என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நாலாங்கட்டளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    பாளைமறை மாவட்டத்தின் 51-வது பங்கு நாலாங்கட்டளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இத்திருவிழா வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது. 19-ந்தேதி காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வருகிற 24-ந்தேதி நற்செய்தி பெருவிழா, ஒப்புரவு அருட்சாதனம், சிறப்பு திருப்பலி, அசன விருந்து மற்றும் கலைநிகழ்ச்சிகள், பாடல்-விவிலிய போட்டிகள் நடக்கிறது.

    25-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு மாலை நேர வகுப்பு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 26,27,28 ஆகிய தேதிகளில் தினமும் இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    29-ந் தேதி மாலை 6 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி மற்றும் புனித அந்தோணியார் இளைஞர்கள் இயக்கம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலியும், இரவு 9 மணிக்கு புனிதரின் திருவுருவ பவனியும் நடக்கிறது.

    31-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு திருவிழா திருப்பலி, திருமுழுக்கு, புதுநன்மை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு புனிதரின் திருவுருவ பவனி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசிரை தொடர்ந்து கலைநிகழ்ச்சியுடன் கொடியிறக்கம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நாலாங்கட்டளை பங்கு தந்தை ஜெகன் ராஜா மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.

    வேத வசனங்களை வாசித்து தியானிக்கும் போதும், தேவ செய்திகளைக் கேட்கும்போதும் வசனத்தின் மூலமாக ஆண்டவர் அதிகமாக நம்மோடு பேசுவது வழக்கம்.
    பலவிதங்களில் ஆண்டவர் நம் ஒவ்வொருவரோடும் பேசி வருகிறார். குறிப்பாக வேத வசனங்களை வாசித்து தியானிக்கும் போதும், தேவ செய்திகளைக் கேட்கும்போதும் வசனத்தின் மூலமாக ஆண்டவர் அதிகமாக நம்மோடு பேசுவது வழக்கம்.

    இந்நாட்களில் பொருளாதாரத்தில் நமது பாரத தேசம் பலவிதமான இன்னல்களையும், சவால்களையும் சந்தித்து வருகிறது. அமெரிக்கா டாலரை இந்திய பணத்தில் கணக்கிட்டு பார்க்கும் போது வரலாறு காணாத அளவுக்கு இந்திய ரூபாய் வீழ்ச்சியடைந்து கொண்டு போகிறது. மறுபக்கம் எல்லா பொருட்களும் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் எல்லா தரப்பு மக்களும் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு வருவது நாம் எல்லாரும் அறிந்ததே. இச்சூழ்நிலையில், ‘ஆண்டவர் எங்களுடைய பொருளாதார நிலைமையை மாற்றி அமைப்பாரா? தரித்திரங்களை மாற்றி ஆசீர்வாதங்களை ஆண்டவர் எப்போது தருவார்?’ என்றெல்லாம் உங்கள் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கலாம்.

    ஆண்டவர் உங்களுடைய கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்து உங்களை ஆசீர்வதிப்பார்.

    உற்சாகமாய் கொடுங்கள்

    ‘அவள் போய் எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும் இவனும் அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்’ (1. இராஜா.17:15)

    இச்செய்தியை நீங்கள் வாசிக்கும்போது முடிந்தால் 1.இராஜா. 17-ம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பாருங்கள். ‘ஒன்றுமில்லாதவர்களை எல்லாம் உடையவர்களாய் நம் ஆண்டவர் மாற்றுவார்’ என்பதற்கு இவ்வதிகாரம் ஒரு நல்ல உதாரணம் ஆகும்.

    சாறிபாத் என்ற ஊர் பஞ்சத்திலும், வறுமையிலும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் தேவ மனிதனாகிய எலியாவை ஆண்டவர் அவ்வூருக்கு அனுப்பினார். அவ்வூரில் ஒரு ஏழை விதவை சில விறகுகளைப் பொறுக்கி கொஞ்சம் மாவை வைத்து சாப்பிட்டு தானும் தன்னுடைய மகனும் மரிக்க வேண்டும் என்ற எண்ணமுடைய அவ்விதவையை தேவ மனிதன் சந்தித்தார்.

    அவ்விதவையின் வாழ்க்கையில் ஐசுவரியத்தைக் கொடுக்க, ஆண்டவர் சித்தம் கொண்டார். ஆனால் அவளுக்கோ தேவசித்தம் இன்னதென்று தெரியாது. அவளை செழிப்பாக்க ஆண்டவர் விரும்பினபோதுதான் தேவ மனிதனை அவளிடத்திற்கு ஆண்டவர் அனுப்பினார்.

    “இப்பொழுது எலியா அவளைப் பார்த்து, ‘பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத் தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்’ என்றான். (1 இராஜா.17:13,14)

    மேற்கண்ட வசனத்தின்படி எலியா சொன்னதை அந்த ஏழை விதவை உடனே செய்தாள். இச்செய்தியை வாசிக்கிற தேவபிள்ளையே! உங்கள் கடன் பிரச்சினைகளையும், தரித்திரங்களையும் ஆண்டவர் மாற்றுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தும், செழிப்பை இன்று வரைக்கும் நீங்கள் காணாமல் இருந்தால், உங்கள் குறைவுகளை பொருட்படுத்தாமல் தேவனுக்குக் கொடுக்கிற காரியத்தில் உங்கள் இருதயம் உற்சாகம் கொள்ளட்டும்.

    தன்னுடைய குறையை அவள் பெரிதாக எண்ணியிருந்தால் நிச்சயம் எலியாவின் விருப்பத்தை அவள் நிறைவேற்றியிருக்கமாட்டாள். தன்னுடைய குறைவை விட, தேவமனிதனின் குறைவை அவள் பெரிதாக எண்ணி விசுவாசத்தோடு கர்த்தருடைய ஊழியக்காரனை போஷித்தபடியினால் அவளும், அவளுடைய மகனும் எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய வீட்டாரும் அநேக நாள் சாப்பிடக்கூடிய அளவுக்கு நிரம்பி வழியும் செழிப்பை தேவன் கட்டளையிட்டார்.

