என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கண்ணில் தெரியும் சகோதரனுக்கு அன்பு செய்யாமல், கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு யாரும் அன்பு செய்து விட முடியாது
    இயேசு வழக்கம் போல மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். இயேசுவின் வார்த்தைகளால் மக்கள் எல்லோரும் அவருடைய பக்கமாகத் திரும்பிக் கொண்டிருப்பது திருச்சட்ட அறிஞர்களுக்கும், குருக்களுக்கும் மிகப்பெரிய எரிச்சலாய் இருந்தது.

    திருச்சட்ட வல்லுநர் ஒருவர் எழுந்தார்.

    ‘போதகரே, முடிவில்லா வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

    இயேசுவைச் சிக்க வைக்க வேண்டுமென அந்த கேள்வியைக் கேட்டார். அது இயேசுவுக்குப் புரிந்தது.

    ‘நீர் நிலை வாழ்வு பெற விரும்புகிறீரா? நிலைவாழ்வைக் குறித்து சட்டதிட்டம் என்ன சொல்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?’ இயேசு கேட்டார்.

    ‘உன் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆற்றலோடும், முழு உள்ளத்தோடும் நீ கடவுளை அன்பு செய்ய வேண்டும். உன் மீது நீ அன்பு செய்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய்யவேண்டும்’ சட்ட வல்லுனர் தயக்கமின்றிப் பதில் சொன்னார்.

    ‘சரியாகச் சொன்னீர். அதை மட்டுமே செய்தால் போதும். அதில் எல்லாம் அடங்கியிருக்கின்றன’ இயேசு சொன்னார்.

    ‘அது சரி... இதிலே சொல்லப்பட்டிருக்கும் அயலான் என்பவர் யார்?’ அவர் கேட்டார்.

    இயேசு ஒரு கதையை சொன்னார்.

    ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் சென்று கொண்டிருந்தார். அவருடைய பையில் நிறைய பணம் இருந்தது. வியாபாரத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார். எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் செல்லும் பாதையானது மிகவும் இடர்கள் நிறைந்தது. திருடர்கள், கொள்ளைக்காரர்களின் நடமாட்டம் மிகுந்த பகுதி. அந்த பாதையில் யாருமே தனியே பயணிப்பதில்லை. ஆட்கள் இல்லாத ஒரு பகுதியில் வந்தபோது மறைந்திருந்த கள்வர்கள் அவர் மேல் பாய்ந்து அவரைத் தாக்கினார்கள். அவரை அடித்து குற்றுயிராக்கிப் போட்டு விட்டுப் போனார்கள்.

    அவ்வழியே ஒரு குரு வந்தார். வழியோரத்திலே விழுந்து கிடக்கும் அவரைக் குருவின் கண்கள் கண்டன. ஆனால் அவர் ஆலயப் பணிக்காகச் சென்று கொண்டிருக்கிறார். ‘இவனுக்கு உதவி செய்யப் போனால் ஆலய பணிகள் எல்லாம் தாமதமாகிவிடும். அவனைத் தொட்டால் தீட்டாகிவிடவும் கூடும். இவனைக் கவனிக்கும் பணியை வேறு யாராவது பார்த்துக் கொள்ளட்டும்’, என்று மனதுக்குள் பல்வேறு விதமாய் எண்ணிக் கொண்டே அந்த குரு அவனைக் கடந்து சென்றார்.

    அவ்வழியே குருவுக்கு உதவி செய்யும் லேவியர் ஒருவரும் வந்தார். ‘இவனைக் காப்பாற்றவோ, இவனுக்கு உதவி செய்யவோ அவருடைய மனம் சொல்லவில்லை. அவனுடைய அருகில் செல்லக் கூட விரும்பாதவராக அவர் விலகிச் சென்றார்’.

    அவ்வழியே ஒரு சமாரியர் வந்தார். அவர் அடிபட்டுக் கிடப்பவனைப் பார்த்தார். குற்றுயிராய்க் கிடப்பவன் ஒரு யூதன் என்பது அவருக்குத் தெரிகிறது. அவனுடைய அருகே சென்று அவனுடைய காயங்களில் திராட்சை மதுவும், எண்ணையும் ஊற்றி, தன்னிடமிருந்த துணிகளினால் அவனுடைய காயங்களைக் கட்டி முதலுதவி செய்தார்.

    இயேசு இவ்வாறு சொன்னதும் கூட்டம் மிகவும் அமைதியானது. காரணம் சமாரியர்களும், யூதர்களும் கீரியும், பாம்பும் போல உரசிக் கொண்டிருந்த காலம் அது. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிகள் ஏதும் செய்வதில்லை. கடவுளை வழிபடும் முறைக்காகவும், எங்கே வழிபடவேண்டும் என்பதற்காகவும் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். இயேசு தொடர்ந்தார்.

    முதலுதவி செய்ததுடன் அவர் விலகிவிடவில்லை. தன்னுடைய குதிரையின் மீதே அவரை அமரவைத்து ஒரு சாவடிக்கு எடுத்துக் கொண்டு போய் ஒப்படைத்தார். சாவடிக்காரனிடம் பணத்தைக் கொடுத்து ‘இவனை நன்றாகக் கண் காணியுங்கள். இவன் விரைவில் நலம்பெறவேண்டும்’ என்று சொல்லிக் கொண்டு விலகினார்.

    இயேசு கதையை சொல்லி நிறுத்தினார். பின் வல்லுநரை நோக்கி ‘கள்வர் கையில் அகப்பட்ட அந்த மனிதனுக்கு, இந்த மூவரில் யார் அயலான் என்று நீ நினைக்கிறாய்?’ என்று கேட்டார்.

    ‘அவனுக்கு உதவி செய்தவனே!’ என்று கூறிய வல்லுநர். அவனுடைய பேச்சிலேயே சமாரியன் என்னும் வார்த்தை வரவில்லை. அதைச் சொல்லவும் விரும்பாமல், அவனுக்கு உதவி செய்தவனே என்று பதிலளித்தார் அந்த சட்ட வல்லுநர்.

    இயேசு அவனுடைய மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு புன்னகைத்தார்.

    ‘நீயும் போய் அவன் செய்தது போன்ற பணிகளைச் செய். அதுவே நிலை வாழ்வுக்கான வழி’.

