என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கடல்பகுதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
    இந்தியா, இலங்கை இடையே கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாள் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாள் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முதல் நாள் மாலை 5 மணிக்கு நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடி இருநாட்டு மக்கள் முன்னிலையில் ஏற்றப்படுகிறது.

    தொடர்ந்து மரத்தால் ஆன பெரிய சிலுவையை இரு நாட்டு மக்களும் சுமந்து ஆலயத்தை வலம்வர 11 இடங்களில் சிலுவைப் பாதை திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்டதேரை இலங்கை கடற்படை வீரர்கள் தூக்கியபடி ஆலயத்தை ஒரு முறை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழாவின் 2-வது நாள் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகசம் தலைமையில் இருநாட்டு பங்குதந்தைகளும் இரு நாட்டு மக்களும் பங்கேற்கிறார்கள். 9 மணி வரை நடைபெறும் திருப்பலி முடிந்த பின்பு கொடியிறக்கப்பட்டு திருவிழா முடிவடைகிறது. அதை தொடர்ந்து இருநாட்டு மக்களும் தாங்கள் வந்த படகுகள் மூலமாக தங்கள் பகுதிக்கு புறப்படுகிறார்கள்.
    கடவுள் தனது அளப்பறிய இரக்கத்தினால் திருமுழுக்குப் பெற்ற பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு ஒப்புரவு என்னும் அருள் அடையாளத்தை நிறுவியுள்ளார்.
    தவக்கால சிந்தனை: புதிய தொடக்கம்

    “உன் குற்றங்களை கார்மேகம் போலும், உன் பாவங்களை பனிப்படலம் போலும் அகற்றி விட்டேன். என்னிடம் திரும்பி் வா, நான் உனக்கு மீட்பளித்து விட்டேன்”(எசா:44:22).

    கடவுள் தனது அளப்பறிய இரக்கத்தினால் திருமுழுக்குப் பெற்ற பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு ஒப்புரவு என்னும் அருள் அடையாளத்தை நிறுவியுள்ளார். இவ்வருள் அடையாளம் ஒரு உயிர்ப்பு அனுபவம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் இறந்து போயிருந்தோம். இப்போது உயிர்பெற்றுள்ளோம். மீண்டும் கடவுளை நோக்கி நமது புனிதப்பயணம் தொடர்கிறோம். “அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த் தெழுவோம்”(உரோ:6:5).

    “பாவத்தில் விழும் வருந்தத்தக்க நிலை ஒரு ஆன்மாவுக்கு ஏற்்பட்டால் வெட்கமும் திகிலும் அடைந்து உடனே தன்னையே தூய்மையாக்கிக் கொள்ள முயற்சி செய்யவேண்டும்” என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார். ஆண்டவரிடம் திரும்பிச் செல்ல காலம் தாழ்த்தாமல், நாட்களை தள்ளிப்போடாமல், இறைவனோடு உறவை புதுப்பித்துக்கொள்ள பாவத்தை அறிக்கை செய்து மன்னிப்பு பெறுவோம்.

    ஆண்டவரின் பரிவு எல்லையற்றது. பாவம் என்ற நோயினால் நீண்டநாட்களாக பாதிக்கப்பட்டு அது தொற்றுநோயாக மாறுவதற்கு முன்பே அதன் பாதிப்பிலிருந்து வெளியேற இவ்வருள் அடையாளம் உதவுகிறது. ஒப்புரவு என்னும் அருள் அடையாளம் நாம் கடவுளின் அருளுக்குள் புகவும் கல்வாரியின் கொடையை அதிகப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. இது ஆன்மாவை சுகப்படுத்துவதற்கும், காயங்களை குணப்படுத்துவதற்கும், பாவவாழ்வை கடந்து மீண்டும் இறைவனின் இல்லம் திரும்புவதற்கும் பயன்படும் மருந்தாகும். இது புதிய வாழ்வை தொடங்குவதற்குரிய வாய்ப்பாகும். இது ஒரு இரண்டாம் திருமுழுக்காகும்.

    - அருட்தந்தை. அல்போன்ஸ், பூண்டி.
    பாவத்தில் விழுகையில் மனம் திரும்பி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே இந்த நூல் சொல்லும் அடிப்படைச் செய்தி.
    சாமுவேல் முதல் நூலும், இரண்டாம் நூலும் இணைந்த ஒரே நூலாக இருந்தவை. எபிரேயத்திலிருந்து கிரேக்கத்துக்கு மொழிபெயர்த்த போது அதை வசதிக்காக இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள். சாமுவேல் இரண்டாம் நூல் தாவீது மன்னனைச் சுற்றியே நகர்கிறது.

    சாமுவேல் நூலை எழுதியவர் இறைவாக்கினர் சாமுவேல் என பாரம்பரியம் சொல்கிறது. அவருடன் நாத்தானும், காத்தும் இணைந்து இந்த நூலை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.

