என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    குழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருக்கோவில் "பசிலிக்கா" (Basilica) என்று கத்தோலிக்க திருச்சபையால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் கோவில் ஆகும்.
    குழந்தை இயேசு பெருங்கோவில் அல்லது குழந்தை இயேசு பசிலிக்கா (Basilica of Bom Jesus) அல்லது Borea Jezuchi Bajilika (கொங்கணி) (போர்த்துக்கீசம்: Basílica do Bom Jesus) என்னும் கத்தோலிக்க கிறித்தவ வழிபாட்டிடம் இந்தியாவின் பழைய கோவா நகரில் அமைந்து, உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் புனித இடம் ஆகும்.

    இப்பெருங்கோவிலில் இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற புனித பிரான்சிசு சவேரியாரின் உடலின் மீபொருள்கள் மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் இந்தியாவில் போர்த்துகீசியர்களின் தலைநகராக விளங்கிய பழைய கோவா நகரில் அமைந்துள்ளது.

    கோவிலின் பெயர் விளக்கம் :

    குழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கத்தோலிக்க கோவிலின் போர்த்துகீசிய பெயர் Basílica do Bom Jesus என்பதாகும். போர்த்துகீசிய மொழியில் Bom Jesus என்பது "நல்ல இயேசு" என்னும் நேரடிப் பொருள் தரும். அப்பெயரால் "குழந்தை இயேசுவை" குறிப்பது போர்த்துகீசிய வழக்கம்.

    இந்தியாவிலேயே முதல் பசிலிக்கா

    குழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருக்கோவில் "பசிலிக்கா" (Basilica) என்று கத்தோலிக்க திருச்சபையால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் கோவில் ஆகும். இது இயேசு சபையினரின் உடைமையாக இருந்தது. இக்கோவில் இந்தியாவில் பரோக்கு கலைப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    கோவிலின் வரலாறு :

    இக்கோவில் கட்டட வேலை 1594இல் தொடங்கியது. கோவில் வேலை முற்றுப் பெற்று, கோவில் 1605 மே மாதத்தில் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலை அர்ப்பணித்தவர் அக்காலத்தில் கோவாவின் பேராயராக இருந்த அலேய்சோ தே மெனெசசு (Dom Aleixo de Menezes) என்பவர் ஆவார்.

    புனித பிரான்சிசு சவேரியாரின் உடல் :

    இக்கோவிலில்தான் புனித பிரான்சிசு சவேரியாரின் உடல் அழியாநிலையில் உள்ளது. இந்தியாவில் கத்தோலிக்க கிறித்தவ மறையைப் பரப்பிய அவர் (1542-1549) சீனா சென்று அங்கும் கிறித்தவ நற்செய்தியை அறிவிக்க அணியமான வேளையில் சீனாவின் நுழைவாயில் போல் அமைந்த சான்சியான் தீவில் 1552, திசம்பர் 2ஆம் நாள் உயிர்துறந்தார்.

    புனித சவேரியாரின் உடல் முதலில் போர்த்துகீசிய மலாக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவ்வுடல் கப்பல் வழியாக கோவா வந்தடைந்தது. சவேரியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே பசுமை நிலையில் கோவா வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது.

    கிறித்தவர்களும் பிற சமயத்தவரும் புனித சவேரியாரின் உடலுக்கு வணக்கம் செலுத்த பெரும் எண்ணிக்கையில் அக்கோவிலுக்குச் செல்கின்றனர். அவ்வுடல் ஒவ்வொரு பத்தாண்டிலும் புனிதரின் திருவிழாவன்று மக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்படுவது வழக்கம். இறுதியாக இவ்வாறு பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டது 2004ஆம் ஆண்டில் ஆகும்.

    சவேரியார் உடலின் அடுத்த காட்சி :

    புனித சவேரியாரின் உடல் அடுத்த முறையாக 2014ஆம் ஆண்டு 22ஆம் நாளிலிருந்து 2015ஆம் ஆண்டு சனவரி 4ஆம் நாள் வரை திருப்பயணிகளின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    மிகப் பழைய கோவில் :

    கோவாவில் அமைந்துள்ள குழந்தை இயேசு பெருங்கோவில் இந்தியாவிலேயே மிகப் பழமையான கிறித்தவக் கோவில்களுள் ஒன்றாகும். கோவிலின் தரை பளிங்குக் கற்களால் ஆனது. கோவிலின் பீடங்கள் அலங்கார முறையில் தங்கமுலாம் பூசப்பட்டு உள்ளன. ஆனால் உள் தோற்றம் எளிமையாகவே உள்ளது.