    நிலை வாழ்வுக்கான வழி மனித நேயம் நிரம்பிய வழி. சக மனிதனை அன்பு செய்யாமல், அவனுடைய தேவைகளுக்கு உதவாமல் செய்கின்ற மதம் சார்ந்த பணிகளில் எந்த விதமான பயனும் இல்லை.

    கண்ணில் தெரியும் சகோதரனுக்கு அன்பு செய்யாமல், கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு யாரும் அன்பு செய்து விட முடியாது என்பதையே இந்த நிகழ்வு விளக்குகிறது. 
    கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையே ‘கொடுத்தல்’ என்பதில் தான் அடங்கியிருக்கிறது.
    சில சிறுவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘வளர்ந்து பெரியவனான பின்பு என்னவாக மாற வேண்டும்’ என்பது தான் விவாதத்தின் பொருள். ‘நான் மருத்துவராவேன், நான் என்ஜினீயராவேன், நான் தொழிலதிபராவேன்’ என ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

    ஒரு சிறுவன் மட்டும், ‘நான் கொடைவள்ளலாக வேண்டும்’ என்றான்.

    கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையே ‘கொடுத்தல்’ என்பதில் தான் அடங்கியிருக்கிறது. இயேசு தனது ரத்தத்தைக் கொடுத்ததால் நாம் மீட்கப்பட்டிருக்கிறோம்.

    ‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்’ (யோவான் 3:16) என்கிறது பைபிள்.

    கட்டாயத்தின் பெயராலோ, வேண்டா வெறுப்பாகவோ, முணுமுணுத்துக் கொண்டோ ஒருவருக்கு உதவி செய்வது கொடை அல்ல. அன்பான மனதோடு ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என சிந்தித்தாலே அது கொடை தான்.

    ‘கொடை’ என்பது கைகளில் தொடங்குவதல்ல, இதயத்தில் உருவாவது. கொடுத்தல் இன்றைக்கு சமூகத்தில் வளர்ந்திருக்கிறது. சில இடங்களில் கொடுத்தல் இல்லாமல் தேய்ந்து கொண்டே இருக்கிறது.

    ‘எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்; துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்’ என்கிறது (சங்கீதம் 41:1.)

    கொடுத்தல் என்பது பகைமை பாராட்டாது, அது அன்பின் வெளிப்பாடு.

    ‘கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப் படும்’ என்கிறார் இயேசு. ஆனால் ‘நமக்குக் கிடைக்கும்’ எனும் சிந்தனையோடு கொடுப்பது தவறு. எதிர்பாராமல் கொடுப்பது தான் சரியான கொடுத்தல். காரணம் நாம் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டதையே திரும்பக் கொடுக்கிறோம்.

    இழந்து கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அதாவது கொடுப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுமளவுக்கு கொடுக்க வேண்டும். மிகுதியாய் இருப்பதில் சிலதைக் கொடுப்பது நம்மை எந்த விதத்திலும் இழக்க வைக்காது. எவ்வளவு கொடுத்தோம் என்பதை அளவிட, எவ்வளவு நாம் வைத்திருக்கிறோம் என்பதைக் கணக்குப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

    கொடுத்தல் குறித்து பைபிள் ஏராளமான விஷயங்களைச் சொல்கிறது. அவற்றில் மூன்று விஷயங்களை மட்டும் நாம் பார்ப்போம்.

    வளமையானதைக் கொடுத்த ஆபிரகாம்

    விவிலியம் நமக்கு பலரை அறிமுகம் செய்கிறது. ஆபிரகாம் வளமையானதை தனது சகோதரி மகன் லோத்துக்கு கொடுத்தார். கொடுக்க வேண்டிய சூழல் வந்தபோது அவர் நல்ல பங்கையெல்லாம் லோத்துக்கு கொடுத்து, கொடுப்பதன் முன்மாதிரியாய் மாறினார். காரணம், ‘தான் ஐஸ்வர்யவானானது கடவுளால் தான்’ என்பதை அவர் அறிந்திருந்தார்.

    அப்படி ஆபிரகாம் கொடுத்த பின்பு தான் அவரது வாழ்க்கையில் ஆசீர்வாதங்கள் தொடர்ச்சியாக கிடைத்தன. கொடுப்பது இறை ஆசீர்வாதங்களின் தொடக்கம்.

    வறுமையிலும் கொடுத்த மக்கதோனியா

    வறுமையிலும் கொடுத்த மக்கதோனிய மக்களைப் பற்றி விவிலியம் குறிப்பிடு கிறது. ‘தாங்கள் வறுமையான நிலையில் இருந்தபோதும் அவர்கள் கொடுக்கும் மனநிலை கொண்டவர்களாக இருந்தார்கள்’ என்கிறார் பவுல்.

    தங்களுடைய திராணிக்கு மிஞ்சி அவர்கள் கொடுத்தார்கள். காரணம், வறுமை என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்ற நிலையிலும் அவர்கள் பகிர்ந்தளித்தார்கள்.

    வறுமையில் இருப்பவர்கள் தான் வறுமையை புரிந்து கொள்கின்றனர்.

    விலை உயர்ந்ததைக் கொடுத்த பெண்மணி

    நறுமணத் தைலம் ஒன்றை கொண்டு வந்த பெண்மணி இயேசுவின் பாதத்தில் அதை ஊற்றினாள். அவள் ஊற்றிய தைலத்தின் விலை, அவளுடைய ஒரு ஆண்டு கால உழைப்பின் பயன். அவள் ஆண்டவன் மீதிருந்த அன்பினால் அந்த உழைப்பின் பயன் முழுவதையும் கடவுளுக்கே கொடுத்தார்.

    அளவிட முடியாத அன்பின் வெளிப்பாடாய் இயேசு பூமிக்கு வந்தார். அந்த விலைமதிப்பற்ற இறைவனுக்கு அந்தப் பெண் விலைமதிப்பற்ற ஒன்றை வழங்கு கிறார்.

    இன்று நாம் எதையெல்லாம் கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

    ‘பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்’ (ஏசாயா 58:10) என்கிறது விவிலியம்.

    பிறருக்குக் கொடுப்பவர்களை கடவுள் கைவிடுவதில்லை. அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றவும் கடவுள் தயங்குவதில்லை.

    கொடுப்பதில் தாராளமாய் இருப்போம். அப்படிக் கொடுக்கும் போது நம்மிடமிருப்பதில் வளமையானதைக் கொடுப்போம். நாம் வறுமையில் இருந்தாலும் கொடுப்போம். அன்பின் வெளிப்பாடாய் விலை உயர்ந்ததைக் கொடுப்போம்.

