என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    இயேசு வெளிப்படுத்தியுள்ள ஆன்மிகக் கருத்து, ஆழமான உண்மையை வெளிக்காட்டுகிறது. ‘உங்கள் கண்கள் காண்கிறதாயும், காதுகள் கேட்கிறதாயும் இருப்பதால் அவை பாக்கியமுள்ளவை’ என்று தனது சீடர்களிடம் அவர் கூறினார்.
    மனிதன் தன்னை நல் வழிப்படுத்திக்கொள்ள பல்வேறு சம்பவங்களை அவனுக்கு காட்சியாகவும், சாட்சியாகவும் இறைவன் வைக்கிறார். கெட்ட பழக்கங்களில் ஈடுபடுதல் மற்றும் இனிப்பு, கொழுப்பு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல் போன்றவற்றால் நேரிடும் சுகவீனங்கள் பற்றி நோயாளிகளைக் காட்டி மற்றவர்களுக்கு இறைவன் எச்சரிக்கை விடுக்கிறார்.

    தீய சேர்க்கை, தவறான உறவுகள், கள்ள வழியில் பொருள் சேர்த்தல், பகைத்தல் உட்பட பல கெட்ட சுபாவங்களால் என்னென்ன நேரிடும் என்பவை பற்றிய அறிவையும், பல்வேறு சம்பவங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் இறைவன் அருளுகிறார். இதுசம்பந்தமான உரையாடல்கள், படக்காட்சிகள், கட்டுரைகள் என எத்தனையோ வடிவத்தில் அவை அனைவரையுமே வந்தடைகின்றன.

    ஆனால் அதுபற்றி எல்லாம் படித்தும், கேட்டும், கண்டும் நாம் உணர்வடைந்து இருக்கிறோமா என்பதுதான் நமக்குநாமே கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி. உணர்வடைந்தவர்கள் தீய பாதைகளை விட்டு விலகியிருப்பார்கள். நேரிடும் கேடு சம்பவங்களைப் பற்றிய அறிவு இருந்தும் திருந்தாதவர்கள், தீய பழக்க வழக்கங்களிலேயே தொடர்ந்து நீடித்திருப்பார்கள்.

    ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே சரீர மற்றும் ஆத்ம ரீதியான தீய குணங்கள் உள்ளன. உடலை கெடுக்கும் தீய பழக்கங்களை பட்டியலிட்டால், அதிக சோம்பல், தேவைக்கும் அதிக உணவு சாப்பிடுவது, தேவையற்ற படக்காட்சிகளில் ஆழ்ந்திருப்பது போன்றவை அவற்றில் சில.

    பெருமை, பொறாமை, இச்சையான சிந்தனை உள்ளிட்டவை ஆத்ம ரீதியான தீய குணங்களில் சில. இவை அனைத்திலும் இருந்து விலக முழுமனதோடு முயற்சிப்பவனே, ஆன்மிக உணர்வைப் பெற்றவனாகிறான்.

    இப்படிப்பட்ட ஆன்மிக உணர்வைப் பெற்றவனுக்கே, அவன் எந்த மதம், சாதி, இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், இறைவனின் பாக்கியம் அல்லது அருள் கிடைக்கிறது. அதன் மூலம் அவன் தன்னை இறைவழியில் முற்றிலும் நல்ல மனிதனாக மாறிக்கொள்வதற்கான இறைஆவியின் பலத்தைப் பெறுகிறான்.



    இப்படிப்பட்ட நிலையை எட்டியவன் எந்த சூழ்நிலையிலும் தன்னை எந்தவித பாவமும் அண்டாமல் பாதுகாத்துக் கொள்கிறான். பகைக்கிறவனை பகைப்பது, கண்ணைக் கவர்வதை எல்லாம் இச்சிப்பது, எதிரியின் அழிவை ரசிப்பது, மற்றவரின் வளர்ச்சியில் பொறாமை கொள்வது போன்றவை எல்லாம் இறைவனின் குணங்கள் அல்ல.

    இப்படிப்பட்ட குணங்கள் நம்மிடம் இருந்தால் நாம் இறைவழியில் இல்லாமல் பாவ உணர்வுடன் இருக்கிறோம் என்று அர்த்தம். இறைவனின் குணங்களை பெறாதவன் ஆன்மிகவாதியும் அல்ல, அவனுக்கு நற் குணங்களை அளிக்க முடியாதவர் இறைவனும் அல்ல என்பதும் உண்மை. ஒருவன் தன்னைத்தானே முற்றிலும் மாற்றிக்கொள்ள முடியாது. படைத்தவருக்கே படைப்பை மாற்றும் வல்லமை உண்டு.

    இதுபற்றி இயேசு வெளிப்படுத்தியுள்ள ஆன்மிகக் கருத்து, ஆழமான உண்மையை வெளிக்காட்டுகிறது. ‘உங்கள் கண்கள் காண்கிறதாயும், காதுகள் கேட்கிறதாயும் இருப்பதால் அவை பாக்கியமுள்ளவை’ என்று தனது சீடர்களிடம் அவர் கூறினார்.

