என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
    ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே, அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே’ (II கொரிந்தியர் 8:9)

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

    நம்முடைய வாழ்க்கைக்கு பணம் மிகவும் முக்கியமானதாகும். இந்த பெரிய வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய நம்முடைய தேவன் ஐசுவரியமுள்ளவர். ‘பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது’ என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அப்படியானால் ஒருவேளை தரித்திரம் அல்லது கடன்பாரம் நம்முடைய வாழ்வில் இருந்தாலும் அதைப் போக்குவதற்கு வழிகளை தேவன் கொடுத்துள்ளார். அந்த வழிகள் என்ன?

    1. உங்கள் கண்கள் கர்த்தரையே நோக்க வேண்டும், மனிதனை ஒருநாளும் நம்பாதீர்கள்.

    2. உங்கள் செலவு உங்கள் வருமானத்திற்குள் அமைய வேண்டும்.

    3. வீணான ஆடம்பரம் வேண்டாம். மற்றவர்களைப் பார்த்து, அவர்களைப் போல வாழ வேண்டும் என விரும்பாதீர்கள்.

    4. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை உற்சாகமாக கர்த்தருக்கென்று கொடுத்து லூக்கா 6:38-ன்படி பலமடங்கு ஆசீர்வாதத்தை சுதந்தரியுங்கள்.

    உங்கள் வாழ்வில் இதை அப்பியாசப்படுத்த முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் பொருளாதார வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், சென்னை-54
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
    இந்த பூமியில் நடந்த மூன்று பெரிய சரித்திரப்பூர்வமான சம்பவங்கள், 1. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, 2. சிலுவையில் ஜீவபலியாக மரித்த சம்பவம், 3. இயேசு உயிர்த்தெழுந்தது.

    இவை அனைத்தும் என்றென்றும் மாறாத, காலத்தால் அழிக்கப்படாத மகிமையான சம்பவங்கள். இதில் ஒன்று தான், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் அனைவருக்காகவும் சிலுவையில் தன்னைத்தானே ஜீவபலியாக அர்ப்பணித்தது ஆகும்.

    அவர் ஜீவனுள்ள தெய்வமாயிருந்தார். அவரை எப்படி சிலுவையில் அறைந்து கொலை செய்ய முடியும்? என்ற கேள்வி எழக்கூடும். உண்மையிலேயே ரோம சேவகர்கள் தங்கள் பலத்தினால் அவரை கொலை செய்யவில்லை. மனிதகுலத்திற்காக தம்மைத்தாமே சிலுவையில் ஜீவபலியாக அர்ப்பணித்தார்.

    ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்றால் நம் ஒவ்வொரு வருக்கும் பாவத்திலிருந்து விடுதலை தருவதற்காகவே.

    வேதம் சொல்லுகிறது, ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது’ (ஏசாயா 53:5).

    ‘நம் அனைவருடைய பாவங்களையும் இயேசு சிலுவையில் சுமந்தார்’ என்று வேதம் கூறு கிறதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அதுமாத்திரமல்ல தேவன் அருளுகிற இந்த பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மேலும், சங்கீதம் 32:5-ல் தாவீது ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன்’ என்றேன். ‘தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்’ என தெளிவாக கூறுகிறார்.

    ஆகவே நாம் செய்கிற தேவன் விரும்பாத அனைத்து காரியங்களையும் கர்த்தருடைய சமூகத்தில் அறிக்கையிட வேண்டும். அப்பொழுது நம்முடைய பாவத்திலிருந்து விடுதலையை கர்த்தர் கட்டளையிடுவார்.
    இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நமக்கு எடுத்துரைக்கும் மற்றொரு செய்தி, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதுதான்.
    சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார்.[தந்தை..... மகன்......] அகிலம் ஆளும் இறைவனின் பேரன்பால், தம் ஒரே மகனையே மனுகுலத்திற்கு கையளித்து ,அந்த ஒரே மகன் நம் பாவங்களால் பாரச்சிலுவை சுமந்து, சிலுவையில் அறையுண்டு, கல்லறையில் அடக்கப்பட்டு, காவல் காக்கப்பட்ட இயேசு, இன்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார்.

    அவரது பாடுகளில் பங்கேற்று, அவரது துன்பத்தில் துணை நின்ற நாம்,அவரது உயிர்ப்பின் மகிழ்வையும் கொண்டாட அழைக்கப்படுகிறோம்.இயேசுவின் உயிர்ப்பு நம்மை புது வாழ்வு வாழ அழைக்கின்றது. புதிய மாற்றத்திற்கு வழிகாட்டுகிறது, புதிதாய் பிறக்கத் தூண்டுகிறது. உலக வரலாற்றில் கல்லறைக்கு காவல் காத்ததும், காலியான கல்லறை எனப் பெயர் பெற்றதும் இயேசுவின் கல்லறை மட்டும் தான்.

    இன்று மகிழ்ச்சியின் நாள், வெற்றியின் நாள்,நம் அனைவருக்கும் புதுமையின் நாள்,தன் மகனின் பாடுகளோடு ஒன்றித்து, வியாகுலத்தின் தாயாக விளங்கிய நம் அன்னை இன்று தம் மகனின் உயிர்ப்பால் வெற்றியின் அரசியாக திகழ்கிறாள் தம் மகனின் உயிர்ப்பில் மகிழ்ந்து அக்களிப்பு கொள்கிறாள். தனக்கு நிகழ்ந்த வியாகுலத்தை, துன்பத்தை, துயரத்தை, துணிந்து ஏற்று, அதை மீட்பின் கருவியாக மாற்றிய நம் அன்னையின் துணிவைப் போற்றுவோம்.