    கடவுளின் பேரன்பைப் புரிந்து கொள்ளும் நாம், கொடுப்பதை வாழ்வின் அடிப்படையாய் கொள்வோம். கொடுக்க வேண்டும் எனும் சிந்தையை முழுமையாய் பெற்றுக் கொள்வோம். இறை ஆசீர்வாதம் உங்களை நிரப்பட்டும்.

    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், வேளச்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், சென்னை. 
    பாவத்திலிருந்தும் அதன் தண்டனையிலிருந்தும் தப்புவதற்கு வழிகளைக் கண்டு பிடிக்க மக்கள் முயற்சி செய்து வந்திருக்கின்றனர்.
    இதற்கு நாமே கண்டு பிடிக்கக்கூடிய வழி எதுவும் இல்லை. காலங்காலமாக தப்பும் வழிகளைக் கண்டு பிடிக்க மக்கள் முயற்சி செய்து வந்திருக்கின்றனர்.

    1. சிலர் தங்கள் தேவர்களை உண்மையுடன் வழிபட்டு வந்திருக்கின்றனர்.

    2. சிலர் பாவம் செய்வதை விட்டுவிட்டு நல்லவர்கள் ஆக முயற்சி செய்திருக்கின்றனர்.

    3. எல்லா மனிதரும் பாவிகளாய் இருக்கிறபடியினால் பாவம் மிகக் கேடானதாய் இருக்க முடியாது என்று சிலர் வாதாடுகின்றனர்.

    4. மனிதனின் கற்பனையேயன்றி பாவம் என்பது இல்லை என்று கூட சிலர் சொல்லியிருக்கின்றனர்.

    5. இவ்வழிகள் எல்லாம் தோல்வியுற்றன. எல்லாரும் இன்னும் பாவமுள்ளவர்களாகவும் கடவுளின் கோபத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

    ஆ) புத்திசாலித்தனமாக வாழ்வது பற்றிய மிகச் சிறந்த உபதேசங்களில் சில கிறிஸ்தவரல்லாதோரிடமிருந்து கிடைக்கின்றன. உதாரணமாக... மகாத்மா காந்தியின் அஹிம்ஸா முறை. ஆனால், இது பாவங்களை ஒழித்து விடுவதில்லை.

    இ) எல்லா மனிதர்களும் பாவிகளானால் பாவம் கவலை தருவதாய் இருக்க முடியாது என்று வாதிப்பது எல்லா மனிதருக்கும் சாவு வருகிறபடியினால் சாவு கவலை தருவதாக இல்லை என்று வாதிப்பது போலவே செல்லாது.

    ஈ) பாவம் ஒருவனுடைய கற்பனையைப் பொறுத்ததுதான் என்னும் கருத்து, இம்மையில் கூட அதனால் உண்டாகும் கடுமையான விளைவுகளைக் கவனியாமற் போகிறது.

    உ) கடவுளுக்கு செவிகொடுத்தால் நம்மை இரட்சித்துக் கொள்ளுவதற்கு நாம் திறமையற்றவர்கள் என்று அறிந்து கொள்ளுவோம்.

    1. அப்போஸ்தலர்: 17:22,23 - அத்தேனே பட்டணத்தார் மிகுந்த சமயப் பற்றுடையவர்கள் என்று பவுல் கூறுகிறார்.

    2. லூக்கா: 18:9-14 - பரிசேயன் நற்செயல்கள் எல்லாம் செய்த போதிலும் நீதிமானாகத் தீர்க்கப்படவில்லை. 

    3. எண்ணாகமம்: 14 - ல் இஸ்ரவேலர் பாவம் செய்தனர். அவர்கள் தண்டணையைக் குறித்து தேவன் அவர்களுக்கு கூறினார். அவர்கள் கடவுளின் தண்டனையைப் புறக்கணித்து, தவறு எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்பதுபோல தொடர விரும்பினர்.

    4. எபேசியர்: 2:3 - சுபாவத்தினாலே மனுக்குலத்திலுள்ள மற்றவர்களைப் போலவே நாம் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

    தென்காசி புனிதமிக்கேல் அதிதூதர் திருத்தலத்தில் கொடியேற்றம் நேற்று தொடங்கியது.

    தென்காசியில் புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் திருத்தல பெருவிழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தினசரி சிறப்பு திருப்பலிகள் ஆராதானைகள் நடைபெறும். 27-ந் தேதி 8-ம் நாள் நற்கருணை பவனியும் 28-ந் தேதி 9-ம் நாள் அதிதூதர் தேர்பவனி விழாவும், 29-ந் தேதி 10ம் நாள் திருத்தல பெருவிழா நடைபெறுகிறது. 

    அன்று காலை 7 மணி திருப்பலியில் பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ், புனலூர் மறை மாவட்டம் முதன்மை குரு வின்சென்டிக் ரூஸ் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 30-ந் தேதி 11 ம் திருநாள் கொடியிறக்கத்துடன் நிறைவுபெறும்.

    திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் கேராளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்காக சிறப்பு பிராத்தனைகளும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை திருத்தல மற்றும் வட்டார அதிபர் சகாய சின்னப்பன் இஉதவி பங்குதந்தை சுரேஷ் அமலநிலை அருட் சகோதரிகள் பங்கு மேய்ப்பு பணிபேரவையினர் உட்பட சபையினர் செய்து வருகிறார்கள்.

    இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவபிள்ளையும் தன்னுடைய குணாதிசயத்தில் தேவனைப்போலவே மாறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
    ஒவ்வொரு விசுவாசியிடமும் தேவன் எதிர்பார்க்கும் குணாதிசயம் என்னவென்றால் அவன் தன்னைப்போலவே இரக்கமும், அன்பும் உள்ளவனாகக் காணப்படவேண்டும் என்பதே. நாம் தேவனை அறியாமல் பாவிகளாய் இருந்த நாட்களில் தற்பிரியராயும், சிற்றின்பப் பிரியராயும், சுகபோகப் பிரியராயும் வாழ்ந்து வந்தோம். ஆனால், இப்பொழுதோ தேவனுடைய பிள்ளைகளாய் தேவனைப் பிரியப்படுத்துகிறவர்களாய் மாறியிருக்கிறோம்.

    இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவபிள்ளையும் தன்னுடைய குணாதிசயத்தில் தேவனைப்போலவே மாறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். முதலாவது ஒரு பாவியினுடைய குணாதிசயம் எப்படிப்பட்டது என்று பார்போம்.

    ஒரு பாவி, தன்னை நேசித்து தன்னிடம் அன்பு கூறுகிறவர்களிடம் மட்டுமே அன்பு கூறுவான். தனக்கு நன்மை செய்வர்களுக்கு மட்டுமே நன்மை செய்வான். நல்லவனுக்கு நல்லவனாகவும், பொல்லாதவனுக்கு பொல்லாதவனாகவும் மாறிவிடுவான். சிநேகிதனுக்கு சிநேகிதனாகவும், பகைவனுக்கு பகைவனாகவும் இருப்பான்.

    இப்படிப்பட்ட பாவ வாழ்கையில் இருந்து மனம் திரும்பிய ஒவ்வொருவரிடமிருந்து தேவன் எதிர்பார்க்கும் காரியங்களாவன:

    ஏதோ ஒரு வகையில் பிறருக்கு நாம் நன்மை செய்யவேண்டும். பிறருடைய (உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்) ஆவிக்குரிய, சரீர ஆசீர்வாதங்களுக்காக ஜெபம் செய்யவேண்டும். பிறரை (குறிப்பாக நம்மைச் சபிக்கிறவர்களை) வாயாற வாழ்த்தி ஆசீர்வதியுங்கள்.
    கேட்கிற எவருக்கும் கூடுமானால் கைமாறு கருதாமல் கடன் கொடுங்கள். பிறர் நிமித்தம் வரும் சரீர துன்பங்களையும், பாடுகளையும் சகித்துக்கொள்ளுங்கள்.

    இப்படிப்பட்ட குணாதிசயங்கள் நம்மில் காணப்பட ஒருசில காரியங்கள் நாம் செய்யாதிருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவையாவன:

    ஒருவரையும் குறைசொல்லி குற்றவாளிகளாய் தீர்க்காதிருங்கள். பிறருடைய தப்பிதங்களை பெரிதுபடுத்தி அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காதிருங்கள். கோபத்தில் ஒருவர்மேலும் சாபமான வார்த்தைகளைச் சொல்லிவிடாதிருங்கள். எவரையும் வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கிவிடாதிருங்கள். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று சொல்லி பதிலுக்குப் பதில் செய்யாதிருங்கள்.

    இப்படிப்பட்ட குணாதிசையங்கள் நம்மில் உருவாகும்போது நாம் நம்முடைய வார்த்தையினாலும், நம்முடைய நடத்தையினாலும் தேவனை மகிமைப்படுத்த முடியும்.

    ஆமென்!
    கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் குடிகொள்வதாக (கொலோ 3:16)''என்று கூறும் திருத்தூதர் பவுலடியாரின் இறைவாக்கிற்கு செவிமடுப்போம். இறைவனின் மன்னிப்பைப் பெறுவோம்.
    இன்றைய நாளில் நம் விரல் நுனியில் அன்றாட உலக செய்திகளை, அறிவியல் வளர்ச்சிக்கான தகவல்களை ஊடகங்கள் மூலம் நொடிக்கு நொடி தெரிந்து கொள்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். அச்செய்திகள் மூலம் நமது அறிவை வளர்த்துக்கொள்ளவும், அதற்கேற்ப நமது வாழ்க்கை அமைப்பை மாற்றிக்கொள்ளவும் முனைகின்றோம். ஆனால் உலகு சார்ந்த அந்தச் செய்திகளினால் மனித வாழ்வுக்கு நிலை வாழ்வைப் பெற்றுத் தர இயலாது.

    திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு நூலில் ""உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்(லூக் 1:19)'' என்று வானதூதர் அன்னை மரியாளிடம் கூறுகின்றார். அதன் பிறகு பத்து மாதங்கள் கடந்த பின்பு இடையர்களுக்கு ""எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக்கா 2:10)'' என்றும் கூறுகின்றார். மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும் "நற்செய்தி' என்ற "சொல்' கையாளப்பட்டுள்ளது. அச்சொல் "இயேசு' என்ற இறைமகனைப் பற்றியதே ஆகும்.

    நற்செய்தி இயேசுவைப் பற்றியதாகவே இருந்தாலும் ஏன் அறிவிக்கப்பட வேண்டும்? நாம் அனைவரும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே. நாம் அனைவரும் பாவிகளா? அதற்கு... ""பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம் (1 யோவான் 1:8)'' என்று திருத்தூதர் யோவான் விடையளிக்கின்றார்.

    மனிதர்களாகிய நாம் நன்மைகளைச் செய்து கடவுளின் மக்களாக வாழ வேண்டியவர்கள். மாறாக நாம் பல வேளைகளில் தீமைக்கு பதில் தீமை செய்து அவருக்கு எதிராளியாகின்றோம். இறைமகன் இயேசு ""உங்கள் உள்ளங்கள் குடிவெறியாலும், களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்வுக்குரிய கவலைகளினாலும் மந்தம் அடையாதவாறு காத்துக் கொள்ளுங்கள்( லூக் 21:34)'' என்று நம்மை எச்சரிக்கிறார். அவ்வாறு சீரழியாமல் இருக்கவே மண்ணுலக வாழ்வின் சாட்சியாக இறைவனின் பிள்ளையாக ஒரு மனிதனாகி "பாவம் செய்யாது' இயேசு வாழ்ந்து காட்டினார்.

    ஏனெனில், ""தீயோரை எச்சரிக்காவிட்டால் அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர் (எசே 3:18)'' என்று இறை வாக்கினர் எசேக்கியர் அழுத்தமாக பதிவு செய்கின்றார். அந்த எச்சரிக்கையின் உருவம்தான் இயேசு கிறிஸ்து என்ற நற்செய்தி. அவர் நம் பாவங்களை களைய அவற்றிலிருந்து மீட்க தந்தையினால் அனுப்பப்பட்டவர்.

    "கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள் வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இந்த மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்பு பெறுகிறோம் (எபே 1:7)''. ஆம்! ""உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும் அதை நான் உறைபனிபோல் வெண்மையாக்குவேன்(எசா1:18)'' என்று இறைவாக்கினர் எசாயா மூலமாகவும் உறுதி அளித்திருந்தார்.