    அதாவது, போதனையாக பல்வேறு சம்பவங்களைக் கண்டு, கேட்டு, அதன் மூலம் தங்களை திருத்திக்கொள்ளும் உணர்வோடு முன்வருபவர்களே பாக்கியவான்கள் என்று தெளிவுபடுத்தினார். அதோடு, அப்படிப்பட்டவர் களின் உள்ளத்தில் இறைஆவியின் போதனை அளிக்கப்படும் என்றும்; மற்றவர்கள் கேட்டும், கண்டிருந்தாலும், உணராமல் இருப்பதால் அவர்களுக்கு இறைவனின் நேரடி போதனை கிடைக்காது என்றும் அவர் கூறுகிறார் (மத்.13:1016).

    அதுமட்டுமல்ல, 12-ம் வசனத்தில் மிகப்பெரிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல்வேறு தீயகுணங்கள் மூலமாக விளையும் துயர சம்பவங்களைப் பற்றி கேட்டு, கண்டு, அறிந்திருந்தும், அதனால் பாவ உணர்வடைந்து இறைவழிப்படி தன்னை திருத்திக்கொள்ள முன்வராமல் தொடர்ந்து அதுபோன்ற தீயவழியில் நீடித்தால், ஒரு கட்டத்தில் அவனிடமிருந்த கொஞ்ச உணர்வும், நற் குணங்களும் நீங்கி, தீயவழியை முழுவதுமாக பின்பற்றக்கூடிய இதய கடினநிலை ஏற்பட்டுவிடும் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார்.

    அவனிடத்தில் இருந்து என்னவெல்லாம் எடுக்கப்படும் என்பதை இயேசு பட்டியலிடவில்லை. ஆனால் உலக அந்தஸ்துகளை அவன் அதிகம் பெற்றிருந்தாலும், ஆன்மிக நிலையை அடைவதற்குத் தேவையான அனைத்துமே அவனைவிட்டு எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை அதில் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட நிலையை எட்டியவன், இதய கடினத்தினால் தீமைகளையே செய்து, அதனால் விளையும் தீமையினால் அழிக்கப்படுவான் என்பது நிஜம்.

    எனவே, நம்மிடம் உள்ள பாவ உணர்வுகளை நீக்கி இறை உணர்வை வளர்த்துக்கொள்வோம்.
    குமரி மாவட்டத்தில் ராஜாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் ராஜாவூரில் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடக்கும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவை துணை தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர், துணை செயலாளர் ஜீங்லின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாயஜோ, பங்கு பேரவையினர், பங்கு தந்தை ரால்ப் கிராண்ட் மதன், இணை பங்கு தந்தை ஆன்றனி ரோசாரியோ ஆகியோர் செய்துள்ளனர்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி மாலையில் பூண்டி மாதா திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி மற்றும் பூண்டி மாதாவின் சிறிய சொரூபம் வைக்கப்பட்ட சப்பரம் ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வருவர்.

    இதை தொடர்ந்து சென்னை மயிலை உயர் மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார். பின்னர் பேராலயத்தில் மரியா-நம்பிக்கை மிகுந்தவர் என்ற தலைப்பில் திருப்பலியை நிறைவேற்றுகிறார். விழா நடைபெறும் நவ நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.



    பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா நாளான வருகிற 14-ந் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தின் பங்குத்தந்தையர்களாக பணியாற்றி மறைந்த அருட்தந்தையர்கள் லூர்துசேவியர், ராயப்பர் ஆகியோரது நினைவு திருப்பலி நடைபெறுகிறது. மாலையில் மரியா-நம்பினோர்க்கு அடைக்கலம் என்ற தலைப்பில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    இரவு வண்ண மின்விளக்கு அலங்காரம், மலர் அலங்காரத்தில் பூண்டி மாதாவின் தேர் பவனி நடக்கிறது. பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை காண உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக பேராலய நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆலயங்களில் ஒன்றான ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆலயங்களில் ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடைபெறும். இதில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    6-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், இரவு 9 மணிக்கு ‘புனித தோமையார்’ கிறிஸ்தவ வரலாற்று நாடகமும் நடக்கிறது. 7-ந் தேதி இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா, 8-ந் தேதி சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 11-ந் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர், 12-ந் தேதி மாலை 6 மணிக்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது. மேலும், 13-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 14-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, காலை 10.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரால்ப் கிராண்ட் மதன், இணை பங்குத்தந்தை ஆன்டனி ரோசாரியோ, பங்குபேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர், துணைச்செயலாளர் ஜீங்லின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாயஜோஸ், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
    உப்பிலியபுரம் அருகேயுள்ள பாலகிருஷ்ணம்பட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    உப்பிலியபுரம் அருகேயுள்ள பாலகிருஷ்ணம்பட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டப்பாளையம் பங்குத்தந்தை வின்சென்ட் அடிகளார் புனித செபஸ்தியார் திருஉருவம் பொறித்த கொடியை புனிதம் செய்து ஏற்றிவைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் புதிதாக செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

    தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து முதல் திருப்பலி நடைபெற்றது. வருகிற 8-ந் தேதி மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும், 9-ந் தேதி மாலை 6 மணிக்கு தாத்தையங்கார்பேட்டை பங்குத்தந்தை செபாஸ்டின் திருப்பலி நடத்தி மறையுரையாற்றுகிறார். அன்று இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.

    10-ந்தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலியை சிலுவைகிரி பங்குத்தந்தை கிருபாகரன் நடத்தி மறையுரை வழங்குகிறார். அன்று மாலை 3 மணிக்கு சப்பர பவனி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை வின்சென்ட் மற்றும் அருட்கன்னியர்கள், பாலகிருஷ்ணம்பட்டி கிராம மக்கள், ஏசு இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
    நம்பிக்கையுடன் திருமுழுக்கு பெறுவோர், மீட்புப் பெறுவர். நம்பிக்கையற்றவர்களோ தண்டனைத் தீர்ப்பு பெறுவர். நம்பிக்கை கொண்டோர் அருள் அடையாளங்கள் புரிவர்.
    இயேசு இறந்ததற்கு பின்னர், அவரது சீடர்கள் தனியறையில் அடைபட்டுக் கிடந்தார்கள். எப்போது தலைவர்கள் வருவார்களோ, எப்போது தங்களைக் கொல்வார்களோ என்னும் பயம் அவர்களைப்பிடித்து ஆட்டியது.

    பூட்டிய கதவுகள் பூட்டியபடி இருக்க, இயேசு அவர்கள் மத்தியில் வந்து நின்று ‘உங்களுக்குச் சமாதானம்’ என்றார்.

    சீடர்கள் அதிர்ந்தார்கள். ஏதோ பேயைக் கண்டது போல திகிலுற்றார்கள்.

    ‘பயப்படாதீர்கள்.. நான் தான்! ஆவியல்ல. என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காணும் இந்த எலும்பும், சதையும் ஆவிகளுக்குக் கிடையாது’ என்றார் இயேசு.

    சீடர்கள் ஆனந்தமானார்கள். இயேசு தன்னுடைய கைகளையும், கால்களையும் சீடர்களிடம் காண்பித்தார். பின் புன்னகையுடன் ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக’ என்று மீண்டும் வாழ்த்தினார். அப்போது தோமையார் அவர்களுடன் இல்லை. மற்ற சீடர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.

    ‘உண்பதற்கு ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா?’ என இயேசு கேட்டார்.

    சீடர்களோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து அகலாமல் இருந்தார்கள். ஒருவர் ஓடிச்சென்று வேக வைத்த மீன் துண்டு ஒன்றை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார். அதை இயேசு தன் கையில் எடுத்து, சீடர்களுக்கு முன்பாக அமர்ந்து சாப்பிட்டார்.

    ‘மோசேயின் சட்ட நூல்களிலும், இறைவாக்கினர் நூல்களிலும், திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேறுவதற்காகத் தான் இவையெல்லாம் நிகழ்ந்தன’.

    இயேசு தன்னுடைய சீடர்களிடம் சொல்ல, அவர்கள் இன்னும் பயம் விலகாதவர்களாக இயேசுவைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.



    ‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்க்கவேண்டும் என்றும், பாவமன்னிப்பு பெற மனம் மாறுங்கள் என்றும், எருசலேம் முதல் அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறை சாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இதற்கு நீங்கள் சாட்சிகள்’ என இயேசு சொன்னார்.

    பின் அவர்கள் மேல் ஊதி, ‘தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவனுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவனுக்கு அவை மன்னிக்கப்படும். எவனுடைய பாவங்களை மன்னிக்காமல் விடுவீர்களோ, அப்பாவங்கள் மன்னிக்கப்படாது’ என்றார்.

    சீடர்கள் பரவசமானார்கள். இயேசு இல்லாமல் என்ன செய்வது? என்று திகைத்துக் கொண்டிருந்த சீடர் களுக்கு, தங்களுடைய பணி முடிவடையவில்லை. இனிமேல் தான் தொடங்கப்போகிறது என்பது புரிந்தது. அவர்கள் உற்சாகமானார்கள். அதன்பின் இயேசு மறைந்தார். கொஞ்ச நேரத்தில் தோமா வந்தார்.

