என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    மன்னிப்பு எனும் இதமான காற்று அதை வெகு எளிதாக அழித்துவிட்டுப் போய்விடும். யாராவது நமக்கு நன்மை செய்தால் அதை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி கல்லில் எழுத வேண்டும்.
    “கேடு வருவிக்கும் நண்பர்களும் உண்டு; உடன் பிறந்தாரை விட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு (நீதி:18:24)”.

    இரு நண்பர்கள், பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் விவாதம் ஒன்று முளைத்தது. பின்னர் அது சண்டையாக மாறிவிட்டது. கோபம் தாளாத ஒரு நண்பன், மற்றொருவனின் கன்னத்தில் அறைந்து விட்டான். அறை வாங்கியவனோ சற்றும் கோபிக்காமல், மிக அமைதியாக ஒதுங்கிப்போய் மணலில் அமர்ந்ததோடு, தன் விரல்களால், “எனதருமை நண்பன், என் உயிரினும் மேலானவன், இன்று என் கன்னத்தில் அறைந்து விட்டான்” என்று மணலில் எழுதினான். அடி கொடுத்த நண்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் அமைதியாக நடை பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.

    அப்போது ஒரு பாலைவன ஊற்றில் 2 பேரும் குளித்து கொண்டு இருந்தனர். கன்னத்தில் அறை வாங்கிய நண்பனின் காலை யாரோ பிடித்து இழுப்பது போன்ற உணர்வில் தடுமாறியவன், அடுத்த நொடி அது புதைகுழி என்பதை அறிந்து, தான் சிக்கிக் கொண்டதை நினைத்து அலற ஆரம்பித்தான். அடுத்த நொடி அறை விட்ட அந்த நண்பன் பெரும் முயற்சி எடுத்து அவனை காப்பாற்றி கரை சேர்த்தான்.

    “நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கண்ணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான் (நீதி:17:17)”.

    உயிர் பிழைத்த நண்பன் ஆபத்திலிருந்து மீண்டு வந்த உடன், இன்று எனது ஆரூயிர் நண்பன் என் உயிரை காப்பாற்றினான் என கல்லில் எழுதினான். இதை பார்த்து கொண்டிருந்தவனோ, நான் உன்னை கன்னத்தில் அறைந்தபோது அதை மணலில் தானே எழுதினாய். இப்போது காப்பாற்றியபோது அதை கல்லில் எழுதுகிறாயே? என்றான்.

    அதற்கு அன்பான அந்த நண்பனின் இனிமையான பதில், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிட வேண்டும். மன்னிப்பு எனும் இதமான காற்று அதை வெகு எளிதாக அழித்துவிட்டுப் போய்விடும். யாராவது நமக்கு நன்மை செய்தால் அதை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி கல்லில் எழுத வேண்டும். வாழ்க்கை என்பது எளிதான பயணம் தான். மனிதர்கள் தான் அதனை பல நேரங்களில் சிக்கலாக்கி விடுகின்றார்கள்.

    - கிளமென்ட்சியா, அம்மாப்பேட்டை.
    லேவி:19:16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக: பிறனுடைய ரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம் நான் கர்த்தர்
    ஒரு பெரிய கிராமம் முழுவதும் ஒரு பெரும் பணக்காரருக்கு சொந்தம். அவருக்கு 2 மகன்கள். இவர் இறக்கும் முன் தனது சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுத்தார். அவருடைய மகன்கள் பல வருடங்கள் ஒற்றுமையாக இருந்தனர். அவர்களின் வீடுகள் மிக அருகில் இருந்தது. ஒரு நாள் ஏற்பட்ட சின்ன வாக்குவாதம் பெரிய கலகத்தில் முடிந்தது. கிராமம் இரண்டாக பிரிந்தது. விவசாயம், தொழில், உற்பத்தி உறவுகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன.

    பகை தீ பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்தது. ஒரு அதிகாலையில் மூத்தவரின் வாசலில் ஒரு தொழிலாளி வந்து நின்றார். ஐயா மிகவும் வருமையால் வாடுகிறேன். ஏதாவது வேலை தாருங்கள் என கேட்டார். உனக்கு மர இரும்பு வேலி அமைக்கத் தெரிந்தால் சொல். எனது சகோதரனின் முகத்தை நான் பார்க்க விரும்பவில்லை. எனவே அவன் வீட்டுக்கும் எனது வீட்டுக்கும் இடையே மர இரும்பு வேலி அமைத்து விடு என கூறினார். தொழிலாளி ஒத்துக்கொண்டார். மர இரும்பு வேலி அமைக்க தூண்கள், மரம், இரும்பு கம்பிகள், ஆணிகள் ஆகியவற்றை தொழிலாளி கேட்டார்.

    மறு நாள் வண்டியில் அனைத்து பொருட்களும் வந்து இறங்கியது. அண்ணன் தான் என்ன செய்ய போகிறேன் என்பதை தம்பி நாளைக்கு பார்த்து புரிந்துகொள்வான் என கர்வம் கொள்கிறான். தம்பி தன் அண்ணன் என்ன செய்யபோகிறான் என யோசித்து அவன் என்ன செய்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பேன் என கர்வம் கொள்கிறான்.