    எபேசியருக்கு எழுதிய தூய பவுலடியாரும், எசாயாவும் நமது பாவம் இரத்தப் பழியாக (சிவப்பாக) இருந்தாலும் அவற்றை மன்னிப்பின் மூலம் உறைபனிபோல் வெண்மையாக்குபவர் நமது மீட்பின் கடவுள் என்று வாக்குறுதி அளிக்கின்றார்கள். மேலும் ""அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார் (திரு.பா. 103:3)'' அதற்கு ""நான் உன் மீது சினம் கொள்ள மாட்டேன்; உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டாலே போதும்(எரே 3:12)'' ஏனெனில் ""மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7)'' என்று நமக்காக தந்தையாம் கடவுளிடம் பரிந்து பேசுகின்ற இயேசு உறுதியாகக் கூறுகின்றார்.

    மேலும்,""கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் குடிகொள்வதாக (கொலோ 3:16)''என்று கூறும் திருத்தூதர் பவுலடியாரின் இறைவாக்கிற்கு செவிமடுப்போம். இறைவனின் மன்னிப்பைப் பெறுவோம்.
    பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா 11-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
    மும்பை பாந்திராவில் நூறு ஆண்டுகள் பழமையான மலை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா 11-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நேற்று திருவிழாவின் நிறைவு நாள் என்பதால் மும்பை மட்டும் இன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் மலை மாதா ஆலயத்தில் திரண்டனர்.

    காலை 11.30 மணியளவில் திருவிழா நிறைவு நாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் திரளான தமிழ் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதாவின் ஆசியை பெற்று சென்றனர். பொது மக்களின் வசதிக்காக பாந்திரா ரெயில்நிலையத்தில் இருந்து ஆலயம் அமைந்துள்ள ஹில்ரோடு பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    அடுத்த ஆண்டு திருவிழா செப்டம்பர் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 
    எல்லா கிறிஸ்த்தவரும் இச்செபத்தை உச்சரிக்கின்ற போதும், கத்தோலிக்கர் அதிகமாக பாவித்து வருகின்றனர்.
    கிறிஸ்து கற்பித்த செபம்(பரலோக மந்திரம்) இயேசுவின் சீடர் எப்படி செபிப்பது என கேட்டபோது இயேசு சொல்லிக்கொடுத்த செபமாகும். விவிலியத்தில் மத்தேயு 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா கிறிஸ்த்தவரும் இச்செபத்தை உச்சரிக்கின்ற போதும், கத்தோலிக்கர் அதிகமாக பாவித்து வருகின்றனர். இச்செபத்தின் வசன நடை இடத்துகிடம் வேறுபட்டாலும் பொருள் மாற்றமில்லை. கைகளை விரித்து வான்நோக்கி உயர்த்தியபடியோ, குழுவாக உச்சரிக்கும் போது அருகிலுள்ளவரின் கையை பிடித்து ஒருமனித சங்கிலி அமைத்தவாறோ சொல்வது வழக்கமாகும். அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டவை மூல விவிலியத்தில் காணப்படாவில்லை, பின்னர் இணைக்கப்பட்டுள்ளது.
     

    விண்ணிருக்கும் எம் தந்தாய்!
    ஒளிரட்டும் நின் திருப்பெயரே! 
    வருகவே உம் ஆட்சியே!
    விண்ணைப்போல மண்ணிலே! 
    அளிப்பீரே எமக்கு உணவு இன்று!
    மன்னிப்பீரே எம் குற்றம்தனை! 
    யாமும் பிறரை மன்னித்தவாறே!
    தூண்டற்கவே எம்மை தீவழியிலே! 
    கடையேற்றுகவே எம்மை
    தீயனிடமிருந்து நீர்.
     
    ("ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.")
    தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் நிரம்பி வழியும் சமாதானத்தால் ஆசீர்வதிப்பாராக!
    பிரியமானவர்களே! உங்கள் குடும்பத்தில் ஆண்டவருடைய அளவற்ற ஆசீர்வாதங்கள் நிரம்பி வழியும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை. குறிப்பாக உங்கள் வாழ்வில் ஆண்டவருடைய சமாதானம் நிரம்பி வழியும்.

    ஏனெனில் ஆண்டவர் சொல்லுகிறார், ‘சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக’. (யோவான் 14:27)

    எல்லையிலே...

    ‘அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்’. (சங்.147:14)

    பிரியமானவர்களே, உங்கள் குடும்பத்திலும் மற்றும் நீங்கள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் தேவனுடைய சமாதானம் உங்களை நிரப்பும். நம் ஆண்டவர் நம் எல்லை முழுவதும் நம்மை சமாதானத்தால் காத்துக் கொள்ளுவார்.

    எப்பொழுது தெரியுமா? ‘எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி, சீயோனே, உன் தேவனைத் துதி’. (சங்.147 :12).

    நம் தேவனை எப்போதெல்லாம் துதிக்கிறோமோ அப்போதெல்லாம் தேவசமாதானம் நம்மை நிரப்பும். வேதனைகள் நம் இருதயத்தை நிரப்பும் போதெல்லாம் ஒரு சமாதானம் நம் உள்ளத்திற்குள் கடந்து வரும்.

    என்னுடைய வாழ்விலும் பலவிதங்களில் போராட்டங்களை சத்துரு கொண்டு வரும்போது ஆண்டவரைத் துதிக்க ஆரம்பிப்பேன். அப்பொழுது என் உள்ளத்திலே, குடும்பத்திலே, எங்கள் ஊழியத்திலே ஒரு தேவசமாதானம் உண்டாகும். என் கவலைகள் மறைந்து போகும்.

    எனக்கன்பான சகோதர, சகோதரிகளே! கர்த்தரை அதிகமாகத் துதியுங்கள். உங்கள் எல்லை முழுவதும் தேவ சமாதானம் எல்லையில்லாமல் நிரம்பி வழியும்.

    இருதயத்திலே...

    ‘அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’. (பிலிப். 4:7)

    மேற்கண்ட வசனத்தின்படி நம் இருதயத்திலும், சிந்தையிலும் தேவ சமாதானம் நிரம்பி வழியும்.

    இன்று அநேகரை வெளியில் பார்ப்பதற்கு சிரித்துக் கொண்டு அழகாக இருப்பார்கள். ஆனால் உள்ளமும், சிந்தையும் வேதனையோடு, சமாதானமில்லாமல் இருப்பார்கள். காரணம் பலவித குடும்ப போராட்டமும், கவலைகளும் அவர்கள் இருதயத்தை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும். ஒருவேளை நீங்களும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் காணப்பட்டால் இன்று முதல் தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பும்.

