற்கோ இல்லை என்ற எண்ணம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் காணப்பட்டது.

    இந்த சிந்தனையை ஆண்டவர் இயேசு மாற்றி ‘துயருறுவோர் இறைவனின் பேறுபெற்றவர்கள்’ என்ற மாற்றுச் சிந்தனையை மக்களின் உள்ளங்களில் விதைக்கின்றார்.

    துயருறுவோரை தேடி வந்து மீட்ட கடவுள்

    துயரப்பட்டவர்கள் அன்றைய சமூகத்தில் ஒடுக்கப்பட்டார்கள், ஒதுக்கப்பட்டார்கள். கடவுளை அறியாதவர்களாக, கடவுளை இழந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.

    இழந்து போனவர்களைத் தேடி மீட்கவே மானிடமகன் இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார். சிறைபட்டோர், ஒடுக்கப்பட்டோர் விடுதலை அடையச்செய்ய கடவுளால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்.

    பார்வையிழந்தோர், காது கேளாதோர், பேச இயலாதோர், நடக்க முடியாதவர்கள், கொடிய நெடுநாள் நோயினால் பீடிக்கப்பட்டவர்கள், அலகையினால் அவதிப்பட்டோர், மரணப்படுக்கையிலிருந்தோர் என உடலளவில் துயருற்றோரைக் கண்டு மனதுருகி அவர்களுக்கு விடுதலை அளித்தார்.

    ஆயக்காரர்கள், மீனவர்கள், ஏழைகள், தரித்திரர் என தங்கள் தொழில், வாழ்க்கை அமைப்புமுறை நிமித்தம் அன்றைய சமூகத்தில் தங்கள் சுய உரிமைகளை இழந்து புறக்கணிக்கப்பட்டு மனதளவில் துயருற்றோரை தம் நண்பர்களாக, உடன்பிறப்புகளாக ஏற்றுக்கொண்டு அவர் களுக்கும் சமூக விடுதலையை வழங்கினார்.

    துயருறுவோருக்காக பரிதபிக்கிற கடவுள்

    ‘இதோ! உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்; கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்; ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்; அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும் புகழும் பெறச் செய்வேன் (செப்பனியா 3:19)’ என்கிறார் கடவுள்.

    ஆம் துயருறுகின்றவர்கள் மீது கடவுள் அதிகமான கரிசனைக் கொள்கிறார். அவர்களுக்காக பரிதபிக்கின்றார். அத்தோடு கடவுள் அவர்களுக்கு சிறந்த பாதுகாவலராக, உற்ற துணையாய் இருக்கின்றார்.

    துயருறுகிற நீங்கள் பேறுபெற்றோர்

    துன்பங்களும், துயரங்களும் நமக்கு வேதனைகளையேத் தருகிறது. எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள்?, ஏன் இத்தனை துயரங்கள்?. எனக்கு ஏற்பட்ட இழப்பு களையும், தோல்விகளையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே? என்ற வேதனையும், விரக்தியும், முயற்சியின்மையும், சகமனிதர்களைக் குறித்த வெறுப்புணர்வும் காணப்படலாம்.

    ஆனால் ‘சிரிப்பை விட துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம்; ஆனால், அது உள்ளத்தை பண்படுத்தும்’ (சஉ7:3) என்கிறது திருமறை.

    துயரங்கள் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தருகிறது. அந்த அனுபவங்கள் நம் உள்ளத்தையும், உடலையும் பண்படுத்துகிறது.

    ‘அனுபவம் ஒரு கடுமையான வாத்தியார்; அது சோதனையைத் தந்த பிறகு தான் பாடத்தைப் போதிக்கிறது’ என்கிறார் பெர்னாட்ஷா. வாழ்வில் துயரத்தினை அனுபவித்து, அதன் மேன்மையை உணர்ந்த அரசன் தாவீது ‘எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே’ என்கிறார்.

    ‘ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம்’ (ஏசாயா26:16).

    ஆம், எவ்வளவு பெரிய உண்மையிது. துன்பங்கள், துயரங்கள் வருகின்ற வேளையிலே கடவுளை அதிகமாகத் தேடுகின்றோம். நாம் கடவுளால் தண்டிக்கப்படுகின்றோம் அல்லது சோதிக்கப்படுகிறோம் என்று உணர்கின்ற தருணங்கள் தவிர்த்து, மற்ற நேங்களில் நாம் இறைவனின் உதவிக்காக ஏங்குவதும், காத்திருப்பதும் இல்லை.

    வேண்டுமானால் உங்களையே நீங்கள் பரிசோதித்து பார்க்கலாம். நீங்கள் அதிகமாக கடவுளை நாடித் தேடி, திருமறை வாசித்து, கடவுளிடம் கதறி மன்றாடி, அவரோடு இணைந்திருந்த நாட்கள் நிச்சயமாக உங்கள் துயரக் காலங்களாகவே இருக்கும்.

