என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஆண்டுதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடக்கிறது.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுக நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா’ என்று பாடி மகிழ்ந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு குருத்தோலை பவனி வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இது ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அந்த நாள் ‘குருத்தோலை ஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது.

    அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவற்றை அவர்கள் கைகளில் ஏந்தியபடி அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். அதைத் தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குருத்தோலை பவனிக்கான குருத்தோலைகளை, மக்கள் நேர்ச்சையாகவும், காணிக்கையாகவும் ஆலயங்களுக்கு வழங்குவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வருகிற 14-ந் தேதி குருத்தோலை பவனி நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து ஈஸ்டர் வரை உள்ள 7 நாட்களும் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளி போன்ற தினங்கள் அனுசரிக்கப்படும். 
    இந்த நூல் வரலாற்றையும், ஆன்மிகத்தையும் ஒருசேர நமக்கு அள்ளித்தரும் அற்புதமான ஒரு நூல். ஒரு பரபரப்பான நாவலைப் போல இது சுவாரசிய மூட்டுகிறது.
    திருவிவிலியத்தின் பதினைந்தாவது நூலாக இருக்கிறது எஸ்ரா.

    ‘எஸ்ரா’ என்பதற்கு ‘கடவுள் உதவுகிறார்’ என்பது பொருள். பத்து அதி காரங்களோடும், இருநூற்று எண்பது வசனங்களோடும், இருபத்தேழாயிரத்து நானூற்று நாற்பத்தோரு வார்த்தைகளோடும் இந்த நூல் உருவாகி யிருக்கிறது.

    இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். எப்போதெல்லாம் அவர்கள் கடவுளை நாடி வந்தார்களோ அப்போதெல்லாம் வளமும், வெற்றியும் அவர்கள் வசம் வந்து விடுகிறது. எப்போதெல்லாம் அவர்கள் கடவுளை விட்டு விலகிச் செல்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுடைய வாழ்க்கை அழிவுக்குள் தள்ளப்படுகிறது.

    கடவுளின் தண்டனை மக்களிடம் வரும்போது, படிப்படியாக வருகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் எச்சரிக்கை வருகிறது. அழிவு வரும் என சொல்லப்படுகிறது. மனம் மாறாவிடில் ஏதோ எதிரிகள் வந்து நாட்டை முற்றுகையிட்டு செல்வங்களை எல்லாம் கொண்டு செல்கின்றனர்.

    அப்போதும் மனம் மாறாவிடில் பசி, பஞ்சம் போன்றவை வந்து வாட்டுகின்றன. அப்போதும் கண்டுகொள்ளாவிடில் நோய்கள் வருகின்றன, உடல்நிலை வலு விழக்கிறது. அப்போதும் மனம் திருந்தாவிடில் வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்தே அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

    அப்படி இரண்டு முக்கியமான ‘வெளியேற்றல்கள்’ நடக்கின்றன. ஒன்று வட நாடான இஸ்ரயேல் அசீரியர்களின் கையில் பிடிபட்டு கொண்டு போகப்பட்ட நிகழ்வு. அது கி.மு. 721-ல் நடந்தது. அதன் பின் சுமார் 140 ஆண்டுகளில் இரண்டாவது நாடு கடத்தல் நடந்தது. இப்போது வெளியேறியது தென் நாடான யூதா, பாபிலோனியர்களின் வசம் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

    பாபிலோனியர்கள் யூதாவை கைப்பற்றியதும் மக்கள் அனைவரையும் ஒரே யடியாக பாபிலோனுக்கு இழுத்துச் செல்லவில்லை. அதை மூன்று கட்டமாகச் செய்தார்கள். மூன்று நிகழ்வுகளின் போதும் நெபுகத்நேசரே பாபிலோனிய மன்னராக இருந்தார். முதலில் கி.மு. 606-ல் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அவர்கள் கைதிகளாக இழுத்துச் சென்றனர்.