    தம் மகனின் பணியில் மட்டுமல்ல், பாடுகளிலும் இறுதிவரை உடனிருந்து, மனுக்குல மீட்புக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்த அன்னைமரியாள், இன்று உயிர்ப்பின் ஆற்றல் பெற்று, வானக அரசியாகத் திகழ்கிறாள்.இத்தகைய நம் அன்னைக்கு மணிமுடி சூட்டி, மங்கள திலகமிட்டு, மலர்தூவி வாழ்த்துவோம். [பாடல் . வானக அரசியே] வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் , நறுமணப்பொருட்களுடன் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற பெண்களுக்கு பெருத்த ஏமாற்றம்.

    அதே நேரத்தில் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். இயேசுவை காணவில்லையே என்ற ஏக்கத்துடன் பார்த்த போது வானதூதர் அவர்களிடம் " திகிழுற வேண்டாம். அவர் சொன்னது போல் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்பட்டார். இயேசு தம் சீடருக்கு காட்சி கொடுத்த போதும் சொல்லுகின்ற முதல் வார்த்தை `அஞ்சாதீர்கள்' என்பது தான். வானதூதரும், இயேசுவும் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட சீடர்கள் பயத்திலிருந்து விலகி, அஞ்சா நெஞ்சத்தினராய் அகிலமெகும் சென்று, ஆர்வத்துடனும் , ஆற்றலுடனும் இயேசுவைப் பற்றி போதித்தார்கள்.

    இயேசு தம் சீடருக்குச் சொன்ன அதே வார்த்தைகளை , இன்று நமக்கும் சொல்கிறார். நமது வாழ்க்கை நிகழ்வுகளில் அச்சத்தை தவிர்த்து துணிவுடன் வாழ அழைக்கிறார்.தீமைக்கு அஞ்சுவோம், நன்மையை துணிந்து செய்வோம். நன்மைக்கும், தீமைக்கும் ஏற்படுகின்ற போட்டியில் கடைசியில் வெல்வது என்னவோ நன்மைதான். நன்மைதான் வெற்றி பெறும் என்பதை இயேசு தம் உயிர்ப்பால் இந்த உலகிற்கு எடுத்துரைக்கிறார்.

    இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நமக்கு எடுத்துரைக்கும் மற்றொரு செய்தி, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதுதான்.வானதூதர் கல்லறைக்கு வந்த பெண்களிடமும் , சீடர்களிடமும் `சொல்லுங்கள் ` என்று சொல்கிறார். இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியைச் சொல்லி ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக விளங்குகிறார்கள்.

    இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா மகிழ்வில் திளைத்திருக்கும் நாம் அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். அதன் வழியாக இறையருள் நிறைவாய்ப் பெருவோம். [பாடல்] அரசன் ஒருவன் எல்லா நிலையிலும் , இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும் , சாவிலும் சிரிப்பிலும் , அழுகையிலும், வளமையிலும் , வறுமையிலும் பயன்படும் ஒரு மந்திரத்தை கண்டு பிடிக்க நினைக்கிறார். அவரது கேள்விகளுக்கு பதிலாக புத்தர் கண்டுபிடித்ததுதான் 'இந்த நிலையும் கடந்து போகும்.

    ' இயேசுவுக்குத் தெரிந்தது எல்லாம் கடந்து என்று. ஓசன்னா கடந்து விடும் , குருத்தோலைகள் கடந்து விடும் , கெத்சமணி கடந்து விடும் , பிலாத்தின் அரண்மனை கடந்து விடும் , ஏரோதின் மாளிகை கடந்து விடும் , சிலுவைப்பாடுகள் கடந்து விடும் , எல்லாம் கடந்து விடும் , இறப்பும் கடந்து விடும் என்று. இறப்பைக் கடத்தியது இயேசுவின் உயிர்ப்பு. நமது அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற அத்தனை நிகழ்வுகளும் நம்மைவிட்டு கடந்து விடும் என்பதை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு தெளிவுபடுத்துகிறது.

    இயேசு கிறிஸ்து சாவை வென்று உயிர்த்து விட்டார்.தீமையை வென்று இவ்வுலகத்தை நன்மையால் நிரப்பியுள்ளார். இருளிலிருந்து நமமை ஒளிக்கு அழைத்து வந்திருக்கிறார், பாஸ்கா ஒளி நம்மிடத்திலுள்ள இருளை அழித்து, புது வாழ்வைத் தர ,இயேசுவின் ஒளியில் நமது பயணம் தொடர , அருள் வேண்டி நம் கையிலிருக்கும் ஒளியை இறைப்பதம் அர்ப்பணிப்போம். (பரலோகத்தில்)
    நம்முடைய பாவங்களே நமக்கும், இயேசுவுக்கும் இடையே பெரும் பிரிவை ஏற்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலும் நாம் பாவத்தில் விழ முக்கிய காரணம், இருக்க வேண்டிய நேரத்தில், இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போவதுதான்.
    இன்றைய உலகில் பல போராட்டங்கள், வேதனைகளின் மத்தியில் வாழ்ந்து வரும் நாம், அனுதினமும் அவற்றில் இருந்து விடுதலை பெற இயேசுவிடம் வேண்டுகிறோம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நமது வேண்டுதலுக்கு விடை கிடைக்காத பட்சத்தில், அதற்கான காரணம் தெரியாமல் வருந்துகிறோம்.