    ஆனால் முதல் பாகத்திலேயே சாமுவேல் இறந்து விடுவதால், இந்த பாகத்தை நாத்தான், காத் போன்றவர்கள் எழுதினார்கள், அல்லது அவர்களுடைய எழுத்தை பிற்காலத்தில் தொகுத்தார்கள் என இறையியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    கிமு 971 -க்கும், 1011-க்கும் இடைப்பட்ட நாற்பது ஆண்டுகாலத்தை இந்த நூல் மையப்படுத்துகிறது. அது தான் தாவீது மன்னன் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செலுத்திய காலம்.

    சாமுவேல் முதலாம் நூல் இஸ்ரயேல் மக்களின் முதல் மன்னனான சவுலையும், அவருடைய ஆட்சியையும் பலவீனங்களையும் பேசியது. இறைவனை விட்டு விலகி நடந்த சவுல் மன்னனின் வாழ்க்கை அது.

    சாமுவேல் இரண்டாம் நூல், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்த தாவீது மன்னனையும், அவரது ஆட்சியையும், அவருடைய பலம், பலவீனம் போன்றவற்றைப் பேசுகிறது. தன்னை எதிர்த்த சவுலின் மறைவிற்கும், தன்னை நேசித்த யோனத்தானின் மறைவுக்கும் தாவீது மன்னர் கசிந்துருகுகிறார். அது அவருடைய இளகிய மனதை எடுத்துக்காட்டுகிறது.

    தாவீது மன்னனின் வழிமரபிலிருந்து தான் மீட்பர் தோன்றுவார் எனும் இறைவாக்கு பின்னர் இயேசுவின் மூலம் நிறைவேறியது. ஆபிரகாமுக்கும், இயேசுவுக்கும் இடையேயான மையப்புள்ளியாய் தாவீது மன்னன் இருக்கிறார் என வைத்துக் கொள்ளலாம். நீதி, துணிச்சல், ஞானம், இறையச்சம், மனிதநேயம் போன்றவையெல்லாம் அவரிடம் காணப்பட்ட சில முக்கிய குணாதிசயங்கள்.

    இந்த நூலில் இருபத்து நான்கு அதிகாரங்களும், 695 வசனங்களும், 20,612 வார்த்தைகளும் உள்ளன. இது விவிலியத்தில் உள்ள பத்தாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது. விவிலியத்தில் மொத்தம் பன்னிரண்டு வரலாற்று நூல்கள் உள்ளன அவற்றில் இது ஐந்தாவது நூல்.

    இருபத்து நான்கு அதிகாரங்கள் உடைய இந்த நூலின் முதல் பத்து அதிகாரங்கள் தாவீது மன்னனின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது. அவரது வெற்றிகளையும், அவரை மக்கள் போற்றுவதையும், அவரது நடனத்தையும் சுவை பட விவரிக்கிறது. தனது நண்பன் யோனத்தானின் உடல் ஊனமுற்ற மகனை தன்னோடு அரண்மனையில் வைத்து பராமரிக்கும் அவரது அன்பு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. தனது ஆட்சிக்குட்பட்ட எந்த இடத்திலும் சிலை வழிபாடு நடக்காமல் பார்த்துக் கொண்ட இஸ்ரயேலின் மன்னராக தாவீது விளங்கினார்.

    நூலின் இரண்டாவது பகுதியில் தாவீது மன்னனின் பலவீனம் பதிவு செய்யப்படுகிறது. உரியா என்பவருடைய மனைவியான பத்சேபா மீது பொருந்தாக் காதல் கொள்கிறார் மன்னன். அவளை அடைவதற்காக அவரது கணவனை சூழ்ச்சியால் கொல்கிறார். இதனால் கடவுளின் கோபம் அவர் மேல் விழுகிறது. பத்சேபாவுக்குப் பிறக்கும் அவரது குழந்தை இறந்து விடுகிறது. அது தாவீது மன்னனை கலங்கடிக்கிறது.

    தனது தவறை நாத்தான் இறைவாக்கினர் மூலம் புரிந்து கொள்ளும் மன்னர் உடனடியாக கதறி, இறை வனிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதில் தாவீது மன்னன் தனித்துவம் பெறுகிறார். தவறிழைக்கும் போதெல்லாம் இறைவனே கதியென திரும்பி வருவதில் அவரது இறை நம்பிக்கை வெளிப்படுகிறது.

    அதனால் தான் இறைவன் தாவீதையும், அவரது தலை முறைகளையும் தனது வாக்குறுதியின் படி காக்கிறார்.

    அவரது வாழ்க்கையில் சில நிகழ்வுகள் கசப்பானவையாகவும், நெகிழ்ச்சியானவையாகவும் நடந்து விடுகின்றன. அம்னோன் என்னும் அவரது ஒரு மகன், தனது மாற்றாந்தாய்க்கும் பிறந்த சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார். அவரை, இன்னொரு மகன் அப்சலோம் கொன்று விடுகிறார். பின்னர் அவர் தாவீது மன்னனுக்கு எதிராகவே திரும்பி விடுகிறார்.

    அவரது மகன் அப்சலோமுக்கும், அவருக்கும் இடைேயயான அந்த மனக்கசப்பும். தந்தையைக் கொல்லத் தேடும் மகனின் வெறித்தனமும், மகனை வெறுக்க முடியாத தந்தை தாவீதின் தவிப்பும் இந்த நூலின் ஈரமாக எழுதப்பட்டிருக்கின்றன.