    அரச பரம்பரை இல்லையேல் யூதாவை தாங்கள் ஆளலாம் என்பது அவர்களின் எண்ணம். அந்த கூட்டத்தில் சென்ற ஒருவர் தான் விவிலியத்தின் சிறப்பு மிக்க மனிதர்களில் ஒருவரான தானியேல்.

    ஆனால், அந்த திட்டம் பலிக்கவில்லை. யூதா மக்கள் பாபிலோனியரின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். எனவே, இரண்டாவதாக நாட்டிலுள்ள வியாபாரிகள், கலைஞர்கள் போன்றவர்களை இழுத்துச் சென்றனர். நாட்டில் வளமை இல்லையேல் சுதந்திர உணர்வு மங்கிவிடும் எனும் சிந்தனையே அதன் காரணம். கி.மு. 597-ம் ஆண்டு அது நிகழ்ந்தது. அந்த கூட்டத்திலும் மிக முக்கியமான ஒரு நபர் இடம்பெற்றிருந்தார். அவர் தான் எசேக்கியேல்.

    இருந்தாலும், மக்கள் கலக மனநிலையுடனே இருந்தனர். எனவே மூன்றாவது முறையாக கி.மு. 587-ல் முழுமையான அழிவும், வெளியேற்றலும் நடைபெற்றது. அப்போது தான் எருசலேம் தேவாலயம் தரைமட்டமானது. யூதா வெற்றிடமானது. இறைவாக்கினர் எரேமியா உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி வெளியேறுதல் நிகழ்ந்தது.

    மூன்று முறை வெளியேற்றப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மூன்று குழுக்களாக பின்னர் நாடு திரும்பினர். இரண்டாவது குழுவுடன் நாடு திரும்பியவர் தான் எஸ்ரா, இந்த நூலின் ஆசிரியர். முதலில் ஐம்பதாயிரம் பேர் திரும்பினர். ஆனால் எஸ்ராவுடன் திரும்பியவர்கள் வெறும் 1800 பேர் தான். ஆனால் அவர்கள் எல்லோரும் லேவியர்கள். எஸ்ரா குருவாக இருந்ததால் லேவியர்களை அழைத்து வந்து நாட்டை மீண்டும் ஆன்மிக வழியில் கொண்டு வரவேண்டும் என விரும்பினார்.

    மூன்றாவது குழுவுடன் திரும்பியவர் தான் நெகேமியா. பைபிளின் அடுத்த நூலை எழுதியவர் அவர் தான். இந்த மூன்று திரும்புதல்களும் மூன்று சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்தன.

    முதலாவது குழுவின் வருகை சமூக வாழ்க்கையை மீண்டெடுக்கும் முயற்சி, இரண்டாவது குழு ஆன்மிக பலவீனத்தை சரி செய்யும் முயற்சி. மூன்றாவது, கட்டுமானங்களை சரிசெய்து நாட்டை வலுப்படுத்தும் முயற்சி.

    நாடு திரும்புவதற்கு பலர் விரும்பவில்லை என்கிறது வரலாறு. சுமார் 1500 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். பாபிலோனுக்குச் சென்ற மக்கள் அங்கே வர்த்தகங்களில் ஈடுபட்டு செழிக்க ஆரம்பித்திருந்த கணம் அது. அவர்களுக்கு திரும்புதல் என்பதே தண்டனையாய் தெரிந்தது.

    எஸ்ரா நூல் முதல் இரண்டு நாடு திரும்புதலைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்கிறது. எபிரேயம் அராமிக் எனும் இரண்டு மொழிகளில் இந்த நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார் எஸ்ரா. நாடு திரும்புதலும், ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளும் இந்த நூலின் முக்கிய அம்சங்கள் எனலாம்.

