என் மலர்
ஆன்மிகம்

தாண்டிச் செல்ல வேண்டிய சோதனைகள்
உலக வாழ்க்கையில் எல்லாருமே சோதனைகளை கடந்து செல்ல வேண்டியதுள்ளது.
உலக வாழ்க்கையில் எல்லாருமே சோதனைகளை கடந்து செல்ல வேண்டியதுள்ளது. அதை கடந்து செல்லும்போதுதான், தேவையற்றதை அல்லது தீமையானதை அல்லது கவர்ச்சியானதை தவிர்ப்பதில் நமக் கிருக்கும் பலத்தைப் பற்றி அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும். அதோடு, வந்திருக்கும் அந்த சோதனை நமது ஆசையினால் வந்ததா? அல்லது எந்த வகையிலானதா? என்பதையும் அறிய முடியும்.
சற்று ஆராய்ந்து பார்த்தால், மூன்று வகையான சோதனைகளை எல்லாருமே கடந்து செல்வதை உணர முடியும். மனிதன் என்பவன் ஆவி, ஆத்மா, சரீரம் என்ற மூன்று அம்சங்களின் ஒருங்கிணைப்பு என்பதால், சரீரம், உள்ளம், பிறவிக்குணங்கள் ஆகிய மூன்றிலும் ஏற்படும் சோதனைக்கு உட்பட வேண்டியதுள்ளது.
சரீரத்தை ஆட்கொள்வதற்காக பல பாவங்கள் உலகமெங்கும் சோதனையாக வைக்கப்பட்டுள்ளன. இதில் மது உட்பட பல வஸ்துக்களை பட்டியலிடலாம். ஒருவனது வாழ்க்கையில் நுழைவதற்கான நெருக்கடியை உருவாக்கும் சோதனையாக இவையெல்லாம் உள்ளன. ஒருவனின் வாழ்க்கையில் நுழைந்துவிட்ட பிறகு அவனது சரீரத்தை படிப்படியாக அடிமைப்படுத்திக் கொள்கின்றன.
உள்ளம் என்பது வெளியே தெரியாது என்பதால் அங்கு நடத்தப்படும் பாவங்கள் அனேகம். கொலைகூட அங்கு நடந்திருக்கும். உள்ளத்தில் இச்சை, பெருமை, பொறாமை போன்றவை இருந்தால், அவை தொடர்பான சோதனைகளில் விழும் நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.
ஜென்ம சுபாவம் என்ற பிறவிக்குணங்களின் ஆளுகைதான் பெரும்பாலும் இயல்பான வாழ்க்கையின் அடித்தளமாக உள்ளன. இகழ்ந்தோரை இகழ்தல், பகைத்தோரை பழிவாங்குதல், தனது கொள்கையை சாராதவரை பகைத்தல் என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். அந்த சுபாவங்கள் இருந்தால் அதற்கான சோதனையில் வீழ்ந்துவிடுவதும் இயல்பே.
எந்த வகையில் வந்தாலும், இந்த மூன்று சோதனைகளிலும் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கு கிறிஸ்தவம் வழிகாட்டுகிறது. இதற்கு கிறிஸ்துவை மட்டுமே முன்னுதாரணமாக வேதம் காட்டுகிறது. ஏசுவும் சோதனைகளைக் கடந்து அவற்றை வென்ற பிறகுதான் இறைப்பணிக்கு வந்தார்.
சாத்தானால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவரால் வனாந்திரத்துக்கு ஏசு கொண்டு செல்லப்பட்டார் என்று வேதம் கூறுகிறது (மத்.4:1). இதன்படி பார்த்தால், ஆன்மிக நிலையின் ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டிச் செல்லும்போது, சோதனைக் களத்தை எதிர்கொள்ள ஒரு குறிப்பிட்ட நிலைக்கு தேவஆவி வழிநடத்துகிறது என்பதையும், தேவஆவியின் துணையில்லாமல் சோதனையை ஜெயிக்க முடியாது என்பதையும் ஏசுவுக்கு நேரிட்ட சோதனைச் சம்பவம் வெளிக்காட்டு கிறது.
ஞானஸ்னானம் பெற்ற பிறகு ஏசுவுக்கு சோதனை நேரிட்டது. உபவாசத்தில் இருந்தபோது வராமல், அதை முடித்தபோது முதல் சோதனையாக பசி வந்தது. இயல்பாக வரும் பசி என்பதற்கும் சோதனையாக வரும் பசி என்பதற்கும் வித்தியாசம் உண்டு. உண்பதற்கு எதுவுமே இல்லாத நிலையில் உருவாகும் கொடூரப் பசியை சோதனைக்கானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
வேலை வாய்ப்பு இல்லாமல் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், லஞ்சம் கொடுத்தால் அதைப் பெறலாம் என்றால், நாம் தேர்வு செய்வது எதை? லஞ்சத்தை கொடுத்து வாட்டத்தை போக்கிக்கொள்வோமா? வேத கட்டளையை பின்பற்றி லஞ்சத்தை தவிர்த்து வாட்டத்திலே நீடிப்போமா?