    தேசத்தில் பஞ்சம், வறுமை, கடன், கஷ்டம், விலைவாசி உயர்வு சகலமும் இருக்கலாம். ஆனால் அவரை நம்பி கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்கு உற்சாகமாய்க் கொடுத்தால் நிச்சயம் நீங்கள் வறுமையில் இருப்பதில்லை.

    உங்களை சுற்றியிருக்கிற தற்கால சூழ்நிலையைப் பார்க்காமல் இனி உங்களை ஆசீர்வதிக்கும் ஆண்டவரை நம்பிக்கையோடு பார்த்து விசுவாசத்தோடு உங்கள் அன்பின் காணிக்கையை கர்த்தருக்கு கொடுங்கள். நிரம்பி வழியும் ஆசீர்வாதங்கள் உங்களிடத்தில் வந்து சேரும்.

    ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
    சிலுவை என்பது பரம பிதாவின் சித்தத்தை நிறைவேற்றத் தனக்குக் கொடுக்கப்பட்டக் கருவி என்று இயேசு கிறிஸ்து எண்ணினார்.
    சிலுவை இயேசு கிறிஸ்துவின் மரணத்தால் உலக வரலாற்றில் தலையாய் இடம் பெற்றிருக்கின்றது. முன்னே குற்றவாளிகளின் அவமானச் சின்னமாக இருந்த சிலுவை இப்போது மானிடரின் ஈடேற்றத்திற்குச் காரணமாக அமைந்துள்ளது. கிறிஸ்துவின் மரணத்திற்கு முன் சிலுவை என்பது தாங்க முடியாத கொடுமையான தண்டனையை நிறைவேற்றும் கருவி.

    ஒரு கள்வனுக்கோ, ஒரு கொலைப்பாதகனுக்கோ அல்லது ஒரு கலகக்காரனுக்கோ கொடுக்கப்பட்டு வந்து அதிகபட்சமான தண்டனை சிலுவையில் மரிக்கச் செய்வது. உபாகமத்தில் மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது. அது ஒரு பயங்கரமான சாவு. சிலுவை மரணம் மகா ஈனமானது. அது மகா பாவிக்கு விதிக்கப்பட்ட தண்டனை. அது தேவ கோபத்தினால் உண்டாகும் என்பது அக்காலத்துக் கொள்கை.

    ஏற்கனவே செய்து வைக்கப்பட்டிருக்கும் சிலுவை குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அந்த சிலுவையை அவனே சுமந்துகொண்டு செல்லவேண்டும். அந்த காட்சியைப் பார்க்கும் ஜனங்களின் கேவலமான விமரிசனங்கள், போலிப் பேச்சுகள், தண்டனையை நிறைவேற்றக் காத்திருக்கும் போர்ச் சேவகரின் சித்திரவதைகள் சவுக்கடிகள் இவையெல்லாம் அவன் அனுபவித்துத் தீரவேண்டும். குற்றவாளிகளின் தண்டனையை உடனே சிலுவையிலறைந்து நிறைவேற்றுவதை விட இவைகளை அனுபவிக்கும் காட்சி மிகமிகக் கொடுமையானது ஆகும்.

    ஆனால் இயேசுவின் மரணத்திற்கும் பின் அதுவரை நிலவிவந்த சிலுவையின் இழிநிலை மாற்றப்பட்டு அது ஒரு அன்பின் சின்னமாக பாவிகளை இரட்சிக்கம் கிறிஸ்து இயேசுவை நினைவு கூறும் சின்னமாக உலக வரலாற்றில் முக்கியமானதொரு அழியா இடத்தைப் பெற்றுள்ளது. இயேசு கிறிஸ்து தாம் சிலுவையில் ஒப்புக்கொடுக்கப்படும் முன்பு அவர் தாமே தமது சீஷர்களுக்கம் மக்களுக்கும் அறிவித்த ஞானார்த்தத்தை நாம் அறிந்து கொள்வது மிக அவசியமானதொன்றாகும்.

    சிலுவை என்பது பரம பிதாவின் சித்தத்தை நிறைவேற்றத் தனக்குக் கொடுக்கப்பட்டக் கருவி என்று இயேசு கிறிஸ்து எண்ணினார். ஆகவே தமது அன்றாடப் பணியை பரம தந்தையின் சித்தத்திற்கேற்ப செய்து வந்த போது சிலுவை வந்தது சிலுவையைக்கண்டு அவர் பின்வாங்கவில்லை. தன் சீஷர்களை பார்த்து ஓருவன் என் பின்னே வர விரும்பினால் தன்னைத்தான் வெறுத்துத் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

    என்றார் (மத் 16:24). மாற்கு 8:34ல் இயேசு தன் சீஷர்களுக்கு மட்டுமல்ல, எதிரே இருந்த ஜனங்களையும் பார்த்து இதே கருத்தை வலியுறுத்தியும் பேசுகிறார். மேலும் ஒருவன் இயேசுவிடம் வந்து 'நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ள நான் என்னச் செய்யவேண்டு;?" என்று கேட்டான். இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்து ஒரு குறை அவனிடத்தில் கண்டார். 'உனக்குண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா" என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனானபடியால் அவர் சொன்னதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை (மாற்கு 10:21).

    சிலர் சிலுவைக்குப் பயப்படுவார்கள் ஆனால், 'சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. ஆனால் இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது" (1கொரி 1:18) பரிசுத்த அப்போஸ்தலனாகிய பவுலுக்குக் கிடைத்த சிலுவை, 'நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைப் பாராட்டாதிருப்பேனாக" (கலா 6:14). பவுல் இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து ஏன் மேன்மை பாராட்டினார்?

    1. சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் அன்பைக் காண்கிறோம். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப் பண்ணுகிறார் (ரோம 5:8). இறைவனின் அன்பை உலகிற்குக் கொண்டுவந்தவரும் அதை செயலில் காட்டியவரும் இயேசுதான். 'தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). கிறிஸ்து தாமே உலகத்துக்கு வராவிட்டால் நாம் பாவத்தில் மரித்திருப்போம்.