    ஆம், நம் துயர் மிகுந்த காலங்களிலே நாம் கடவுளின் அன்பையும், கருணையையும், ஆற்றலையும் முழுமையாக உணர்ந்து அனுபவிக்கின்றோம். வியாதி, தனிமை, கடன் சுமை போன்றவைகளினால் துயருற்று அழுதுகொண்டிருக்கிற உங்களுக்கு கடவுள் ஆறுதல் அளிக்கிறார்.

    ஏனெனில் இப்பொழுது இருக்கிற உங்கள் துயரம் உங்களுக்கு நிரந்தரமானதல்ல.

    உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாட்கள் ஒழிந்துபோம். உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

    அருட்பணி ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.
    யோவான் இயேசுவின் பிரியத்துக்குரிய சீடர்களில் ஒருவர். இயேசுவோடு இணைந்து பயணித்தவர். விவிலியத்தின் மிக முக்கியமான புத்தகமான யோவான் நற்செய்தியை எழுதியவர் இவர் தான்.
    யோவான் இயேசுவின் பிரியத்துக்குரிய சீடர்களில் ஒருவர். இயேசுவோடு இணைந்து பயணித்தவர். விவிலியத்தின் மிக முக்கியமான புத்தகமான யோவான் நற்செய்தியை எழுதியவர் இவர் தான். பிற்காலத்தில் அவர் எழுதிய திருமுகங்களில் ஒன்று இது. இதன் ஆசிரியர் யோவான் என்பதை ஆதித்திருச்சபை தந்தை இரேனியுஸ் போன்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர். கி.பி. 90களில் இதை எழுதினார் என நம்பப்படுகிறது. யோவான் நற்செய்திக்கும் இதற்கும் நிறைய ஒப்புமைகளும், சில வேற்றுமைகளும் உள்ளன.

    திருச்சபையில் எழுந்த தவறான சிந்தனைகளுக்கு விளக்கம் கொடுப்பதற்காக எழுதப்பட்ட கடிதமாக இது இருக்கலாம். குறிப்பாக அந்தக் காலத்தில் எழுந்த அறிவுத்திறன் கொள்கைக்கு எதி ராகவும், அதைப் பரப்பிய செரிந்துஸ் என்பவருக்கு எதிராகவும் இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கலாம் என சில விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    செரிந்துஸ் என்பவர் இயேசுவின் மனிதம் கலந்த இறை தன்மையை மறுதலித்தவர். உலகம் என்பது கடவுளால் படைக்கப்படவில்லை. அது இன்னொரு சக்தியால் படைக்கப்பட்டது. இயேசு இறை தன்மையோடோ, இறைவனாலேயோ படைக்கப்படவில்லை. அவர் சாதாரண மனிதனாகப் பிறந்தார். அவரது ஞானம், வாழ்க்கை, தூய்மை இவற்றின் காரணமாக திருமுழுக்கின் போது இறைவன் இவர் மீது இறங்கினார். அதனால் அவர் புதுமைகள் செய்து திரிந்தார். கடைசியில் சிலுவை மரணத்திற்கு முன்பு கடவுள் இவரை விட்டுப் பிரிந்து போனார் என்பதே செரிந்துஸ் சொன்ன தத்துவமாகும்.

    இதை மறுத்து, இறைவன் மனிதனாகவும், இறைவனாகவும் இருந்தார் என்பதை யோவான் வலி யுறுத்துகிறார். அதுவே விசுவாச வாழ்வுக்கு முக்கியம் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டுகிறார். இயேசுவே கிறிஸ்து எனும் விசுவாசம் வேண்டும் என அறிவுறுத்துகிறார். சக மனித அன்பு இந்த நூலில் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அன்பைப் பற்றி அழகாகப் பேசுவதால் இதை அன்புக் கடிதம் என்றும் அழைப்பதுண்டு.

    அந்தி கிறிஸ்து பற்றி மிகத் தெளிவாக எழுதி வைத்தவர் யோவான் தான்.

    “ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள்” என்கிறார் அவர்.

    முதல் நூற்றாண்டிலேயே ‘எதிர்கிறிஸ்து’ உலகில் எழுந்திருப்பதாக யோவான் குறிப்பிடுகிறார். ‘இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தார்’ எனும் உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களை யோவான் ‘எதிர்கிறிஸ்து’ எனக் குறிப்பிடுகிறார். கவனிக்க, ஒருவரல்ல ஒரு விசுவாசத்தை எதிர்ப்பவர்கள் அனைவருமே எதிர்கிறிஸ்துகள் என்பதே அவரது போதனை.

    ‘இயேசுவை பிரதிபலிக்கிறேன்’ என சொல்லிக்கொண்டு, உண்மையான இயேசுவைப் பிரதிபலிக்காமல் இருக்கின்றவர்களையும் இந்த அந்தி கிறிஸ்து எனும் அடையாளம் குறிப்பிடுகிறது.

    “இதுவே இறுதிக்காலம். எதிர்க்கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக்காலம் இதுவேயென அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல” என 1 யோவான் 2:18 குறிப்பிடுகிறது.

