search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித வெள்ளி
    X
    புனித வெள்ளி

    தவக்கால சிந்தனை: புனித வெள்ளி

    இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளியாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த புனித வெள்ளியில், இயேசு சிலுவையிலே சொன்ன 7 வார்த்தைகளை குறித்து தியானிப்போம்.
    இயேசு இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்தார். இந்த சிலுவை மரணம் எதற்கு என்று இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் தியானித்து வருகிறோம். எனவே இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளியாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த புனித வெள்ளியில், இயேசு சிலுவையிலே சொன்ன 7 வார்த்தைகளை குறித்து தியானிப்போம்.

    இயேசு சிலுவையில் அறையப்பட்டு பாடுகளை அனுபவித்து கொண்டிருந்த நேரத்தில் கல்வாரி சிலுவையில் இருந்து அவர் சொன்ன முதல் வார்த்தை, அங்கு கூடியிருந்த ஜனங்களை பார்த்து, ‘இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள், இவர்களை மன்னியும்’ என்று பிதாவிடம் சொல்கிறார். 2-வதாக இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் மனந்திருந்தியதால் அவனை பார்த்து ‘இன்றைக்கு நீ என்னோடு கூட பரதீசிலிருப்பாய்’ என்று சொல்கிறார். 3-வதாக தன் ஜீவன் போகப்போகிறது, தன் தாய் என்ன செய்வாள் என்று நினைத்து தன் தாயை பார்த்து, ‘ஸ்திரியே அதோ உன் மகன் என்றார். பின்பு அந்த சீஷனை பார்த்து அதோ உன் தாய் என்றார்’ என்று பார்க்கிறோம்.

    4-வதாக பிதாவை நோக்கி, ‘ஏலீ, ஏலீ லாமா சபக்தானி (என் தேவனே, என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர்) என்று மிகுந்த சத்தமாய் கூப்பிடுகிறார்’. 5-வதாக உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக பாவத்தை சுமந்து சிலுவையில் உயிர் போகும் நிலையிலும், இந்த மக்கள் பாவத்தையே நோக்கி செல்கிறார்களே என்றும், இன்னும் நிறைய ஜனங்களின் ஆத்மாவை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் ‘தாகமாய் இருக்கிறேன்’ என்று கூறுகிறார். பின்னர் 6-வது வார்த்தையாக உலகத்தில் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாம் பிதாவின் சித்தத்தின் படி நிறைவேற்றப்பட்டது என்பதை விளக்கும் படியாக ‘முடிந்தது’ என்று கூறுகிறார். கடைசியாக 7-வது வார்த்தை, ‘பிதாவே உம்முடைய கைகளில் என்னுடைய ஆவியை ஒப்புவிக்கிறேன்’ என்று மகா சத்தமாய் கூப்பிட்டுச் சொன்னார் என்று பார்க்கிறோம்.

    ஆம், இயேசு ஆரம்பம் முதல் முடிவு பரியந்தம் பிதாவின் சித்தத்தின் படியே வாழ்ந்து அவருக்காக தன் உயிரையே ஜீவபலியாய் ஒப்புக் கொடுத்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    எனவே நாமும் இந்த உலகத்தில் உள்ளவைகளுக்கு அடிமையாகாமல் தேவனுக்கு பயந்து அவருடைய ராஜ்யத்தில் சேர்வதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும். வேதத்தில் 2-கொரிந்தியர் 5-ம் அதிகாரம் 1-ம் வசனத்தில், ‘பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையில்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

    ஆம், பிரியமானவர்களே இந்த உலகத்தில் உள்ளவைகள் நமக்கு நிரந்தரமல்ல. இந்த பாவ வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நித்தியமான பரலோக ராஜ்ஜியத்தில் உள்ளவற்றை இழந்து விடக்கூடாது என்பதை அறிந்து இந்த நாட்களில் நம்முடைய உலக வாழ்க்கையை வெறுத்து, இந்த புனித வெள்ளியில் இயேசு சிலுவையில் சொன்ன 7 வார்த்தைகளையும் தியானித்து, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்வோம் ஆமென்.

    சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
    Next Story
    ×