    2. சிலுவையில் பாவத்தின் பயங்கரத்தைக் காண்கிறோம். தீமையோடும் தீய சக்தியோடும் போராட வேண்டியிருந்தது. இருதயம் கடினம் குருட்டாட்டம் பொறாமை, பெருமை ஆகிய இவைகள் சமயத்தலைவர்களின் கண்களைக் குருடாக்கி விட்டன. பொது மக்கள் ஏனோதானோ வென்றிருந்தார்கள். யூதாஸ் காட்டிக் கொடுத்தான். பேதுரு மறுதலித்தான். சீஷர்கள் ஓடிப்போய்விட்டார்கள். பிலாத்து நீதி செலுத்தி அவரை விடுதலைச் செய்யத்தவறிவிட்டான்.

    போர்ச்சேவர்கள் கேலி செய்து வாரினால் அடித்தார்கள். பாவமில்லாத அவர் நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே சிலுவையில் ஒப்புக்கொடுக்க நேர்ந்தது. நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு அவர்தாமே தமது சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சிலுவையில் சுமந்தார் (1பேதுரு 2:24). பாவமானது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே பிரிவினை உண்டுபண்ணுகிறது. சிலுவையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

    3. சிலுவையில் மன்னிப்பின் செய்தி அறிவிக்கப்படுகிறது. இறைவன் இயேசு மன்னிக்கிறதற்குத் தயை பொருந்தினவர். மன்னிப்பின் உபதேசத்தைப் பலமுறை தமது சீஷர்களுக்குப் போதித்தார். மற்றவர்களுக்கு விரோதமாகச் செய்தக் குற்றங்களை மன்னித்தால், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்றார். தமது வாழ்க்கையில் தாமே அதை முன் மாதிரியாகச் செயல்முறையில் காட்டினார்.

    கிறிஸ்து இரட்சகர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே நமக்கு மன்னிப்பை அருளுகிறார் (எபே 1:17, 1யோவா 1:7-9). இரட்சகரின் மன்னிப்பின் மாட்சிமையை உணர்ந்து மனந்திருப்பி மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் (லூக் 24:47) மனந்திரும்புதலும் மன்னிப்பும் ஒன்றுபோல் வருகிறது. மன்னிப்பை பெற நாம் மன்னிக்கும் சிந்தையுள்ளவர்களாக இருக்கவேண்டும் (மத் 18:33-35).
    புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுச்சேரி உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம், பாதிரியார்கள் மெல்கிசதேக், குழந்தைசாமி, மார்ட்டீன் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டு கொடியேற்றினார்கள்.

    முன்னதாக கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நவநாட்களில் தினமும் காலை, மாலை வேளையில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

    வருகிற 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தேர்பவனியும், அதைத்தொடர்ந்து தேவநற் கருணை ஆசீர்வாதமும் நடைபெறும்.
    இயேசு சிலுவையில் அறையப்பட்டார், உயிர் விட்டார். அரிமத்தியா ஊர் யோசேப்புவின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
    இயேசு சிலுவையில் அறையப்பட்டார், உயிர் விட்டார். அரிமத்தியா ஊர் யோசேப்புவின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். கல்லறை வாசல் ஒரு மிகப் பெரிய கல்லினால் அடைக்கப்பட்டது.

    இயேசுவின் மரணம் சீடர்களுக்கு அதிர்ச்சியாகவும், கலக்கமாகவும் இருந்த அதே நேரத்தில் மூப்பர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும், குருக்களுக்கும் கொண்டாட்டத்தின் நாளாக இருந்தது.

    ‘ஒருவழியாக மிகப்பெரிய தொல்லை இன்றுடன் தீர்ந்தது, இனிமேல் பிரச்சினையில்லை’.

    ‘அவன் பின்னால் சென்ற மனிதர்களையும் நாம் சும்மா விடக்கூடாது. அவர்களையும் நாம் ஏதாவது செய்ய வேண்டும்’.

    ‘அந்தக் கவலை நமக்கு வேண்டாம். அவனுடைய சீடர்கள் சாதாரணமானவர்கள். அவர்கள் இனிமேல் தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். மீன் பிடிக்கவோ, வரி வசூலிக்கவோ’

    சிரிப்பொலிகள் அலைந்தன.

    ‘அது சரிதான்...’

    ‘நம்முடைய திட்டம் கனகச்சிதம். அதுவும் பரபாவையா?, இயேசுவையா? யாரை விடுதலை செய்யவேண்டும் என்று மன்னன் கேட்டபோது ஒரு வினாடி பயந்துவிட்டேன். எங்கே மக்கள் இயேசுவைக் கேட்பார்களோ என்று. நல்லவேளை நாம் கூட்டத்தைச் சரியாகக் கட்டுப்படுத்தி விட்டோம்’.

    அவர்கள் ஆனந்தமாய் உரையாடிக் கொண்டிருந்தார்கள். தங்கள் முதுகை அழுத்திக்கொண்டிருந்த தேவையில்லாத ஒரு பாரம் இறங்கிப் போன நிம்மதி அவர்களிடம் தெரிந்தது.

    ‘ஏய்... எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது..’

    ‘என்ன?’

    ‘இயேசு உயிருடன் இருந்தபோது, மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவேன் என்று சொல்லியிருந்ததாய் ஞாபகம்’

    ‘அவனாவது உயிர்த்தெழுவதாவது... அதைப்பற்றி எல்லாம் ஏன் கவலைப்படுகிறாய்? அதெல்லாம் நடக்காது’.

    ‘நடக்காது என்பது தான் என் நம்பிக்கையும்... ஆனால்...’

    ‘என்ன ஆனால்...’

    ‘ஒருவேளை அந்த சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டு இயேசு உயிர்த்தார் என்று கதை கட்டலாம் அல்லவா?’

    அவன் சொன்னதும் எல்லோரும் நிமிர்ந்தார்கள்.

    ‘அப்படி நடந்தால். அது மிகப்பெரிய எழுச்சியை மக்களிடையே உண்டாக்கிவிடும். இயேசு உண்மையிலேயே கடவுள் தான் என்று மக்கள் கூட்டம் நம்பி விடவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா?’