    ஆனால் எசாயா 59-ம் அதிகாரம் 1 மற்றும் 2-ம் வசனத்தில், “மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ஆம்.. நம்முடைய பாவங்களே நமக்கும், இயேசுவுக்கும் இடையே பெரும் பிரிவை ஏற்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலும் நாம் பாவத்தில் விழ முக்கிய காரணம், இருக்க வேண்டிய நேரத்தில், இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போவதுதான்.

    2 சாமுவேல் புத்தகம் 11-ம் அதிகாரத்தில், ‘இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம்’ என்று கூறப்பட்டிருந்தாலும், தாவீது போர்க்களத்திற்கு செல்லாமல் யோவாபையும், பணியாளர்களையும் போருக்கு அனுப்பி வைத்தான். போர்க்களத்தில் இருக்க வேண்டிய மன்னன் உப்பரிகையில் உலாவியதால், பெண்ணின் மீது மோகம் கொண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்தான்.

    ஆதியாகமத்தை பார்க்கும் போது, ஆதாமின் அருகில் இருக்க வேண்டிய ஏவாள், அவனை விட்டு விலகி சென்றதால்தானே சாத்தானின் வலையில் விழுந்தாள். அவள் மட்டுமின்றி அவளோடு ஆதாமும், மனுக்குலம் முழுவதுமே ஏதேன் தோட்டத்தில் இறைவனின் அருகில் இருக்கும் வாய்ப்பை இழந்து தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டது.

    இவ்வாறு விவிலியத்தில் பலரும் இறைவன் சித்தப்படி இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல், தங்கள் விருப்பப்படி சென்றதால் தான் பாவத்தில் விழுந்தார்கள் அல்லது இறை பிரசன்னத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார்கள்.

    உதாரணமாய்.. வானதூதர்கள், கடவுளுக்கு கீழ் இருக்க விரும்பாமல், அவருடைய இடத்தை அடைய விரும்பியதால், அவர்கள் இறை பிரசன்னத்தில் இருந்து தள்ளப்பட்டார்கள். அன்று ஆண்டவர் நோவாவின் மூலம் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையை ஏற்று மனம் திருந்தி, இறைவனின் எதிர்பார்ப்புப்படி பேழைக்குள் நுழையாமல் தங்கள் இடத்தில் பிடிவாதமாய் இருந்ததால்தான் நோவா குடும்பத்தையும், ஜோடியான விலங்குகளும், பறவைகளையும் தவிர மற்ற அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி அழிவிற்கு உள்ளானார்கள்.

    மோசே, சீனாய் மலைக்கு சென்றபோது, இறைவனைத் தேடாமல் பொன்னால் செய்யப்பட்ட கன்றுக்குட்டியை வழிபட்டதால் எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட பெரும்பாலான இஸ்ரவேல் மக்கள் அழிவிற்கு உள்ளாயினர். ஆண்டவரின் வார்த்தைப்படி நீனிவேக்கு போகாமல், தர்சீசுக்கு ஓட முயன்றதால்தான் யோனா மூன்றுநாள் திமிங்கிலத்தின் வயிற்றில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இது மட்டும் அல்ல.. புதிய ஏற்பாட்டில் பேதுரு, கடவுள் மீது வைக்க வேண்டிய விசுவாசத்தை, கடல்நீரின் மீது காட்டியதால் மூழ்க நேரிட்டது. இறைவன் மீது விசுவாசத்தை வைக்காமல் தங்கள் மீது வைத்ததால்தான் சீடர்கள் பலர் தடுமாற நேர்ந்தது. இப்படி ஒன்றல்ல பல உதாரணங்கள் விவிலியத்தில் உள்ளன.

    லாசரின் மரணத்திற்கு பிறகு மரியாள் இயேசுவிடம் வந்து “ஆண்டவரே.. நீர் இங்கு இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்” என்று கூறி அழுதாள். அதுபோல் நாமும் தாவீது மட்டும் இறைவனின் கட்டளைப்படி போர்க்களத்தில் இருந்திருந்தால்.. அன்று ஏவாள் மட்டும் ஆதாமை விட்டு விலகி இறைவன் தொடக்கூடாது, உண்ணக் கூடாது என்று கூறிய மரத்தின் அருகில் செல்லாமல் இருந்திருந்தால்... இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் இருந்திருந்தால்... இருந்திருந்தால்.. என்று கேட்டோமானால், ‘இறைவனின் பிரசன்னத்தை, ஆசிர்வாதத்தை யாரும் இழந்திருக்க மாட்டார்கள்’ என்ற பதில்தான் நமக்குக் கிடைக்கும்.

    நம்மில் எத்தனை பேர் இருக்க வேண்டிய இடத்தில், சரியாக இருக்கிறோம்.

    குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி தங்கள் இருவருக்குள் காட்ட வேண்டிய அன்பை இடம் தவறி காட்டுவதாலும், ஒருவரை ஒருவர் நம்பாததாலும், புரிந்து கொள்ளாததாலும் தான் பிரச்சினைகளும், பிரிவுகளும், தவறான உறவுகளும் ஏற்படுகின்றன.