    எதிர் கிறிஸ்து ஒற்றை நபர் அல்ல, இறைவனை மறுதலிக்கும் யாரும் எதிர்கிறிஸ்துவே என்பதை யோவான் அறுதியிட்டுக் கூறுகிறார். ஆதித் திருச் சபையையும், அவர்களது சிந்தனைகளையும், அவர்களது சித்தாந்தங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் பிரிந்து போன அனைவரையும் அவர் எதிர் கிறிஸ்து என அழைக்கிறார்.

    இயேசுவோடு பயணப்பட்ட யோவான் ஐந்து முறை அந்தி கிறிஸ்து, எதிர்க்கிறிஸ்து எனும் பதத்தை பயன்படுத்துகிறார். ஐந்துமே இறைமகனின் இறைத்தன்மையை மறுதலிக்கும் மக்களைக் குறிக்கிறதே தவிர ஒரு தனி நபரையோ, இயக்கத்தையோ குறிக்கவில்லை என்பதே யோவான் திருமுகம் சொல்லும் உண்மையாகும்.

    இயேசுவின் சீடர்களில் நீண்ட நாட்கள் உயிர்வாழ்ந்தவர் இவர் தான். அன்னை மரியாளை கடைசிவரை கவனித்துக் கொண்டவரும் இவர் தான். அன்னை மரியாள் எபேசுவில் இறந்தார் எனவும், அப்போது யோவான் உடனிருந்தார் எனவும் கூறுகிறது கிறிஸ்தவ வரலாறு.

    இந்தக் கடிதங்களை எழுதும் போது யோவான் வயது முதிர்ந்தவராக இருந்தார். இயேசுவின் சீடர்களில் மிச்சமிருந்தவரும் இவர் தான். எனவே மிக முக்கியமான சில போதனைகளை எழுதுவது தேவை என கருதி இதை எழுதியிருக்கலாம்.

    மிகத் தெளிவாக வாழ்வு-சாவு, இருள்-ஒளி, உண்மை-பொய், கடவுளோடான அன்பு-உலகோடான அன்பு, அன்பு-வெறுப்பு, கிறிஸ்து- அந்தி கிறிஸ்து, சொர்க்கம்- நரகம் என எழுது கிறார்.

    கொஞ்சம் இருள், கொஞ்சம் ஒளி என இரண்டும் கலந்த வாழ்க்கை என்பது கிறிஸ்தவத்தில் சாத்தியமில்லை என்பதே அவர் நிலைநிறுத்தும் போதனையாகும்.

    ‘கடவுளே அன்பு’ எனும் வார்த்தைப் பிரயோகம் இந்த நூலின் சிறப்பம்சம். ஆன்மிக நிலையில் எப்படியெல்லாம் நாம் வளரவேண்டும், எதையெல்லாம் மனதில் கொள்ளவேண்டும் என்பதை மிகத் தெளிவாக இந்த நூல் நமக்கு விளக்குகிறது.

    -சேவியர்
    எப்போதும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி கடற்கரை தற்போது ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களுள் ஒன்றான இந்த பேராலயத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வருகை தருகிறார்கள்.

    எப்போதும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி கடற்கரை தற்போது ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு வழக்கமாக கோலாகலமாக கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகை இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் இன்றி களையிழந்து காணப்பட்டது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பூட்டப்பட்ட பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் திருப்பலி நடந்தது. அப்போது ஏசு சொரூபம் திரையால் மூடப்பட்டிருந்தது. இரவு 11.20 மணிக்கு திரை விலக்கப்பட்டு ஏசு கையில் சிலுவை கொடியை ஏந்தியவாறு காட்சி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து ஏசு உயிர்த்தெழுந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி நடந்தது. இதில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. 
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் களை இழந்தது.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டர் பண்டிகையும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. மேலும், வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களில் நடக்கும் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கோப்பு படம்

    இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் நேற்று கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

    இதனால், கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு செல்லாமல் தங்கள் வீடுகளிலேயேயும், ஆலயங்களுக்கு வெளியே நின்றும் பிரார்த்தனை செய்து விட்டு சென்றனர். இதனால் வழக்கமான ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை இழந்து காணப்பட்டன.

    ஆனாலும், சில தேவாலயங்களில் நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர்.
    நாளை ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. நம் ஆண்டவராகிய இயேசு உயிர்ப்பு குறித்து நற்செய்தியாளர் யோவான் எழுதிய நூலிலிருந்து அந்த நிகழ்வை வாசிப்போம்.
    விபத்து, நோய்கள் ஆகியவற்றால் கடும் துன்பத்தில் உழன்று சாவின் விளிம்பு வரை சென்று திரும்பியவர்களை ஒரு பேச்சுக்காக “ செத்துப் பிழைத்தவர்கள் “ என்கிறோம். ஆனால் இவர்கள் மரணத்தை வென்றவர்கள் கிடையாது. உலகில் மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, மரணித்து அடக்கம் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் கடந்தபின் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றால், அவர் இறைமகன் இயேசு மட்டுமே.