    ‘அட... ஆமாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் நாம் உடனே மன்னனிடம் போய், அந்தக் கல்லறையைக் காவல் காக்க ஏற்பாடு செய்யவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?’

    ‘கண்டிப்பாக...’

    அவர்கள் நேராக பிலாத்துவிடம் ஓடினார்கள்.

    ‘மன்னா... இயேசுவைக் கொன்றது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால்...ஒரு விண்ணப்பம்...’

    ‘என்ன விண்ணப்பம்’ பிலாத்துவின் குரலில் எரிச்சல் தெரிந்தது.

    இயேசு குற்றமில்லாதவர் என்றும், இந்தக் கூட்டத்தினரின் பொறாமை தான் அவரைக் கொன்றது என்றும் பிலாத்து அறிந்திருந்தான். எனவே அந்தக் கூட்டத்தினரைப் பார்ப்பதையே வெறுத்தான்.

    முதலில் இயேசுவைக் கொல்லவேண்டும் என்று உயிரை வாங்கினார்கள். பின் யூதர்களின் அரசன் என்ற பெயர்ப் பலகைக்கு பிரச்சினை செய்தார்கள். இப்போது என்ன பிரச்சினையோடு வந்திருக்கிறார்கள்?

    ‘மன்னா.. அந்த இயேசு உயிரோடு இருந்தபோது, இறந்தாலும் மூன்றாவது நாளில் உயிர்ப்பேன் என்று சொல்லியிருந்தான்’

    ‘சரி.. அதற்கென்ன இப்போது? அவர் உயிர்த்தால் பார்த்துக் கொள்ளலாம்’

    ‘அதில்லை மன்னா. அவனுடைய சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்து எங்கேயாவது போட்டு விட்டு அவன் உயிர்த்து விட்டான் என்று கதை கட்டிவிடலாம் அல்லவா?’

    ‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை’ பிலாத்து கேட்டான்.

    ‘மன்னா.. இந்த மூன்று நாட்களும் அந்தக் கல்லறையைக் காவல் காக்கவேண்டும். மூன்று நாளில் உயிர்த்தெழுவேன் என்பது தான் அவனுடைய பேச்சு. எனவே மூன்று நாட்கள் மட்டும் காவலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே எங்கள் விண்ணப்பம்’

    ‘உங்களிடமே வீரர்கள் உண்டே. அவர்களைக் கொண்டு நீங்கள் காவல் புரியுங்கள். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்’ பிலாத்து எரிச்சல் குறையாமல் பேசினான்.

    ‘உங்கள் அனுமதிக்கு நன்றி அரசே’ கூட்டத்தினர் கலைந்தனர்.

    உடனே சென்று படைவீரர்களை ஏற்பாடு செய்தனர்.

    சில படைவீரர்கள் இயேசுவின் கல்லறைக்குச் சென்று அவருடைய உடல் கல்லறையில் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தினார்கள். பின் கல்லறையை மூடி அதை சங்கிலிகளால் பொருத்தி ‘சீல்’ வைத்தனர். படை வீரர்கள் அந்தக் கல்லறை வாசலில் கண் விழித்துக் காவல் இருந்தார்கள். அங்கே ஐம்பது படை வீரர்கள் வரை இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இயேசுவின் மரணத்தையும், உயிர்ப்பையும் அருகிருந்து தரிசிக்கும் பாக்கியத்தை அந்த வீரர்கள் பெற்றார்கள்.
    இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளுதல் அவசியம் என்பதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.
    கிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் குறித்துப் பேசும்போது கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, உயிர்ப்பு, விண்ணேற்பு, குருத்தோலை தினம் என விழாக்கள் நம்முடைய நினைவுக்கு வருகின்றன. பெரும்பாலும் நம்முடைய நினைவுக்குள் வராத நாள் சாம்பல் புதன்.

    இந்த சாம்பல் புதன் என்றால் என்ன ?

    உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக அனுசரிக்கின்றனர்.
    தவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.

    பழைய ஏற்பாடுகளில் எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் தவத்தைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது கிறிஸ்துவின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதும், பழைய வழக்கத்திலிருந்து பெறப்பட்டதே என்பதும் உறுதியாகிறது.

    கி.பி 900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

    கத்தோலிக்கத் திருச்சபையில் அன்றைய தினத்தில் பாதிரியார் மக்களுடைய நெற்றியில் “மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார்.

    இயேசு சிலுவை மரணத்தை சந்திக்கும் முன் எருசலேமிற்குள் நுழைந்த தினத்தில் மக்கள் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து அவரை வரவேற்றார்கள். அந்த நாளே இன்றைய திருச்சபையில் “குருத்தோலை தினம்” என கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் குருத்தோலைகளைப் பிடித்து பவனிகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தில் ஆலய கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் ஓலையே அடுத்த ஆண்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு, “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் பூசப் பயன்படுகிறது.

    பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசிந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். அதன் நீட்சியாகவே “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.

    நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டுகிறது. நெற்றியில் பூசப்படும் சாம்பல் மனிதனை முழுமையாக இறையில் சரணடைய வைக்கிறது.

    நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.

    இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்த நிகழ்ச்சி விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் அந்த அனுபவத்தில் இணைகின்றனர்.

    தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.

    இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர்.

    சிலர் வெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

    நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. நோன்பு இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வெண்டுமென்பதே இறைவனின் விருப்பமும் போதனையும்.

    இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளுதல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.
    நற்செய்தியின் பொழிவே செபமாலை என்பதால், அனைவரும் பாராட்டிப் பயில வேண்டிய பக்தி முயற்சி இது.
    செபமாலையில் இரண்டு அம்சங்கள் உள்ளன :

    1. வாய்ச் செபம்.

    2. அதே வேளையில் நாம் உள்ளத்தில் தியானிக்க வேண்டிய மறை நிகழ்ச்சி என்ற மனச் செபம்.

    மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து கொண்டிருந்தார்| என்பதை லூக்கா இருமுறை நினைவுப் படுத்துகிறார். (2: 19, 51) அந்த அன்னையின் இதயங் கொண்டு, அவரது பார்வையில் நம் மீட்பின் மறைநிகழ்ச்சிகளை நாம் தியானிக்கிறோம்.

    அந்த மறை நிகழ்ச்சிகள் நம் மீட்புப் பணியின் நான்கு கட்டமாக தியானிக்கலாம்

    1. தம்மையே வெறுமையாக்கி மனித உருவில் தோன்றினார் - மகிழ்ச்சி மறைநிகழ்ச்சிகள்

    2. இயேசுவின் பணிவாழ்வு, இறையன்பின் வெளிப்பாடு - ஒளியின் மறை நிகழ்ச்சிகள்.

    3. சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்படிபவரானார் - துயர மறை நிகழ்ச்சிகள்

    4. கடவுள் அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தினார் - மகிமை மறை நிகழ்ச்சிகள்.

    நற்செய்தியின் பொழிவே செபமாலை என்பதால், அனைவரும் பாராட்டிப் பயில வேண்டிய பக்தி முயற்சி இது.
    இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் முகமாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
    புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் சமய ஆண்டில் ஒரு முக்கியமான நாளாகும். இது உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னரான வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் முகமாக இது அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் கிறிஸ்தவர் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவர்.

    இவை பொதுவாக இயேசு சிலுவையில் அறையப்படுவதை நினைவுகூறும் வகையிலிருக்கும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும். இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது.
     
    இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது. இயேசு மரித்த நாள் விவிலியத்திலுள்ள தகவல்களைக் கொண்டு இயேசு மரித்த நாளை சரியாக கணக்கிட முடியாது. விவிலியத்தில் இயேசு நிசான் மாதம் 14 அல்லது 15 ஆம் நாள் மரித்ததாக கூறப்பட்டுள்ளது.

    டைபிரியஸ் சீசரின் காலம் என்பதை விட ஆண்டு பற்றிய குறிப்பேதும் இல்லை. அனால் நான்கு நற்செய்திகளின் படியும் இயேசு மரித்தது ஆயத்தப்படுத்தல் நாளிலாகும். (ஓய்வுநாளுக்கு முதல் நாளாகும்) இதன்படி இயேசு மரித்தது வெள்ளிக்கிழமையாகும். மேலும் இயேசு மரித்த நாள் கி.பி. 33 ஏப்பிரல் 3 ஆம் நாளாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இத்தினத்தில் பகுதி சந்திரகிரகணமும் ஏற்பட்டுள்ளது. (இயேசு சிலுவையில் உயிர் நீத்தபோது வானம் இருண்டது). தற்போது புனித வெள்ளி ஏப்ரல் 23 க்கும் மே 7 க்குமிடையே ஒரு வெள்ளியில் அனுசரிக்கப்படுகிறது.
    புதுவை மாநிலம், அரியாங்குப்பத்தில் இருக்கிறது, புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்.
    புதுவை மாநிலம், அரியாங்குப்பத்தில் இருக்கிறது, புனித ஆரோக்கிய அன்னை ஆலயம். சிறிய வேளாங்கண்ணித் திருத்தலம் என்று அழைக்கப்படும் இக்கோயிலைச் சுற்றி சிலுவைப் பாதையின் 14 நிலைகளும் அழகான சிமென்ட் குடில்களில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.  

    1690-ம் ஆண்டு ஃபிரெஞ்சு அரசின் அனுமதியுடன் கத்தோலிக்க சிரியர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம்தான் புதுச்சேரியில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் எனக் கூறப்படுகிறது. ஆலயத்துக்கு அப்போது ‘உற்பவி அன்னை ஆலயம்’ என்று பெயரிடப்பட்டது.

    இத்தேவாலயம் உள்ளடக்கியிருக்கும் வரலாறுகள் ஏராளம். 1689-ம் ஆண்டு கத்தோலிக்க சிரியர்களால் ஏசு சபையினருக்கு இந்த ஆலயம் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தரங்கம்பாடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய டச்சுக்காரர்களால் ஃபிரெஞ்சு அரசுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்த ஆலயம் தாக்குதலுக்கு உள்ளானது. இப்படி பல தடவை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

    இப்படி பல போராட்டங்களையும் தாண்டிய இத்திருத்தலம், பின்னாட்களில் நடந்த புனரமைப்புப் பணிகளின்போது ஒட்டுமொத்தமாக இடிந்து விழ, கோபுரம் மட்டுமே எஞ்சியது. இக்கோபுரம் மட்டும்தான் வரலாற்றின் சாட்சியாக இன்றளவும் இத்திருத்தலத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. பழைமையான அந்தக் கோபுரத்தை இடிக்காமல் அதை மையமாகக்கொண்டு கட்டப்பட்ட ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
    இறைவன் தன்னை அணுகுபவர்களை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார் போன்ற பாடங்களை நல்ல கள்ளனின் உரையாடல் நிகழ்வின் மூலம் கற்றுக்கொள்வோம்.
    இயேசுவுக்கு சிலுவை மரணம். அவருடைய சிலுவைக்கு இரண்டு பக்கமும், வேறு இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் அறைய வேண்டும் என்பது திட்டம். இயேசுவும் ஒரு திருடன் என அவமானப் படுத்துவது அவர்களுடைய நோக்கம்.

    பெரிய நீளமான ஆணிகள் தயாராய் இருந்தன. இயேசு சிலுவையில் கிடத்தப்பட்டார். அவருடைய கைகளை இழுத்து மரத்தோடு சேர்த்து ஆணிகளால் அறைந்தார்கள். இயேசுவின் கால்கள் இரண்டையும் சேர்த்து பாதங்களைத் துளைத்தபடி நுழைந்தது மூன்றாவது நீளமான ஆணி. சொல்லமுடியாத வலி இயேசுவைத் துடிதுடிக்க வைத்தது.