    தொழிலாளி நடு இரவில் வேலையை செய்து முடித்துவிட்டு போய் படுத்துக்கொண்டார். காலையில் அண்ணன் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அங்கே வேலிக்கு பதிலாக இரு வீட்டையும் இணைக்கும் ஓர் உறுதியான பாலம் கட்டப்பட்டிருந்தது. இவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாலத்தை தம்பி வந்து எட்டிப்பார்க்கிறான். பார்த்தவுடன் அண்ணன் என்மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான் என நினைத்து பாலத்தின் மறு பக்கம் ஏறி நின்று கண்கலங்கினான்.

    அவன் கண்ணீரை கண்ட அண்ணன் பாலத்தின் இப்பக்கம் ஏறி நடந்தான். தம்பியும் கை நீட்டிய வண்ணம் அண்ணனை நோக்கி வந்தான். இருவரும் பாலத்தின் மையத்தில் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு நின்றார்கள். அந்த தொழிலாளியை அண்ணன் நன்றியோடு தேடுகிறான்....

    அந்த தொழிலாளியோ வேலை களைப்பால் இவர்களுக்கு நேர் கீழே பாலத்தின் அடியில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தார்.

    லேவி:19:16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக: பிறனுடைய ரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம் நான் கர்த்தர்

    நீதி மொழிகள் : 16:28 மாறுபாள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான். கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.

    நீதி மொழிகள்: 26:20 விறகில்லாமல் நெருப்பு அவியும், கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்

    ஜேக்கப் மனோகரன் -கும்பகோணம்.
    கடவுளுக்கு பணிந்து அவரது கட்டளைகளின்படி நடந்தால் கிடைக்கின்ற வாழ்க்கையும், அவரது குரலுக்குச் செவிகொடுக்க மறுத்தால் கிடைக்கின்ற அழிவையும் இந்த நூல் விளக்குகிறது.
    அரசர்கள் நூலின் இரண்டாம் பாகம் இது. தொடக்கத்தில் ஒரே நூலாக ‘அரசாங்கம்’ என இருந்த நூல் கிரேக்க மொழிபெயர்ப்புக்குப் பின் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது.

    இதை எழுதியவர் எரேமியா என்பது மரபுச்செய்தி. எசேக்கியேல் அல்லது எஸ்ராவின் பங்களிப்பும் இருந்திருக்க வேண்டும் என்பது இறையியலார்களின் கருத்து.

    கி.மு 850-600 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த இந்த நூலின் நிகழ்வுகள், சுமார் கி.மு 560-538-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டது. மிக முக்கியமான பல்வேறு நபர்கள் இந்த அரசர்கள் நூலில் இடம்பெற்றுள்ளனர். எலியா, எலீசா, சூனேமியாள், நாமான், ஈசபேல், ஜோவாஸ், எசேக்கியா, ஏசாயா, மனாசே உட்பட பல்வேறு பிரபலங்கள் இந்த இரண்டாம் நூலில் வருகின்றனர்.

    இஸ்ரேல் மக்களினம் பன்னிரண்டு கோத்திரங்களால் ஆனது. இஸ்ரேல் மக்களை ஆள முதலில் வந்த மன்னன் சவுல். அவர் நாற்பது ஆண்டுகள் அரசாண்டார். அவருடைய ஆட்சி சிறப்பான ஆட்சியாய் இருக்கவில்லை.

    அதன்பின் தாவீது மன்னர் வந்தார். அவரும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையாய் இருந்தது. பலவீனங்கள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் இறைவனை நாடிச்செல்லும் உன்னத மனம் அவரிடம் இருந்தது.

    அதன் பின் அவரது மகன் சாலமோன் மன்னன் ஆனார். அவரும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஞானத்திலும், செல்வத்திலும் உச்சியில் இருந்த அவர் கடைசி காலத்தில் பாவத்தின் பள்ளத்தாக்கில் விழுந்து மேன்மையை இழந்தார்.

    அதன் பின் பன்னிரெண்டு கோத்திரங்களும் இரண்டாகப் பிரிந்தன. பத்து கோத்திரங்கள் ஒன்று கூடி வடக்கில் ‘இஸ்ரேல்’ என ஆட்சி அமைத்தன. யூதா, பென்யமீன் எனும் இரண்டு கோத்திரங்கள் தெற்கே ‘யூதா’ என ஆட்சியமைத்தன. இவர்கள் தான் பின்னாளில் யூதர்கள் என அழைக்கப்பட்ட மக்களினமாய் மாறினர். அதுவரை இவர்கள் எபிரேயர்கள் என்றோ, இஸ்ரேல் ஜனம் என்றோ தான் அழைக்கப்பட்டு வந்தனர்.

    ஒப்பீட்டு அளவில் யூதா இனம் இறைவனுக்கு பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தது. இஸ்ரேலோ தொடர்ச்சியாய் பாவத்தில் விழுந்து கொண்டிருந்தது. அரசர்கள் நூல் இஸ்ரேல், யூதா இரண்டு நாடுகளின் மன்னர்களையும், இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த யுத்தங்களையும், அவர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவையும் பதிவு செய்கிறது.

    வட நாடான இஸ்ரேல் நாட்டின் 130 ஆண்டு கால ஆட்சியையும் அதன் வீழ்ச்சியையும் பதிவு செய்யும் நூல், தென் அரசின் 250 ஆண்டு கால வரலாற்றைப் பதிவு செய்கிறது. இஸ்ரேல் நாடு கி.மு 721-ல் அசீரியர்களின் பிடியில் சிக்கியது. மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அதன் பின் அவர்கள் மீண்டும் இஸ்ரேலில் நுழையவேயில்லை.