    தன் சாவை எப்படி அவர் முன்னறிவித்தாரோ அதேபோல் “நான் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்” என்பதையும் முன்னறிவித்தார். இறைமகன் இயேசுவின் முன்னால் மரணம் மண்டியிட்டது. “சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது, இயேசு உயிர்த்தார், அல்லேலூயா” என்னும் வெற்றிப் பாடல் நம் உள்ளங்களில் இந்த ஈஸ்டர் திருநாளில் ஒலிக்கின்றது. ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் காட்டும் உட்பொருள் பற்றி நம்மில் எத்தனை பேர் முழுமையாக அறிந்திருக்கிறோம். அதைப் பகிரும் முன் நம் ஆண்டவராகிய இயேசு உயிர்ப்பு குறித்து நற்செய்தியாளர் யோவான் எழுதிய நூலிலிருந்து அந்த நிகழ்வை வாசிப்போம்.

    தலையை மூடியிருந்த துண்டு

    வாரத்தின் முதல்நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.

    அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை(யோவான் 20: 1-9).

    மீண்டும் வருவார்

    யோவானின் இந்தப் பதிவு நமக்கு என்ன உணர்த்துகிறது…

    பாலஸ்தீன நாட்டின் பாரம்பரியப்படி, ஒருவர் இறந்த மூன்றுநாளுக்குப்பிறகு, கல்லறைக்கு அவருடைய உறவினர்கள் சென்று வருவது வழக்கம். ஏனென்றால், முதல் மூன்று நாட்கள் இறந்தவரின் ஆவி, கல்லறையைச் சுற்றிவந்து, தன்னுடைய உடலுக்குள் மீண்டும் செல்ல முயற்சி செய்யும் என்பது யூதர்களின் நம்பிக்கை. ஆனால், மூன்று நாட்களுக்குப்பின் உடல் அழுகிவிடுவதால், ஆவிக்கு தன்னுடைய உடலை அடையாளம் காணமுடியாமல், தனது உலகத்துக்குத் திரும்பிவிடும்.

    வாரத்தின் முதல் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. யூதர்களுக்கு ஓய்வுநாள் சனிக்கிழமை. ஓய்வுநாள் முடிந்தவுடன் விடியற்காலையிலேயே, மரியா மக்தலேனா கல்லறைக்குச்செல்கிறாள். இயேசுவின் உடலைக்காணவில்லை என்றவுடன், அவள் திரும்பிவந்து பேதுருவிடமும், யோவானிடமும் சொல்கிறாள்.

    யோவான் அங்கே, துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டதாகவும், அத்துண்டு மற்றத்துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச்சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பார்க்கிறோம். விவிலியத்திலே இதற்குப் பொருள் இருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில், தலைவர் வீட்டிலே சாப்பிடும்போது, கைதுடைப்பதற்கான துணி மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர் சாப்பிட்டவுடன் கைத்துணியைத் துடைத்தால், அதை மீண்டும் மடித்து வைத்துவிட்டுச்சென்றுவிடுவார்.

    ஒருவேளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, யாராவது வந்தால், அந்தத்துணியை அப்படியே மடிக்காமல், சுருட்டிப் போட்டுவிட்டுச்சென்றுவிடுவார். இதனுடைய பொருள், அவர் மீண்டும் வருவார் என்பதே. இதைத்தான் திருத்தூதர்பணி நூல் அதிகாரம் 1, வசனம் 11-ல் பார்க்கிறோம்.. “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லாவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்”. ஆக, இயேசு மீண்டும் வருவார் என்கிற செய்தி விவிலியம் வழியாக நமக்குத் தரப்படுகிறது.

    பெண்களுக்குத் தரப்பட்ட செய்தி

    இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை முதலில் அறியும் பேறு மரியா மக்தலேனா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகிய பெண்களுக்குத்தான் கிடைத்தது. ஆண்களே பெண்களைவிட வீரமும், துணிவும் நிறைந்தவர்கள் என்னும் போலிப் பரப்புரையை வரலாற்றில் பல பெண்கள் உடைத்தெறிந்திருக்கிறார்கள். இந்தப் பெண்களும் அவ்வாறே!

    ஆண் சீடர்கள் அஞ்சி நடுங்கி, ஒளிந்துகொண்டபோது, இந்தப் பெண்கள் துணிவுடன் “காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் கல்லறைக்குச் சென்றார்கள்”. எங்கே அன்பு உள்ளதோ, அங்கே அச்சம் இல்லை என்னும் யோவானின் (1 யோவா 4: 18)சொற்களை இவர்கள் எண்பித்துள்ளனர். இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் என்னும் நற்செய்தியை வானதூதர் வழியாக இவர்கள் பெற்றுக்கொண்டனர்.

    அன்பு அச்சத்தை வெல்கிறது, அன்பு சாவையும் வெல்கிறது. இயேசு தந்தையின்மீது கொண்ட அன்பினால் சாவின் மீதிருந்த அச்சத்தை வென்றார். சாவையும் வென்றார். மரியா மக்தலேனா, இயேசுவின்மீது கொண்ட அன்பினால் சாவு, இருள், கல்லறை, பிலாத்துவின் வீரர்கள் என்னும் அனைத்து அச்சங்களையும் வென்றார். இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை முதன்முதலில் அறிந்துகொண்டார்.