    சீடர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவரிடம் நடந்தவற்றைக் கூறினார்கள். தோமா ஏற்கனவே சந்தேக புத்திக்காரர். ஆனால் எதையும் உண்மையென்று அறிந்துவிட்டால் பின் அதை ஆழமாய் பின்பற்றுபவர். அவர் சீடர்கள் சொன்னதை முதலில் நம்பவில்லை. ‘நீங்கள் இயேசுவை பற்றிய நினைவிலேயே இருப்பதால் உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. நான் இதை நம்பமாட்டேன்’ என தோமா சொன்னார்.

    ‘உண்மையாகவே நடந்தது தான். எல்லோரும் ஒரே நேரத்தில் இயேசுவைக் கண்டோம்’ என்று சீடர்கள் சொல்ல, ‘நீங்கள் என்ன சொன்னாலும், நான் அவருடைய கைகளில் ஆணிக் காயங்கள் இருக்குமே அதில் என்னுடைய விரலையும், விலாவின் காயத்தில் என்னுடைய கைகளையும் விட்டுப் பார்க்காமல் நம்பமாட்டேன்’ என்றார். தோமாவின் பேச்சை கேட்டு சீடர்கள் வருந்தினார்கள்.

    எட்டு நாட்கள் கடந்தன.

    இயேசு மீண்டும் தன் சீடர்களுக்கு முன்பாகத் தோன்றினார். இப்போது தோமையாரும் உடனிருந்தார்.

    ‘தோமாவே! இதோ என் கைகள் இங்கே உன் விரலை இடு. இதோ என் விலா. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தீர்த்து நம்பிக்கை கொள்’ என இயேசு சொல்ல, தோமா ‘என் இயேசுவே உம்மை நம்புகிறேன்’ என்று கத்தினார்.



    ‘நீ என்னைக் கண்டதால் நம்புகிறாய். காணாமலேயே நம்புபவன் பேறு பெற்றவன்’ இயேசு சொல்ல, தோமா அமைதியானார். அதன்பின் ஏராளமான சீடர்களுக்கு இயேசு காட்சியளித்தார். உயிர்த்த பின் சுமார் ஐநூறு பேருக்கு இயேசு காட்சியளித்ததாக இறையியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    பின்பு தன் சீடர்களுடன் பெத்தானியாவில் வந்த இயேசு அவர்களை ஆசீர்வதித்தார்.

    ‘விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் உலகமெங்கும் நற்செய்தியை அறிவியுங்கள். செயல்களினால் என்னை மக்களுக்குப் போதியுங்கள். மக்களுக்கு தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள்’ என்றார்.

    சீடர்கள் இயேசுவின் போதனைகளை சற்றும் சிதற விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    இயேசு தொடர்ந்தார். ‘நம்பிக்கையுடன் திருமுழுக்கு பெறுவோர், மீட்புப் பெறுவர். நம்பிக்கையற்றவர்களோ தண்டனைத் தீர்ப்பு பெறுவர். நம்பிக்கை கொண்டோர் அருள் அடையாளங்கள் புரிவர். அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவார்கள், புதிய மொழிகளைப் பேசுவார்கள், பாம்புகளைத் தம் கையால் பிடிக்கும் தைரியம் கொண்டிருப்பார்கள். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது. அவர்கள் கை வைத்தால் நோயாளிகள் சுகம் பெறுவார்கள்’ என ஆசீர்வாத மொழிகளை அடுக்கினார்.

    சீடர்கள் அனைவருடனும் இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். சீடர்களுக்கு அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கிய இயேசு அவர்களைப் பார்த்து புன்னகைத்தார். பின் தன்னுடைய கைகளை விரித்து அவர்களை ஆசீர்வதித்து, ‘இதோ.. உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருக்கிறேன்’ என்றார்.

    சீடர்கள் மனதில் அந்த வார்த்தை மிகப்பெரிய தன்னம்பிக்கையை வளர்த்தது. பின் இயேசு அவர்கள் முன்னிலையிலே விண்ணேற்றம் அடைந்து தன் தந்தையிடம் சென்றார்.

    சீடர்கள் பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.

    -மிராண்டாஸ், சென்னை.
    சின்னமலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 466-வது ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் 4-ந்தேதி தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சென்னை சைதாப்பேட்டை, சின்னமலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 466-வது ஆண்டு பெருவிழா அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. ஆண்டு பெருவிழா அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.

    ஆண்டு பெருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு தலைப்பில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 13-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆடம்பர தேர்த்திருவிழா சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு அன்னையின் மாபெரும் விழாவும், அன்று மாலை 6 மணிக்கு சென்னை மயிலை முதன்மை குரு எம்.அருள்ராஜ் தலைமையில் கொடி இறக்கத்துடன் பெருவிழா நிறைவடைகிறது.
    கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள எடத்துவா தூய ஜார்ஜியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் தூய ஜார்ஜியார் திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் குமரி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஜான் மனக்குந்நேல் கொடியேற்றி வைத்தார். சங்கனாசேரி உயர் மறைமாவட்ட துணை ஆயர் தாமஸ் தரயில் திருவிழா தொடக்க திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து, குழித்துறை மறைமாவட்ட தேனருவி சமூகத்தொடர்பு இயக்குனர் அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் தமிழில் திருப்பலி நிறைவேற்றினார்.



    கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஆலப்புழை மாவட்ட கலெக்டர், கேரள அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் தமிழில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும். இதில், தமிழக ஆயர்கள் பீட்டர் ரெமிஜியூஸ், ஜார்ஜ் மார் ராஜேந்திரன், வின்சென்ட் மார் பவுலோஸ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். விழா நாட்களில் தமிழ் வழிபாடுகளை நடத்த திருத்தல தமிழ் விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் தலைமையில் அருட்பணியாளர் ஹிலரி, சின்னப்பன், மார்ட்டின், சிங்கராயன் ஆகியோர் செய்துள்ளனர்.
    வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது.இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 7-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சியில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரை நிகழ்த்துகிறார்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் செபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.

    வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி, மே மாதம் 1-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்பின் விருந்து, 6-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி போன்றவை நடக்கிறது.

    வருகிற 6-ந் தேதி மாலையில் செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.

    திருவிழா இறுதி நாளான 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமையில் திருப்பலி, மாலை 3 மணிக்கு தேர்ப்பவனி, 5.30 மணிக்கு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் பங்கு அருட்பணி பேரவை, பங்குமக்கள் செய்துள்ளனர்.

    உங்கள் குடும்ப வாழ்வில் சாத்தான் எவ்வளவு பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கொண்டு வந்தாலும் சோர்ந்து போகாதிருங்கள். உடனே தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
    உலக வாழ்வில் தேவன் உங்களுக்குக் கொடுத்த பெரிய ஆசீர்வாதம் குடும்பம். கர்த்தருடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களைக் காணக்கூடிய மிக முக்கியமான இடம் குடும்பம் தான்.

    இக்கடைசி நாட்களில் சத்துரு தனக்கு கொஞ்ச நாட்கள் தான் உண்டு என அறிந்து, தந்திரமாக அநேக குடும்பங்களை உடைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிவோம்.

    அவனுடைய தந்திரங்களை எதிர்த்துப் போராடுகிற முதல் ஆயுதம் வசனம். இரண்டாவது ஆயுதம் ஜெபம். ஜெபத்தோடு இச்செய்தியை வாசியுங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

    “அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” (2.கொரி. 2:11).

    ‘புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள், புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகிறாள்’ (நீதி 14:1).

    ‘செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்’ (நீதி 31:30).

    உங்களுடைய குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதற்கு முதல்படி கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் தான். ஒவ்வொரு சின்ன காரியத்திலும் ஆண்டவரை உங்களுக்கு முன்பாக நிறுத்தி அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி பண்ணுங்கள். அவரிடத்தில் அனைத்து காரியங்களுக்காகவும் விசாரியுங்கள். கர்த்தர் உணர்த்துகிறதை நிறைவேற்ற ஆர்வம் கொள்ளுங்கள். இதுவே கர்த்தருக்குப் பயப்படும் பயம்.

    ‘மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்’ (ஆதி 2:18) என்று நம் அருமை ஆண்டவர் ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாளை உருவாக்கினார்.

    அன்பான சகோதரிகளே! உங்கள் கணவருக்கு ஏற்ற துணை நீங்கள் தான் என அறிந்து கர்த்தரை அதிகமாகத் துதியுங்கள். உங்கள் கணவரை அதிகமாக கனம் பண்ணுங்கள். ஆண்டவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.

    ‘மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்’ (எபே 5:2).

    திருமணத்திற்கு முன்பு நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை வேறு. திருமணத்திற்குப் பிறகு வாழ்கிற வாழ்க்கை வேறு. நீங்கள் திருமணமாகி வந்திருக்கிற வீடு உங்களுடைய வீடு என்கிற இருதயம் எப்போதும் இருக்கவேண்டும்.

    வேதம் சொல்லுகிறது “... உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்” (சங்.45:10,11)

    இதுதான் தேவனுடைய ஆலோசனை. ஒவ்வொரு காரியத்திலும் உங்களுக்கு இவ்வுலகத்தில் ஆசீர்வாதமாய் கொடுத்துள்ள உங்கள் அன்புக்கணவருக்குக் கீழ்ப்படிவதைத் தான் வேதம் முக்கியத்துவப்படுத்துகிறது.

    அதேவேளையில் உங்களை வளர்த்து, இம்மட்டும் நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பதற்கு காரணமாயிருந்த உங்கள் பெற்றோரை விட்டுவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. அவர் களுக்காக ஜெபிக்கவும், சந்திக்கவும் தடையில்லாமல் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். அதே வேளையில் கணவருக்கு எல்லா காரியத்திலும் நீங்கள் கீழ்ப்படிவதுதான் தேவனின் கட்டளை. அப்போது உங்கள் குடும்ப வாழ்க்கை கர்த்தருக்குள் சந்தோஷமாகவும், சமாதானமாகவும் அமைவது நிச்சயம்.