    நாடு திரும்பிய மக்கள் மீண்டும் பாவ வாழ்க்கைக்குத் திரும்பிய சோக நிகழ்வுகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. எழுபது ஆண்டுகள் அன்னிய நாட்டில் வாழ்ந்தாலும் மக்கள் திரும்பி வந்தபின் இறைவனைப் பற்றிக்கொள்ளவில்லை. பாவத்தைப் பற்றிக் கொண்டார்கள்.

    இந்த நூல் வரலாற்றையும், ஆன்மிகத்தையும் ஒருசேர நமக்கு அள்ளித்தரும் அற்புதமான ஒரு நூல். ஒரு பரபரப்பான நாவலைப் போல இது சுவாரசிய மூட்டுகிறது.

    - சேவியர்.
    நமக்கு தேவன் கொடுத்த இந்த வாழ்வை இப்போதே ஆயத்தப்படுத்தி நமக்கு நித்தியமான வாழ்வு தரும் வழியை இப்போதே பயன்படுத்திக்கொள்வோம். ஆமென்.
    காலம் கண் போன்றது, பொன் போன்றது, விலையேறப்பெற்றது என்று காலத்தை குறித்து நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த காலத்தில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்றைய காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வேலைகளை செய்ய வேண்டுமானால் சோம் பேறிகளாக இந்த வேலையை நாளை செய்யலாம், அப்புறம் செய்து கொள்ளலாம் என்று நாட்களை கடத்திக்கொண்டே செல்கிறோம்.

    இதே போல்தான் ஒரு பேராசிரியரிடம் மாணவன் ஒருவன் வந்து நான் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்வதை எவ்வளவு காலம் தள்ளிப்போடலாம் என்று கேட்டுள்ளான். உடனே அந்த பேராசிரியர் அந்த மாணவனை பார்த்து உன்னுடைய மரண நாளுக்கு முந்தைய நாள் வரை அதை தள்ளிப்போடலாம் என்று விநோதமான பதில் கூறியுள்ளார். உடனே அந்த மாணவன் நான் எப்போது மரிப்பேன் என்று தெரியாதே? என்று கூறியுள்ளான். உடனே பேராசிரியர் நம்முடைய மரணம் எப்போது? என்று யாருக்குமே தெரியாது அது உண்மைதான். எனவே இன்றே இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள தீர்மானம் செய் என்று கூறியுள் ளார்.

    எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே காலத்தை தேவன் நமக்கு கொடுக்கும் தருணம் கடந்து விட்டதென்றால் திரும்பவும் பெற முடியாது. வாழ்க்கை வாழ்வதற்கே என்று மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டு இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளனைப்போன்று கடைசி நிமிடத்தில் நாம் மனந்திரும்பிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருக்கலாம்.

    ஆனால் எத்தனையோ மக்கள் எதிர்பாராத வேளையில் தங்கள் மரணத்தை சந்திக்கின்றதை நாம் அனுதினமும் காண்கிறோம். இதைத்தான் வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 6-ம் அதிகாரம் 2-ம் வசனத்தில் இதோ இப்பொழுதே அனுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சண்ய நாள் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நமக்கு தேவன் கொடுத்த இந்த வாழ்வை இப்போதே ஆயத்தப்படுத்தி நமக்கு நித்தியமான வாழ்வு தரும் வழியை இப்போதே பயன்படுத்திக்கொள்வோம். ஆமென்.

    சகோ.சாம் கிப்ஸ்டன், காங்கேயம்.
    இதை வாசிக்கின்ற ஒரு நபராவது தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து குடும்பமாய் அவர்களுக்கு பாசமழை பொழிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
    இந்த நவீன யுகத்தில் வாழ்கின்ற மக்களிடையே பெற்றோர்களை மதிப்பதும் அவர்கள் சொற்கேட்டு வளர்வதும் மிகக் குறைந்து விட்டது என்றே கூறலாம். ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று பழஞ்சொல் உண்டு. பண்டிகை நாட்களில், பிறந்த நாளில் பெற்றோர்களின் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது என்றால் அது மிகையாகாது.

    பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்கிற இந்த விஷயத்தைக் குறித்து திருமறை இவ்வாறாகக் கூறுகிறது. ‘உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக’ (யாத்திராகமம் 20:12), மேலும், ‘உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ (எபேசியர் 6:2,3) என்றும் வேதம் கூறுகிறது.

    ஆக, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தீர்க்காயுசோடும், ஆசீர்வாதத்தோடும் வாழ்வதற்கு அவன் தன் தகப்பனையும், தாயையும் மதித்து நடக்க வேண்டும். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் தன் பெற்றோர்களை மதிக்கத் தவறிய மாந்தர்கள் எத்தனை? எத்தனை?

    தங்கள் வேலை ஸ்தலங்களில் தங்கள் மேலதிகாரிகளை கனம் பண்ணுகின்றனர், தங்கள் அப்பார்ட்மென்டில் அருகில் குடியிருக்கும் குடும்பத்தினரை கனம் பண்ணுகின்றனர், அதிலும் குறிப்பாக அவர் ஒரு உயர்ந்த அதிகாரியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இருந்தால் மிகவும் அதிகமாக கனம் பண்ணுகின்றனர்.

    ஆனால் தன்னைப் பெற்றெடுத்து ஆளாக்கி தன் ரத்தத்தை பாலாக ஊட்டிய தாயையும், தன் உழைப்பை ரத்தமாக ஊற்றிய தகப்பனையும் மதிக்கத் தவறிய பிள்ளைகள் இந்த தேசத்தில் மலிந்து கிடக்கின்றனர் என்றால் மிகை யாகாது.

    திருமறை மிகவும் அழகாக ஒரு மகன் தன் பெற்றோரிடத்தில் எப்படி ஜீவிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறது. ‘உன்னை பெற்ற தகப்பனுக்கு செவி கொடு, உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே’ (நீதிமொழிகள் 23:22)

    இன்றைக்கு இப்படி ஜீவிக்கின்ற பிள்ளைகள் எத்தனை பேர். நம் முடைய பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இல்லாத ஒரு புதிய பழக்கம் இன்றைய காலங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. அது என்னவென்றால் முதியோர் இல்லம். இந்த முதியோர் இல்லத்திலே தங்கள் தகப்பனையும், தாயையும் கொண்டு போய் சேர்த்து விட்ட பிள்ளைகள் ஏராளம்.

    நாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம், ஆகவே அங்கே கொண்டுபோய் பத்திரமாய் இருக்கும்படி சேர்த்து விடுகிறோம் என்கின்றனர். தன் மகனைப் பார்க்க மாட்டோமா? தன் பேரப்பிள்ளைகளைப் பார்க்க மாட்டோமா? என்று ஏக்கப் பெருமூச்சோடு, கலங்கின கண்ணீர்களோடு வாழும் பெற்றோர்கள் எத்தனை? எத்தனை?

    இவர்கள் முதியோர் இல்லத்தில் கொடுக்கும் பணத்திலே ஒரு வேலைக்காரியை அல்லது வேலைக்காரனை சம்பளத்துக்கு அமர்த்தி வைத்து கொள்ளலாமே? இவர்களால் இயலாது காரணம் இவர்கள் நெஞ்சங்கள் கல்லாகி விட்டன.

    இவர்களைக் குறித்து வேதம் இப்படியாக கூறுகிறது, ‘தன் தகப்பனைக் கொள்ளையடித்து தன் தாயைத் துரத்திவிடுகிறவன் இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்’ (நீதிமொழிகள் 19:26).