    யூதா நாடு எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தது. அவர்கள் சிறிய கூட்டம், ஆனால் அவர்களுடைய அரசர்கள் எல்லோருமே தாவீது மன்னனின் வழி வந்தவர்கள். இறைவனின் வாக்குறுதி அது.

    ஒரே ஒரு பெண் அரசி இந்த பட்டியலில் வருகிறாள். அத் தலியா எனும் அவள் தாவீதின் வழிமரபை அழித்து அரசியாகிறாள். அவளது ஆட்சி ஆறு ஆண்டுகள் நீடிக்கிறது. அவளிடமிருந்து தப்பிப்பிழைத்த யோவாசு பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்று தாவீதின் ஆட்சி மரபைப் தொடர்கிறான்.

    வட நாடான இஸ்ரேல் நாட்டின் கடைசி பன்னிெரண்டு அரசர் களைப் பற்றியும், தென் நாடான யூதா நாட்டின் கடைசி பதினாறு அரசர்களைப் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. இந்த நூலில் 25 அதிகாரங்களும், 719 வசனங்களும், 23523 வார்த்தை களும் இடம்பெற்றுள்ளன.

    எலியா, எலீசா ஆகியோரின் இறைவாக் குரைக்கும் பணி இந்த நூலின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. வட நாடான இஸ்ரேலில் அவர்கள் சுமார் எழுபத்தைந்து ஆண்டு காலம் இறைவாக் குரைத்தனர்.

    சாலமோனை விடப் பெரியவர் இயேசு என்றும், யோனா மீன் வயிற்றில் இருந்ததைப் போல மனுமகன் மூன்று நாள் மண்ணில் இருப்பார் என்றும் புதிய ஏற்பாடு பேசுகிறது.

    எலியாவை உருமாற்றத்தின் மலையில் இயேசு சந்திக்கிறார், எலிசாவைப் போன்ற புதுமைகளை இயேசு செய்கிறார் என புதிய ஏற்பாட்டோடு இந்த நூல் பின்னிப் பிணைந்திருக்கிறது.

    ஆன்மிகமும், வியப்புகளும் நிரம்பியிருக்கும் இந்த நூலில் பல அதிசய நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இறைவாக்கினர் எலிசா இறந்த உடலுக்கு உயிர்கொடுக்கும் நிகழ்வும், எலிசா இறந்தபின் அவரது எலும்பில் விழுந்த பிணம் உயிர்பெற்ற அதிசயமும் இந்த நூலில் காணக்கிடைக்கிறது.

    கடவுளுக்கு பணிந்து அவரது கட்டளைகளின்படி நடந்தால் கிடைக்கின்ற வாழ்க்கையும், அவரது குரலுக்குச் செவிகொடுக்க மறுத்தால் கிடைக்கின்ற அழிவையும் இந்த நூல் விளக்குகிறது.

    ‘மனம் திரும்பு, இறைவனை விரும்பு’ என்பதே இந்த நூலின் வாயிலாக இறைவன் நமக்குச் சொல்லும் செய்தியாகும்.

    - சேவியர்.
    “உன்னுடைய கருத்துக்கள் எத்தனை பேருக்கு பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”
    “என் சொல்லைக்கேட்டு கிரேத்தா தீவை விட்டு புறப்படாமல் இருக்க வேண்டியதாய் இருந்தது...”-அப்போஸ்தலர் 27:21.

    நாம் நல்லதை நினைத்தே சொல்கிறோம். நல்ல கருத்தையே கூறுகிறோம். ஆனாலும் அதனை கேட்பவருக்கு அது நல்லதாகவும், நல்ல கருத்தாகவும் இருக்கும் என்று கூறமுடியாது. நம்மால் நல்லதாக பார்க்க முடிந்தவைகளை எல்லாம் பிறராலும் அவ்விதமாவே பார்க்க முடியும் என கூறிவிட முடியாது. எனவே நாம் சொல்லுகின்ற நல்ல கருத்துகளை, கொடுக்கின்ற நல்ல ஆலோசனைகளை மற்றவர்களின் மனம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஒரு பக்குவநிலை வரும் வரை நாம் சாந்தமான ஒரு மனநிலையுடன் பொறுத்திருக்க வேண்டியது அவசியம்.

    பல நேரங்களில் நாம் கொடுத்த நல்ல ஆலோசனைகளை மற்றவர்கள் உடனேயே அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டால் நமக்கு கோபமும், அதிருப்தியும் வந்துவிடுகிறதல்லவா? நல்லதை புரிந்து கொள்ளாத அவர்களின் மனநிலை நமக்கு வெறுப்பூட்டுகிறதல்லவா? எனவே அவர்களை கடிந்து கொள்ளவும், கண்டனம் பண்ணவும் அவசரப்படுகிறோம்.

    இல்லையேல் இனி இவர்களிடம் நல்லதை பேசவும் கூடாது. இவர்களுக்காக நல்லதை நினைக்கவும் கூடாது என்று முடிவெடுக்கக்கூட விரைந்துவிடுகிறோம். ஆனால் அது தவறல்லவா? குழந்தையின் ஆரோக்கியத்திற்காக தாய் அதனை குளிப்பாட்டினால் அது அழுகிறது. அழுக்கில் விளையாடாதே என்றால் அழுகிறது. ஒரு நாள் குழந்தை வளர்ந்து ஏற்ற வயதுகளில் வரும்போது தாய்க்கு எதிர்ப்பு காட்டிய விஷயங்களை எல்லாம், தானாக விரும்பி செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆம். காலங்கள் நல்ல கருத்துகளின் நியாயங்களை புரிந்துகொள்ளும் பக்குவமான மனநிலையை தருகிறது.