    உங்கள் திருமண வாழ்வு கசப்பாக இருக்கலாம். அல்லது கசந்து போயிருக்கலாம். தயவு செய்து சோர்ந்து போகாதீர்கள். உங்கள் வாழ்வை சாத்தான் திருடிக்கொண்டு போக எள்ளளவும் இடம் கொடாதிருங்கள். நீங்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை என்பதற்காக விவாகரத்தே ஒரே வழி என்ற எண்ணத்திற்கும் இடம் கொடாதிருங்கள்.

    அதற்கு மாறாக, ‘பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்’ (1.பேதுரு 3:1,2).

    இதுவே தேவனுடைய ஆலோசனை. மேலும், இவ்வாறு நீங்கள் நடக்கும்போது ‘அவள் புருஷனின் இருதயம் அவளை நம்பும்’ (நீதி.31:11) என்ற வசனம் உங்கள் வாழ்வில் நிறை வேறும்.

    ஆகவே உங்கள் நடத்தையை கர்த்தருக்குள் கீழ்ப்படுத்துங்கள். செம்மையான குடும்ப வாழ்வு அமைவது நிச்சயம்.

    இன்று அநேக மனைவிமார்கள் தங்கள் சொந்த கணவருக்குத் தெரியாமலேயே பணத்தை சிற்றின்பத்திற்கும், ஆடம்பர செலவுகளுக்கும், தங்கள் சுயவிருப்பத்தை நிறைவேற்றுவதற்கும் செலவழிப்பதினால் கசப்புகளுக்குள்ளும், கண்ணீருக்குள்ளும் தள்ளப்படுகிறார்கள்.

    இவைகள் வளரும்போதுதான் கோபம், எரிச்சல் மற்றும் சந்தேகம் என்னும் ஆவிகள் தலைதூக்கி உங்கள் வாழ்வை தலைகுனியச் செய்கிறது. எனவே உங்கள் வருமானத்துக்குள் செலவு செய்யப் பழகிக்கொள்ளுங்கள். மற்றவர்களைப் போல ஆடம்பரமாக வாழ வேண்டும் என விரும்பி வீணான கடன் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் தேவைகளை ஆண்டவருக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு இன்னது தேவை என்பதை அறிந்த பரம தகப்பன் உங்களை நடத்துவார்.

    ஜெபியுங்கள், ‘ஜெபமே ஜீவன், ஜெபமே ஜெயம்’ என்பது தான் ஆண்டவர் நமக்குக் கொடுத்த மாறாத வாக்குகள். உங்கள் ஆவி ஆத்துமா சரீரத்தை ஒப்புக்கொடுத்து ஜெபம் பண்ணுங்கள்.

    உங்கள் குடும்ப வாழ்வில் சாத்தான் எவ்வளவு பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கொண்டு வந்தாலும் சோர்ந்து போகாதிருங்கள். உடனே தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். மனுஷனை நம்பி அவனிடம் சொல்லாமல் தேவனை நோக்கிப் பாருங்கள்.

    ‘நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப்புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்’ (பிலிப்.4:6,7)

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன்,

    ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
    வாழ்க்கை என்பது கரடு முரடாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இயேசுவின் நம்பிக்கையை நாமும் ஏற்போம். அவர் வழி நடப்போம், தெளிவடைவோம்.
    இந்த உலகில் இயேசு பிரான் போதிக்க தொடங்கியது முதல் மக்களுக்கு நல்லுபதேசங்களையும், நல்ல கருத்துகளையும் எடுத்துரைத்தார். அவ்விதம் போதித்த காலத்தில் அவர் கூறியதாவது:-

    “நல்ல ஆயன் நானே! நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பான். கூலிக்கு மேய்ப்பவன் அவனுக்குச் சொந்தம் இல்லாததால், ‘ஓநாய்’ வருகிறபொழுது, ஆடுகளை விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விடுவான். ஏனென்றால் அவன் உண்மையான ஆயனும் இல்லை. ஆடுகள் அவனுக்குச் சொந்தமும் இல்லை”.

    “நல்ல ஆயன் நானாக இருப்பதால் தந்தை என்னை அறிந்திருக்கிறார். நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல் நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன். இந்தக் கொட்டிலைச் சேராத வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. அவற்றையும் இணைத்து நான் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் என் குரலுக்குச் செவி கொடுக்கும். அப்போது ஒரே மந்தையும், ஒரே ஆயனும் என்ற நிலை ஏற்படும்”.