    படிக்கும் பிள்ளைகளின் தோல்விக்கு காரணம், புத்தகத்தின் முன் அமர்ந்திருக்க வேண்டிய நேரங்களில், விளையாட்டுகளிலும், பிற காரியங்களிலும் அதிக நேரத்தை செலவழிப்பதுதானே. இப்படி எத்தனை உதாரணங்கள் நம் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

    ‘மகனே.. மகளே.. நீ மட்டும் என்னுடைய அருகாமையை உணர்ந்தால், நான் உனக்கு போதித்து நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்’ என்ற கர்த்தரின் வார்த்தையை பற்றிக் கொண்டு நடப்போம். இயேசுவின் குரலுக்கு செவி சாய்ப்போம். அவருடைய அருகாமையை எந்த நேரத்திலும் உணர்ந்தவர்களாய் வாழ்வோம். அப்படி நாம் வாழும் பட்சத்தில், இயேசு நம்முடைய ஜெபத்தைக் கேட்டு உடனடியாக பதில் அளிப்பார்.
    நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
    இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்[மாற்கு:10:21]. ஐசுவரியமான தலைவனிடம்  உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடு; பின்பு என்னை பின்பற்றி  என்று இயேசு சொன்ன போது அவன் மிகுந்த துக்கமடைந்தவனாய் போனான். இங்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவன் துக்கமடைந்தான் என தன் கொள்கையை மாற்றவில்லை.

     நாம் எப்போதும் நமக்காக உலக பொக்கிஷங்களை சேர்க்கிறோம்.ஆனால் தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்க இயேசு கிறிஸ்து நம்மை அறிவுறுத்துகிறார்[லூக்கா:12:21].

    ஏனெனில் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?[மத்தேயு:16:26] மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக எதையும் கொடுக்க முடியாது. பரலோகத்தின் பொக்கிஷமாகிய நம்முடைய ஆத்துமாவை எதை நஷ்டப்பட்டாகிலும் நாம் சம்பாதிக்க வேண்டும். அன்பானவர்களே நம்முடைய பொருட்கள் ஐசுவரியம் யாவும் கர்த்தர் தந்தது. அதை பிரயோஜனப்படுத்தி தேவனுக்காய் ஆத்துமாக்களை சம்பாதித்து அவர்களையும் தேவனுக்கு சீடராக்குவோம். சீஷத்துவம் ஒரு தொடர்செயல்; சீஷராவோம் சீஷராக்குவோம்.[Discipleship is a chain process. So be a Disciple and Make Disciples]

    மோசே தான் உலக சந்தோஷங்களை வெறுத்து தேவனுக்காய் பொக்கிஷங்களை சேர்த்து தேவனுக்கு முன்பாக ஐசுவரியவனான். மோசேயைப் போல நாமும், தேவனை பின்பற்ற   தடையாய் இருக்கிற எல்லாவற்றையும் விட்டுவிட்டு பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து தேவனை பின்பற்றுவோம்.

    இன்றைய  கிறிஸ்தவ உலகம் சிலுவையை பற்றி போதிப்பதை விட  “நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நோயில்லாத கடனில்லாத ஆசீர்வாதமான நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்” என்று ஆசீர்வாதத்தை மட்டுமே போதித்து அழைக்கின்றன. கிறிஸ்துவுக்குள்ளாக நாம் எப்படியாய் வளர்வது, பரிசுத்தமாய் வாழ்வது எப்படி என்று உணர்த்துகிற வசனங்களை விட ஆசீர்வாத வசனங்களை தான் எங்கும் பார்க்க முடிகிறது. சிலுவையின்  போதனைகளை  நாம் கேட்பது மிக அரிது. இதனால் பரலோகத்தில்  பொக்கிஷங்களை சேர்க்க வேண்டும் என்பதை உணராமல், நம் இருதயம் பூமிக்குரிய பொக்கிஷங்களை சேர்க்க வாஞ்சிக்கிறது. இதனால் ஆசீர்வாதங்களை மட்டுமே நம்பி வரும் ஜனங்கள் உபத்திரவங்கள் பாடுகள் வரும் போது, அவைகள்  முட்களைப் போல அவர்களை நெருக்குவதால் விசுவாசத்திலிருந்து விழுந்து போக ஏதுவாய் அமைகிறது. பவுலைப் போல கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று சொல்லி சிலுவையை சுமப்போம் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்ப்போம்.

    கிறிஸ்துவின் பாடு மரணத்தை இந்நாட்களில் தியானிக்கிற நாம் ஒவ்வொருவரும் சிலுவையின் மேன்மையான அழைப்பை உணர்ந்தவர்களாய் நம்மை வெறுமையாக்கி  சாத்தானின் சதிகளை முறியடித்து அனுதினமும்  சிலுவையை சுமந்து அவருக்கு சீஷராகுவோம். மற்றவர்களையும் சீஷராக்குவோம். ஆத்துமாக்களை தேவனுக்கு ஆதாயப்படுத்துவது மட்டுமல்ல புதிய சீஷர்களையும் உருவாக்குவோம். இந்த உலகத்தை தேவனுக்காய் ஆதாயப்படுத்துவோம். “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்ற கட்டளையை இயேசு கிறிஸ்து பரமேறுமுன் நமக்கு கொடுத்திருக்கிறார்.  இயேசு கிறிஸ்துவின்  சீடர்கள்  அவர்  விட்டுசென்ற பணியை செய்து நிறைவேற்றினர். இன்று இந்த பனியை செய்து நிறைவேற்ற நம்மை அழைக்கிறார். இந்த மேன்மையான அழைப்புக்கு நம்மையும் அர்ப்பணிப்போமா? நமக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை தினமும் சுமந்து சிலுவையின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைப்போம்.தேவனுடைய வருகை மிக சமீபம். ஆயத்தமாவோம் ஆயத்தமாக்குவோம். தேவனுடைய ராஜ்ஜியத்தின் பாத்திரராய் மாறுவோம்.