    தாவீது மன்னன் எழுதிய இரண்டு பாடல்களும் இந்த நூலில் சிறப்பிடம் பெறுகின்றன. ஒரு ஏழை ஆடு மேய்ப் பனான தாவீது, இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்டு ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நாற்பது ஆண்டுகள் சிறப்புற வழிநடத்தியது வியப்பின் வரலாறு.

    பாவம் செய்வது இயல்பு. எவ்வளவு பெரிய இறை மனிதராக இருந்தாலும் அவர் பாவத்தில் விழும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. அப்படி பாவத்தில் விழுகையில் மனம் திரும்பி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே இந்த நூல் சொல்லும் அடிப்படைச் செய்தி. அற்புதமான கதைகளுக்காகவும், ஆழமான ஆன்மிக புரிதலுக்காகவும் இந்த நூலை நிச்சயம் படிக்கலாம்.

    சேவியர்
    தேடி வரும் இறைவனோடு இணைய நமது மனித இயல்புகளை களைந்து ஆவிக்குரிய இயல்பை பெற பாவங்களுக்காக மனவருந்துவோம்.
    காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்(மாற்.1:15). இயேசுவின் நற்செய்தி பணியின் தொடக்க முழக்கமே மனமாற்றத்திற்கான அழைப்பாகவே இருக்கிறது. ஏனெனில் இறையாட்சி இவ்வுலகில் மலர வேண்டுமாயின் மனவருத்தமும், பாவமன்னிப்பும் மிகவும் அவசிமாகிறது.

    எனவேதான் கடவுள் வடிவில் விளங்கிய அவர் கடவுளுக்கு  இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாக கருதாமல் மனிதரானார். அவரது வருகை இறையாட்சி வருகையாக இருந்தது. பாவத்தை போக்கும் ஆட்டுக்குட்டி ஆனார்(யோவா (1:29). மனிதருக்காக தமது ரத்தத்தை சிந்தினார். தன்னையே பரிகார பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். (உரோ 5:6-8). சிலுவை சாவில் வழியாக பாவத்தின் மீதும் அதன் விளைவாக ஏற்படும் சாவின் மீதும் வெற்றிக்கண்டார். இறைவனோடு நம்மை ஒப்புவாக்கினார்(உரோ5:10).

    காணாமல் போன ஆட்டை தேடியதை போல காணாமல் போன மகனை ஏக்கத்தோடு தேடியதை போல இறைவன் நம்மை தேடி வருகின்றார். தேடி வரும் இறைவனோடு இணைய நமது மனித இயல்புகளை களைந்து ஆவிக்குரிய இயல்பை பெற பாவங்களுக்காக மனவருந்துவோம். எழுந்து என் தந்தையிடம் போவேன் என கூறிச்சென்ற ஊதாரி மகனைப்போல தந்தை இறைவனிடம் திரும்புவோம். கடவுளே உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும், உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களை துடைத்தருளும் (திபா.51:1) மன்றாடுவோம்.

    அருட்தந்தை. அல்போன்ஸ், பூண்டி.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் தூய வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி காலையில் திருப்பலி, சிலுவை பாதை, தொடர்ந்து மறைசாட்சி நவநாள் சிறப்பு திருப்பலி ஆகியவை நடைபெற்றது. மாலையில் கொடி நேர்ச்சை, தொடர்ந்து மேள, தாளம், பட்டாசு வெடிக்க கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

    கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் ஹிலாரியுஸ் தலைமையிலும், பிஷப் ரெமிஜியுஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஸ்டான்லி சகாய சீலன், தேவசகாயம் மவுண்ட் பங்குதந்தையர் ஸ்டீபன், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை துணை தலைவர் பயஸ்ராய், திரு தொண்டர் சகாயசுனில், பங்கு பேரவை செயலாளர் தேவசகாயம், பொருளாளர் ஞானசேகர், துணை செயலாளர் மேரி கலையரசி, வட்டார பங்கு பேரவை துணை தலைவர் ஜேக்கப் மனோகரன் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்பலி நடந்தது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தையர், திருத்தொண்டர், பங்கு அருட்பணி பேரவையினர், அருட் சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    ஆண்டவர் இயேசு காட்டிய வழியில் நோன்பும் அறச்செயல்களும் செய்தால், விண்ணுலகில் செல்வம் சேர்க்க உதவும் காலமாக இந்த தவக்காலம் அமையும்.
    கடவுளோடும் சக மனிதர்களோடும் நல்லுறவை ஏற்படுத்த கிறிஸ்தவர்கள் பயிற்சி செய்யும் காலமாக தவக்காலம் அமைந்துள்ளது. மனம் மற்றும் உடலின் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, பிறருக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி காணுகின்ற பிறர் அன்பின் காலமாக இது கடைப் பிடிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கடந்த புதன்கிழமை தவக்காலத்தை தொடங்கி உள்ளனர்.

    ஒருமுறை திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம் சென்று, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?, மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.