    “தந்தை என் மீது அன்பு செய்கிறார். ஏனெனில் நான் உயி ரைக் கொடுக்கிறேன். அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடம் இருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதைப் பெற்றுக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இவற்றையெல்லாம் செய்கிறேன்”.

    இவ்வாறு இயேசு பிரான் கூறினார்.

    இந்த உவமை வழியாக நாம் என்ன உணர்ந்து கொள்கிறோம் என்பதைப் பற்றி சிந்திப்போம். இயேசு பிரான் வாழ்ந்த காலத்தில், எளிய உவமைகளைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் பேசினார். மக்களுக்குப் புரிகிற செய்திகளை எடுத்துரைத்தார்.

    “நானே நல்ல ஆயன் என்று கூறுவதில் இருந்து மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். ‘உங்களைக் கைவிடும் கூலிக்காரன் நான் அல்ல’ என்று விளக்கம் தருகிறார்.

    ‘நல்ல ஆயன்’ என்பதற்கு அவர் கூறும் கருத்து, “நல்ல ஆயன், தன் மக்களுக்காக உயிரைக் கொடுப்பவன்” என் கிறார். “கூலிக்கு ஆடுகளை மேய்ப்பவன், ஓநாய் வருகின்றபொழுது, தான் தப்பித்துக் கொள்வதற்காக, ஆடுகளை அங்கேயே விட்டு விட்டு ஓடி விடுவான்” என்கிறார்.

    தன்னை நல்லதோர் ஆயனாகவும், மக்களை ஆடுகளாகவும் சித்தரிக்கிறார். என் தந்தையை நான் அறிவேன். என் தந்தையும் என்னை அறிவார் என்கிறார். இதோடு அவர் நின்று விடவில்லை. “இந்தக் கொட்டிலைச் சேராத ஆடுகளும் இருக்கின்றன. அவற்றையும் சேர்த்து வழி நடத்த வேண்டும்” என்கிறார். மக்களை நல்வழிப்படுத்த அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி அளவிட முடியாதது. கணக்கில் அடங்காதது.



    மக்களுக்காக வாழ வேண்டும் என்ற கருத்தை உடையவர்கள் இந்தப் பகுதியைப் படித்து உணர்தல் வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் பணியில் சிறந்தோங்க வேண்டும். இடையூறு வருகின்றபொழுது தன் உயிரைக் கொடுத்தாவது இடையூறைக் களைந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

    கிறிஸ்துவைப் பின்பற்றும் குருமார்களுக்கும், ஆயர் களுக்கும், மக்களுக்கும் இந்த உவமை, இக்காலத்தில் பெரிதும் தேவைப்படுகிறது. இயேசு பெருமானின் போதனையில் வரும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தவையாக இருக்கின்றன.

    யோவானின் நற்செய்திகளாக இந்த வரிகள் வருகின்றன. நல்ல ஆயனுடைய குரலை, ஆடுகள் கண்டிப்பாய்ச் செவி மடுக்கும். அதைப்போல, நான் நல்ல ஆயன் என்பதால் என் போதனைகளை மக்கள் செவி மடுப்பர் என்கிறார்.

    இயேசுவைப் பின்பற்றுவது என்பது கடினமானது அல்ல. தூய்மையான எண்ணம் இருந்தால்-பிறரை நேசிக்கும் பண்பு இருந்தால்-சுயநலம் இல்லாமல் இருந்தால் பின்பற்றலாம். எளிமையும், உண்மையும் மனித வாழ்க்கையில் இணைந்து செயல்பட வேண்டும்.

    “நானே நல்ல ஆயன்” என்ற வார்த்தை மிகவும் ஆழமானது. இதைத் துணிந்து யாரும் எளிதாகச் சொல்லி விட முடியாது. ஆயர்கள் பலர் இருக்கலாம். ‘நல்ல’ என்ற அடைமொழி என்பது முக்கியமானது. ‘நல்ல ஆயன்’ என்று சொன்னால், ‘பரிசுத்தம்’ என்பது முன்னே வருகிறது என்பதைப் படிப்போர் உணர வேண்டும்.

    ஆடுகளை மேய்க்கக்கூடிய ஒருவரை ஒருகணம் உற்றுக் கவனியுங்கள். ஆடுகளை காலையில் எழுந்ததும் பட்டியில் இருந்து கூட்டமாக ஓட்டிச் செல்வார். ஆடுகளை மட்டுமே அவர் சிந்திப்பார். புல் உள்ள இடங்களைத் தேடிச் செல்வார்; அங்கு அவைகளை மேய விடுவார். தண்ணீர் உள்ள இடங்களை நோக்குவார். ஆடுகள் தாகம் தீர்க்க அங்கே அவற்றை அழைத்துச் செல்வார். அந்த ஆடுகள் நீரை அருந்தியவுடன் மாலை நேரம் வந்து விடும். மீண்டும் ஆடுகளை பட்டியில் கொண்டு போய் அடைப்பார். அத்தனை ஆடுகளும் இருக்கின்றனவா? அல்லது ஏதாவது காணாமல் போய் விட்டதா? என்றெல்லாம் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பார். அத்தனை ஆடுகளும் திரும்ப வந்து விட்டால் மகிழ்ச்சி அடைவார்.