    இக்கோவிலில் புனித பிரான்சிசு சவேரியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நினைவுக் கூடமும் அதில் அவருடைய உடலைக் கொண்டுள்ள அலங்காரப் பேழையும் இத்தாலியின் தஸ்கனி பிரதேசத்தின் ஆளுநராக இருந்த மெடிச்சி குடும்பத்தைச் சார்ந்த மூன்றாம் கோசிமோ (Cosimo III) என்பவர் வழங்கிய நன்கொடை ஆகும்.

    புனித சவேரியார் நினைவுக்கூடம் :

    சவேரியாரின் நினைவுக்கூடத்தை வடிவமைத்தவர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜோவான்னி பத்தீஸ்தா ஃபோஜ்ஜீனி (Giovanni Battista Foggini) என்ற இத்தாலியச் சிற்பி ஆவார். அந்தக் கலை வேலைப்பாடு நிறைவுற பத்து ஆண்டுகள் பிடித்தன. சவேரியாரின் உடலைக் கொண்டுள்ள அலங்காரப் பேழை வெள்ளியால் ஆனது.

    கோவிலின் இரண்டாம் மாடியில், சவேரியாரின் கல்லறைக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு கலைக்கூடம் உள்ளது. அதில் கோவாவைச் சார்ந்த டோம் மார்ட்டின் என்னும் கலைஞரின் படைப்புகள் காட்சிக்கு உள்ளன.
    பிறரை மன்னிக்காதவர்களின் பாவங்களை இறைவன் மன்னிப்பதில்லை. பாவங்கள் மன்னிக்கப்படாதவன் விண்ணகம் செல்வதில்லை.
    மன்னிப்பின் மகத்துவத்தைப் பற்றி சீடர்களிடம் இயேசு உரையாடிக் கொண்டிருக்கையில், சீடர் பேதுரு இயேசுவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

    ‘இயேசுவே, என்னுடைய சகோதரனோ, சகோதரியோ எனக்கு எதிராகத் தொடர்ந்து பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறையா?’.

    ஏழு என்பது கடவுளுக்குரியது என்றும், முழுமையைக் குறிப்பது என்றும் யூதர்கள் நம்பினார்கள். எனவே தான் பேதுரு அப்படிக் கேட்டார்.

    இயேசு அவரிடம், ‘ஏழு முறை மட்டுமல்ல. எழுபது தடவை ஏழு முறை நீ அவனை மன்னிக்க வேண்டும்’ என்றார்.

    அத்தனை முறை மன்னிப்புப் பெற்றவன் தொடர்ந்து பாவங்கள் செய்வதை விட்டு விடுவான். எல்லாவற்றுக்கும் மேலாய், அத்தனை முறை மன்னித்துவிட்டால் அதன்பின் மன்னிப்பது மனிதனுக்குப் பழக்கமாகிவிடும்.

    இயேசு தொடர்ந்து பேசினார்:

    ஒரு அரசன் இருந்தான். அவன் சற்று நேர்மையானவன் மக்களின் இக்கட்டான நேரங்களில் அவர்களுக்குத் தேவையான பண உதவிகளை அளிப்பது அவனுடைய வழக்கம். ஒருமுறை அவன் தன்னுடைய பணியாளனை அழைத்து, யாரெல்லாம் தன்னிடம் கடன் வாங்கி இருக்கிறார்கள். யாரெல்லாம் அதை நேர்மையாக திருப்பிக் கட்டிஇருக்கிறார்கள், யார் யார் அதை சரியாகக் கட்டாமல் இழுத்தடிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் சொன்னான்.

    பணியாளன் ஏடுகளைப் புரட்டி கணக்கு பார்க்கத் தொடங்கினான்.

    ‘அரசே, ஒரு பணியாளன் உம்மிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டு பல வருடங்களாகிறது. இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை’ பணியாளன் சொன்னான்.

    ‘உடனே அவனை இங்கே அழைத்துவாருங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

    கடன் பட்ட அந்த மனிதர் மன்னனின் முன்னிலையில் இழுத்து வரப்பட்டான்.