    ஒவ்வொரு கைதியையும் சிலுவையில் அறைந்த பின் சிலுவையில் அந்த கைதியின் பெயரை எழுதி வைப்பது வழக்கம். அதன் படி பிலாத்துவின் கட்டளைப்படி ‘யூதர்களின் அரசன்’ என்னும் குறிப்பைத் தாங்கிய பலகை, சிலுவையில் இயேசுவின் தலைக்கு மேலாக அறையப்பட்டது.

    பெயர்ப்பலகையைப் பார்த்த தலைமைக் குரு கயபா எரிச்சலடைந்தான். அவன் தான் இயேசு கொல்லப்பட முக்கிய காரணமாய் இருந்தவன். அவன் பிலாத்துவின் முன்னிலைக்கு விரைந்தான்.

    ‘அரசே.. இது சரியில்லை, ‘யூதர்களின் அரசன்’ என்று பெயர்ப்பலகையில் எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதினால் அவர் உண்மையிலேயே யூதர்களின் அரசன் என்று நாம் ஏற்றுக் கொள்வதாகிவிடும். ‘யூதர்களின் அரசன் நான்’ என்று அவன் சொன்னதாய் எழுதும்’, என்றான்.

    பிலாத்து கோபத்தில் எழுந்தான். ‘நான் எழுதியது எழுதியது தான்... நீர் போகலாம்’.

    பிலாத்துவின் கோபம் கயபாவை சட்டென்று பின் வாங்க வைத்தது. ஒருவேளை இயேசு யூதர்களின் அரசன் என்பதை பிலாத்து நம்பினானா என குழம்பினான்.

    சிலுவை மரம் நேராக நிமிர்த்தப்பட்டது!

    ‘மோசே பாலைவனத்தில் வெண்கலப் பாம்பை உயர்த்தியது போல மானிடமகனும் உயர்த்தப் படவேண்டும்’ இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் அவருடைய சீடர்களின் மனதுக்குள் எதிரொலித்தன.

    இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் கழற்றி வைக்கப்பட்டிருந்த இயேசுவின் அங்கியை யார் சொந்தமாக்குவது என்று படைவீரர்களுக்குள்ளே தர்க்கம். அது ஒரே அங்கியாய் இருந்ததால் கிழிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை.

    ‘நான் தான் மூத்த வீரன்.. எனக்குத் தான் இந்த ஆடை வேண்டும்’. ‘நான் தான் இவனை அதிகமாய்த் துன்புறுத்தினேன். எனக்குத் தான் இந்த ஆடை!’ என அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள். சண்டை முடியாததால், அந்த ஆடைக்காக சீட்டு குலுக்கிப் போட்டார்கள்.

    ‘என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். என் உடை மீது சீட்டுப் போட்டார்கள்’ என்று மறைநூலில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் அங்கே நிறைவேறின.

    இயேசுவின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு கள்வர்கள் சிலுவையில் அறையப்பட்டு தொங்கினார்கள்.

    ‘திருக்கோவிலை இடித்து மூன்றாவது நாளில் கட்டுவோனே. இந்த மூன்று ஆணிகளின் கட்டுகளிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்’.

    ‘பிறரை விடுவித்த மகானே... உன்னை விடுவிக்கத் தெரியவில்லையா?’

    ‘இப்போது நீ சிலுவையிலிருந்து இறங்கி வா. உன்னை நாங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம்’

    சிலுவைக்குக் கீழே இருந்தவர்கள் இயேசுவை நோக்கி இகழ்ந்தார்கள்.

    ‘தந்தையே இவர்களை மன்னியும். இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்கிறார்கள்’ இயேசுவின் உதடுகள் மன்னிப்பை வேண்டின.

    இயேசுவின் இடப்பக்கத்தில் அறையப்பட்டிருந்த கள்ளன் இயேசுவை நோக்கி தலையைத் திருப்பினான்.

    ‘இயேசுவே... நீர் கடவுளின் மகனானால் நீரும் விடுதலையாகி என்னையும் விடுவியும்’ என்று அந்த வலியிலும் அவரை நகைத்தான்.

    அப்போது அவருடைய வலப்பக்கத்தில் அறையப்பட்டிருந்தவனோ ‘நீ இன்னும் திருந்தவில்லையா? நாம் குற்றம் செய்தோம் தண்டனை அனுபவிக்கிறோம். இவர் குற்றமே செய்யாதவர். நாம் தண்டனை பெறுவது நியாயம். ஆனால் இவர் கடவுளின் மகன். தண்டனைக்குரியவரல்ல. எனவே நீ இயேசுவை இகழாதே’ என்றான்.

    இந்த நிகழ்வினால் அந்த கள்ளன், ‘நல்ல கள்ளன்’ என அழைக்கப்படுகிறான்.

    அவன் பின்னர் இயேசுவைப் பார்த்து, ‘இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்’ என்றான்.

    இயேசு அவனிடம், ‘நீ என்னுடன் பேரின்ப வீட்டில் நிச்சயம் இருப்பாய்’ என்றார்.

    அந்த திருடன் இயேசுவைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே, இயேசுவிடம் சரணடைந்து, மீட்பைப் பெற்று சுவர்க்கம் சென்றான். அதே வாய்ப்பைப் பெற்ற இன்னொரு திருடனோ கடின மனதோடு நரகம் சென்றான்.

    மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு இறைவனின் மீட்பைப் பெறுவதற்கு தயக்கம் காட்டக்கூடாது. தாமதம் காட்டக்கூடாது. இறைவன் தன்னை அணுகுபவர்களை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார் போன்ற பாடங்களை நல்ல கள்ளனின் உரையாடல் நிகழ்வின் மூலம் கற்றுக்கொள்வோம்.

    சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.
    சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறை மாவட்டத்தின் தலைமை ஆலயம் ஆகும்.

    இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. கோத்திக் கட்டட வடிவமைப்பில் எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோத்திக் வகையாக அமைக்கப்பட்டுள்ளது.

    சாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது புனித தோமா என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை மரியாவின் பெயரை முதலில் அளித்திருந்தனர்

    சாந்தோம் கோவில் வரலாறு :

    பண்டைய கிறித்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமா இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் தோமா அடக்கப்பட்ட இடத்தில் ஒரு கோவில் கட்டினார்கள். மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய பயணி 1292இல் மயிலாப்பூர் சென்றதாகக் குறிப்பிடுகிறார். 1349இல் ஜான் தே மரிஞ்ஞோலி என்பவர் புனித தோமா கோவிலையும் கல்லறையையும் சந்தித்ததாக எழுதுகிறார்.

    1517ஆம் ஆண்டும், 1521ஆம் ஆண்டும் போர்த்துகீசியர் தருகின்ற குறிப்புகள்படி, அவர்கள் தோமா கோவில் பாழடைந்து கிடந்ததைக் கூறுகிறார்கள்; ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது. அது "பெத் தூமா" ("தோமாவின் வீடு" என்பது பொருள்) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு கோவில்; அது ஓர் இசுலாமியரின் கண்காணிப்பில் அப்போது இருந்ததாகக் கூறப்படுகிறது.

    1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்; அதோடு சாந்தோம்-மயிலாப்பூர் என்னும் மறைமாவட்டமும் நிறுவப்பட்டது (கி.பி. 1523). அகுஸ்தின் சபை சார்ந்த செபஸ்தியான் தே பேத்ரோ என்பவர் அம்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டை கட்டினார்கள். அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.

    போர்த்துகீசியர் கட்டிய சாந்தோம் கோவில் பழுதடையத் தொடங்கிய நிலையில் புதியதொரு கோவில் கட்ட வேண்டியதாயிற்று. என்றீ ரீத் த சில்வா என்னும் மறை ஆயரின் தலைமையில் 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்பவர் புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் பிரித்தானிய பொறிநுட்ப வல்லுநர். புதிய கோத்திக் என்னும் கட்டடப்பாணியில் கோவிலை விரித்து, பெரிதாகக் கட்ட பவர் பெரிதும் துணைபுரிந்தார்.

    கோத்திக் கட்டடப்பாணியில் உயர்ந்த கோபுரங்கள் எழுப்புவது வழக்கம். சாந்தோம் கோவிலின் பெரிய கோபுரம் 155 அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதி 112 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. பலிபீடம் அடங்கிய திருத்தூயகப் பகுதி 62 அடி நீளம், 33 அடி அகலம்; கோவில் உட்பகுதியில் மேல்கூரை உயரம் 36 அடி 6 அங்குலம்; திருத்தூயகப் பகுதியில் கூரை உயரம் 41 அடி 6 அங்குலம்.

    கோவில் உட்பகுதியில் 36 பெரிய சாளரங்கள் உள்ளன. அவற்றில் நிறப்பதிகைக் கண்ணாடி (stained glass) அமைக்கப்பட்டு, கதிரவன் ஒளி கோவிலின் உள் இதமாக நுழைய வழியாகின்றன. கிறித்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அக்கண்ணாடிப் பதிகையில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. திருத்தூயகத்தின் பின்புறம் அமைந்துள்ள பெரிய நிறப்பதிகைக் கண்ணாடி செருமனியில் மூனிச் நகரில் அமைந்த மையர் (Mayer) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் 1896, ஏப்ரல் முதல் நாளன்று புனிதமாக்கப்பட்டது.

    சென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும். 1956ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நாள் போப்பாண்டவர் 12ஆம் பயஸ் (பத்திநாதர்) சாந்தோம் கோவிலை சிறிய பசிலிக்கா நிலைக்கு (Minor Basilica) உயர்த்தினார். பிப்ரவரி 11, 2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் தேசிய வழிபாட்டுத்தலமாக (National Shrine) அறிவிக்கப்பட்டது. இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கியமான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.

    2004ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் சாந்தோம் கோவிலும் தூய தோமா கல்லறைச் சிற்றாலயமும் அழகுற புதுப்பிக்கப்பட்டு வனப்போடு விளங்குகின்றன. புதுப்பிக்கப்பட்ட கோவில் டிசம்பர் 12, 2004இல் இந்தியாவில் போப்பாண்டவர் தூதர் பேராயர் பேத்ரோ லோப்பெசு கின்றானா மற்றும் மும்பை பேராயர் கர்தினால் இவான் டியாசு ஆகியோரால் புனிதப்படுத்தப்பட்டது.

    ஆலய வழிபாட்டு நேரங்கள் :

    திங்கள் முதல் சனி வரை :

    காலை 5:45 - ஆராதனை; செபமாலை; ஆங்கில திருப்பலி
    காலை 11:00 - தமிழ் திருப்பலி (கல்லறைச் சிற்றாலயம்)
    மாலை 5:30 - நற்கருணை ஆசீர்
    மாலை 5:45 - செபமாலை; தமிழ் திருப்பலி

    ஞாயிற்றுக் கிழமை :

    காலை 6:00 - தமிழ் திருப்பலி
    காலை 7:15 - ஆங்கில திருப்பலி
    காலை 8:15 - தமிழ் திருப்பலி
    காலை 9:30 - ஆங்கில திருப்பலி
    காலை 10:30 - மலையாள திருப்பலி
    நண்பகல் 12:00 - ஆங்கில திருப்பலி
    மாலை 6:00 - தமிழ் திருப்பலி

    ஒவ்வொரு மாதமும் 3ஆம் நாள் புனித தோமா நாளாகக் கொண்டாடப்படும். மாலை 6:00 மணிக்குச் சிறப்பு வழிபாடுகள், திருப்பலி.

    ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று மயிலை மாதா சிறப்பு நாள். மாலை 6:00 மணிக்குத் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெறும்.
    இந்தப் புனிதரிடம் யார் விசுவாசத்துடன் கேட்டாலும் அதை அவர்கள் கட்டாயம் அடைவார்கள்.
    உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார்.

    இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த ஒரு பிரபுக்கள் குடும்பத்தில், யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.

    சவேரியார் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, உயர்கல்வி கற்க விரும்பினார்; 1525ஆம் ஆண்டு, உலகப் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்; மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ஆம் ஆண்டு மெய்யியல் முதுகலைப்பட்டம் பெற்றார். அதே பல்கலைக் கழகத்தில், "தான் ஒரு சிறந்த பேராசிரியராக வர வேண்டும்' என்ற ஆசை கொண்டிருந்தார்.