    மறைபொருள்

    ‘கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்’ என்பது கிறித்தவ விசுவாசத்தின் மறைபொருள். தளர்ந்து போயிருக்கிற, துன்பங்களால் வாழ்வே வெறுத்துப் போயிருக்கிற ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய நற்செய்தி. கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற செய்தியே மனிதவாழ்வுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இயேசுவின் உயிர்ப்பிலேதான் மீட்பின் வரலாறு நிறைவடைகிறது.
    கொரோனா ஊரடங்கையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி ஆராதனையை அந்தந்த ஆலய பங்குத்தந்தைகள் மற்றும் இணை பங்குத்தந்தைகள் மட்டும் நிறைவேற்றினர்.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டர் பண்டிகையும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான நேற்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி ஆராதனையை அந்தந்த ஆலய பங்குத்தந்தைகள் மற்றும் இணை பங்குத்தந்தைகள் மட்டும் நிறைவேற்றினர். சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. கிறிஸ்தவர்கள் யாரும் ஆலயங்களுக்கும் செல்லவில்லை.

    கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை ஆயர் இல்லத்தில் உள்ள ஆலயத்தில் புனித வெள்ளி ஆராதனை நிறைவேற்றினார். இது நேரலையாக மறைமாவட்ட தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்ட புனித வெள்ளி நிகழ்ச்சியை பார்த்து வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்தனர். கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா நிறைவேற்றிய புனித வெள்ளி ஆராதனை ஏற்கனவே வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு நேற்று காலை 9 மணி முதல் 12 மணி வரை ஆன்லைன் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில் கூறிய 7 வார்த்தைகளையும் தியான உரைகளாக ஆராதனையின் போது தியானிக்கப்பட்டன.
    தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவாலயங்களில் பிரார்த்தனைகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக யு-டியூப் மூலம் இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள்.
    கிறிஸ்தவர்களின் தவக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இன்று புனித வெள்ளி தினம். ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட இந்த தினத்தில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று நாள் முழுக்க பிரார்த் தனைகளில் ஈடுபடுவார்கள்.

    ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவாலயங்களில் பிரார்த்தனைகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக யு-டியூப் மூலம் இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள்.

    அந்தந்த தேவாலயங்களில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ்-அப்பில் குழு அமைத்துள்ளார்கள். அந்த குழுவில் புனித வெள்ளி பிரார்த்தனை யு-டியூப் சானல் எந்த முகவரியில் உள்ளது என்பதை பகிர்ந்துள்ளனர். அதன்படி அவரவர் வீடுகளில் இருந்தே யு-டியூப் சானலில் இன்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முக்கியமாக பிரார்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு தேவாலயங்களுக்கு தயாராகி செல்வார்களோ அதே உணர்வோடு வீடுகளிலும் அமர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என்று போதகர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    அதன்படி அனைவரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். ஆன்டிராய்டு வசதியுடன் கூடிய டி.வி. வைத்திருப்பவர்கள் டி.வி.யிலேயே ஒளிபரப்ப வைத்து அனைவரும் டி.வி. முன்பு அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அந்த வசதி இல்லாதவர்கள் செல்போனில் யு-டியூப்பை பார்த்து பிரார்த்தனை செய்தனர்.
    இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளியாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த புனித வெள்ளியில், இயேசு சிலுவையிலே சொன்ன 7 வார்த்தைகளை குறித்து தியானிப்போம்.
    இயேசு இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்தார். இந்த சிலுவை மரணம் எதற்கு என்று இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் தியானித்து வருகிறோம். எனவே இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளியாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த புனித வெள்ளியில், இயேசு சிலுவையிலே சொன்ன 7 வார்த்தைகளை குறித்து தியானிப்போம்.

    இயேசு சிலுவையில் அறையப்பட்டு பாடுகளை அனுபவித்து கொண்டிருந்த நேரத்தில் கல்வாரி சிலுவையில் இருந்து அவர் சொன்ன முதல் வார்த்தை, அங்கு கூடியிருந்த ஜனங்களை பார்த்து, ‘இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள், இவர்களை மன்னியும்’ என்று பிதாவிடம் சொல்கிறார். 2-வதாக இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் மனந்திருந்தியதால் அவனை பார்த்து ‘இன்றைக்கு நீ என்னோடு கூட பரதீசிலிருப்பாய்’ என்று சொல்கிறார். 3-வதாக தன் ஜீவன் போகப்போகிறது, தன் தாய் என்ன செய்வாள் என்று நினைத்து தன் தாயை பார்த்து, ‘ஸ்திரியே அதோ உன் மகன் என்றார். பின்பு அந்த சீஷனை பார்த்து அதோ உன் தாய் என்றார்’ என்று பார்க்கிறோம்.