    ‘என்னிடம் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் என்னை ஏமாற்றுகிறாயா?’ மன்னன் கர்ஜித்தான்.

    ‘அரசே, உம்மை ஏமாற்றும் எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை. என்னால் கடனை திருப்பிக் கட்ட இயலாத நிலை. வறுமையில் உழல்கிறேன்’ கடன் பட்டவன் பணிந்தான்.

    ‘உம்முடைய சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்வேன்’ அரசன் சொன்னான்.

    ‘அரசே எனக்கு சொத்துக்கள் என்று எதுவுமே இல்லை’

    ‘இருக்கும் சொத்துக்களையும், உன் மனைவி பிள்ளைகளையும் விற்று என்னுடைய கடனை நீ திரும்பச் செலுத்த வேண்டும்’ என்று மன்னன் கத்தினான்.

    கடனாளி அதிர்ந்து போனான். அவன் மன்னனின் காலில் விழுந்து, ‘அரசே.. நீர் எனக்கு இரக்கம் காட்ட வேண்டும். உம்முடைய கருணைக் கண்ணை என்மீது வைத்து என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு இருப்பதே என் மனைவியும், பிள்ளைகளும் தான். அவர்களும் இல்லையென்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. என்னை மன்னியுங்கள். என் கடனை மன்னியுங்கள்’ என்று கதறினான்.

    மன்னன் மனமிரங்கினான்.

    ‘சரி.. நீ போ.. உன்னுடைய அனைத்துக் கடன்களையும் நான் தள்ளுபடி செய்கிறேன்’ மன்னன் சொல்ல, கடன்பட்டவன் கண்களில் கண்ணீர் பனிக்க நன்றி சொன்னான்.

    அரசனுடைய முன்னிலையிலிருந்து வெளியே வந்தான். அவனுக்கு எதிரே அவனிடம் நூறு தெனாரியம் கடன்பட்டவன் வந்து கொண்டிருந்தான்.

    நூறு தெனாரியம் என்பது மிகவும் குறைந்த தொகை. ஒரு தாலந்து ஐம்பது கிலோ தங்கம் என்றால், ஒரு தெனாரியம் என்பது ஆறு கிராம் வெள்ளி என்பது தோராயக் கணக்கு.

    ‘ஏய்.. என்னுடைய நூறு தெனாரியங்கள் எங்கே? வாங்கிப் போய் பல நாட்களாகிறதே’ மன்னனிடம் மன்னிப்பைப் பெற்ற அந்த மனிதன் கர்ஜித்தான்.

    ‘ஐயா, மன்னியுங்கள். விரைவிலேயே கொடுத்துவிடுகிறேன்’ அவன் கெஞ்சினான்.

    தன்னுடைய பத்தாயிரம் தாலந்துக் கடனை மன்னன் மன்னித்ததுபோல, இந்த மனிதனுடைய நூறு தெனாரியம் கடனை மன்னிக்க இவன் விரும்பவில்லை. அவனுடைய கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி, அடித்துத் துவைத்து, அவனை தன்னுடைய அதிகாரத்தின் கீழ் சிறையில் அடைத்தான்.

    சக ஊழியர்கள் இதைக் கண்டபோது மிகவும் வருந்தினர். மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். மன்னன் அதிர்ந்தான்.

    ‘உடனே அவனை இங்கே இழுத்து வாருங்கள்’ என்று ஆணையிட்டான். அவன் இழுத்து வரப்பட்டான்.

    ‘பொல்லாதவனே... உன்னுடைய பத்தாயிரம் தாலந்தை நான் மன்னித்தேனே. அதே போல நீயும் அவனுடைய நூறு தெனாரியம் கடனை மன்னித்திருக்கலாமே’ என்று சொல்லி அவனை சிறையில் அடைத்து, வதைப்போனிடம் ஒப்படைத்தார்.

    இவ்வாறு தாலந்து கடன்பட்டவனின் கதையை இயேசு விளக்கினார்.