    எப்போது தெரியுமா? ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’. (பிலிப். 4:6).

    உங்கள் ஒவ்வொரு பிரச்சினைகளை ஆண்டவரிடத்தில் ஜெபத்தின் மூலம் சொல்லுங்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஜெபியுங்கள். உங்கள் சகல தேவைகளையும் ஜெபத்தின் மூலம் அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது தேவ சமாதானம் உங்கள் இருதயத்திற்குள் நிரம்பி வழியும்.

    தேசத்திலே...

    ‘நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்’. (1.தீமோ. 2:2)

    நம் தேசத்திலே அமைதியான, கலகமில்லாத ஆளுகை நடந்தால் நம் தேசத்திலே சமாதானம் நிரம்பி வழியுமல்லவா? தேசத்தில் சமாதானமான ஆட்சி நடந்தால், நாமும் நிம்மதியாய் வாழ முடியும்.

    எப்போது தெரியுமா? நம் தேசத்தில் ஆளுகை செய்யும் ராஜாக் களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஒவ்வொருநாளும் ஜெபிக்க வேண்டும். அப்படி நாம் ஜெபிக்கும்போதுதான் நம் தேசத்தில் சமாதானம் உண்டாகும். நம் தேசத்தின் சமாதானம் நம் முழங்கால் ஜெபத்தில் தான் உள்ளது.

    எனவே பிரியமானவர்களே! ஒவ்வொரு நாளும் நம் தேசத்திற்காக ஜெபியுங்கள். அதிகாரிகள், ஆளுகை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். அப்பொழுது நாம் அமைதியான, கலகமில்லாத, சமாதானமான வாழ்வு வாழ முடியும்.

    தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் நிரம்பி வழியும் சமாதானத்தால் ஆசீர்வதிப்பாராக!

    கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54. 
    உலக வாழ்க்கையில் எல்லாருமே சோதனைகளை கடந்து செல்ல வேண்டியதுள்ளது.
    உலக வாழ்க்கையில் எல்லாருமே சோதனைகளை கடந்து செல்ல வேண்டியதுள்ளது. அதை கடந்து செல்லும்போதுதான், தேவையற்றதை அல்லது தீமையானதை அல்லது கவர்ச்சியானதை தவிர்ப்பதில் நமக் கிருக்கும் பலத்தைப் பற்றி அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும். அதோடு, வந்திருக்கும் அந்த சோதனை நமது ஆசையினால் வந்ததா? அல்லது எந்த வகையிலானதா? என்பதையும் அறிய முடியும்.

    சற்று ஆராய்ந்து பார்த்தால், மூன்று வகையான சோதனைகளை எல்லாருமே கடந்து செல்வதை உணர முடியும். மனிதன் என்பவன் ஆவி, ஆத்மா, சரீரம் என்ற மூன்று அம்சங்களின் ஒருங்கிணைப்பு என்பதால், சரீரம், உள்ளம், பிறவிக்குணங்கள் ஆகிய மூன்றிலும் ஏற்படும் சோதனைக்கு உட்பட வேண்டியதுள்ளது.

    சரீரத்தை ஆட்கொள்வதற்காக பல பாவங்கள் உலகமெங்கும் சோதனையாக வைக்கப்பட்டுள்ளன. இதில் மது உட்பட பல வஸ்துக்களை பட்டியலிடலாம். ஒருவனது வாழ்க்கையில் நுழைவதற்கான நெருக்கடியை உருவாக்கும் சோதனையாக இவையெல்லாம் உள்ளன. ஒருவனின் வாழ்க்கையில் நுழைந்துவிட்ட பிறகு அவனது சரீரத்தை படிப்படியாக அடிமைப்படுத்திக் கொள்கின்றன.

    உள்ளம் என்பது வெளியே தெரியாது என்பதால் அங்கு நடத்தப்படும் பாவங்கள் அனேகம். கொலைகூட அங்கு நடந்திருக்கும். உள்ளத்தில் இச்சை, பெருமை, பொறாமை போன்றவை இருந்தால், அவை தொடர்பான சோதனைகளில் விழும் நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.

    ஜென்ம சுபாவம் என்ற பிறவிக்குணங்களின் ஆளுகைதான் பெரும்பாலும் இயல்பான வாழ்க்கையின் அடித்தளமாக உள்ளன. இகழ்ந்தோரை இகழ்தல், பகைத்தோரை பழிவாங்குதல், தனது கொள்கையை சாராதவரை பகைத்தல் என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். அந்த சுபாவங்கள் இருந்தால் அதற்கான சோதனையில் வீழ்ந்துவிடுவதும் இயல்பே.

    எந்த வகையில் வந்தாலும், இந்த மூன்று சோதனைகளிலும் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கு கிறிஸ்தவம் வழிகாட்டுகிறது. இதற்கு கிறிஸ்துவை மட்டுமே முன்னுதாரணமாக வேதம் காட்டுகிறது. ஏசுவும் சோதனைகளைக் கடந்து அவற்றை வென்ற பிறகுதான் இறைப்பணிக்கு வந்தார்.

    சாத்தானால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவரால் வனாந்திரத்துக்கு ஏசு கொண்டு செல்லப்பட்டார் என்று வேதம் கூறுகிறது (மத்.4:1). இதன்படி பார்த்தால், ஆன்மிக நிலையின் ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டிச் செல்லும்போது, சோதனைக் களத்தை எதிர்கொள்ள ஒரு குறிப்பிட்ட நிலைக்கு தேவஆவி வழிநடத்துகிறது என்பதையும், தேவஆவியின் துணையில்லாமல் சோதனையை ஜெயிக்க முடியாது என்பதையும் ஏசுவுக்கு நேரிட்ட சோதனைச் சம்பவம் வெளிக்காட்டு கிறது.

    ஞானஸ்னானம் பெற்ற பிறகு ஏசுவுக்கு சோதனை நேரிட்டது. உபவாசத்தில் இருந்தபோது வராமல், அதை முடித்தபோது முதல் சோதனையாக பசி வந்தது. இயல்பாக வரும் பசி என்பதற்கும் சோதனையாக வரும் பசி என்பதற்கும் வித்தியாசம் உண்டு. உண்பதற்கு எதுவுமே இல்லாத நிலையில் உருவாகும் கொடூரப் பசியை சோதனைக்கானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    வேலை வாய்ப்பு இல்லாமல் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், லஞ்சம் கொடுத்தால் அதைப் பெறலாம் என்றால், நாம் தேர்வு செய்வது எதை? லஞ்சத்தை கொடுத்து வாட்டத்தை போக்கிக்கொள்வோமா? வேத கட்டளையை பின்பற்றி லஞ்சத்தை தவிர்த்து வாட்டத்திலே நீடிப்போமா?