    ரோமாபுரியை நோக்கி கப்பல் பயணம் செய்த அப்போஸ்தலனாகிய பவுல் நல்லதென்று கண்டு கொடுத்த நல்ல எச்சரிப்புகளையும், ஆலோசனைகளையும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவன் கடைசிவரை கப்பலில் பயணம் செய்தோரின் நலனுக்காக தொடர்ந்து பிரயாசப்பட தயங்கவில்லை. ஆம். நல்லதை பிறர் புரிந்துகொள்ள தாமதம் ஆனாலும் பொறுமையாக இருப்போமாக.

    “உன்னுடைய கருத்துக்கள் எத்தனை பேருக்கு பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”

    -சாம்சன் பால்
    கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
    இறைமகன் இயேசுகிறிஸ்து தன் சீடர்களிடம் ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ (யோவான் 13:34) என்கிறார்.

    ஆண்டவர் இயேசுகிறிஸ்து, கடவுள் மானிடர் மீது காட்டிய அன்பின் வடிவம் அவர். அன்பின் வழியில் வாழ்ந்தவர். தம் சீடர்களையும் அதே நல்வழியில் வாழ பயிற்றுவித்தவர்.

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அன்பு

    1. அனைத்திலும் முதன்மையான கட்டளை அன்பு: இறைமகன் இயேசுகிறிஸ்து தம்மை அணுகி வந்து, ‘அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?’ என்று கேட்ட மறைநூல் அறிஞரிடம், ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், முழு ஆற்றலோடும், உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை. இவற்றை விட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை’ என்றார். (மாற்கு 12:29-31)

    2. உயிரைக் கொடுக்கும் அன்பே பெரிதானது: தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடத்திலுமில்லை என்கிறார். (யோவான் 15:13)

    3. அன்பு செலுத்துபவரே என் சீடர்: நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் என்றார். (யோவான் 13:35)

    4. அனைத்து காணிக்கைகளிலும் உயர்ந்தது அன்பு: இறைமகன் இயேசு தம்மை சுற்றியிருந்த திரளான மக்களிடம், ‘நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’ என்றார். (மத்தேயு 5:23,24)

    5. பகைவரிடத்திலும் வெளிப்படுத்த வேண்டியது அன்பு: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள். உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள் என்கிறார். (லூக்கா 6:34)

    இறைமகன் இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட அன்பு

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து வார்த்தையிலும், போதனையிலும் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

    துரோகம் செய்தவரிடம் அன்பை காட்டினார்: தம் பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாசு ஆண்டவர் இயேசுவினிடம் வந்து, ‘ரபி வாழ்க’ என்று சொல்லி அவரை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்த பொழுது, அவர் யூதாசிடம், ‘தோழா, எதற்காக வந்தாய்?’ என்று அதே மாறாத பாசப்பிணைப்புடனே அழைக்கின்றார். (மத்தேயு 26:50)

    கைது செய்ய வந்தவரிடமும் அன்பை வெளிப்படுத்தினார்: யூத சமய குருக்களும், மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் ஆண்டவர் இயேசுவைக் கைது செய்ய வந்த பொழுது, அவரோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக்காதைத் துண்டித்தார். அப்பொழுது ஆண்டவர் அவர்களைப் பார்த்து, ‘விடுங்கள் போதும்’ என்று கூறி அந்த பணியாளரின் காதைத்தொட்டு நலமாக்கினார்.

    தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்த ஆண்டவரின் அன்பு: ஆண்டவர் இயேசுவைப் பிடித்து அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவரைப் பழித் துரைத்தார்கள், காரி உமிழ்ந்தார்கள், சாட்டையால் அடித்தார்கள், முள் முடி சூட்டினார்கள். இறுதியாக சிலுவையிலே அறைந்தார்கள். அப்போது இயேசு, ‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ என்றார்.

    கிரேக்கத்தில் ‘அன்பு’

    மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு ஆகும். பண்டைய கிரேக்க அறிஞர்கள் ஆறு விதமான அன்பை அடையாளம் கண்டனர். அவை:

    1. பிலியா: உடன்பிறப்புகள், நண்பர்களிடையே இருக்கும் அன்பு

    2. எராஸ்: கணவன்-மனைவி இடையேயான அன்பு

    3. ஸ்டார்கே: பெற்றோர் பிள்ளைகளிடையிலான அன்பு

    4. ப்ரக்மா: உறவினர்களிடத்தில் காட்டுகின்ற அன்பு

    5. பிலௌவ்டியா: தன் மீது காட்டும் தன்னலம் சார்ந்த அன்பு

    6. அகப்பே: இயல் நிலைக் கடந்த தெய்வீக அன்பு, கடவுள் மனிதர்கள் மீது காட்டிய அன்பு. ஆண்டவர் இயேசுவும் மனிதரிடம் காட்டிய அன்பும் இதுவே. இந்த தெய்வீக அன்பு மனிதரில் உருவாகும் இயல்பான அன்பல்ல. இது ஆவியார் மூலமாக மனிதருக்குக் கடவுள் கொடுக்கும் அருட்கொடையிது. இந்த அன்பிற்கு நிகர் எதுவுமில்லை. எதையும் எதிர்பாராதது. எவ்வித நிபந்தனையுமற்றது.

