என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவனின் மன்னிப்பு பெறுவோம்
    X

    இறைவனின் மன்னிப்பு பெறுவோம்

    கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் குடிகொள்வதாக (கொலோ 3:16)''என்று கூறும் திருத்தூதர் பவுலடியாரின் இறைவாக்கிற்கு செவிமடுப்போம். இறைவனின் மன்னிப்பைப் பெறுவோம்.
    இன்றைய நாளில் நம் விரல் நுனியில் அன்றாட உலக செய்திகளை, அறிவியல் வளர்ச்சிக்கான தகவல்களை ஊடகங்கள் மூலம் நொடிக்கு நொடி தெரிந்து கொள்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். அச்செய்திகள் மூலம் நமது அறிவை வளர்த்துக்கொள்ளவும், அதற்கேற்ப நமது வாழ்க்கை அமைப்பை மாற்றிக்கொள்ளவும் முனைகின்றோம். ஆனால் உலகு சார்ந்த அந்தச் செய்திகளினால் மனித வாழ்வுக்கு நிலை வாழ்வைப் பெற்றுத் தர இயலாது.

    திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு நூலில் ""உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்(லூக் 1:19)'' என்று வானதூதர் அன்னை மரியாளிடம் கூறுகின்றார். அதன் பிறகு பத்து மாதங்கள் கடந்த பின்பு இடையர்களுக்கு ""எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக்கா 2:10)'' என்றும் கூறுகின்றார். மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும் "நற்செய்தி' என்ற "சொல்' கையாளப்பட்டுள்ளது. அச்சொல் "இயேசு' என்ற இறைமகனைப் பற்றியதே ஆகும்.

    நற்செய்தி இயேசுவைப் பற்றியதாகவே இருந்தாலும் ஏன் அறிவிக்கப்பட வேண்டும்? நாம் அனைவரும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே. நாம் அனைவரும் பாவிகளா? அதற்கு... ""பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம் (1 யோவான் 1:8)'' என்று திருத்தூதர் யோவான் விடையளிக்கின்றார்.

    மனிதர்களாகிய நாம் நன்மைகளைச் செய்து கடவுளின் மக்களாக வாழ வேண்டியவர்கள். மாறாக நாம் பல வேளைகளில் தீமைக்கு பதில் தீமை செய்து அவருக்கு எதிராளியாகின்றோம். இறைமகன் இயேசு ""உங்கள் உள்ளங்கள் குடிவெறியாலும், களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்வுக்குரிய கவலைகளினாலும் மந்தம் அடையாதவாறு காத்துக் கொள்ளுங்கள்( லூக் 21:34)'' என்று நம்மை எச்சரிக்கிறார். அவ்வாறு சீரழியாமல் இருக்கவே மண்ணுலக வாழ்வின் சாட்சியாக இறைவனின் பிள்ளையாக ஒரு மனிதனாகி "பாவம் செய்யாது' இயேசு வாழ்ந்து காட்டினார்.

    ஏனெனில், ""தீயோரை எச்சரிக்காவிட்டால் அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர் (எசே 3:18)'' என்று இறை வாக்கினர் எசேக்கியர் அழுத்தமாக பதிவு செய்கின்றார். அந்த எச்சரிக்கையின் உருவம்தான் இயேசு கிறிஸ்து என்ற நற்செய்தி. அவர் நம் பாவங்களை களைய அவற்றிலிருந்து மீட்க தந்தையினால் அனுப்பப்பட்டவர்.

    "கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள் வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இந்த மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்பு பெறுகிறோம் (எபே 1:7)''. ஆம்! ""உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும் அதை நான் உறைபனிபோல் வெண்மையாக்குவேன்(எசா1:18)'' என்று இறைவாக்கினர் எசாயா மூலமாகவும் உறுதி அளித்திருந்தார்.

    எபேசியருக்கு எழுதிய தூய பவுலடியாரும், எசாயாவும் நமது பாவம் இரத்தப் பழியாக (சிவப்பாக) இருந்தாலும் அவற்றை மன்னிப்பின் மூலம் உறைபனிபோல் வெண்மையாக்குபவர் நமது மீட்பின் கடவுள் என்று வாக்குறுதி அளிக்கின்றார்கள். மேலும் ""அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார் (திரு.பா. 103:3)'' அதற்கு ""நான் உன் மீது சினம் கொள்ள மாட்டேன்; உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டாலே போதும்(எரே 3:12)'' ஏனெனில் ""மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7)'' என்று நமக்காக தந்தையாம் கடவுளிடம் பரிந்து பேசுகின்ற இயேசு உறுதியாகக் கூறுகின்றார்.

    மேலும்,""கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் குடிகொள்வதாக (கொலோ 3:16)''என்று கூறும் திருத்தூதர் பவுலடியாரின் இறைவாக்கிற்கு செவிமடுப்போம். இறைவனின் மன்னிப்பைப் பெறுவோம்.
    Next Story
    ×