    ஆகவே, இயேசு கிறிஸ்துவின் விருப்பத்தின் அடிப்படையிலேயே, நோன்புக் காலமாகிய தவக்காலத்தை தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் உருவாக்கினர். கி.பி. 2-ம் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவுக்குத் தயாரிப்பாக 2 நாட்கள் நோன்பிருக்கும் வழக்கம் கிறிஸ்தவர்கள் மத்தியில் தோன்றியது. புனித வெள்ளி, புனித சனி ஆகிய நாட்களில் உணவும், தண்ணீரும் இன்றி 40 மணி நேரம் அவர்கள் தொடர்ந்து நோன்பு கடைப்பிடித்தனர்.

    3-ம் நூற்றாண்டில், புனித வாரம் முழுவதும் ஒருவேளை உணவுடன் நோன்பிருக்கும் நடைமுறை உருவானது. 4-ம் நூற்றாண்டில், உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்பு 40 நாட்களை தவக்காலமாக கடைப்பிடிக்க வேண்டுமென திருச்சபை அறிவித்தது. இயேசு கிறிஸ்து தமது பணிவாழ்வைத் தொடங்கும் முன்பு 40 நாட்கள் நோன்பிருந்ததைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.

    பழைய ஏற்பாட்டில் மோசே, எலியா ஆகியோரும் 40 நாட்கள் நோன்பிருந்ததாக விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம்.

    சாம்பல் புதன் முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இக்காலத்தில், உடல் மற்றும் உள்ளத்தின் விருப்பங்களையும், உணவுகளையும் கட்டுப்படுத்தி, பிறருக்கு உதவி செய்யும் செயல்களில் கிறிஸ்தவர்கள் ஈடுபடுகின்றனர். சாம்பல் புதன் மற்றும் புனித வெள்ளி ஆகிய நாட்களில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்கின்றனர்.

    தவக்காலத்தில் பொதுவாக அசைவ உணவுகளைத் தவிர்க்கும் வழக்கம் அனைத்து கிறிஸ்தவர்களிடமும் உள்ளது. ஏழைகளுக்கு உதவுதல், தர்மம் செய்தல் போன்ற செயல்கள் வழியாக தேவையில் இருக்கும் சக மனிதர்களுடனான உறவும், வழிபாடுகளில் அதிகமாக பங்கேற்றல், இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானித்து செபித்தல் ஆகியவற்றின் மூலம் கடவுளுடனான ஆன்மிக உறவும் ஆழப்படுத்தப்பட தவக்காலம் உதவுகிறது.

    “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது” (மத்தேயு 6:1) என்று இயேசு குறிப்பிடுகிறார். ஆகவே, கிறிஸ்தவர்கள் பொதுவாக தங்கள் அறச் செயல்களை மறைவாகவே செய்ய விரும்புகின்றனர்.

    “நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். மக்கள் புகழ வேண்டுமென்று, நீங்கள் உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 6:2-4) என்ற அழகிய வழிமுறையை இயேசு கற்பிக்கிறார்.

    “நீங்கள் நோன்பு இருக்கும்போது, மக்கள் பார்க்கவேண்டுமென்று வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது. மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் விண்ணகத் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 6:16-18) என்பதே இயேசுவின் போதனை.

    “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும், திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள், அங்கே பூச்சியோ, துருவோ அழிப்பதில்லை, திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (மத்தேயு 6:19-21) என்று இயேசு கூறுகிறார்.

    ஆகவே, உடல், உள்ள ஆசைகளை அடக்குவதும், தேவையில் இருப்போருக்கு உதவுவதும் கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆன்மிகப் பயிற்சியாகவே இருக்கிறது. மண்ணுலக செல்வங்கள் மீதானப் பற்றை விடுத்து, விண்ணுலக செல்வங்கள் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளத் தூண்டுவதாக தவக்காலம் அமைந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை தியானிப்பது, நமது மீட்பின் மேன்மையை உணர வழிவகுக்கிறது.

    விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மக்கள் பலரும் தங்கள் பாவங்களுக்காக சாக்கு உடை அணிந்து நோன்பிருந்து மன்றாடியதால் கடவுளின் மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற்றதாகக் காண்கிறோம். தொடக்கத் திருச்சபையிலும், பெரிய பாவங்களைச் செய்தவர்கள் சாக்கு உடையுடன் சாம்பல் பூசி நோன்பிருக்கும் வழக்கம் இருந்தது.

    கி.பி.10-ம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்த இவ்வழக்கத்தின் எச்சமாகவே, சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் தவக்கால நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் 11-ம் நூற்றாண்டில் உருவானது. மனமாற்றத்தின் அடையாளமாக விவிலியப் பின்னணியில் தோன்றிய அந்த வழக்கம் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதனன்று இன்றளவும் தொடர்கிறது.

    கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரையும் திருப்பணியாளர், “மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்” என்று கூறுகின்றார். உலகு சார்ந்த நெருக்கடிகளால் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு மாறாக வாழ்ந்த தருணங்களுக்காக மனம் வருந்தி, கடவுளை மையப்படுத்திய புதுவாழ்வைத் தொடங்க விடுக்கப்படும் அழைப்பாக இது உள்ளது. ஆண்டவர் இயேசு காட்டிய வழியில் நோன்பும் அறச்செயல்களும் செய்தால், விண்ணுலகில் செல்வம் சேர்க்க உதவும் காலமாக இந்த தவக்காலம் அமையும்.