தனது ஆத்மாவை கறைப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட முதல் சோதனையில், பசியாறுவதற்காக கற்களை அப்பங்களாக மாற்றிக் கொள்ளலாம் என்பதுதான். அதாவது, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிக்கலை தீர்த்துக்கொள்ளலாமே என்ற வேண்டுகோள் தான்.
ஆனால் சாத்தானின் தூண்டுதலுக்கு ஏற்ப செயல்படத் தொடங்கினால், எல்லாவற்றிலும் குறுக்கு வழியில் செல்ல வேண்டியதாகிவிடும், குறுக்கு வழியில் பசியாறுவதைவிட, வேதம் கூறிய கருத்தை பின்பற்றுவது மேல் என்று ஏசு அறிவித்தார்.
இரண்டாவதாக, ஏசுவுக்கு வைக்கப்பட்ட சோதனை தேவாலயத்தில் ஏற்பட்டது. சோதனை எந்த இடத்திலும் ஒருவனுக்கு நேரிடலாம் என்பதற்கு இது ஆதாரம். சோதனைக்காக ஏசுவை வனாந்திரத்துக்கு ஆவியானவர் அழைத்துச் சென்ற நிலையில், அவரை சாத்தான் அழைத்துச் சென்ற இடம் தேவாலயம்.
வசனத்தை பயன்படுத்தி முதல் சோதனையில் ஏசு வெற்றி பெற்றதால், தேவாலயத்தில் வைத்து சாத்தான் கொண்டு வந்த சோதனையும் வேத வசனத்தின் அடிப்படையில் இருந்தது. ‘கோபுர உச்சியில் இருந்து குதியும்; அப்போது பக்தர்களை தூதர்கள் ஏந்திக் கொள்வார்கள்’ என்று வசனம் கூறுகிறதே என்றான்.
இந்த சோதனையை கவனிக்கும்போது, சரீரத்துக்கு ஏதுவானதாக அந்த வேத வசனத்தை சாத்தான் திசைதிருப்புவதை கவனிக்க முடியும். இறைப் பணியை முடித்து ஏசு பரலோகம் சென்ற பிறகு, மனிதர்களை நல்வழிக்கு போதிப்பதற்காக பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டார். அதன்படி, வேத வசனங்களை எல்லாம் ஆவிக்குரிய ரீதியில் ஆய்வு செய்யவே பரிசுத்த ஆவியானவரால் போதிக்கப்படுகிறோம்.
ஆனால் வசனங்களை சரீரத்துக்கு ஏற்ற வகையில் பலர் மூலம் போதனை செய்கிறான். இதனால் ஆன்மிகத்தில் பலரும் திசை திரும்பிச் செல்கின்றனர். சரீர காரியங்களை எதிர்பார்த்து பக்தர்கள் தேவனிடம் பரீட்சை வைக்க வேண்டாம். அந்த வேதவசனத்தைக் கூறியே, இரண்டாம் சோதனையையும் ஏசு வெற்றி கொண்டார்.
உடல் பசி, வசனத்தின் தவறான போதனை ஆகியவற்றில் சாத்தானால் ஏசுவை ஜெயிக்க முடியவில்லை. எனவே கடைசி ஆயுதமாக, உலக அந்தஸ்தையும், அதனால் வரும் பெருமையையும் ஏசுவின் கண்களுக்கு சாத்தான் காட்டினான். அதாவது, தான் சொன்னபடி நடந்துகொண்டால் உலகத்தின் மிக உயர்ந்த பதவி உட்பட அனைத்தையும் தருவேன் என்று ஆசை காட்டினான்.
‘அழிந்துபோகக் கூடிய சரீரத்துக்கான உயர்வை நாடும் நோக்கம் தனது இறைப்பணியில் இல்லை’ என்பதை சாத்தானுக்கு ஏசு உணர்த்தினார். உலக வாழ்க்கையில் உயர்த்தினாலும், தாழ்த்தினாலும் தேவன் ஒருவரையே பணிய வேண்டும் என்று அர்த்தம் கொள்ளும் வசனத்தை கூறி மூன்றாவது சோதனையையும் ஏசு ஜெயித்தார்.
சரீர ஆசைகளைத் தூண்டும் விதத்தில் சாத்தான் வைத்த சோதனைகளை எல்லாம் ஏசு வெற்றி பெற்றதற்குக் காரணம், வேத வசனங்களை அவர் ஆவிக்குரிய ரீதியில் நடைமுறைமுறைப்படுத்தியதால் தான். (1 கொரி.2:13,14), (ரோமர்8:5).
Next Story