    இந்த நேரத்தில் 39 வயது நிரம்பிய "இனிகோ' என்ற "லொயோலா' என்பவரை சந்திக்க சவேரியாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிகோ, குருவாவதற்காக அங்கு படித்துக் கொண்டிருந்தார். அவர், சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்வார். அதாவது ""பிரான்சிஸ், ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவனுக்கு என்ன பயன்?'' என்பதே அந்த வாசகம். இந்த வார்த்தைகள் சவேரியாரின் மனதில் ஆழமாகப்பட்டது.

    ஒரு நாள் சவேரியார், "தனது பணம், புகழ், பட்டம், ஆசை, ஆடம்பரம், உலக இன்பம் அனைத்தையும் துறக்க வேண்டும்; தானும் ஒரு குருவாக வேண்டும்; இறை மகன் இயேசுவின் பணியை-அவரது அன்பு, பாசம், பெருமை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனம் இவற்றை உலகமெங்கும் அறிவிக்க வேண்டும்' என்ற அணையாத தாகத்தைப் பெற்றார்; உடனே இயேசு சபையில் சேர்ந்தார். 1537ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் நாள், குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

    கி.பி. 72ல் புனித தோமையார் இந்தியாவிற்கு வந்து இறைமகன் இயேசுவின் போதனைகளை அறிவித்தார். அதன் பிறகு இயேசுவை பற்றியும், அவரது அன்புப் பணியைப் பற்றியும் அறிவிப்பதற்காக 1541ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலிருந்து சவேரியார் புறப்பட்டார்; 1542ஆம் ஆண்டு, மே மாதம் 6-ம் நாள் கோவா வந்து சேர்ந்தார். சிறிய மணியை கையில் எடுத்து அடித்துக் கொண்டே கோவாவின் தெருக்களில் சென்று அனைத்துச் சிறுவர், சிறுமியர்களையும் அழைத்தார்; அவர்களுக்கு மறைக் கல்வி போதித்தார்; திருமறை நூலை விளக்கினார். நோயாளிகளைச் சந்தித்தார்; சிறையில் கைதிகளை பார்த்து ஆறுதல் கூறினார்.

    பிறகு கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார் சவேரியார். குறிப்பாக கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார்.

    மணப்பாட்டில் அவர் தங்கியிருந்த குகை, மற்றும் அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன இன்றும் உள்ளன. அந்தக் கிணறு, கடற்கரையில் உள்ளது. ஆனால் அதன் தண்ணீர் உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருக்கிறது. 1545ல் சென்னை மயிலாப்பூரில் ஐந்து மாதங்கள் பணியாற்றினார் சவேரியார். பிறகு 1545ஆம் ஆண்டு "மலக்கா' தீவிற்குச் சென்று இறை பணியாற்றினார். பிறகு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கொச்சியிலும், கோவையிலும் சேவை செய்தார். மீண்டும் 1545-ல் ஜப்பான் சென்று, அங்கும் இயேசுவின் பணியைச் செய்து வந்தார்.

    சவேரியாருக்கு, "எப்படியும் சீனாவிற்கு செல்ல வேண்டும்; அங்கும் இயேசுவின் அன்புப் பணியை செய்ய வேண்டும்' என்ற ஆசை இருந்தது. அதன்படி 1552ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் நாள் சவேரியார் சீனாவிற்கு புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில், சான்சியான் தீவில், 1552-ம் ஆண்டு- நவம்பர் 21ஆம் நாள், நோயுற்றுப் படுத்தார். காய்ச்சல் தீவிரமடைந்தது. அவருக்கு உதவியாக "அந்தோணியோ' என்பவர் கூடவே இருந்தார். 1552ஆம் ஆண்டு, டிசம்பர் 3ம் நாள், சவேரியார் தனது கையில் வைத்திருந்த சிலுவையை தூக்கிப் பிடித்தவராக, ""ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்! நான் ஒரு போதும் வெட்கமடைய விடாதேயும்'' என்ற வசனத்தை சொன்னவாறே தனது உயிரை இறைவன் கையில் ஒப்படைத்தார்.

    இறந்த புனிதரின் உடல், முதலில் சான்சியன் தீவில் அடக்கம் செய்யப்பட்டது. 1553ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் நாள், சாந்தா குரூஸ் கப்பல் அங்கிருந்து புறப்படும்போது, சவேரியாரின் கூடவே இருந்த அந்தோணியோ, புனிதரின் கல்லறையைத் தோண்டி அவரது எலும்பையாவது இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என்று முயற்சித்தார். அப்போது மிகப் பெரிய அதிசயம் அங்கே நிகழ்ந்தது. சவேரியாரின் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டதோ, அதேபோல இருந்தது.

    எந்தவித மாற்றமோ, துர்நாற்றமோ இல்லை. 1554ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் நாள், சாந்தா குரூஸ் கப்பலில் புனிதரின் உடல், கோவா கொண்டு வரப்பட்டது. "பாம் இயேசு தேவாலயத்தில்' மிகவும் பாதுகாப்புடன், கோவா அரசாங்கத்தின் உதவியுடன் இன்றுவரை அந்த உடல் பாதுகாக்கப்படுகிறது. அந்த அழியாத புனிதரின் உடல், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றது. இந்தப் புனிதரிடம் யார் விசுவாசத்துடன் கேட்டாலும் அதை அவர்கள் கட்டாயம் அடைவார்கள்.

    இத்தகைய புகழ் பெற்ற புனிதரின் ஆலயங்கள், இந்தியாவில் பல ஊர்களில் இருக்கின்றன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், புனல்வாசல் கிராமம்! ஏறக்குறைய ஐந்தாயிரம் கிறிஸ்தவ மக்கள், பிற மத சகோதரர்களுடன் ஒற்றுமையோடு வாழும் ஊர்! இங்கேயும் 100 ஆண்டுகளுக்கு மேலான புனித சவேரியாரின் ஆலயம் புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது.
    ×