    -டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
    பூலோகம் போற்றும் பூண்டிமாதா என்று போற்றப்படும் இ்ந்த பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமான சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பூண்டியில் மாதா பேராலயம் அமைந்துள்ளது. பூலோகம் போற்றும் பூண்டிமாதா என்று போற்றப்படும் இ்ந்த பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமான சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    சென்ற ஆண்டு குருத்தோலை ஞாயிறில் எடுத்து சென்ற குருத்தோலைகளை எரித்து அதில் இருந்து எடுத்த சாம்பலை புனிதம் செய்து நெற்றியில் பூசும் நிகழ்வே சாம்பல் புதன் ஆகும். இதையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜேம்ஸ், ஜேயன், அருட்தந்தையர்கள் உள்பட திரளான பேர் கலந்து கொண்டனர். அதேபோல கோட்டரப்பட்டி, பூதலூர், மைக்கேல்பட்டி, மணத்திடல், முத்தாண்டிபட்டி பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 
    கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு நடந்தது.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை என்ற இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக அனுசரிப்பது வழக்கம்.

    தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து, ஏழை- எளியவர்களுக்கு தான தர்மம் உள்ளிட்ட உதவிகளை செய்வார்கள். மேலும் இயேசுகிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக தவக்காலம் கடைபிடிக்கப்படும். கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் வகையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் காலை மற்றும் மாலையில் சாம்பல் புதன் வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதேபோல் நாகர்கோவில் கோட்டார் மறைமாவட்ட தலைமைப் ஆலயமான கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நேற்று காலை சாம்பல் புதன் வழிபாடு மற்றும் திருப்பலி நடந்தது.

    கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், மறைமாவட்ட பொருளாளர் அலாய்சியஸ் பென்சிகர், ஆயர் செயலாளர் திவ்யன், கோட்டார் மறைவட்ட முதன்மை பணியாளர் மைக்கேல் ஏஞ்சலுஸ், கோட்டார் பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை ஆண்டன் பிரபு ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர்.

    கடந்த ஆண்டு தவக்கால குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட குருத்தோலைகளை சேகரித்து, அவற்றை எரித்து சாம்பல் தயாரித்து, அந்த சாம்பலால், சாம்பல் புதன் தினத்தில் ஆலயத்துக்கு வரும் கிறிஸ்தவர்களின் நெற்றியில் அருட்பணியாளர்கள் சிலுவை அடையாளமிடுவதுதான் இந்த தினத்தின் சிறப்பம்சமாகும். இதனால்தான் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது.

    அதேபோல் நேற்றும் சாம்பல் புதன் தினம் கடைபிடிக்கப்பட்டது. கோட்டார் பேராலயத்துக்கு வந்த கிறிஸ்தவர்கள் நெற்றியில் ஆயர் நசரேன் சூசை மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டார்கள். அதைத்தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பலியின் முடிவில், பிளஸ்-1 தேர்வு நேற்று தொடங்கியதையொட்டி தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளும் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்குதந்தை நெல்சன் பால்ராஜ், ஊதா நிற ஆடை அணிந்து திருப்பலியில் கலந்துகொண்டவர்களின் நெற்றியில் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமிட்டார்.

    இதேபோல் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்குதந்தை விக்டர், திருப்பலியில் கலந்துகொண்டவர்களின் நெற்றியல் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமிட்டார்.

    இதில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
    இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவிற்கு 40 நாட்களுக்கு முன்னதாக தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது.
    இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவிற்கு 40 நாட்களுக்கு முன்னதாக தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கடந்த ஆண்டில் குருத்தோலை ஞாயிறு அன்று ஆலயங்களில் வழங்கப்பட்ட குருத்தோலைகளை தங்களது இல்லங்களுக்கு கொண்டு சென்று சிலுவையாக உருமாற்றம் செய்யப்பட்டதை மீண்டும் ஆலயத்திற்கு கொண்டு வந்து எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டின் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி தஞ்சை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு பங்குத்தந்தை இருதயராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக கிறிஸ்தவர்கள் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குருத்தோலையை வீட்டில் இருந்து எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை எரித்து நெற்றியில் பூசிக்கொண்டனர்.

    இதேபோல் சாம்பல் புதனையொட்டி தஞ்சையில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் தேவாலயங்களில் சிலுவை பாதை வழிபாடு நடக்கும். அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியும், 21-ந்தேதி இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் தூய வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆலயம் என இரட்டை திருத்தலம் உள்ளது. இதில் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    8-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, சிலுவை பாதை, காலை 11 மணிக்கு மறைசாட்சி நவநாள் சிறப்பு திருப்பலி, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார்.