    இயேசு கிறிஸ்துவின் நல்சீடராகுவோம்

    விசுவாசத்தில் முன்நடப்போம்

    இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே

    ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

    நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரே

    அதி வேகமாய் செயல்படுவோம்.

    இந்த பாடல் வரிகள் நம் இருதயத்தில் எப்போதும் தொனித்து கொண்டே இருக்கட்டும். செயல்படும் கிறிஸ்தவர்களாய் மாறுவோம்.தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.
    நம்முடைய அன்றாட வாழ்விலும் மனமாற்ற வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். உடல் மற்றும் உள்ள மனமாற்றம் நாம் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கின்றது.
    மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் என்பதுஉடைகளையும் உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றுவது அல்ல ; மாறாக, நம் உள்ளத்தை மாற்றுவது. கல்லான இதயத்தை கனி உள்ள இதயமாக மாற்றுவது . தீமை நிறைந்த வாழ்வைத் தூய்மை நிறைந்த வாழ்வாக மாற்றுவது . சுயநல வாழ்வை பொதுநல வாழ்வாக மாற்றுவது . இவ்வாறு தவக்காலத்தில் மனமாற்றம் என்பது முக்கியமான ஒன்றாகக் வலியுறுத்தப்படுகின்றது.

    இன்றைய முதல் வாசகத்தில் நினிவே மக்கள் மனமாற்ற வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். நினிவே மக்கள் கடவுளுக்கு எதிராக பாவங்கள் பல செய்தனர். கடவுள் அவர்களை அழிக்க முதலில் துணியாமல் யோனா இறைவாக்கினர் வழியாக மனமாற ஒரு வாய்ப்பினைக் கொடுத்தார். அந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திய நினிவே மக்கள் கடவுளின் தண்டனையிலிருந்து தப்பித்தனர். இதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் உள்ளார்ந்த மனமாற்ற வாழ்வாகும்.

    இன்றையநற்செய்தியில்அடையாளம் கேட்ட மக்கள் கூட்டத்தினருக்கு இயேசு சவுக்கடி கொடுக்கும் விதமாக பதிலளித்தார். "இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது" என்று இயேசு கூறினார்.இயேசுவிடம் யூத மக்கள் அடையாளம் கேட்டது இயேசுவை நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல ; மாறாக,அவரிடம் எதையாவது குற்றம் காண வேண்டும் என்பதற்காகவே . இதை அறிந்து கொண்ட இயேசு அவர்களைத் தீய தலைமுறையினர் என அழைத்தார். இயேசுவின் பற்பல போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்டும், அவரை நம்ப மனமில்லாமல் அடையாளம் கேட்டனர். யூதர்கள் மெசியாவின் வருகைக்காக அடையாளம் ஒன்றை எதிர்பார்த்தனர். எனவேதான் இயேசுவிடம் யூதர்கள் அடையாளம் கேட்டனர் என்று விவாதம் வைத்தாலும் இயேசு தன்னைப் பலவழிகளில் மெசியாவாக அடையாளப்படுத்தினார். ஆனால் இயேசுவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் இயேசுவின் மீது கொண்ட பொறாமை உணர்வு.

    பெரும்பாலான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து அவர் கற்பிப்பதை கேட்டு அவரின் பின்னால் சென்றதால், யூதத் தலைவர்கள் இயேசுவின்போதனைகளை ஏற்றுக் கொள்ளச் சற்று தயங்கினார். அதற்கு முக்கியக் காரணம் தங்களுக்கு மரியாதை மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்ற பொறாமை உணர்வாகும்.எனவேதான் இயேசு ''யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்'' (லூக்கா 11:30) என்று கூறினார். இயேசு தன்னையே அடையாளமாகக் கொடுத்தார். ஆனால் இயேசுவை ஏற்றுக் கொள்ளாமலும் மனமாற்றத்தை முழுமையாகச் சுவைக்காமலும் மக்கள் இருந்ததை கண்டு இயேசு கடுமையாகச் சாடினார்.

    நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுளை நம்புவதற்கும் கடவுளின் வழியில் பயணிப்பதற்கு கடவுள் பல்வேறு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார். குறிப்பாக இந்த தவக்காலம் நாம் மனம்மாறி நற்செய்தியை நம்புவதற்கு கொடுக்கப்பட்ட உன்னதமான காலம். இந்த காலங்களில் சிலுவைப்பாதை, திருப்பலி, செபமாலை, திருப்புகழ்மாலை, இறை இரக்க செபமாலை, உண்ணா நோன்பு, மனிதநேய பிறரன்பு செயல்பாடுகள் போன்றவற்றின் வழியாக மனமாற்ற வாழ்வு பெறமுயற்சி செய்வோம். உலகம் சார்ந்த பாவங்களை விட்டு விட்டு முழுமையாக மனம்மாறும் பொழுது,நம் வாழ்வில் நிறைவான அருளையும் இரக்கத்தையும் வழிநடத்துதலையும் பெறமுடியும். மனமாற்ற வாழ்வுதான் நமக்கு நிறைவைக் கொடுக்கும். மனமாற்ற வாழ்வுதான் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மனமாற்ற வாழ்வுதான் கடவுளின் திருவுள்ளத்தின் படி பயணிக்க வழிகாட்டும்.