    பிறரை மன்னிக்காதவர்களின் பாவங்களை இறைவன் மன்னிப்பதில்லை. பாவங்கள் மன்னிக்கப்படாதவன் விண்ணகம் செல்வதில்லை. சுருங்கச் சொன்னால், விண்ணக வாழ்வுக்கு நுழைய விரும்பினால் பிறரை மன்னிக்கத் தயங்கவே கூடாது.
    புனித அல்போன்சா ஆலயத்தில் சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.
    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழாவின் 9-ம் நாள் அன்று புனித அல்போன்சா துயரங்களை தாங்கி, துயரங்களை வாழ்க்கை முறைமையாக்கி இறைவனுக்கு அர்ப்பணித்ததை நினைவு கூறும் வகையில் அவரவர் இடங்களில் இருந்து நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்துக்கு நடந்தே வந்து தங்களின் வேண்டுதல் நேர்ச்சையை நிறைவேற்றுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு திருவிழாவின் 9-ம் நாளையொட்டி புனித அல்போன்சா ஆலயத்துக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருப்பயணமாக வந்தனர். சீரோ மலபார் கத்தோலிக்க சபையின் தக்கலை மறைமாவட்டத்தின் ஆலயங்கள் அமைந்துள்ள நித்திரவிளை, படந்தாலுமூடு, முன்சிறை, கிள்ளியூர், கருங்கல், குளச்சல், குலசேகரம், ஆறுகாணி, மஞ்சாலுமூடு, முக்கூட்டுக்கல், களியல், மார்த்தாண்டம், தக்கலை, பளுகல், மாலைகோடு, காட்டாத்துறை, பிலாங்காலை, மேக்கா மண்டபம், பறக்கோடு, சூசைபுரம், பாலப்பள்ளம், பிலாங்கரை, மாங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பங்கு மக்கள் திரளாக நடந்து திருத்தலம் வந்து தங்களின் நேர்ச்சையை நிறைவேற்றினர்.

    1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் பலர் கலந்து கொண்டனர். இத்திருத்தல பயணத்தை தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜோசப் முட்டத்துப்பாடம், அருட்தந்தை பெலிக்ஸ் நாதன், சூசைபுரம் வட்டார முதன்மை பணியாளர் ஆன்றனி ஜோஸ் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

    நடைபயணமாக திருத்தலத்துக்கு வந்தவர்களை திருத்தல அதிபர் தாமஸ் பவ்வத்து பறம்பில், திருத்தல துணை பங்குத்தந்தை சனல் ஜான் ஆகியோர் வரவேற்றனர். தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

    தொடர்ந்து புனித அல்போன்சா சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.
    புதுச்சேரி ரெயின்போ நகர் தூய ஜான்மரி வியான்னி ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுச்சேரி ரெயின்போ நகரில் உள்ள தூய ஜான்மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மறைவட்ட முதன்மைகுரு பங்குதந்தை ஆரோக்கியதாஸ் கலந்துகொண்டு கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    தூய ஜான்மரி வியான்னி ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி வருகிற 7-ந் தேதி காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆடம்பர தேர்பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் புதுவை-கடலூர் உயர் மறை மாநில பேராயர் ஆனந்தராயர் கலந்துகொள்கிறார். விழாவையொட்டி நாள்தோறும் இருவேளையில் சிறப்பு திருப்பலியும், மாலையில் தேர்பவனியும் நடக்கிறது.
    நான் இன்று செய்த பாவங்களெல்லாம் என் நினைவிற்கு வரவும், அவைகளுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும் உம்முடைய உதவியை அளித்தருளும் சுவாமி.
    பரிசுத்த ஆவியை நோக்கி

    தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
    வானின்றுமது பேரொளியின்
    அருட்சுடர் எம்மீ தனுப்பிடுவீர்.

    எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
    நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
    இருதய ஒளியே வந்தருள்வீர்.

    உன்னத ஆறுத லானவரே,
    ஆன்ம இனிய விருந்தினரே,
    இனிய தன்மையும் தருபவரே,

    உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
    வெம்மை தணிக்கும் குளிர்நிழலே,
    அழுகையில் ஆறுத லானவரே,,

    உன்னத பேரின்ப ஒளியே,
    உம்மை விசுவசிப் போருடைய
    நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

    உமதருள் ஆற்றல் இல்லாமல்
    உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
    நல்லது அவனில் ஏதுமில்லை.

    மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
    வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
    காயப் பட்டதை ஆற்றிடுவீர்.

    வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
    குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
    தவறிப் போனதை ஆண்டருள்வீர்.

