search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    உங்கள் துயரம் நிரந்தரமானதல்ல...

    உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாட்கள் ஒழிந்துபோம். உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
    இறைமைந்தன் இயேசுவின் அருட்பொழிவுகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அவருடைய மலைப்பொழிவு ஆகும். இது மகாத்மா காந்தியடிகளின் மனம் கவர்ந்த பகுதியாகும்.

    இங்கு காணப்படும் ‘உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்’ என்னும் அறிவுறுத்தல் அவருடைய மனதில் மாற்று சிந்தனையை விதைத்தது. அகிம்சை, சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற உயரிய தத்துவங்களுக்கு இப்போதனை அடித்தளமாய் அமைந்தது.

    துயருறுதல் கடவுளின் தண்டனை அல்ல

    ‘துயருறுதல்’ என்ற இவ்வார்த்தை திருமறையில் அதிகமாக மரண இழப்பின் நிமித்தமாக வருகின்ற வேதனையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. தாங்கமுடியாத பேரிழப்பின் வலி, மகா கொடிய துன்பம் போன்றவற்றையும் குறிக்கின்றது.

    துயரப்படுதல் என்பது கடவுளுடைய சினத்தின் பிரதிபலிப்போ, தண்டனையோ, சாபத்தின் வெளிப்பாடோ அல்ல.

    துயரப்படுகிறவர்கள் கடவுளால் சோதிக்கப்படுகிறார்கள், கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் ஆதலால் தான் ஒடுக்கப்படுகிறார்கள், நொறுக்கப்படுகிறார்கள், தங்கள் வாழ்வில் பேரிழப்புகளையும், பேராபத்துகளையும், கொள்ளை நோய்களையும், சொல்லொணா வேதனைகளையும் அனுபவிக்கிறார்கள்.

    இது கடவுளால் அவர்களுக்கென்று நியமிக்கப்பட்டது; எனவே எப்படியாயினும் அதை வேதனையோடு அவர்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இதிலிருந்து விடு படவோ இதை மறுப்பதற்கோ இல்லை என்ற எண்ணம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் காணப்பட்டது.

    இந்த சிந்தனையை ஆண்டவர் இயேசு மாற்றி ‘துயருறுவோர் இறைவனின் பேறுபெற்றவர்கள்’ என்ற மாற்றுச் சிந்தனையை மக்களின் உள்ளங்களில் விதைக்கின்றார்.

    துயருறுவோரை தேடி வந்து மீட்ட கடவுள்

    துயரப்பட்டவர்கள் அன்றைய சமூகத்தில் ஒடுக்கப்பட்டார்கள், ஒதுக்கப்பட்டார்கள். கடவுளை அறியாதவர்களாக, கடவுளை இழந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.

    இழந்து போனவர்களைத் தேடி மீட்கவே மானிடமகன் இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார். சிறைபட்டோர், ஒடுக்கப்பட்டோர் விடுதலை அடையச்செய்ய கடவுளால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்.

    பார்வையிழந்தோர், காது கேளாதோர், பேச இயலாதோர், நடக்க முடியாதவர்கள், கொடிய நெடுநாள் நோயினால் பீடிக்கப்பட்டவர்கள், அலகையினால் அவதிப்பட்டோர், மரணப்படுக்கையிலிருந்தோர் என உடலளவில் துயருற்றோரைக் கண்டு மனதுருகி அவர்களுக்கு விடுதலை அளித்தார்.

    ஆயக்காரர்கள், மீனவர்கள், ஏழைகள், தரித்திரர் என தங்கள் தொழில், வாழ்க்கை அமைப்புமுறை நிமித்தம் அன்றைய சமூகத்தில் தங்கள் சுய உரிமைகளை இழந்து புறக்கணிக்கப்பட்டு மனதளவில் துயருற்றோரை தம் நண்பர்களாக, உடன்பிறப்புகளாக ஏற்றுக்கொண்டு அவர் களுக்கும் சமூக விடுதலையை வழங்கினார்.

    துயருறுவோருக்காக பரிதபிக்கிற கடவுள்

    ‘இதோ! உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்; கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்; ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்; அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும் புகழும் பெறச் செய்வேன் (செப்பனியா 3:19)’ என்கிறார் கடவுள்.

    ஆம் துயருறுகின்றவர்கள் மீது கடவுள் அதிகமான கரிசனைக் கொள்கிறார். அவர்களுக்காக பரிதபிக்கின்றார். அத்தோடு கடவுள் அவர்களுக்கு சிறந்த பாதுகாவலராக, உற்ற துணையாய் இருக்கின்றார்.

    துயருறுகிற நீங்கள் பேறுபெற்றோர்

    துன்பங்களும், துயரங்களும் நமக்கு வேதனைகளையேத் தருகிறது. எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள்?, ஏன் இத்தனை துயரங்கள்?. எனக்கு ஏற்பட்ட இழப்பு களையும், தோல்விகளையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே? என்ற வேதனையும், விரக்தியும், முயற்சியின்மையும், சகமனிதர்களைக் குறித்த வெறுப்புணர்வும் காணப்படலாம்.

    ஆனால் ‘சிரிப்பை விட துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம்; ஆனால், அது உள்ளத்தை பண்படுத்தும்’ (சஉ7:3) என்கிறது திருமறை.

    துயரங்கள் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தருகிறது. அந்த அனுபவங்கள் நம் உள்ளத்தையும், உடலையும் பண்படுத்துகிறது.

    ‘அனுபவம் ஒரு கடுமையான வாத்தியார்; அது சோதனையைத் தந்த பிறகு தான் பாடத்தைப் போதிக்கிறது’ என்கிறார் பெர்னாட்ஷா. வாழ்வில் துயரத்தினை அனுபவித்து, அதன் மேன்மையை உணர்ந்த அரசன் தாவீது ‘எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே’ என்கிறார்.

    ‘ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம்’ (ஏசாயா26:16).

    ஆம், எவ்வளவு பெரிய உண்மையிது. துன்பங்கள், துயரங்கள் வருகின்ற வேளையிலே கடவுளை அதிகமாகத் தேடுகின்றோம். நாம் கடவுளால் தண்டிக்கப்படுகின்றோம் அல்லது சோதிக்கப்படுகிறோம் என்று உணர்கின்ற தருணங்கள் தவிர்த்து, மற்ற நேங்களில் நாம் இறைவனின் உதவிக்காக ஏங்குவதும், காத்திருப்பதும் இல்லை.

    வேண்டுமானால் உங்களையே நீங்கள் பரிசோதித்து பார்க்கலாம். நீங்கள் அதிகமாக கடவுளை நாடித் தேடி, திருமறை வாசித்து, கடவுளிடம் கதறி மன்றாடி, அவரோடு இணைந்திருந்த நாட்கள் நிச்சயமாக உங்கள் துயரக் காலங்களாகவே இருக்கும்.

    ஆம், நம் துயர் மிகுந்த காலங்களிலே நாம் கடவுளின் அன்பையும், கருணையையும், ஆற்றலையும் முழுமையாக உணர்ந்து அனுபவிக்கின்றோம். வியாதி, தனிமை, கடன் சுமை போன்றவைகளினால் துயருற்று அழுதுகொண்டிருக்கிற உங்களுக்கு கடவுள் ஆறுதல் அளிக்கிறார்.

    ஏனெனில் இப்பொழுது இருக்கிற உங்கள் துயரம் உங்களுக்கு நிரந்தரமானதல்ல.

    உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாட்கள் ஒழிந்துபோம். உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

    அருட்பணி ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.
    Next Story
    ×