    திருஅவை வரலாற்றில் மனமாற்ற வாழ்வில் நிலைத்து இருந்தவர்கள்தான் மிகப்பெரிய செயல்பாடுகளை செய்துள்ளனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் புனித அகுஸ்தினார். தன்னுடைய இளமைக் காலங்களில் கடவுளுக்கு எதிராகவும் சக மனிதர்களுக்கு எதிராகவும் பாவம் செய்தார். தன்னுடைய தாய் புனித மோனிக்கா தன்னுடைய மகன் அகுஸ்தினாரின்மனமாற்ற வாழ்வுக்குச் செபித்தார் . கடவுளின் அருளால்புனித அகுஸ்தீனார் மனமாற்றம் பெற்று,மிகச்சிறந்த இறைப்பணி செய்ததை நாம் அறிவோம். அவர் மனம் மாறிய பிறகு முன்வைத்த காலை பின் வைக்காமல், புனித வாழ்வில் நிலைத்திருந்தது திருஅவைக்கு மிகச்சிறந்த ஒரு கருவியாகப் பயன்பட்டார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் மனமாற்ற வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். உடல் மற்றும் உள்ள மனமாற்றம் நாம் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கின்றது.மனமாறுபவர்கள் மட்டுமேகடவுள் தரும் மீட்பை முழுமையாகச் சுவைக்க முடியும்.இதற்கு மிகச்சிறந்த மற்றொரு உதாரணம் சக்கேயு.

    எனவேஇந்தத் தவக்காலத்தில் மனமாற்றம் பெற்று நற்செய்தியை முழுமையாக நம்பிட தேவையான அருளை வேண்டுவோம். யூத மக்கள் சிலர் இயேசுவிடம் அடையாளமும் அறிகுறிகளும் கேட்டு தங்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்த நினைத்ததைப் போல் இல்லாமல்,அடையாளங்களையும் அறிகுறிகளையும்தாண்டி இயேசுவை முழுமையாக ஏற்று அருள், இரக்கம், மீட்பு போன்ற வாழ்வுக்கு சான்று பகர தேவையான அருளை வேண்டுவோம்.

    இறைவேண்டல் :

    வல்லமையுள்ள இயேசுவே!இந்த தவக்காலத்திலும்எங்கள் வாழ்நாள் முழுவதும் உம்மிடம் அடையாளங்களையும் அறிகுறிகளையும் வல்லச்செயல்களைமட்டும் எதிர்பார்க்காமல்,உம்மை முழுமையாக நம்பவும், மனமாற்ற வாழ்வில் நிலைத்திருக்கவும் அருளைத் தாரும்.ஆமென்.
    நாம், நம் வழிமுறைகளை, வாழ்வு முறைகளை, எண்ணங்களை, சிந்தனைகளை மதிப்பீடு செய்து நம் தவறுகளுக்காகவும் அநீத செயல்களுக்காகவும் வருந்தி அதிலிருந்து திருந்தி இயேசுவை நோக்கி நடைபோட இந்த காலம் நம்மை அழைக்கிறது.
    தவக்காலம் என்பது உடையை கிழிக்க அல்ல, உள்ளத்தை கிழிக்க. உடலை வருத்த அல்ல, உள்ளத்தை திருத்த. இது தள்ளுபடியின் காலம். இறைவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை, இறைவன் தன் இரக்கத்தை வெளிப்படுத்தி தள்ளுபடி செய்து நம்மை இருகரம் விரித்து ஏற்றுக்கொள்ளும் காலம். பாவியை அல்ல.

    பாவத்தை வெறுத்து, அந்த பாவியை அரவணைக்கும் அருளின் காலம். எனவே தவத்துக்கு இது ஏற்ற காலம். நாம், நம் வழிமுறைகளை, வாழ்வு முறைகளை, எண்ணங்களை, சிந்தனைகளை மதிப்பீடு செய்து நம் தவறுகளுக்காகவும் அநீத செயல்களுக்காகவும் வருந்தி அதிலிருந்து திருந்தி இயேசுவை நோக்கி நடைபோட இந்த காலம் நம்மை அழைக்கிறது.

    தரையில் தூங்குபவன் தவறி விழுவதில்லை. நாம், நம் வாழ்க்கையில் ஒரே சமநிலையில் வாழ்ந்தால் தவறி விழமாட்டோம். நம் வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் உண்டு. எனவே தான் நாம் தவறுகிறோம். தவறுதான் மனித இயல்பு. ஆனால் அந்த தவறு என்னவென்பதே அறியாமல் இருப்பதும், அறிந்தாலும் அதை ஏற்காமல் இருப்பதும், வருந்தி திருந்தாமல் இருப்பதும், இறைவனிடமிருந்து நம்மை வெகுதூரமாய் தள்ளி வைத்துவிடும். வருந்துவதும், திருந்துவதும் நம் வாழ்வின் வழிமுறையாக மாற வேண்டும்.