    இறைவா, உம்மை விசுவசித்து,
    உம்மை நம்பும் அடியார்க்குக்
    கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

    புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்.
    இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.
    அழிவிலா இன்பம் அருள்வீரே.

    ஆமென்.

    கொலை செய்யாதீர்கள்; மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தந்தை உங்கள் குற்றங்களை மன்னிப்பார்;
    இன்றைய மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் நாட்டுக்கும், சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் எல்லையாக இருப்பது யோர்தான் நதி. இந்த நதியில் இறங்கி, யோவான் தீர்க்கதரிசியால் ‘ஞானஸ்நானம்’ எனும் திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டார், இயேசு. அப்போது அவருக்கு சுமார் 30 வயது.

    அவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட பிறகே கிறிஸ்து ஆனார்; அதன் பொருள் ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ (லூக்கா 3:21, 22) என்பதாகும்.

    அதன் பிறகு மூன்றரை ஆண்டு காலம் இயேசு தெய்வீக நிலையில் இருந்து போதனைகள் செய்யத்தொடங்கினார்.

    அவரது போதனைகளில் மிகப்பெரியதாகவும், மிகமிக முக்கியமானதாகவும் போற்றப்படுவது அவரது மலைப்பிரசங்கம்.

    மனித குலம் மகிழ்ச்சியான வாழ்வை அடைவதற்கான பாதையை அவர் மலைப்பிரசங்கத்தில் செய்த போதனைகள் சுட்டிக்காட்டுகின்றன. இயேசுவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான மத்தேயு தனது நூலில் 5 முதல் 7 வரையிலான அதிகாரங்களில் மலைப்பிரசங்கத்தின் மகத்துவத்தை பதிவு செய்திருக்கிறார்.

    இவற்றில் காணப்படும் வசனங்கள் ஒவ்வொன்றுமே மகிழ்ச்சி நிறைந்த வாழ்வுக்கான திறவுகோலாக இருக்கின்றன. அதில் ‘உப்பும் ஒளியும்’, ‘எதிரிகளும் நண்பர்களே’, ‘வானத்து பறவைகள் உவமை’ போன்றவை கிறிஸ்துவ வாழ்வின் அடித்தளமாக அமைந்திருக்கின்றன.

    மக்கள் கூட்டத்தைப் பார்த்த அவர், மலைமீது ஏறினார்; அவர் உட்கார்ந்தபோது, சீடர்கள் அவரிடம் வந்தார்கள். அவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார் இயேசு:

    “நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பு உவர்ப்பிழந்து போனால், அதற்கு எப்படி மீண்டும் உவர்ப்பூட்ட முடியும்? வெளியே கொட்டப்பட்டு மனிதரால் மிதிக்கப்படுவதற்கே தவிர வேறெதற்கும் அது உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள். கண் தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் தெளிவாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்; உங்கள் கண் பொல்லாததாக இருந்தால், உங்கள் முழு உடலும் இருளடைந்து இருக்கும். மலைமீது இருக்கும் நகரம் மறைவாயிருக்க முடியாது. உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்பாக பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு உங்கள் பரலோகத் தந்தையை மகிமைப்படுத்துவார்கள்” (மத் 5:13-17) என மனித வாழ்க்கையின் மதிப்பை அழகாக விளக்கினார்.

    “கொலை செய்யாதீர்கள்; மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தந்தை உங்கள் குற்றங்களை மன்னிப்பார்; உங்கள் காணிக்கையைச் செலுத்த ஆலயத்திற்கு நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள் மீது ஏதோ மனக்குறை இருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால், உங்கள் காணிக்கையைச் செலுத்தும் முன்பு முதலில் அவரிடம் போய் சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையை செலுத்துங்கள்”.

    “உங்கள் மீது வழக்கு தொடுக்கிறவரோடு நீங்கள் நீதிமன்றத்திற்குப் போகும் வழியிலேயே விரைவாகச் சமாதானம் செய்துகொள்ளுங்கள்” (மத் 5:21-25).