    தனது ஆத்மாவை கறைப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட முதல் சோதனையில், பசியாறுவதற்காக கற்களை அப்பங்களாக மாற்றிக் கொள்ளலாம் என்பதுதான். அதாவது, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிக்கலை தீர்த்துக்கொள்ளலாமே என்ற வேண்டுகோள் தான்.

    ஆனால் சாத்தானின் தூண்டுதலுக்கு ஏற்ப செயல்படத் தொடங்கினால், எல்லாவற்றிலும் குறுக்கு வழியில் செல்ல வேண்டியதாகிவிடும், குறுக்கு வழியில் பசியாறுவதைவிட, வேதம் கூறிய கருத்தை பின்பற்றுவது மேல் என்று ஏசு அறிவித்தார்.

    இரண்டாவதாக, ஏசுவுக்கு வைக்கப்பட்ட சோதனை தேவாலயத்தில் ஏற்பட்டது. சோதனை எந்த இடத்திலும் ஒருவனுக்கு நேரிடலாம் என்பதற்கு இது ஆதாரம். சோதனைக்காக ஏசுவை வனாந்திரத்துக்கு ஆவியானவர் அழைத்துச் சென்ற நிலையில், அவரை சாத்தான் அழைத்துச் சென்ற இடம் தேவாலயம்.

    வசனத்தை பயன்படுத்தி முதல் சோதனையில் ஏசு வெற்றி பெற்றதால், தேவாலயத்தில் வைத்து சாத்தான் கொண்டு வந்த சோதனையும் வேத வசனத்தின் அடிப்படையில் இருந்தது. ‘கோபுர உச்சியில் இருந்து குதியும்; அப்போது பக்தர்களை தூதர்கள் ஏந்திக் கொள்வார்கள்’ என்று வசனம் கூறுகிறதே என்றான்.

    இந்த சோதனையை கவனிக்கும்போது, சரீரத்துக்கு ஏதுவானதாக அந்த வேத வசனத்தை சாத்தான் திசைதிருப்புவதை கவனிக்க முடியும். இறைப் பணியை முடித்து ஏசு பரலோகம் சென்ற பிறகு, மனிதர்களை நல்வழிக்கு போதிப்பதற்காக பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டார். அதன்படி, வேத வசனங்களை எல்லாம் ஆவிக்குரிய ரீதியில் ஆய்வு செய்யவே பரிசுத்த ஆவியானவரால் போதிக்கப்படுகிறோம்.

    ஆனால் வசனங்களை சரீரத்துக்கு ஏற்ற வகையில் பலர் மூலம் போதனை செய்கிறான். இதனால் ஆன்மிகத்தில் பலரும் திசை திரும்பிச் செல்கின்றனர். சரீர காரியங்களை எதிர்பார்த்து பக்தர்கள் தேவனிடம் பரீட்சை வைக்க வேண்டாம். அந்த வேதவசனத்தைக் கூறியே, இரண்டாம் சோதனையையும் ஏசு வெற்றி கொண்டார்.

    உடல் பசி, வசனத்தின் தவறான போதனை ஆகியவற்றில் சாத்தானால் ஏசுவை ஜெயிக்க முடியவில்லை. எனவே கடைசி ஆயுதமாக, உலக அந்தஸ்தையும், அதனால் வரும் பெருமையையும் ஏசுவின் கண்களுக்கு சாத்தான் காட்டினான். அதாவது, தான் சொன்னபடி நடந்துகொண்டால் உலகத்தின் மிக உயர்ந்த பதவி உட்பட அனைத்தையும் தருவேன் என்று ஆசை காட்டினான்.

    ‘அழிந்துபோகக் கூடிய சரீரத்துக்கான உயர்வை நாடும் நோக்கம் தனது இறைப்பணியில் இல்லை’ என்பதை சாத்தானுக்கு ஏசு உணர்த்தினார். உலக வாழ்க்கையில் உயர்த்தினாலும், தாழ்த்தினாலும் தேவன் ஒருவரையே பணிய வேண்டும் என்று அர்த்தம் கொள்ளும் வசனத்தை கூறி மூன்றாவது சோதனையையும் ஏசு ஜெயித்தார்.

    சரீர ஆசைகளைத் தூண்டும் விதத்தில் சாத்தான் வைத்த சோதனைகளை எல்லாம் ஏசு வெற்றி பெற்றதற்குக் காரணம், வேத வசனங்களை அவர் ஆவிக்குரிய ரீதியில் நடைமுறைமுறைப்படுத்தியதால் தான். (1 கொரி.2:13,14), (ரோமர்8:5).
    அசைக்க முடியாத விசுவாசம் இயேசுவின் மீது வைத்தால், நம் வாழ்வில் அதிசயங்கள் நிச்சயம் நிகழும்.
    இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட்டார் அவர். யாயிர், தொழுகைக் கூடத் தலைவர்.

    ‘ரபீ... தாங்கள் என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டும்’ சொன்னவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

    ‘என்ன ஆயிற்று?’ - இயேசு அவனைத் தேற்றினார்.

    ‘என்னுடைய ஒரே மகள் சாகும் தருவாயில் இருக்கிறாள். பன்னிரண்டு வயது சிறுமி அவள். அவளை கொடிய நோய் பிடித்துவிட்டது’, அவர் மீண்டும் அழுதார்.

    ‘அழவேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை வைத்தால் அதிசயங்களைக் காண்பது எளிது’ என்ற இயேசு தனது சீடர்களுடன் அவருடைய வீட்டுக்கு விரைந்தார்.

    கூட்டத்தினர் என்ன நடக்கப் போகிறது என்பதைக் காணும் ஆவலில் அவரை நெருக்கியடித்துக் கொண்டு அவருக்குப் பின்னாலும் முன்னாலும் செல்லத் தொடங்கினார்கள்.