    நாமும் பிறரை அன்புசெய்ய கடமைப்பட்டிருக்கிறோம்

    ‘அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான்’ என்கிறார் மகாத்மா காந்தியடிகள். அன்பு இறைமையோடுத் தொடர்புடையது. ஆதலால் கடவுள் அன்பாகவே இருக்கிறார். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

    அருட்கொடையாம் வாழ்வை இறை அன்பாலே வாழ்ந்து காட்டுவோம்!

    அருட்பணி.ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.
    சிலுவையில் சுயம் அறையப்படுவதற்கு ஆயத்தப்படாதவரை ஆயிரம் ஆன்மீக கிரியைகள் இருந்தாலும் அவைகளால் பெரிய பிரயோஜனங்கள் இல்லை.
    தன் சிலுவையை எடுத்து கொண்டு என்னை பின்பற்ற கடவன் ( மத்தேயு 10:38 )

    சிலுவை சுமத்தல் என்பது ஒரு முழுமையான அர்ப்பணிப்பிற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் அனுபவமாகும். இந்த அனுபவமாகிய சிலுவையை தினமும் சுமந்தவர்களாக இயேசுவை பின்பற்றினால் தான், அவரால் நமக்கு ஆயத்தமாக்கப்பட்ட ஆசீர்வாதங்களை நாம் அடையமுடியும். ஏனென்றால் சிலுவை சுமந்து இயேசு உருவாக்கிய மேன்மையான ஆசீர்வாதங்களை நாமும் சிலுவை சுமக்க முன்வருவதின் மூலமாக தான் அடைய முடியும். சிலுவைதான் ஆசீர்வாதத்தின் உண்மையான ஏணியாக உள்ளது. இந்த ஏணி வழியாக ஏறிச்செல்லும் சிரமத்தை ஏற்கவிரும்பாதோர் கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களை அடையும் வாய்ப்பு இல்லை.

    அநேகர் நன்றாக ஜெபிக்கின்றனர். நன்றாக தேவ வாக்குறுதிகளை நினைவு கூர்ந்து உரிமையோடு கிறிஸ்துவிடம் கேட்கின்றனர். ஆயினும் அவர்களின் வாழ்க்கையில் தேவஆசீர்வாதங்கள் இல்லை. ஏனென்றால் எவ்வளவு ஜெபித்தாலும், உபவாசித்தாலும், சிலுவையாகிய சரியான அனுதின அர்ப்பணிப்பின் பாதையில் நடக்க மனதை ஆயத்தப்படுத்தாவிடில் ஆசீர்வாதப்பாதை நமக்கு அடைக்கப்பட்டதாகவே இருக்கும்.

    சிலர் எவ்வளவு கிறிஸ்துவுக்குள்ளாக வாழ்ந்தாலும் தங்களை பழைய நிலையிலேயே தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். ஜெபித்தாலும், துதித்தாலும், ஊழியம் செய்தாலும் தாங்களோ அந்த பழைய மனிதனாகவே உள்ளனர். ஜென்ம சுபாவ இயல்புகள் போதுமான அளவு சிலுவையில் அறையப்படவில்லை. சுயத்தின் சாயல் செயல்களிலும், குணங்களிலும் தெரிகிறது. அர்ப்பணிப்பு என்பதும் சிலுவை சுமத்தல் என்பதும் எவ்வளவு ஜெபிக்கிறீர்கள், எப்படி ஆராதிக்கின்றீர்கள், எவ்வளவு ஊழியம் செய்கின்றீர்கள் என்பவைகளால் கணக்கிடப் படத்தக்கவை அல்ல.

    குணம், சுபாவம், இயல்பு ஆகியவை எந்த அளவிற்கு தேவசாயலாக மாறியிருக்கின்றது என்பதின் அடிப்படையிலேயே சிலுவை எந்த அளவு நம்முடைய வாழ்க்கையில் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பதை அறிய முடியும்.

    ஆம். சிலுவை உபதேசத்தை ஏற்காதவரை ஆசீர்வாதங்கள் தூரமாகவே இருக்கும். சிலுவையில் சுயம் அறையப்படுவதற்கு ஆயத்தப்படாதவரை ஆயிரம் ஆன்மீக கிரியைகள் இருந்தாலும் அவைகளால் பெரிய பிரயோஜனங்கள் இல்லை.

    - சாம்சன் பால்
    நாம் கடவுளோடு இணைந்து வாழ்வதே உண்மையான உபவாசம். நம் கவனத்தை கர்த்தரை நோக்கியும் கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கம் ஆகும்.
    உபவாசம் என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாகும். உப என்றால் இணை என்றும், வாசம் என்றால் வாழ்தல் என்றும் பொருள். உபவாசம் என்றால் இணைந்து வாழ்தல் என்று அர்த்தமாகும். நாம் கடவுளோடு இணைந்து வாழ்வதே உண்மையான உபவாசம். நம் கவனத்தை கர்த்தரை நோக்கியும் கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கம் ஆகும். உபவாச ஜெபம் என்பது எப்போதோ நடக்கின்ற ஒன்றாக அல்ல.

    மாறாக அது...எப்போதும் நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். தபசு நாட்களில் உபவாசத்தை அதிகமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. விசேஷ நாட்களில் நாம் சிறப்பு உணவை உண்பது போலவும், சிறப்பான உடையை உடுத்துவது போலவும் இந்த தபசு நாட்களில் அதிகமாக உபவாசம் இருக்க வேண்டும். “தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்” என்ற மதுரை ஆயர் சந்தியாகுவின் பாடலின் அடிக்கேற்ப இந்த தபசு நாட்களில் இன்னும் அதிகமாக கர்த்தரிடம் நெருங்கி சேர அழைக்கப்படுகின்றோம்.