    “கண்ணுக்குக்கண், பல்லுக்குப்பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன், உங்களுக்குத் தீங்கு செய்கிறவருக்குத் தீங்கு செய்யாதீர்கள்; எவராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; வட்டியில்லாமல் கடன் வாங்க வருகிறவரைப் பார்த்து முகத்தை திருப்பிக்கொள்ளாதீர்கள்”

    “சக மனிதர் மீது அன்பு காட்ட வேண்டும், எதிரியையோ வெறுக்கவேண்டும்’ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர் களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; இப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தந்தையின் பிள்ளைகளாக இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க செய்கிறார்; நீதிமான்களுக்கும், அநீதிமான்களுக்கும் மழை பொழியச்செய்கிறார்” (மத் 5:38-46).

    “மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் தான, தர்மம் செய்யும்போது, தம்பட்டம் அடிக்காதீர்கள்; உங்கள் வலது கை செய்வது உங்கள் இடது கைக்குத் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; அப்போது, நீங்கள் செய்யும் தான, தர்மம் மற்றவர்களுடைய பார்வைக்கு மறைவாக இருக்கும்; எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் நீங்கள் செய்வதைப் பார்த்து உங்களுக்கு உரிய பலனை அளிப்பார்” (மத் 6:2-4).

    “வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்ய கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், இச்சை உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கனவே தன் உள்ளத்தில் தவறான உறவு கொண்டுவிடுகிறான்” (மத் 5:27-30).

    “ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், எஜமானன் ஒருவரை வெறுத்து மற்றவரை நேசிப்பார்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை உதாசீனப்படுத்துவார். கடவுளுக்கும், செல்வத்திற்கும் நீங்கள் ஒரே நேரத்தில் அடிமையாக இருக்க முடியாது.

    அதனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், எதை சாப்பிடுவது எதை குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுப்பது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். உணவைவிட உங்கள் உயிரும், உடையைவிட உங்கள் உடலும் அதிக முக்கியம் அல்லவா? வானத்துப் பறவைகளை கூர்ந்து கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; என்றாலும், உங்கள் வானுலக தந்தை அவற்றுக்கும் உணவளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா..?

    அதனால், முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும், அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்” (மத் 6:24-27) என அடுக்கடுக்கான போதனைகளை மலைபிரசங்கமாக அருளினார்.
    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். 131-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் அதனை தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடைபெற்றது. மாலையில் நற்கருணை ஆசீருடன் கொடியை பங்குத்தந்தை ஜான்சன்ராஜ் அடிகளார் அர்ச்சித்து வைத்தார். தர்மகர்த்தா ஆனந்தராஜா கொடியை ஏற்றி வைத்தார். திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

    உடையார்பட்டி பங்குத்தந்தை ஜோமிக்ஸ் அடிகளார் மறையுரை வழங்கினார். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    8-ம் நாள் திருவிழாவான வருகிற 3-ந் தேதி மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது. பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி மறையுரை வழங்குகிறார்.

    9-ம் நாள் விழா அன்று நள்ளிரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தக்கலை மறை மாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவில் தக்கலை மறை மாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.
    புதுச்சேரி புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுவை உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் உள்ள புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதுமுதல் நாள்தோறும் நற்செய்தியும் மறையுரையும் வழங்கப்பட்டன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி பங்குத்தந்தை குழந்தைசாமி அடிகள் தலைமையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, சிவா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பனிமய மாதா திருவுருவ பவனி நடந்து வருகிறது. தற்போது 434-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலையில் கொடிபவனி நடந்தது. திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து பவனியாக கொண்டு வரப்பட்ட கொடி ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்கள் காணிக்கையாக எடுத்து வரப்பட்டது.

    நேற்று காலையில் 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2-வது திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி மேள, தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து காலை 8.55 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பிஷப் இவோன் அம்புரோஸ் கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவையொட்டி வருகிற 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது. தொடர்ந்து 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது.
    யாரெல்லாம் கடவுளுக்காக உங்கள் வீடுகள், உறவினர்கள், பெற்றோர், சொத்துகள் எல்லாவற்றையும் விட்டு விட்டீர்களோ, அவர்கள் நூறு மடங்கு பெறுவர். அது மட்டுமல்ல, அவர்களுக்கு நிலை வாழ்வும் நிச்சயம் உண்டு’.
    இயேசு எப்போதுமே ஏழை எளியவர்களுடனும், பாவிகளுடனும் கலந்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். பாவத்தை வெறுத்த அவர், பாவிகளை நேசித்தார். அவர் ஏழைகளையும், பாவிகளையும் அரவணைத்துக் கொண்டது பலருக்கும் பிடிக்கவில்லை.

