என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாகும் தருவாயில் இருந்த யாயிரின் மகள்
    X

    சாகும் தருவாயில் இருந்த யாயிரின் மகள்

    அசைக்க முடியாத விசுவாசம் இயேசுவின் மீது வைத்தால், நம் வாழ்வில் அதிசயங்கள் நிச்சயம் நிகழும்.
    இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட்டார் அவர். யாயிர், தொழுகைக் கூடத் தலைவர்.

    ‘ரபீ... தாங்கள் என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டும்’ சொன்னவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

    ‘என்ன ஆயிற்று?’ - இயேசு அவனைத் தேற்றினார்.

    ‘என்னுடைய ஒரே மகள் சாகும் தருவாயில் இருக்கிறாள். பன்னிரண்டு வயது சிறுமி அவள். அவளை கொடிய நோய் பிடித்துவிட்டது’, அவர் மீண்டும் அழுதார்.

    ‘அழவேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை வைத்தால் அதிசயங்களைக் காண்பது எளிது’ என்ற இயேசு தனது சீடர்களுடன் அவருடைய வீட்டுக்கு விரைந்தார்.

    கூட்டத்தினர் என்ன நடக்கப் போகிறது என்பதைக் காணும் ஆவலில் அவரை நெருக்கியடித்துக் கொண்டு அவருக்குப் பின்னாலும் முன்னாலும் செல்லத் தொடங்கினார்கள்.

    அந்தக் கூட்டத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாய் ரத்தப்போக்கினால் வருந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் தன்னுடைய சொத்தை எல்லாம் செலவழித்து மருத்துவம் பார்த்தும் ஒரு பயனும் இல்லாத கவலையில் இயேசுவைக் காண வந்திருந்தவள்.

    ‘இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டால் கூட போதும் நலமடைவேன்’ என்று அவளுடைய மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் கூட்டத்தினர் இயேசுவை நெருக்கியடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.

    அவளும் கூட்டத்தினரிடையே புகுந்து, புகுந்து இயேசுவின் அருகே சென்றாள். இயேசுவின் பின்னாலிருந்து அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டாள்.

    ஆச்சரியம்! அவளுடைய ரத்தப் போக்கு சட்டென்று நின்றது.

    இயேசு நின்றார்.

    ‘என்னைத் தொட்டது யார்?’ என்று கேட்டார்.

    இயேசுவின் கேள்வி மக்களையும், சீடர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ‘இயேசுவே! இதோ எல்லா மக்களும் உம்மைத் தொட்டுக் கொண்டு தான் வருகிறார்கள். பலர் நெருக்கியடிக்கிறார்கள். என்னைத் தொட்டவர் யார் என்று கேட்கிறீரே?’ - சீடர்கள் கேட்டார்கள்.

    ‘இல்லை. என்னை யாரோ தொட்டார்கள். என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை நான் உணர்ந்தேன்’ - இயேசு சொன்னார்.

    அந்தப் பெண் இயேசுவுக்கு முன்னால் வந்து விழுந்தாள்.

    ‘ஆண்டவரே... என்னை மன்னியும். உம் ஆடையின் விளிம்பைத் தொட்டது நான் தான்’.

    ‘ஏன் என்னைத் தொட்டாய்?’

    ‘ஆண்டவரே... பன்னிரண்டு ஆண்டுகளாய் ரத்தப் போக்கு நோயினால் வருந்திக் கொண்டிருந்தேன். அதனால் தான் உம்முடைய ஆடையைத் தொட்டு சுகமடைந்தேன்’ - அவள் சொல்லச் சொல்ல கூட்டத்தினர் வியந்தார்கள்.

    ‘உன் நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ’ - இயேசு சொன்னார்.

    ‘இயேசுவே இது எப்படி? எல்லோரும் தான் உம்மைத் தொடுகிறார்கள். ஒருவர் மட்டும் நலமடைகிறாரே?’ - என்று சீடர்கள் கேட்டனர்.

    ‘முழுமையான நம்பிக்கை வைத்தால் எதுவும் சாத்தியமாகும். நம்பிக்கை இல்லாதவருக்கு அதிசயங்கள் நிகழாது’ - இயேசு சொன்னார்.

    இயேசு பேசிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது தொழுகைக் கூடத் தலைவர் யாயிரின் வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்தார்.

    ‘ஐயா...’ அவன் யாயிரை அழைத்தான்.

    யாயிர் பதற்றத்துடன் அவனைப் பார்த்தார்.

    ‘துக்கமான செய்தி. உமது மகள் இறந்து விட்டாள். இனிமேல் போதகரை தொந்தரவு செய்யவேண்டாம். வாரும், இறுதிச் சடங்குகள் தொடங்கிவிட்டன’ என்றார்.

    யாயிர் உடைந்துபோனார். ‘மகளே...’ என்று அலறினார்.

    இயேசு அவரிடம், ‘அஞ்சாதீர். நம்பிக்கையோடு இரும். உம் மகள் பிழைப்பாள்’ என்றார்.

    வீட்டுக்கு வந்ததும் எங்கும் அழுகுரல்கள். சிறுமியின் மரணத்துக்காக உறவினர்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுது துடித்துக் கொண்டிருந்தார்கள்.

    இயேசு அவர்களிடம், ‘அழாதீர்கள். சிறுமி சாகவில்லை. தூங்குகிறாள்’ என்றார்.

    ‘சிறுமி சாகவில்லையா? தூங்குகிறாளா? எங்களுக்கென்ன பைத்தியமா? தூங்கும் சிறுமியை செத்துவிட்டாள் என்று சொல்லி ஒப்பாரி வைக்க?. இவருக்கு புத்தி பேதலித்து விட்டதோ’- மக்கள் இயேசுவை ஏளனமாய்ப் பார்த்தார்கள்.

    இயேசு எதையும் காதில் வாங்கவில்லை. நேராக சிறுமியின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து ‘சிறுமியே எழுந்திரு’ என்றார்.

    சிறுமி உயிருடன் எழுந்தாள்.

    ‘இவளுக்கு உணவு கொடுங்கள்’ - இயேசு சொன்னார். சிறுமியின் பெற்றோர் ஆனந்தத்தில் மலைத்துப் போய் நின்றிருந்தார்கள்.

    ‘இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்’ என்று அவர்களிடம் சொன்னார் இயேசு. மக்கள் கூட்டம் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தது.

    அசைக்க முடியாத விசுவாசம் இயேசுவின் மீது வைத்தால், நம் வாழ்வில் அதிசயங்கள் நிச்சயம் நிகழும் என்பதை இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்கூறுகின்றன.
    Next Story
    ×