    இந்த உபவாச நாட்களில் நாம் விட்டு விடுதல், பெற்றுக்கொள்ளுதல் என்ற 2 காரியங்களை முக்கியமாக செய்ய வேண்டும். அதாவது நாம் நம்மைப் பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் நிரந்தரமாக விட்டு விட வேண்டும். அதேபோல் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான நற்குணங்களை நிலையாக பெற்றுக் கொள்வதும் மிகவும் அவசியமாகும். மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்புக் கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தையே கர்த்தர் கேட்கிறார்.

    நம் தவறுகளுக்காக நம்மை தண்டிக்க நினைக்கும் கர்த்தரின் மனதை இம்மூன்று செயல்களும் மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது. உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது.ஜெபத்திற்கு விசுவாசம் தேவை. விசுவாசம் வளர ஜெபம் தேவை. இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை.

    உபவாசம்,ஜெபம்,விசுவாசம் இம்மூன்றும் ஒன்று சேரும் போது அற்புதம் நிகழ்கிறது. இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்று நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வேதத்தில் மாற்கு.9:29 ல் கூறி உள்ளார். இதுவரை நடக்காத நற்காரியங்கள் நடக்க வேண்டும் என்றால், நம் வாழ்வில் ஒரு நல்ல அற்புதம் நிகழ வேண்டும் என்றால் நாம் உபவாசம் இருந்து விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கொலோ.4:5 அப்போஸ்தலர் தூய பவுல் மூலம் ஆண்டவர் நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பிற்கு கீழ்படிந்து நாம் இந்த உபவாசக் காலங்களை பயன்படுத்திக் கொள்வோமாக. அதற்கு எல்லாம் வல்ல ஆண்டவர் தாமே தம்முடைய தூய ஆவியானவர் மூலமாக நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.

    சகோதரி. கேத்ரின் ஜூலியா,

    கருமாரம்பாளையம், திருப்பூர்
    லெந்து நாட்கள் என்பது சாம்பல் புதன் நாளில் இருந்து ஈஸ்டர் எனப்படும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் வரை உள்ள நாட்களை உள்ளடக்கியது ஆகும்.
    லெந்து நாட்கள் என்பது சாம்பல் புதன் நாளில் இருந்து ஈஸ்டர் எனப்படும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் வரை உள்ள நாட்களை உள்ளடக்கியது ஆகும். சாம்பல் புதன் முதல் ஈஸ்டர் வரை 46 நாட்கள் வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த நாள் என்பதினால் இடைப்பட்ட 6 ஞாயிற்றுக்கிழமைகள் வந்தாலும் அதை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மீதமுள்ள 40 நாட்கள் உபவாச நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. லெந்து காலம் என்பதற்கு வசந்த காலம் என்று பொருள்.

    எபிரேய வருட கணக்குப்படி சேபாத் (சக:1:7), ஆதார் (எஸ்:3:7), நிசான் (நெகே:2:1) மாதங்களும், ஆங்கில வருட கணக்குப்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களும், தமிழ் மாத கணக்குப்படி மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களும் வசந்த காலமாக கணக்கிடப்படுகிறது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலை பெற்ற அன்று பஸ்கா பண்டிகையை முதன்முறையாக ஆசரித்தனர். முதல் பஸ்கா நாளானது முழு நிலவு நாளாக இருந்தது. (இஸ்ரவேலரின் எல்லா பண்டிகைகளுமே நிலவை மையமாக வைத்தே கணக்கிடப்படுகிறது. ஏனெனில் நிலவை மையமாக கொண்ட ஆண்டை பின்பற்றினார்கள்.

    பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்ட அந்த வாரத்தில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அதற்கு அடுத்த நாள் வாரத்தின் கடைசி நாளாகவும், ஓய்வு நாளாகவும் (யூதர்களுக்கு) இருந்தது. அடுத்த வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கி.பி.125-ம் ஆண்டின் நைஸியா கூட்டத்தின் தீர்மானத்தின்படி தான் ஈஸ்டர் பண்டிகை கணக்கிடப்படுகிறது.

    அன்று முதல் மார்ச் மாதத்தில் 21-ந் தேதிக்கு பின்வருகிற முழு நிலவு நாளுக்கு அடுத்த ஞாயிறு தான் உயிர்த்தெழுந்த பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிலும் மார்ச் 21-ந் தேதிக்கு பின்வரும் முழு நிலவானது ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வருகிறது. ஏப்ரல் 19-ந் தேதி புனித வெள்ளியாகவும், முழு நிலவு நாளுக்கு அடுத்த ஞாயிறு அதாவது ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறு என்று கொண்டாடப்படுகிறது. குருத்தோலை ஞாயிறு தினத்திற்கு 40 நாட்களுக்கு முந்தைய புதன் கிழமை சாம்பல் புதன் என அனுசரிக்கப்பட்டு அன்று முதல் லெந்து நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த நாள் உங்களுக்கு நினைவுகூறுதலான நாளாய் இருக்கக்கடவது. அதை கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக. அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள் (யாத்:12:14). பஸ்கா பண்டிகையைக் குறித்து ஆண்டவர் சொல்லும்போது அதை தலைமுறை தலைமுறையாக நினைவுகூரும்படியாக சொல்லியிருந்தார்.