    அந்த சூழலில் ஒரு இளைஞன் இயேசுவிடம் வந்தார். அவர் மிகப்பெரிய பணக்காரர்.

    ‘போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?’ வந்தவர் கேட்டார்.

    அவருடைய கேள்வியின் தொனியில் இயேசு என்ன பதில் சொல்கிறார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாய் இருந்தது. உண்மையிலேயே விண்ணக வாழ்வுக்குள் நுழைய விரும்பியவராய் தெரியவில்லை.

    ‘நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நீர் நல்லவராக வாழ விரும்பினால் கட்டளைகளைக் கடைபிடியும்’ இயேசு பதில் சொன்னார்.

    ‘எந்தக் கட்டளைகளைச் சொல்கிறீர்கள்?’

    ‘பத்துக் கட்டளைகளைப் பற்றி அறிந்திருக்கிறாயா? கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட’ இயேசு சொன்னார்

    ‘இவைகள் எல்லாவற்றையும் கடைபிடிக்கிறேன், எதிலும் தவறியதில்லை’.

    ‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய்’ என்னும் கட்டளையையும் கடைப்பிடி. விண்ணகத்தில் நீ நுழையலாம்’ இயேசு சொன்னார்.

    ‘அதையும் நான் கடைப்பிடிக்கிறேன் இயேசுவே....’ அவன் சொன்னான்.

    உண்மையில் அவன் அதைக் கடைப்பிடிக்கவில்லை. தன்னைப் போல அயலானையும் நேசிப்பவன் செல்வந்தனாய் இருக்க முடியாது. ஏழைகள் உண்ண உணவில்லாமலும், வறுமை நிலையிலும் இருக்கும் போது செல்வத்தை களஞ்சியத்தில் சேர்த்துக் கொண்டே இருப்பவர் எப்படி ‘தன்னைப் போல் அயலானை நேசிப்பவர்’ ஆக முடியும்?

    இயேசு அவரைக் குற்றம் சாட்டி இகழ்ச்சிக்குள்ளாக்க விரும்பவில்லை.

    அவரைப் பார்த்து சொன்னார்: ‘நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்’ என்றார்.

    அந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.

    தன்னிடமிருக்கும் பணத்தில் கொஞ்சத்தைக் காணிக்கையாய்க் கொடுத்தோ, தான தர்மங்கள் செய்தோ விண்ணக வாழ்க்கையை வாங்கி விடலாம் என அவர் நினைத்தார். உண்மையில் விண்ணக வாழ்க்கை என்பது நாம் சம்பாதிப்பதல்ல, நமக்கு இறைவனால் இலவசமாய்க் கொடுக்கப்படுவதே. அதை அவன் அறியவில்லை.

    இயேசுவின் பதில் அந்த இளைஞனை நிலைகுலைய வைத்தது. இத்தனை நாள் சேமித்த சொத்தை எப்படி ஒட்டு மொத்தமாக விற்று மற்றவர்களுக்குக் கொடுப்பது? வாழும் வரை அனைத்து சொத்துகளோடும் சுகபோக வாழ்க்கை வாழவேண்டும் என நினைத்தார் அவர். எனவே அவர் மன வருத்தத்தோடு திரும்பிச் சென்றார்.

    இயேசு சீடர்களிடம் திரும்பி, ‘செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’ என்றார்.

    அந்தப் பதில் சீடர்களுக்கே வியப்பாக இருந்தது. செல்வம் படைத்தவர்கள் விண்ணரசில் நுழைய முடியாது என்பது அவர்களுக்குப் புதிய பாடம். அதிக பணம் இருப்பவர்கள் காணிக்கைகளை அதிகமாய் செலுத்துவதும், அதன் மூலம் தாங்கள் கடவுளின் பிரியத்துக்குரியவர்கள் என காட்டிக் கொள்வதுமே அந்த நாட்களில் நடந்து வந்தது. எனவே அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்.

    ‘அப்படிப் பார்த்தால் யார் தான் மீட்புப் பெற முடியும்?’

    ‘மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்’ இயேசு சொன்னார்.