    4-வதாக பிதாவை நோக்கி, ‘ஏலீ, ஏலீ லாமா சபக்தானி (என் தேவனே, என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர்) என்று மிகுந்த சத்தமாய் கூப்பிடுகிறார்’. 5-வதாக உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக பாவத்தை சுமந்து சிலுவையில் உயிர் போகும் நிலையிலும், இந்த மக்கள் பாவத்தையே நோக்கி செல்கிறார்களே என்றும், இன்னும் நிறைய ஜனங்களின் ஆத்மாவை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் ‘தாகமாய் இருக்கிறேன்’ என்று கூறுகிறார். பின்னர் 6-வது வார்த்தையாக உலகத்தில் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாம் பிதாவின் சித்தத்தின் படி நிறைவேற்றப்பட்டது என்பதை விளக்கும் படியாக ‘முடிந்தது’ என்று கூறுகிறார். கடைசியாக 7-வது வார்த்தை, ‘பிதாவே உம்முடைய கைகளில் என்னுடைய ஆவியை ஒப்புவிக்கிறேன்’ என்று மகா சத்தமாய் கூப்பிட்டுச் சொன்னார் என்று பார்க்கிறோம்.

    ஆம், இயேசு ஆரம்பம் முதல் முடிவு பரியந்தம் பிதாவின் சித்தத்தின் படியே வாழ்ந்து அவருக்காக தன் உயிரையே ஜீவபலியாய் ஒப்புக் கொடுத்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    எனவே நாமும் இந்த உலகத்தில் உள்ளவைகளுக்கு அடிமையாகாமல் தேவனுக்கு பயந்து அவருடைய ராஜ்யத்தில் சேர்வதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும். வேதத்தில் 2-கொரிந்தியர் 5-ம் அதிகாரம் 1-ம் வசனத்தில், ‘பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையில்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

    ஆம், பிரியமானவர்களே இந்த உலகத்தில் உள்ளவைகள் நமக்கு நிரந்தரமல்ல. இந்த பாவ வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நித்தியமான பரலோக ராஜ்ஜியத்தில் உள்ளவற்றை இழந்து விடக்கூடாது என்பதை அறிந்து இந்த நாட்களில் நம்முடைய உலக வாழ்க்கையை வெறுத்து, இந்த புனித வெள்ளியில் இயேசு சிலுவையில் சொன்ன 7 வார்த்தைகளையும் தியானித்து, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்வோம் ஆமென்.

    சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
    இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாளில் தம்முடைய சீடர்களோடு இணைந்து இரவு உணவு அருந்தும் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியாக இந்த பெரிய வியாழன் அமைந்துள்ளது.

    இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாளில் தம்முடைய சீடர்களோடு இணைந்து இரவு உணவு அருந்தும் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியாக இந்த பெரிய வியாழன் அமைந்துள்ளது. இது குறித்து வேதாகமத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி பகுதிகளில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

    இந்த பெரிய வியாழன் ஆண்டு தோறும் இயேசு உயிர்தெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகிற ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய 6 நாட்களை பரிசுத்த நாட்களாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து அதில் இந்த பெரிய வியாழனையும் நினைவுகொள்கின்றனர்.

    பெரிய வியாழன் இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுதல் (ஈஸ்டர்) விழாவின் முதல் நாளாகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி, மூன்றாம் நாள் புனித சனி என்று அழைக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் தங்கள் தேவாலயங்களில் இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடைபிடிக்கின்றனர்.

    இப்படி இந்த பெரிய வியாழன் அன்று இயேசு 3 முக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார். முதலில் இயேசு பெரிய வியாழன் அன்று தன்னுடைய சீடர்களுடன் உணவு உட்கொண்டு நற்கருணை எண்ணும் அப்பம் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறார். பின்னர் இயேசு தம்முடைய சீடர்களின் கால்களை கழுவுகிறார். பின்னர் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்துகிறார்.குருத்துவம் என்றால், இயேசு தம்முடைய சீடர்களுக்கு ஏற்படுத்திய அப்பம் கொடுக்கும் நிகழ்வை, இனி எல்லா தேவாலயங்களிலும் குருவானவர் (போதகர்) ஏற்படுத்தி அவர்கள் தான் எல்லா ஜனங்களுக்கும் அப்பம் கொடுக்கும் நிகழ்வை பின்பற்ற வேண்டும்.

    இவர்கள் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து அவர்களுக்கு பணிசெய்யும் பொறுப்பையும் போதகர்களிடம் ஒப்படைத்தார் என்பது தான் குருத்துவத்தை ஏற்படுத்துதல் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே தான் இயேசு உயிர்த்தெழுந்த முந்தைய வியாழக்கிழமையை பெரிய வியாழன் என்று போற்றப்படுகிறது.

    சகோ.பெலிக்ஸ், பலவஞ்சிபாளையம்.
    இயேசுவானவர் நம்முடைய ஆத்துமாவை தேவனுக்கு ஏற்றதாய் மாற்ற அவர் நம்மீது தாகமாய் இருக்கிறார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
    ஒருவருக்கு உடலில் சிறிது காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்த ஆரம்பித்தால் நாம் முதலில் செய்வது தண்ணீர் கொடுப்பது. ஏன் என்றால் தண்ணீர் குடித்தால் உடம்பில் இருந்து வெளியில் வரும் ரத்தம் நின்று விடும். உடல் சோர்வடையாது என்பதற்காகத்தான். ஆனால் இயேசுவோ சிலுவையில் ரத்தம் சிந்திக் கொண்டிருந்த போது நம்முடைய உயிர் நம்மை விட்டு பிரிய போகிற வேளையில், 5-வது வார்த்தையாக தாகமாயிருக்கிறேன் என்று கூறுகிறார்.

