என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நல்ல கள்ளனின் உரையாடல்
    X

    நல்ல கள்ளனின் உரையாடல்

    இறைவன் தன்னை அணுகுபவர்களை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார் போன்ற பாடங்களை நல்ல கள்ளனின் உரையாடல் நிகழ்வின் மூலம் கற்றுக்கொள்வோம்.
    இயேசுவுக்கு சிலுவை மரணம். அவருடைய சிலுவைக்கு இரண்டு பக்கமும், வேறு இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் அறைய வேண்டும் என்பது திட்டம். இயேசுவும் ஒரு திருடன் என அவமானப் படுத்துவது அவர்களுடைய நோக்கம்.

    பெரிய நீளமான ஆணிகள் தயாராய் இருந்தன. இயேசு சிலுவையில் கிடத்தப்பட்டார். அவருடைய கைகளை இழுத்து மரத்தோடு சேர்த்து ஆணிகளால் அறைந்தார்கள். இயேசுவின் கால்கள் இரண்டையும் சேர்த்து பாதங்களைத் துளைத்தபடி நுழைந்தது மூன்றாவது நீளமான ஆணி. சொல்லமுடியாத வலி இயேசுவைத் துடிதுடிக்க வைத்தது.

    ஒவ்வொரு கைதியையும் சிலுவையில் அறைந்த பின் சிலுவையில் அந்த கைதியின் பெயரை எழுதி வைப்பது வழக்கம். அதன் படி பிலாத்துவின் கட்டளைப்படி ‘யூதர்களின் அரசன்’ என்னும் குறிப்பைத் தாங்கிய பலகை, சிலுவையில் இயேசுவின் தலைக்கு மேலாக அறையப்பட்டது.

    பெயர்ப்பலகையைப் பார்த்த தலைமைக் குரு கயபா எரிச்சலடைந்தான். அவன் தான் இயேசு கொல்லப்பட முக்கிய காரணமாய் இருந்தவன். அவன் பிலாத்துவின் முன்னிலைக்கு விரைந்தான்.

    ‘அரசே.. இது சரியில்லை, ‘யூதர்களின் அரசன்’ என்று பெயர்ப்பலகையில் எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதினால் அவர் உண்மையிலேயே யூதர்களின் அரசன் என்று நாம் ஏற்றுக் கொள்வதாகிவிடும். ‘யூதர்களின் அரசன் நான்’ என்று அவன் சொன்னதாய் எழுதும்’, என்றான்.

    பிலாத்து கோபத்தில் எழுந்தான். ‘நான் எழுதியது எழுதியது தான்... நீர் போகலாம்’.

    பிலாத்துவின் கோபம் கயபாவை சட்டென்று பின் வாங்க வைத்தது. ஒருவேளை இயேசு யூதர்களின் அரசன் என்பதை பிலாத்து நம்பினானா என குழம்பினான்.

    சிலுவை மரம் நேராக நிமிர்த்தப்பட்டது!

    ‘மோசே பாலைவனத்தில் வெண்கலப் பாம்பை உயர்த்தியது போல மானிடமகனும் உயர்த்தப் படவேண்டும்’ இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் அவருடைய சீடர்களின் மனதுக்குள் எதிரொலித்தன.

    இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் கழற்றி வைக்கப்பட்டிருந்த இயேசுவின் அங்கியை யார் சொந்தமாக்குவது என்று படைவீரர்களுக்குள்ளே தர்க்கம். அது ஒரே அங்கியாய் இருந்ததால் கிழிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை.

    ‘நான் தான் மூத்த வீரன்.. எனக்குத் தான் இந்த ஆடை வேண்டும்’. ‘நான் தான் இவனை அதிகமாய்த் துன்புறுத்தினேன். எனக்குத் தான் இந்த ஆடை!’ என அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள். சண்டை முடியாததால், அந்த ஆடைக்காக சீட்டு குலுக்கிப் போட்டார்கள்.

    ‘என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். என் உடை மீது சீட்டுப் போட்டார்கள்’ என்று மறைநூலில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் அங்கே நிறைவேறின.

    இயேசுவின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு கள்வர்கள் சிலுவையில் அறையப்பட்டு தொங்கினார்கள்.

    ‘திருக்கோவிலை இடித்து மூன்றாவது நாளில் கட்டுவோனே. இந்த மூன்று ஆணிகளின் கட்டுகளிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்’.

    ‘பிறரை விடுவித்த மகானே... உன்னை விடுவிக்கத் தெரியவில்லையா?’

    ‘இப்போது நீ சிலுவையிலிருந்து இறங்கி வா. உன்னை நாங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம்’

    சிலுவைக்குக் கீழே இருந்தவர்கள் இயேசுவை நோக்கி இகழ்ந்தார்கள்.

    ‘தந்தையே இவர்களை மன்னியும். இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்கிறார்கள்’ இயேசுவின் உதடுகள் மன்னிப்பை வேண்டின.

    இயேசுவின் இடப்பக்கத்தில் அறையப்பட்டிருந்த கள்ளன் இயேசுவை நோக்கி தலையைத் திருப்பினான்.

    ‘இயேசுவே... நீர் கடவுளின் மகனானால் நீரும் விடுதலையாகி என்னையும் விடுவியும்’ என்று அந்த வலியிலும் அவரை நகைத்தான்.

    அப்போது அவருடைய வலப்பக்கத்தில் அறையப்பட்டிருந்தவனோ ‘நீ இன்னும் திருந்தவில்லையா? நாம் குற்றம் செய்தோம் தண்டனை அனுபவிக்கிறோம். இவர் குற்றமே செய்யாதவர். நாம் தண்டனை பெறுவது நியாயம். ஆனால் இவர் கடவுளின் மகன். தண்டனைக்குரியவரல்ல. எனவே நீ இயேசுவை இகழாதே’ என்றான்.

    இந்த நிகழ்வினால் அந்த கள்ளன், ‘நல்ல கள்ளன்’ என அழைக்கப்படுகிறான்.

    அவன் பின்னர் இயேசுவைப் பார்த்து, ‘இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்’ என்றான்.

    இயேசு அவனிடம், ‘நீ என்னுடன் பேரின்ப வீட்டில் நிச்சயம் இருப்பாய்’ என்றார்.

    அந்த திருடன் இயேசுவைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே, இயேசுவிடம் சரணடைந்து, மீட்பைப் பெற்று சுவர்க்கம் சென்றான். அதே வாய்ப்பைப் பெற்ற இன்னொரு திருடனோ கடின மனதோடு நரகம் சென்றான்.

    மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு இறைவனின் மீட்பைப் பெறுவதற்கு தயக்கம் காட்டக்கூடாது. தாமதம் காட்டக்கூடாது. இறைவன் தன்னை அணுகுபவர்களை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார் போன்ற பாடங்களை நல்ல கள்ளனின் உரையாடல் நிகழ்வின் மூலம் கற்றுக்கொள்வோம்.

    Next Story
    ×