    சீடர்களுக்குள் குழப்பம் எழுந்தது. வாழ்க்கையின் கடைசி நிமிடத்தில் தங்கள் சொத்தையெல்லாம் விற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மனிதன் விண்ணகம் நுழைய முடியும் என்றால், துவக்கம் முதலே எல்லாவற்றையும் உதறிவிட்டு இயேசுவோடு நடக்கும் தங்களுக்கு என்ன கிடைக்கும்?

    சீடர்கள் சிந்திக்க, யோவான் இயேசுவிடம் கேட்டார், ‘நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?’

    இயேசு சீடர்களைப் பார்த்து, ‘அதற்குரிய காலம் வரும். நான் அரியணையில் வீற்றிருக்கும் போது நீங்கள் பன்னிரண்டு பேரும் இஸ்ரவேல் மக்களின் பன்னிரு குலத்துக்கும் நடுவர்களாக பன்னிரு அரியணையில் வீற்றிருப்பீர்கள்’ இயேசு உறுதியாய்ச் சொல்ல அவர்கள் முகத்தில் நிம்மதி.

    இயேசு தொடர்ந்தார், ‘எனக்காக யாரெல்லாம் உங்கள் வீடுகள், உறவினர்கள், பெற்றோர், சொத்துகள் எல்லாவற்றையும் விட்டு விட்டீர்களோ, அவர்கள் நூறு மடங்கு பெறுவர். அது மட்டுமல்ல, அவர்களுக்கு நிலை வாழ்வும் நிச்சயம் உண்டு’.

    இயேசுவின் பேச்சைக் கேட்ட சீடர்கள் மகிழ்ந்தனர்.
    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புனித சந்தன மாதா ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    காரைக்கால் மாவட்டம் பிள்ளைத்தெரு வாசல் கிராமத்தில் உள்ள புனித சந்தன மாதா ஆலயத்தில் ஆண்டு தோறும் புனித சந்தனமாதா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக சந்தன மாதா கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டதும் மாலை 6 மணியளவில் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. விழாவில் பங்குத் தந்தையர்கள், அருட்கன்னியர்கள், இளைஞர் மற்றும் மாதர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் இன்று (திங்கட் கிழமை) மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும் அதனை தொடர்ந்து நற்செய்தி ஜெபக்கூட்டமும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும், அதனை தொடர்ந்து மின்விளக்கு அலங்கார தேர்பவனியும் நடைபெறுகிறது. 27-ந் தேதி (புதன்கிழமை) அன்று காலை 6-30 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறுகிறது.
    தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருவிழா 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருத்தலங்களில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தலமும் ஒன்றாகும். தென்னிந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் மிக உயர்ந்த கோபுரம் கொண்டதாக அமைந்துள்ளது பனிமாதா அன்னையின் ஆலயம்.

    இந்த பேராலய திருவிழா தொடக்கமாக வருகிற 27-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை தெற்கு கள்ளிகுளம் பங்கு தந்தை ஜான்சன்ராஜ் ஜெபம் செய்து அர்ச்சித்த பின்னர் கோவில் தர்மகர்த்தா ஆனந்தராஜா கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து உடையார்பட்டி பங்குத்தந்தை ஜோமிக்ஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 2-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6.00 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு அடைக்கலாபுரம் அருட்தந்தை ஜோசப் இசிதோர் தலைமையில் சிறப்புஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. ஆகஸ்டு 3-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் வடவை மறைமாவட்ட முதன்மை குரு ததேயுஸ் ராஜன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது.

    மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நற்கருணை பவனி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மாதா தொலைக்காட்சி தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ரவி மறையுரையும் நற்கருணை ஆசீர்வாதமும் வழங்குகிறார். ஆகஸ்டு 4-ந்தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், காலை 10 மணிக்கு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு தக்கலை மறை மாவட்டம் ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனையும், மதுரை மறை மாநிலம் அருட்தந்தை அந்தோணி ராஜன் மறையுரையும் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து வானவேடிக்கையும் இரவு 12 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். ஆகஸ்டு 5-ந் தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட மேதகு ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி மற்றும் 8.30 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெறுகிறது. பின்னர் இரவு மாலை ஆராதனையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஆனந்தராஜா, பங்குதந்தை ஜான்சன்ராஜ்,உதவி பங்குதந்தை ராயப்பன் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறைமக்கள் செய்து வருகின்றனர்.
    ×