    இப்படி இயேசுவானவர் தாகமாய் இருக்கிறேன் என்று கூறியது எதற்காக என்று நாம் தியானித்து பார்க்க வேண்டும். பிதாவானவர் இயேசுவை இந்த உலகத்தில் அனுப்பினதின் நோக்கம் இந்த உலகத்தில் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனங்களின் ஆத்துமாக்களை தன்வசம் ஆதாயப்படுத்திக் கொள்ளவே அனுப்பினார். எனவே தான் இந்த உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே என்று இயேசுவை குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    எனவே தான் இந்த உலகத்தின் மொத்த பாவத்திற்காகவும் சிலுவையில் அறையப்பட்டிருந்த போதும், இந்த மக்கள் இன்னும் பாவம் செய்து கொண்டிருக்கிறார்களே, என்று நினைத்து இன்னும் அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வேண்டும் என்று அவர் சொன்ன வார்த்தைதான் தாகமாய் இருக்கிறேன். எனவே இயேசுவானவர் நம்முடைய ஆத்துமாவை தேவனுக்கு ஏற்றதாய் மாற்ற அவர் நம்மீது தாகமாய் இருக்கிறார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

    இப்படியாக பிதாவானவர் என்னவெல்லாம் தீர்க்கதரிசனங்களை கொண்டு சொன்னாரோ, அதை எல்லாம் இயேசு இந்த உலகத்திலே நிறைவேற்றி விட்ட திருப்தியில் ‘முடிந்தது’ என்று சிலுவையிலே 6-ம் வார்த்தையாக சொல்கிறார்.

    முடிந்தது என்றால், நம்முடைய வாழ்க்கையில் பிறந்தது முதல் பேரன், பேத்திகள் என்று பார்த்த பிறகு, எனக்கென்ன எல்லாம் பார்த்து முடிந்தது இனி எனக்கென்ன கவலை என்று நிம்மதி பெருமூச்சு விடும் பெரியோர்களை நாம் பார்க்க முடியும். இதே போல தான் இயேசுவும் இந்த உலகத்தில் என்ன நோக்கத்திற்காக வந்தாரோ அந்த நோக்கத்தை பல்வேறு பாடுகளுக்கு மத்தியிலும் அதை நிறைவேற்றி விட்ட திருப்தியில் பிதாவிடம் தன்னை குறித்து சொன்ன வார்த்தை இந்த உலகத்தில் நான் ஆவிக்குறிய ஓட்டத்தை முடித்து விட்டேன் என்று சொல்வதே முடிந்தது என்பது ஆகும்.

    எனவே நாமும் இந்த உலகத்தில் பிறந்தது முதல் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். இயேசு இந்த உலகத்தில் வந்த நோக்கத்தை நிறைவேற்றி கடைசியாக சிலுவையிலே தன் வெற்றியை முடித்தது போல நாமும் அவர் நமக்காகத்தான் இவ்வளவு பாடுகளை அனுபவித்துள்ளார் என்பதை உணர்ந்து அவருக்கு கீழ்படிதல் உள்ள பிள்ளைகளாக வாழ முற்படுவோம் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.

    தேவ பிள்ளைகளே நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும். அந்த ஜெபம் யாரிடம் போய் சேர வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
    பொதுவாக வயதானவர்கள் தங்கள் மரண படுக்கையில் படுத்திருந்தால் தன் பிள்ளைகளை அழைத்து எல்லோரும் நல்லா இருங்கள் என்னை பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொல்வது வழக்கம். இது போல் தான் இயேசுவும் சிலுவையில் ஆணிகளில் அறையப்பட்ட நிலையில், சிலுவையின் அருகில் நின்றிருந்த தன்னுடைய தாயையும், அருகே நின்ற அவருக்கு அன்பாய் இருந்த சீஷனையும் பார்த்து, தன் தாயை நோக்கி, ‘ஸ்திரியே அதோ உன் மகன் என்றார். பின்பு அந்த சீஷனை பார்த்து அதோ உன் தாய் என்றார். அந்நேரம் முதல் அந்த சீஷன் இயேசுவின் தாயை தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். இதுதான் இயேசு சிலுவையில் சொன்ன மூன்றாவது வார்த்தையாகும். இந்த வார்த்தையை கேட்டவுடன் இயேசுவின் தாய் மெய்யான ஆறுதலாய் இருந்தார் என்று கூறப்படுகிறது.

    இந்த 3-ம் வார்த்தையை இயேசு சிலுவையிலே சொல்லி முடித்து விட்டு தன் ஜீவன் தன்னை விட்டு போகப்போகிறதே என்று அறிந்து, பிதாவை நோக்கி, ‘ஏலீ, ஏலீ லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமாய் கூப்பிடுகிறார். அதற்கு என் தேவனே, என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று அர்த்தமாகும். இதுதான் அவர் சிலுவையில் சொன்ன 4-வது வார்த்தையாகும். இப்படி இயேசு சிலுவையிலே சொன்ன இந்த வார்த்தை நமக்கு எதை கற்றுக்கொடுக்கிறது என்று நாம் சற்று சிந்தித்து பார்ப்போம்.