    ஒரு வேளை பழைய ஏற்பாடு பஸ்காவானது இஸ்ரவேலருக்கானதாக இருக்கலாம். ஆனால் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் இதை அனுசரிக்க வேண்டும் என்றும் பரிசுத்த வேதாகமம் நமக்கு பதிலளிக்கிறது. நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. (1கொரி:5:7). நமக்காக பலியிடப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசுவை நினைவுகூர்ந்து இந்த லெந்து காலத்தில் நம்மை பரிசுத்தமாக காத்துக்கொள்ள, தேவனை அண்டிக்கொள்ள ஆண்டவர் நமக்கு கிருபை தருவாராக.

    போதகர்.அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை.திருப்பூர்

    விவிலியத்திலுள்ள மாபெரும் இறைவாக்கினர்களில் ஒருவரான எலியாவின் வியப்பூட்டும் வாழ்க்கையை அரசர்கள் முதல் நூல் நமக்கு விளக்குகிறது.
    இப்போது இரண்டு பிரிவுகளாக இருக்கும் ‘அரசர்கள்’ நூல் தொடக்கத்தில் ஒரே நூலாக இருந்தது. எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதை ‘மிலாகிம்’ என அழைத்தனர். ‘அரசாங்கம்’ என்பது இதன் பொருள்.

    அதை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்த போது வசதிக்காக இரண்டுபிரிவுகளாகப் பிரித்தனர். அப்படி மொழிபெயர்த்தவர்களை ‘செப்டுவஜின்ட்’ எனஅழைக்கிறார்கள். அதற்கு ‘எழுபது’ என்பது பொருள். எழுபது பேர் சேர்ந்து இந்த மொழிபெயர்ப்பைச் செய்ததால் இந்த பெயர் அவர்களுக்கு வந்தது.

    பழைய ஏற்பாட்டு இஸ்ரயேலரின் தலைமை ஆட்சியை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது ஆபிரகாம் முதல் யோசேப்பு வரையிலான இறைமனிதர்களின் காலம். அடுத்தது மோசே முதல் சாமுவேல் வரையிலான இறைவாக்கினர்களின் காலம். மூன்றாவது சவுல் முதல் செதேக்கியா வரையிலான அரசர்களின் காலம். நான்காவது யோசுவா முதல் காய்பா வரையிலான குருக்களின் காலம்.

    அரசர்கள் நூல், இஸ்ரயேலின் அரசர்களைப் பற்றிப் பேசுகிறது. சாலமோன் மன்னன் முதல் ஆகாப் வரையிலான மன்னர்களைப் பற்றி முதல் நூலும், ஆகாப் முதல் செதேக்கியா வரையிலான மன்னர்களைப் பற்றி இரண்டாவது நூலும் பேசுகிறது.

    இந்த நூலை எழுதியவர் யார் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மரபுப்படி இந்த நூலை எழுதியவர் எரேமியா. ஆனால் நூலின் சில பாகங்களை அவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதை எசேக்கியேல் அல்லது எஸ்ரா எழுதியிருக்கலாம் என இறையியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இறைவன் வரலாற்றை எழுதுவதற்கும், மனிதர்கள் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை அரசர்கள் நூலின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லா அரசர்களுக்கும் சமமான முக்கியத்துவம் இந்த நூலில் கொடுக்கப்படவில்லை என்பது முதல் செய்தி.

    உதாரணமாக ஓம்ரி மன்னன் இஸ்ரயேலை ஆண்டவன். வரலாறு இவரைப் பற்றி அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது. ‘நாட்டை செல்வச் செழிப்புக்கு கொண்டு சென்ற மன்னன்’ என வரலாறு இவரைக் கொண்டாடுகிறது. ஆனால் விவிலியம் இவருக்குக் கொடுத்திருக்கும் இடம் எட்டு வசனங்கள். காரணம் இவன் தேவனுடைய பார்வையில் தீமையைச் செய்தவன்.

    இரண்டாம் எரோபவாம் உலக பார்வையில் நல்லாட்சி செய்த இன்னோர் மன்னன். அவனுக்கு விவிலியம் கொடுத்திருப்பது ஏழு வசனங்கள். அதே நேரம் எசேக்கியா மன்னனுக்கோ மூன்று முழு அதிகாரங்கள். எலியா எலிசா எனும் இறைவாக்கினர்களுக்கு அரசர்கள் நூலில் மூன்றில் ஒரு பங்கு இடம். அவர்கள் அரசர்கள் கூட இல்லை. இது தான் இறைவன் எழுதும் வரலாற்றின் சிறப்பம்சம்.

    அரசர் இறைவன் பார்வையில் நல்லவனாக இருக்கிறாரா? உண்மைக் கடவுளை வழிபடுகிறாரா? பிற வழிபாடுகளை வெறுக்கிறாரா?, நல்ல குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறாரா? நீதியும், நேர்மையும், இறையச்சமும் கொண்டிருக்கிறாரா? என்பதே கேள்வி.

    அரசர்கள் நூலை அலசிப்பார்த்தால் நல்ல அரசர்கள் சுமார் 33 ஆண்டுகளும், கெட்ட அரசர்கள் 11 ஆண்டுகளும் சராசரியாய் ஆண்டிருக்கிறார்கள். சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, இறைவனே மண்ணுலக ஆட்சியையும் நிர்ணயிக்கிறார் என்பதன் விளக்கமாக இதைக் கொள்ளலாம்.