    ஒருவேளை ஓர் ஆடு காணாமல் போய் விட்டால், ஆடுகளைப் பட்டியில் விட்டு விட்டு, காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்வார். அதற்காகத் தன் குரலை எழுப்புவார். ஆயனின் ஒலியைக் கேட்ட ஆடு, தன் குரலை மறுமொழியாகக் கொடுக்கும். பிறகு ஆட்டைக் கண்டுபிடித்து பட்டியில் சேர்ப்பார். மகிழ்ச்சி அடைவார். இதைப்போலத்தான் இயேசுவின் வாழ்க்கையும் இவ்வுலகில் அமைந்திருந்தது.

    இது மட்டுமல்ல, “என் கொட்டிலைச் சேராத ஆடுகளும் உண்டு” என்கிறார். “அவற்றையும் நான் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்” என்கிறார். “என் குரலுக்கு அவை செவி மடுக்கும்” என்கிறார்.

    வாழ்க்கை என்பது கரடு முரடாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இயேசுவின் நம்பிக்கையை நாமும் ஏற்போம். அவர் வழி நடப்போம், தெளிவடைவோம்.

    செம்பை சேவியர்
    “வாழ்வு“ என்பது நாமே நமக்காக பாதுகாத்து கொள்வதற்காக அல்ல. மாறாக, “பிறருக்கும், கடவுளுக்கும்“ வழங்குவதற்காக என்பதை உணர்ந்து செபிப்போம், செயல்படுவோம்.
    இயேசு, தம் போதனைகள், மதிப்பீடுகளுக்கு எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித கொலும்பானூஸ், உலக வாழ்வில் நாட்டம் இல்லாது இருந்தார். ஊருக்கு வெளியே தனிமையில் புனித வாழ்வு வாழ்ந்த ஒரு பெண்ணிடம் சென்று அறிவுரை கேட்டார். அதற்கு அந்த பெண், “நீ காட்டிற்கு சென்று தவம் செய் என்றார்“. ஆனால் புனித கொலும்பானூஸ் காட்டிற்கு சென்று இறைவனின் வழிகளை பின்பற்றி தவம் செய்து வாழ அவரது தாய் மறுத்தார்.

    புனித கொலும்பானூஸ், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அவரது தாய் வீட்டு வாசற்படியின் குறுக்கே படுத்துக்கொண்டார். அதையும் மீறி புனித கொலும்பானூஸ் இறைவனை தேடி தவ வாழ்க்கையை மேற்கொண்டார். அவ்வாறு நடந்த புனித கொலும்பானூஸ் வாழ்ந்த காலம் வேறு. ஆனால் இந்த காலத்தில் இயேசுவின் வழியைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் “நான்“, “எனது“, “எனக்கு“ என்ற வழிமுறைகளை கடந்து செல்ல வேண்டும். “நாம்“, “நமது“, “நமக்கு“ என்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆகவே, இயேசுவின் வழியே நமது வழியாக வேண்டும்.



    இயேசு தாம் வாழ்ந்த சமுதாயத்தில் மக்கள் கடைபிடித்த அர்த்தமற்ற சம்பிரதாயங்களை, சட்டங்களை எதிர்த்தார். அவரது போதனைக்கும், வாழ்வுக்கும் இம்மியளவு கூட இடைவெளி இல்லாது வாழ்ந்தார். அவர் சீடர்களுக்கு, “பணிவிடை பெற அல்ல, பணிபுரியவே வந்தேன்“ என்றும் போதித்தார். இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற லட்சிய போராளியாக செயல்பட்டார். துணிவுடன் தம் புரட்சி போதனைகளை தொடர்ந்தார். சிலுவை சாவை ஏற்றார்.

    “எனக்கு“ என்பது அழியும் போது “நமக்கு“ என்ற புதுவாழ்வு பிறக்கும். “எதைப்பெறுவேன்?“ என்பது நம்மில் இடம் பெறாத போது “எவ்வாறு கொடுக்கலாம்?“ என்ற நல்ல எண்ணம் நம்மில் வளரும். நம்மையே இழக்கும் போது நாம் “உயர்வு“ பெறுகிறோம். “வாழ்வு“ என்பது நாமே நமக்காக பாதுகாத்து கொள்வதற்காக அல்ல. மாறாக, “பிறருக்கும், கடவுளுக்கும்“ வழங்குவதற்காக என்பதை உணர்ந்து செபிப்போம், செயல்படுவோம்.

    அருட்திரு. எஸ்.அமலதாஸ், பங்குத்தந்தை, நல்லமநாயக்கன்பட்டி.
    ×