    இயேசுவோ சிலுவையில் அறையப்பட்டிருந்த போது, ஒரு பக்கம் பாவத்தின் நிமித்தம் அழிந்து கொண்டிருந்த ஜனங்கள், மற்றொரு பக்கம் தான் தேவனாய் இருந்த போதும் சிலுவையிலே ஆணிகளால் அறையப்பட்டு ரத்தம் சிந்தி மாமிச வேதனை அடைந்திருந்த போதும் அவர் யாரையும் கடிந்து கொள்ளவும் இல்லை, பிதாவானவர் தான் தன்னை இந்த துன்பத்திற்கு ஆளாக்கினவர். எனவே அவர்தான் நம்முடைய வேதனைகளுக்கெல்லாம் பதில் தர முடியும் என்று எண்ணியதால் தான் மிகுந்த மன உருக்கத்துடன் பிதாவை நோக்கி மனமுருகி என் தேவனே, என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று மிகுந்த சத்தமாய் கூப்பிடுகிறார்.

    ஆம் தேவ பிள்ளைகளே நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும். அந்த ஜெபம் யாரிடம் போய் சேர வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இயேசு கல்வாரி சிலுவையிலே தன் உயிர் பிரியும் போது கூட அவர் நம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல் தன் பிதாவை நோக்கி கூப்பிடுகிறார். அதை போல நாமும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து நமக்கு துன்பம் வரும் பேதெல்லாம் அவரை நோக்கி ஜெபம் செய்வோம், விடுதலையை பெற்றுக்கொள்வோம் ஆமென்.

    சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.

    இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும்.
    இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும். இந்த நிகழ்வு இந்த ஆண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்து ஞாயிறாக நினைவுகொள்ளப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு என்றால் என்ன? என்பது குறித்து இந்த நாளில் நாம் தியானிப்போம்.

    வழக்கமாக யூதர்கள் எல்லோரும் எருசலேம் நகரில் ஒன்று கூடி இந்த பஸ்கா விழாவை கொண்டாடுகின்றனர். இந்த பஸ்கா விழாவை கொண்டாட இயேசுவும் வருகிறார். அப்படி அவர் வரும் போது, இயேசுவானவர் கழுதையின் மீது ஏறி யூதேயா தேசத்தின் தலைநகரான எருசலேம் நகருக்கு செல்கிறார். அப்போது அங்குள்ள மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக ஒலிவமலை குருத்து இலைகளால் வழிநெடுகிலும் பரப்பினார்கள். மேலும் பலர் ஒலிவமலை இலைகளை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, கடவுளின் பெயரால் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். மேலும் இயேசுவை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று நினைத்தவர்களும் மனம்திருந்தி குருத்தோலைகளை கையில் ஏந்தி அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    இப்படி மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி செல்லும் போது தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று கோஷம் எழுப்பினர்.

    இப்படியாக வழிநெடுகிலும் வரவேற்பு கொடுத்த மக்கள் இன்னும் சில நாட்களில் இவரை சிலுவையில் அறையுங்கள், சிலுவையில் அறையுங்கள் என்று சொல்லப்போவது இயேசுவுக்கு தெரிந்தும் அவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்ததினால் தான் மக்கள் பிதாவை பார்த்து வேண்டிக்கொள்ளும் வார்த்தையாகவும், பிதாவே இயேசுவை இந்த சிலுவை பாடுகளில் இருந்து விடுவியும் என்றும் சொல்வதைத் தான் ஓசன்னா என்று கூறப்படுகிறது. இவையெல்லாம் இயேசுவானவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முந்தைய வாரம் நடைபெறுகிறது.

    அந்த நாட்களில் எருசலேம் மக்கள் ஒலிவமலை குருத்து இலைகளை கையில் ஏந்தி இயேசுவை வரவேற்றது போல, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் பனையில் உள்ள குருத்து ஓலைகளை எடுத்து அதை சிலுவையாக வடிவமைத்து கைகளில் ஏந்தியபடி, அவரை புகழ்ந்து பாடல்களை பாடிக்கொண்டு ஒவ்வொரு வீதி, வீதியாக சென்று இயேசுவை நினைவுகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த குருத்தோலை ஞாயிறு அன்றே அவரை சிலுவையில் அறைய திட்டமிடுகின்றனர். எனவே தான் குருத்தோலை ஞாயிறுக்கு அடுத்த 7 நாட்களையும் பரிசுத்த பாடுகளின் வாரமாக சொல்லப்படுகிறது. எனவே இந்த நாட்களில் இயேசுவின் பாடுகளில் எவ்வளவு பரிசுத்தம் நிறைந்துள்ளது என்பதை நினைவுகூர்ந்து, மீண்டுமாய் நமக்காக அவர் உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூற ஆயத்தமாவோம் ஆமென்.

    சகோதரி. கேத்ரின், திருப்பூர்.

    ×