    தினமும் காலையும், மாலையும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை ஆகியவை நடைபெறுகிறது. 10-ந்தேதி காலை முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு குருக்கள் நல வாரிய இயக்குனர் அல்போன்ஸ் தலைமை தாங்க, மறை மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். 14-ந்தேதி காலை 11 மணிக்கு மலைவலம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருப்பலிகள் நடைபெறுகிறது. அருட்பணியாளர்கள் அருள்ராஜ், ராஜ், பெஸ்கி, கென்சன், மில்டன், மேக்ஸ்மியன் ஆகியோர் நிறைவேற்றுகிறார்கள்.

    15-ந்தேதி காலை 6.45 மணிக்கு சிலுவை பாதை நடக்கிறது. 11 மணிக்கு மறைசாட்சி நவநாள் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோவளம் பங்குத்தந்தை பிரபுதாஸ் தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார்.

    மாலை திருப்பலிக்கு மறைமாவட்ட நிதி காப்பாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்க, பங்குபணியாளர் சஜு மறையுரையாற்றுகிறார். இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனி, அதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடக்கிறது.

    16-ந்தேதி இரவு 7.15 மணிக்கு மாலை ஆராதனைக்கு மறைமாவட்ட முதன்மை செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜான்சன் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.

    17-ந்தேதி காலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். அதன்பிறகு நடைபெறும் திருப்பலிகளை அருட்பணியாளர்கள் சுனில்குமார், ஜேசுதாசன், அன்றனி, செல்வராஜ், சைமன், மைக்கிள்ராஜ், சகாய ஆனந்த் ஆகியோர் நிறைவேற்றுகிறார்கள். மாலை 3.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு தேவா கலை குழுவின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாற்று நாடகம் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாட்டை பங்கு தந்தைகள் ஸ்டீபன், ஞானசேகரன், திருத்தொண்டர் சகாய சுனில், பங்குப்பேரவை துணைத்தலைவர் பயஸ்ராய், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    மிக அற்புதமான கட்டமைக்கும், எளிமையான நடையும், இலக்கியச் சுவையும், ஆன்மிக ஆழமும் கொண்டதாக இந்த நூல் அமைந்துள்ளது.
    தொடக்கத்தில் ஒரே நூலாக எபிரேய மொழியில் இருந்த நூல் ‘சாமுவேல்’. பின்னர் கிரேக்க மொழியில் இதை மொழிபெயர்த்த போது சுருள்களின் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டு பிரிவுகளாக அதைப் பிரித்தனர். முதல் மன்னனின் மரணம் வரை ஒரு நூலாகவும், தாவீது மன்னனின் வரலாறு இரண்டாம் நூலாகவும் அமைந்து விட்டது. தொடக்கத்தில் ‘முதல் அரசாங்கம்’ என அழைக்கப்பட்ட நூல் பின்னர் ‘சாமுவேல்’ என பெயர் மாற்றம் பெற்றது.

    விவிலிய நூல்களின் வரலாற்றில் இந்த நூலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. இதற்கு முன்பு வரை நீதித்தலைவர்களால் ஆளப்பட்டு வந்த இஸ்ரயேல் மக்கள், தங்களுக்கென ஒரு அரசனை உருவாக்கும் காலம் இது. அந்த முதல் அரசனை பதவியேற்க வைப்பவராக இறைவாக்கினர் சாமுவேல் இருக்கிறார்.

    இந்த நூலைச் சுருக்கமாகப் பார்த்தால், குரு ஏலியிடமிருந்து சாமுவேலுக்கு வருகின்ற நீதித்தலைவர் பணி, சாமுவேலிடமிருந்து சவுலுக்குச் செல்கின்ற அரசர் பதவி, சவுலிடமிருந்து தாவீதுக்குச் செல்கின்ற அரசர் பதவி என பிரிக்கலாம். இவரே இஸ்ரயேலின் கடைசி நீதித்தலைவர், முதல் இறைவாக்கினர்.

    நீதித்தலைவர்களே போதும், இறைவனே தலைவராய் இருக்கிறார் எதற்கு உங்களுக்கு ஒரு அரசர்? அரசர் வந்தால் என்னென்ன பிரச்சினை வரும் தெரியுமா? என்றெல்லாம் சாமுவேல் மக்களை எச்சரிக்கிறார். ஆனாலும் மக்கள் கேட்கவில்லை.

    எனவே இஸ்ரயேலின் முதல் அரசராக சவுல் என்பவரை சாமுவேல் திருப்பொழிவு செய்கிறார். இஸ்ரயேலின் முதல் இரண்டு அரசர்களான சவுல், தாவீது இவர்களை திருப்பொழிவு செய்த பெருமை இவருக்குரியது. இவரது காலம் கி.மு. 1105 முதல் 1015 வரை.

    நீதித்தலைவர்களின் வரிசையில் கடைசியாக வரும் சாமுவேல், அரசுரிமையில் முதலாவதாக வரும் சவுல் இருவரையும் இணைக்கும் புள்ளியாக இந்த முதலாம் சாமுவேல் நூல் இருக்கிறது. இந்த நூலில் 31 அதிகாரங்களும், 810 வசனங்களும், 25,601 வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்த நூலை எழுதியவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. யூத மரபுப்படி இதன் மூலம் சாமுவேல் இறைவாக்கினரால் எழுதப்பட்டது. அதில் காத், நாத்தான் ஆகிய இறைவாக்கினர்கள் பின்னர் தகவல்களை இணைத்தனர்.

    ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பதில் குழப்பம் நீடிக்கிறது. எது எப்படியெனினும், அந்த ஆசிரியர் சாமுவேல், சவுல், தாவீது எனும் நபர்களைப் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் படித்திருக்கிறார் என்பது மட்டும் சர்வ நிச்சயம். அரசவையில் உள்ள குறிப்புகளைக் கூட படிக்கக் கூடிய வாய்ப்பு பெற்ற ஒருவரே இந்த நூலை எழுதியிருக்க வேண்டும்.

    தனக்கு ஒரு குழந்தை வேண்டுமே என மனம் கசிந்து அழுகின்ற ஒரு தாயின் நிகழ்விலிருந்து இந்த நூல் தொடங்குகிறது. அப்படி ஒரு குழந்தை பிறந்தால் அதை ஆண்டவரின் ஆலயத்துக்கே அர்ப்பணிப்பேன் என்கிறாள் அன்னை. குழந்தை பிறக்கிறது, சாமுவேல் என பெயரிடப்படுகிறான்.

    சின்ன வயதிலேயே அவனை இறைவன் நேரடியாக அழைக்கிறார். அவனை இறைவாக்கினராக உருமாற்றுகிறார். மக்களுக்கான நீதித்தலைவராக உயர்கிறார் என கதை பயணிக்கிறது. சற்றும் பிழையற்ற, கறையற்ற இறைவனின் நேரடித் தொடர்பில் இருந்த இறைவாக்கினராக சாமுவேல் வாழ்கிறார்.

    மக்கள் இறைவனை விட்டு விலகிச் செல்லும் போதெல்லாம் அவர்களை எச்சரித்து மீண்டும் இறைவனின் அருகில் கொண்டு வர அவர் முயல்கிறார்.

    மோசேயைப் போல மதிக்கத்தக்க தலைவராக சாமுவேல் இருக்கிறார். மோசேயைப் போல யுத்தம் எதுவும் செய்யவில்லை, ஆனால் மக்களை வழிநடத்துவதிலும், நெறிப்படுத்துவதிலும் அவர் மும்முரமாய் இருந்தார்.

    சவுல் முதல் மன்னராகிறார். அழகும், கம்பீரமும் நிறைந்த அவர் பலவீனங்களாலும் நிரம்பியிருந்தார். பிடிவாதக்குணம் கொண்டவராய் இருந்தார், துணிச்சல் குறைந்தவராகவும் இருந்தார். பின்னாட்களில் அவர் பொறாமையும் சுயநலமும் கொண்டவராக மாறிப்போகிறார். பிறருடைய நல்ல விஷயங்களைப் பார்ப்பதை விட அவர்களுடைய குறைகள் அவருக்குப் பெரிதாகத் தெரியத் தொடங்குகின்றன.

    மன்னரும், மக்களும் இறைவனையே சார்ந்திருக்க வேண்டுமென சாமுவேல் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

    தாவீதின் கதையில் குறைந்தபட்சம் கோலியாத்துடன் சண்டை போடும் கதையாவது அனைவரும் அறிந்ததே. இந்த நூல் அந்த நிகழ்வையும், யோனத்தான் தாவீது இருவருக்கும் இடையே இருந்த அற்புதமான நட்பையும் அழகாய் படம் பிடிக்கிறது. சவுலின் மகளை தாவீது மணக்கும் நிகழ்வும், பின்னர் தாவீதின் மேல் சவுல் கொள்ளும் பொறாமையும் வெறுப்பும் கொலை துரத்தல்களும் என பரபரப்பாக பயணிக்கிறது நூல்.

    தாவீதைக் கொல்ல சவுல் துரத்துகிறார், தாவீதோ சவுலைக் கொல்ல கிடைக்கும் வாய்ப்புகளையும் விட்டு விடுகிறார். கடவுள் திருப்பொழிவு செய்தவரைக் கொல்ல மாட்டேன் என்கிறார். தாவீதின் குணாதிசயம் இதன் மூலம் வெளிப்படுகிறது.

    மிக அற்புதமான கட்டமைக்கும், எளிமையான நடையும், இலக்கியச் சுவையும், ஆன்மிக ஆழமும் கொண்டதாக இந்த நூல் அமைந்துள்ளது. 
    லூர்து அன்னையுடைய வேண்டுதலினாலே நாங்கள் பாவ வழியை விட்டுப் புண்ணிய நெறியை பற்றிக்கொள்ளவும், இறைவனின் திரு உளப்படி நல்ல மரணத்தை அடையவும், எங்கள் ஆண்டவராகியஇயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
    முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
    எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
    முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
    எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
    முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
    எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
    முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
    எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.