    நம் வாழ்வில் நாம் யூதாசுகளாக வாழ்கிறோமா? அல்லது பேதுருவாக வாழ்கிறோமா? என்று சிந்தித்து பார்க்க இந்த தவக்காலத்தில் அழைக்கப்படுகிறோம். யூதாசு தான் செய்த தவறு குறித்து வருந்தினான். ஆனால் திருந்தி இயேசுவிடம் வரவில்லை. புதிய வாழ்வை பெறவில்லை. பேதுருவோ வருந்தினார். திருந்தினார். இயேசுவிடம் வந்தார். மனம் திரும்பினார். இன்று அவர் புதிய வாழ்வைப் பெற்று புனிதராக வாழ்கிறார்.

    எனவே, கடவுள் நம் பாவங்களுக்கேற்ப தண்டனை கொடுப்பதை அவர் விரும்பவில்லை. பாவிகள் சாக வேண்டும் என்பது அவரது விருப்பம் அல்ல. கடவுள், தாம் செய்ய நினைத்த தீங்கு குறித்து மனம் மாறுகிறவர். கடவுள் நமக்கு தண்டனை வழங்க அல்ல. மாறாக, வாழ்வை வழங்கவே தன் ஒரே மகனை அனுப்பினார். எனவே வருந்துவோம். நம் வாழ்வெல்லாம் வசந்தமாகட்டும்.
    இயேசு பிறக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பரலோகத் தந்தையால் தேர்ந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசியாகிய மோசே, கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசத்தை ‘அத்தி மரங்களுள்ள தேசம்’ என வருணித்தார் (உபாகமம் 8:8).
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பூர்வ இஸ்ரவேலில், திராட்சைக் கொடிகளைப் போலவே நிலப்பரப்பின் கலாசாரக் கருப்பொருட்களில் ஒன்றாக இருந்தது அத்தி மரம். அது சுட்டெரிக்கும் கோடையில் நிழல் தரும் மரமாகவும் இருந்ததால் அத்தி மரங்களைச் சாலைநெடுகிலும் நிழலுக்காக நட்டு வளர்க்கும் வழக்கமும் இருந்தது. அதேபோல் திராட்சைத் தோட்டங்களின் வரப்புகளில் அத்தி மரங்கள் நடப்பட்டன. வயலில் வேலை செய்பவர்கள் இளைப்பாறுவதற்கு ஏற்ற தருவாக அத்தி மரம் இருந்தது. விவிலியத்தில் அத்தி மரம் பற்றி குறிப்பிட்டுள்ளதையும், அத்திமரம் புத்திபுகட்டும் தகவல்களையும் காணலாம்.

    இயேசு பிறக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பரலோகத் தந்தையால் தேர்ந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசியாகிய மோசே, கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசத்தை ‘அத்தி மரங்களுள்ள தேசம்’ என வருணித்தார் (உபாகமம் 8:8).

    அதேபோல “அத்தி மரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவ மரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவி யாமற்போனாலும்; நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆபகூக் 3:17) என ஆபகூக் தீர்க்கதரிசி பரலோகத் தந்தை மீதான தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

    அதேபோல ஆட்சியாளர்களுக்கும், பழைமைவாதிகளுக்கும் பயப்படாத கடவுளுக்கு உண்மையாயிருந்த யூதர்களை நல்ல அத்திப் பழங்களுள்ள ஒரு கூடை என்றார் எரேமியா. ஆனால், சிறைபிடிக்கப்பட்டவர்களில் சுயநலத்தை எண்ணி நாப்பிறழ்ந்தவர்களை சாப்பிட முடியாத கெட்ட அத்திப் பழங்கள் என்றார். “அவற்றை தூக்கியெறியத்தான் வேண்டியிருந்தது”(எரேமியா 24:2) என்றார்.

    விவிலியம் முழுவதும் காணப்படும் அத்திமரமும் அதன் பழங்களும் இயேசுவின் பார்வையில் இன்னும் ஒருபடி மேலாகப் பளிச்சிட்டன.

    யூதேயா தேசத்திடம் கடவுள் பொறுமையாக இருந்ததை இயேசு அத்திமர உவமையின் வழியாகச் சுட்டிக் காட்டினார். திராட்சைத் தோட்டத்தில் விளைச்சல் அற்ற அத்தி மரத்தை வெட்டி எறியச் சொன்ன உவமையை இயேசு சொன்னார்.

    அத்தி மரம் பற்றிய ஒரு விவிலிய எடுத்துக்காட்டில் திராட்சை தோட்டத்தின் உரிமையாளர் ஒருவர் தன் தோட்டத் தொழிலாளியிடம் “இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிக் களைத்தேன்; ஒரு கனியைக்கூட அது என் கண்களுக்குக் காட்டவில்லை, இதை வெட்டிப்போடு, இது வளமான நிலத்தைக் கெடுக்கும் களைபோல் உள்ளது”(லூக்கா 13:6) என்று கூறியிருக்கிறார்.

    ஆனால், அந்தத் தோட்டக்காரனோ, “எஜமானே இந்த வருடம் மரத்தைச் சுற்றிலும் கொத்தி, எருப் போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப் போடலாம்” (லூக்கா 13:8) என்று சொன்னான்.