    எருசலேமின் மாபெரும் சக்கரவர்த்தியான தாவீது மன்னனின் இறுதிக்கணங்களோடு இந்தஅரசர்கள் முதல் நூல் தொடங்குகிறது. தாவீது மன்னன் இறக்கிறார். அவருக்கும் பத்சேபாவுக்கும் பிறந்த மகன் சாலமோன் அரசராகிறார்.

    இந்த நூலில் சாலமோன் மன்னனின் நீதியும், செயல்பாடுகளும், ஞானமும், செல்வமும், ஆட்சித்திறமையும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

    இந்த நூலின் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று எருசலேம் தேவாலயம் கட்டி எழுப்பப்படும் வரலாறு. தனக்கான ஆலயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தாவீது மன்னனிடம் இறைவன் தெரிவித்தார். ஆனால் தாவீது ரத்தக்கறை படிந்த கையுடையவன் என்பதால், ஆலயத்தை அவர் கட்டவேண்டாம், அவரது மகனே கட்டவேண்டும் என இறைவன் ஆணையிட்டார். அதன்படி கடவுளுக்கான ஆலயத்தை சிறப்புறக் கட்டி முடித்தார், சாலமோன் மன்னன்.

    எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் வெளியேறி சரியாக 480 ஆண்டுகளுக்குப் பின்பு அந்த ஆலயம் கட்டப்பட்டது. ‘அந்த ஆலயத்தில் வசிப்பேன்’ என இறைவன் சாலமோன் மன்னனுக்கு வாக்களித்திருந்தார்.

    ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாட்டின் கடைசி மன்னனாக சாலமோன் இருந்தார். அதற்குப் பின் கி.மு. 931-ல் இஸ்ரயேல் நாடு கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரிந்தது. பன்னிரண்டு கோத்திரங்கள், பத்து, இரண்டு என பிரிந்துவிட்டன.

    விவிலியத்திலுள்ள மாபெரும் இறைவாக்கினர்களில் ஒருவரான எலியாவின் வியப்பூட்டும் வாழ்க்கையை அரசர்கள் முதல் நூல் நமக்கு விளக்குகிறது.

    இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்களினம் எப்படியெல்லாம் உருமாற்றம் அடைந்து, எப்படி பெரு வீழ்ச்சியடைந்தது எனும் சோக வரலாறே அரசர் நூலின் முடிவில் நாம் புரிந்து கொள்ளும் விஷயம். இறைவன் தனது வாக்குறுதிகளை மீறுவதில்லை. ஆனால் மனிதன் அந்த வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடந்துகொள்வதில்லை. இந்த சிந்தனையே அரசர்களின் வாழ்க்கை வாயிலாக நமக்குக் கிடைக்கின்ற செய்தியாகும். 

    சேவியர்.
    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மேலும் நேற்று மாலையிலும் தேர் பவனி நடைபெற்றது. தேர் தேவசகாயம் மவுண்டில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது.

    இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசித்து சென்றனர். தொடர்ந்து நற்கருணை, மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் வரலாற்று நாடகம் ஆகியவை நடைபெற்றது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள், திருத்தொண்டர்கள், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (சனிக்கிழமை) வரை திருவிழா நடைபெறுகிறது.
    இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு, ராமேசுவரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இருநாட்டு மக்களும் திரளாக கலந்துகொள்ளும் இந்த திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாள் மட்டும் நடைபெறும். கச்சதீவில் பல ஆண்டுகளாக ஓட்டு கொட்டகையாக காட்சியளித்து வந்த அந்தோணியார் ஆலயத்திற்கு பதிலாக இலங்கை அரசால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ஆலயம் கட்டப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (சனிக்கிழமை) வரை திருவிழா நடைபெறுகிறது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 6 மணி முதல் பக்தர்களுடன் ஒவ்வொரு படகாக புறப்பட்டு, கச்சத்தீவுக்கு சென்றது.

    திருவிழாவில் நேற்று மாலை 5 மணிஅளவில் இருநாட்டு பங்கு தந்தை மற்றும் மக்கள் முன்னிலையில் நெடுந்தீவு பங்குத்தந்தை அந்தோணியாரின் திருஉருவம் பதித்த கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மரத்தாலான பெரிய சிலுவையை இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வர, ஆலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் முதல்நாள் திருப்பலி நடைபெற்றது. அதன்பின் இரவு 8 மணிக்கு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் ஆலயத்தை வலம் வந்தபின், முதல் நாள் திருவிழா நிறைவடைந்தது.

    திருவிழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இருநாட்டு மீனவர்களும் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்கவும், அந்தோணியார் ஆலய திருவிழா இருநாட்டு அரசு மற்றும் மக்கள் பங்களிப்புடன் தொடர்ந்து நடைபெறவும், இருநாட்டு மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியும் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 9 மணிக்கு திருவிழா திருப்பலி முடிந்த பின்பு கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
    இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாள் நடைபெறுகிறது.
    இந்தியா, இலங்கை இடையே கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாள் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாள் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாள் மாலை 5 மணிக்கு நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடி இருநாட்டு மக்கள் முன்னிலையில் ஏற்றப்படுகிறது.

    கச்சத்தீவு திருவிழாவையெட்டி ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 6 கப்பல்களும், சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான பெரிய கப்பல் ஒன்றும் இரவு-பகலாக தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் கச்சத்தீவு பகுதி முழுவதும் இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    ×