    முத: விண்ணகத் தந்தையாகிய இறைவா…
    எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
    முத: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…
    எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
    முத: தூய ஆவியாகிய இறைவா…
    எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
    முத: மூவொரு கடவுளாகிய இறைவா…
    எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

    (கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று சொல்லவும்)

    முத: உலகின் மீட்பரை எங்களுக்கு அளித்த தூய அமலோற்பவ அன்னையே…
    முத: இறை இரக்கத்தை அதிசயிக்கும் விதத்தில் பெற்ற தூய அமலோற்பவ அன்னையே…
    முத: லூர்து மலைக் கெபியில் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த இடத்தில் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: விண்ணகத்தின் மாட்சியைக் காட்டப் பூங்கதிர்களை அணிந்த திருமேனியுடன் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: ஞான சௌந்தரியத்துக்கு மிஞ்சின சௌந்தர்யம் இல்லையென்று காண்பிக்க, அழகின் அவதாரம் போல தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: ஆன்ம சுத்தத்திற்கு மேலான சுத்தம் இல்லையென்று காண்பிக்க, அந்த வெண்ணாடையை உடுத்தியவளாய்த் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: கற்பென்பது வானோர்க்கு அடுத்த புண்ணியம் என்று காண்பிக்க மேகமற்ற வானம் போன்ற நீலக்கச்சையைக் கட்டிக் கொண்டவளாய்த்  தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: கற்புக்குக் காவல் அடக்க ஒடுக்கம் என்று காண்பிக்க, நெடுமுக்காட்டைப் போர்த்திக் கொண்டவளாய்த் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: நாங்கள் நாடவேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அண்ணார்ந்தவளாய்த் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: ஐம்பத்து மூன்று மணி செபத்தை அடிக்கடிச் சொல்லுதல் உத்தம பக்திக் கிருத்தியம் என்று காண்பிக்க ஜெபமாலையை திருக்கரத்தில் ஏந்தியவளாய்த் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரை எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள் ரோஜாச் செடியை காலாலே மிதித்தவளாகத் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: தாழ்ச்சியும் தரித்திரமும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் மிகுந்த பட்சமாயிருக்கிறார் என்று காண்பிக்க ஒரு ஏழையான சிறு பெண்ணுக்கு தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
    முத: தேவரீரை நேசித்து நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க , அந்த சிறு பெண் மூலமாக ஒரு நீரூற்றை பிறப்பித்தருளிய தூய அமலோற்பவ அன்னையே…
    முத: தேவரீருடைய வல்லமையும் , கிருபையும் அளவிட்டுச் சொல்ல முடியாது என்று காண்பிக்க அந்த நீரூற்றைத் தாராளமாய்ச் சுரந்து வழிந்தோடவும் கணக்கற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தை அளிக்கவும் செய்தருளிய தூய அமலோற்பவ அன்னையே…

    முத: பாவிகளை நல்ல வழியில் திருப்புகின்ற தூய லூர்து அன்னையே…
    முத: நீதிமான்களை திடப்படுத்துகின்ற தூய லூர்து அன்னையே…
    முத: இறந்தவருக்கு உயிரைக் கொடுக்கின்ற தூய லூர்து அன்னையே…
    முத: குருடர்களுக்குப் பார்வை அளிக்கின்ற தூய லூர்து அன்னையே…
    முத: செவிடருக்குக் கேட்கும் திறனைத் தருகின்ற தூய லூர்து அன்னையே…
    முத: முடவர்களை நடக்கச் செய்கின்ற தூய லூர்து அன்னையே…
    முத: நோயாளிகளைக் குணப்படுத்துகின்ற தூய லூர்து அன்னையே…
    முத: துன்பப்படுபவர்களைத் தேற்றுகின்ற தூய லூர்து அன்னையே…
    முத: எல்லா அவசரங்களிலும் உதவியாயிருக்கின்ற தூய லூர்து அன்னையே…
    முத: மேலும் மேலும் மன்றாடப்படுகின்ற தூய லூர்து அன்னையே…
    முத: லூர்து என்னும் திருத்தலத்திற்கு கணக்கற்ற மக்களை வரச்செய்கின்ற தூய லூர்து அன்னையே…
    முத: எங்கள் தாயாகிய திரு அவைக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
    முத: எங்கள் திருத்தந்தைக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
    முத: பல தண்டனைகளுக்குப் பாத்திரமாயிருக்கிற எங்களுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
    முத: எங்கள் பிள்ளைகள், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
    முத: எங்கள் எதிரிகளுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
    முத: பாவிகள், அவிசுவாசிகள், மனநோயாளிகள் அனைவருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
    முத: உத்தரிக்கும் தலத்து ஆன்மாக்கள், இறந்தோர் அனைவருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…

    முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
    மக்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.
    முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
    மக்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
    முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
    மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

    முத: செபிப்போமாக! எல்லாம் வல்ல இறைவா! முழு மனதோடு தொண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் கன்னியாயிருக்கிற அமலோற்பவ லூர்து அன்னையுடைய வேண்டுதலினாலே நாங்கள் பாவ வழியை விட்டுப் புண்ணிய நெறியை பற்றிக்கொள்ளவும், இறைவனின் திரு உளப்படி நல்ல மரணத்தை அடையவும், எங்கள் ஆண்டவராகியஇயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
    மக்: ஆமென்
    ×