    இயேசு அத்திமர உவமையைச் சொன்ன காலத்தில் அவர் ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக யூதேயா தேசத்தாருக்கு பிரசங்கித்து, பரலோகத் தந்தை மீதான அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்த பாடுபட்டுவந்தார். ஆனால் யூதேயா மேசியாவைப் புறக்கணித்தும் தனது சொந்த மக்களாலேயே இயேசு கைவிடப்பட்டதும் வரலாறாகிவிட்டது. ஆன்மிக ரீதியாக யூதேயா தேசம் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதை விளக்கவே இயேசு அத்தி மரத்தை பயன்படுத்தினார்.

    அவர் வாதைமிகுந்த தனது மரணத்தை எதிர்கொள்வதற்கு நான்கு தினங்களுக்கு முன், பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு வரும் வழியில் இலைகள் நிறைந்திருந்த ஒர் அத்தி மரத்தைக் கண்டார்; ஆனால் அதில் பழங்களே இல்லை. அது பயனற்ற மரம் என்பதைக் காட்டியது (மாற்கு 11:13). என்றாலும் கனிகளற்ற அந்தமரம் செழிப்பாக காட்சியளித்தது. அதைப்போலவே யூதேயா தேசமும் ஆன்மிகத்தில் செழித்திருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தைத் தந்தது. ஆனால் அது கடவுளுக்கேற்ற கனியைக் கொடுக்கவில்லை.

    பரலோகத் தந்தையின் சொந்த குமாரனையே புறக்கணித்துவிட்டது. கனியற்ற அத்தி மரத்தை இயேசு சபித்தார், அடுத்த நாள் அந்த மரம் பட்டுப்போய் இருப்பதை அவரது சீடர்கள் கண்டு அதிர்ந்தார்கள். ‘‘இறைமக்களாக தேர்ந்தெடுத்த யூதர்களைக் கடவுள் நிராகரித்து விடுவார் என்பதற்குப் பட்டுப்போன அந்த மரம் பொருத்தமான அடையாளமாக இருந்தது’’ (மாற்கு 11:20) என்கிறார் மாற்கு.

    இத்தகைய அத்தி மரங்கள் தற்காலத்திற்கும் புத்தி புகட்டும் ஒன்றாகவே காற்றில் அசைந்தாடுகிறது.

    கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் வாசலில் நின்று பிரார்த்தனை செய்தனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. இந்த பேராலயத்திற்கு எதிரே வங்க கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

    இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்கள் மற்றும் கடற்கரையில் கூட்டம் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஆலயங்களில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    அதன்படி வேளாங்கண்ணி பேராலயத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. இதை தொடர்ந்து பேராலயத்தின் முன் கதவு சாத்தப்பட்டு பக்தர்கள் இன்றி திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் பேராலய. வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

    கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அழகப்பபுரம் அருகே திருமூலநகர் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜாண் பிரிட்டோ தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
    அழகப்பபுரம் அருகே திருமூலநகரில் புனித ஜார்ஜியார் ஆலயம் உள்ளது. இங்கு திருவிழா கடந்த 14-ந் தேதி வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜாண் பிரிட்டோ தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.

    விழாவின் 9-ம் நாளன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி, அதை தொடர்ந்து சவேரியார்புரம் பங்குத்தந்தை செல்வ ஜார்ஜ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு தேர்பவனி ஆகியவை நடந்தது.

    10-ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பிற்பகல் 2.30 மணிக்கு தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டியன் மற்றும் திருமூலநகர் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    முழுஊரடங்கை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டு இருந்தன. இதனால் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை நடைபெற்றது.
    தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பக்தர்கள் இன்றி சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடைபெற்றது. இதனால் கிறிஸ்தவ ஆலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர். அது, ஆன்லைன் மூலம் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் இருந்தபடியே கலந்து கொண்டனர். நற்செய்தியும் இணையதளம் வழியாக ஒளிபரப்பப்பட்டது.

    கோவை காந்திபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பாதிரியார் டேவிட் பர்னபாஸ் பிரார்த்தனை நடத்தினார். இது இணையதளத்தில் ஒளிப்பரப்பட்டது. இது போல் மசூதிகளும் மூடப்பட்டு இருந்தன. முஸ்லிம்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட்டனர்.
    கொரோனா முழு ஊரடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்படுவதால், கத்தோலிக்க தேவாலயங்களில் வாராந்திர திருப்பலி இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்படும் என தமிழக ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
    சென்னை :

    கொரோனா முழு ஊரடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்படுவதால், கத்தோலிக்க தேவாலயங்களில் வாராந்திர திருப்பலி இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்படும் என தமிழக ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக ஆயர் பேரவை தலைவரும், மதுரை உயர்மறை மாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி அனைத்து மறை மாவட்ட ஆயர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:-

    கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாளை முழு ஊடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே ஞாயிறு திருப்பலியை முந்தைய நாளான இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றுமாறு பங்குத் தந்தையர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    திருமணங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருப்பின் இது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். ஞாயிற்றுக்கிழமைகளில் புனித நிகழ்வுகள் ஏதும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் அவற்றை தள்ளி வைப்பது அல்லது சனிக்கிழமைக்கு மாற்றியமைப்பது சிறந்தது.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆயர் பேரவையின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு திருப்பலி இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்படுகிறது.

    இது தொடர்பாக அந்தந்த பங்குத் தந்தையர்கள் இறை மக்களுக்கு வாட்ஸ்-அப், எஸ்.எம்.எஸ். மூலமாக நேற்று தகவல் அனுப்பினர்.
    ×