    அந்தக் கூட்டத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாய் ரத்தப்போக்கினால் வருந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் தன்னுடைய சொத்தை எல்லாம் செலவழித்து மருத்துவம் பார்த்தும் ஒரு பயனும் இல்லாத கவலையில் இயேசுவைக் காண வந்திருந்தவள்.

    ‘இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டால் கூட போதும் நலமடைவேன்’ என்று அவளுடைய மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் கூட்டத்தினர் இயேசுவை நெருக்கியடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.

    அவளும் கூட்டத்தினரிடையே புகுந்து, புகுந்து இயேசுவின் அருகே சென்றாள். இயேசுவின் பின்னாலிருந்து அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டாள்.

    ஆச்சரியம்! அவளுடைய ரத்தப் போக்கு சட்டென்று நின்றது.

    இயேசு நின்றார்.

    ‘என்னைத் தொட்டது யார்?’ என்று கேட்டார்.

    இயேசுவின் கேள்வி மக்களையும், சீடர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ‘இயேசுவே! இதோ எல்லா மக்களும் உம்மைத் தொட்டுக் கொண்டு தான் வருகிறார்கள். பலர் நெருக்கியடிக்கிறார்கள். என்னைத் தொட்டவர் யார் என்று கேட்கிறீரே?’ - சீடர்கள் கேட்டார்கள்.

    ‘இல்லை. என்னை யாரோ தொட்டார்கள். என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை நான் உணர்ந்தேன்’ - இயேசு சொன்னார்.

    அந்தப் பெண் இயேசுவுக்கு முன்னால் வந்து விழுந்தாள்.

    ‘ஆண்டவரே... என்னை மன்னியும். உம் ஆடையின் விளிம்பைத் தொட்டது நான் தான்’.

    ‘ஏன் என்னைத் தொட்டாய்?’

    ‘ஆண்டவரே... பன்னிரண்டு ஆண்டுகளாய் ரத்தப் போக்கு நோயினால் வருந்திக் கொண்டிருந்தேன். அதனால் தான் உம்முடைய ஆடையைத் தொட்டு சுகமடைந்தேன்’ - அவள் சொல்லச் சொல்ல கூட்டத்தினர் வியந்தார்கள்.

    ‘உன் நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ’ - இயேசு சொன்னார்.

    ‘இயேசுவே இது எப்படி? எல்லோரும் தான் உம்மைத் தொடுகிறார்கள். ஒருவர் மட்டும் நலமடைகிறாரே?’ - என்று சீடர்கள் கேட்டனர்.

    ‘முழுமையான நம்பிக்கை வைத்தால் எதுவும் சாத்தியமாகும். நம்பிக்கை இல்லாதவருக்கு அதிசயங்கள் நிகழாது’ - இயேசு சொன்னார்.

    இயேசு பேசிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது தொழுகைக் கூடத் தலைவர் யாயிரின் வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்தார்.

    ‘ஐயா...’ அவன் யாயிரை அழைத்தான்.

    யாயிர் பதற்றத்துடன் அவனைப் பார்த்தார்.

    ‘துக்கமான செய்தி. உமது மகள் இறந்து விட்டாள். இனிமேல் போதகரை தொந்தரவு செய்யவேண்டாம். வாரும், இறுதிச் சடங்குகள் தொடங்கிவிட்டன’ என்றார்.

    யாயிர் உடைந்துபோனார். ‘மகளே...’ என்று அலறினார்.

    இயேசு அவரிடம், ‘அஞ்சாதீர். நம்பிக்கையோடு இரும். உம் மகள் பிழைப்பாள்’ என்றார்.

    வீட்டுக்கு வந்ததும் எங்கும் அழுகுரல்கள். சிறுமியின் மரணத்துக்காக உறவினர்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுது துடித்துக் கொண்டிருந்தார்கள்.

    இயேசு அவர்களிடம், ‘அழாதீர்கள். சிறுமி சாகவில்லை. தூங்குகிறாள்’ என்றார்.

    ‘சிறுமி சாகவில்லையா? தூங்குகிறாளா? எங்களுக்கென்ன பைத்தியமா? தூங்கும் சிறுமியை செத்துவிட்டாள் என்று சொல்லி ஒப்பாரி வைக்க?. இவருக்கு புத்தி பேதலித்து விட்டதோ’- மக்கள் இயேசுவை ஏளனமாய்ப் பார்த்தார்கள்.

    இயேசு எதையும் காதில் வாங்கவில்லை. நேராக சிறுமியின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து ‘சிறுமியே எழுந்திரு’ என்றார்.

    சிறுமி உயிருடன் எழுந்தாள்.

    ‘இவளுக்கு உணவு கொடுங்கள்’ - இயேசு சொன்னார். சிறுமியின் பெற்றோர் ஆனந்தத்தில் மலைத்துப் போய் நின்றிருந்தார்கள்.

    ‘இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்’ என்று அவர்களிடம் சொன்னார் இயேசு. மக்கள் கூட்டம் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தது.

    அசைக்க முடியாத விசுவாசம் இயேசுவின் மீது வைத்தால், நம் வாழ்வில் அதிசயங்கள் நிச்சயம் நிகழும் என்பதை இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்கூறுகின்றன.
    மும்பை பாந்திராவில் உள்ள மலை மாதா ஆலய திருவிழா தொடங்கியது. 18-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது.
    மும்பை பாந்திரா, ஹில்ரோடு பகுதியில் நூற்றாண்டு பழமையான மலைமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8-ந்தேதிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 8 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இது ‘பாந்திரா பெருவிழா’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த திருவிழாவில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினரும் கலந்துகொள்வார்கள்.

    இந்த ஆண்டு மலை மாதா திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 11.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருவிழா தொடக்க நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான மக்கள் மாதாவின் ஆசியை பெற்று சென்றனர்.

    தொடர்ந்து திருவிழா வரும் 18-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதில், இன்று(திங்கட்கிழமை) நோயுற்றோர் மற்றும் வயதானவர்களுக்கான சிறப்பு திருப்பலி காலை 10.45 மணிக்கு நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) கொங்கனிலும், 14-ந்தேதி மராத்தியிலும், 15-ந்தேதி தமிழிலும், 16-ந்தேதி மலையாளத்திலும், 17-ந்தேதி குஜராத்தியிலும் திருப்பலி காலை 11.30 மணிக்கு நடக்கிறது. 18-ந்தேதி காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் பாந்திரா ரெயில்நிலையம் மேற்கு பகுதியில் இருந்து மலை மாதா கோவிலுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    ×