    இப்படிப்பட்டவர்களுக்கு பெற்றோர்களுடைய சொத்து வேண்டும். ஆனால் பெற்றோர் வேண்டாம். இப்படி வாழ்கிறவர்களுக்கு வேதம் ஒரு எச்சரிக்கையும் விடுகிறது. ‘மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்’ (கலாத்தியர் 6:7)

    ஆம், இன்றைக்கு நாம் பெற்றோருக்கு செய்வது நாளை நமக்கும் நடக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

    ஆகவே நாம் பெற்றோர்களை மதிக்க கற்று கொள்வோம். அப்பா சாப்பிட்டிங்களா?, அம்மா சாப்பிட்டிங்களா? என்றாவது ஒரு வார்த்தை கேட்க மாட்டானா என் பிள்ளை என்று ஏங்கும் பெற்றோர் எத்தனை? அவர்களோடு பேசுவோம்.

    செல்போனிலும், கம்ப்யூட்டரிலும், முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும், தொலைக்காட்சியிலும் நேரத்தை செலவிடுகிற மக்களே, உங்களை பெற்றெடுத்த தகப்பனோடு, தாயோடு நேரத்தை செலவிடுகின்றீர்களா என்று சற்றே யோசித்துப் பாருங்கள். தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கிறவர்களே உங்களுக்கும் ஒரு முதியோர் இல்லத்தை இறைவன் கட்டிக் கொண்டிருக்கிறான் என்பதை மறவாதேயுங்கள்.

    ‘தங்கள் தகப்பனைப் பரிகாசம்பண்ணி, தாயின் கட்டளைகளை அசட்டை பண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்’ (நீதிமொழிகள் 30:17) என்கிறது வேதம்.

    இந்த கட்டுரையை வாசிக்கும் நாம், நம் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணி இறைவன் அருளும் ஆசியைப் பெற்றுக்கொள்வோம். இதை வாசிக்கின்ற ஒரு நபராவது தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து குடும்பமாய் அவர்களுக்கு பாசமழை பொழிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

    முதியோர் இல்லங்கள் மூடப்படட்டும், பிள்ளைகளின் உள்ளங்கள் திறக்கப்படட்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

    சகோ சி. சதீஷ், வால்பாறை
    இயேசுவே இவ்வீட்டின் தலைவர், என் உள்ளமும், என் வீடும் தான் இயேசுவின் முகவரி என்று சிந்தித்து செயல்படுங்கள். கடவுள்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
    இன்றைய உலகத்தில் நம்முடைய கஷ்டங்களுக் காக கடவுள் எங்கே இருக்கிறார்? நம்முடைய கஷ்டங்களை தீர்க்க மாட்டாரா? என்று ஏங்கி தவித்துக்கொண்டிருக் கும் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இயேசுவின் முகவரி எங்கு உள்ளது? என்று நாம் சற்று சிந்திப்போம்.

    தற்போது ஒருவர் வந்து நம்மிடத்தில் இயேசு எங்கே இருக்கிறார்? என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்ல முடியும். இயேசு என் உள்ளத்தில் இருக்கிறார் அல்லது எங்கள் வீட்டில் இருக்கிறார் என்றா சொல்ல முடியும். இப்படியாக சிந்தித்து கொண்டிருக்கும் தேவ பிள்ளைகளே இயேசுவானவர் வேதாகமத்தில் என்ன சொல்லுகிறார் என்றால் யோவான் 14-ம் அதிகாரம் 23-ம் வசனத்தில் இயேசு அவர்களுக்கு பிரதியுத்திரமாக, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தை கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.

    அன்பான தேவ பிள்ளைகளே நம் வீடுகளில் ‘இயேசுவே இவ்வீட்டின் தலைவர்’ என்று வாசல் கதவில் அலங்காரமாக வைத்து விட்டு, வீண் சிந்தனைகள், கணவன்-மனைவி சண்டை, பிள்ளைகளிடம் கோபம், எரிச்சல் போன்ற மனஸ்தாபங்களோடு வாழ்ந்து கொண்டு சாத்தான் நம் வரவேற்பறையில் தங்குவதற்கு நாம் இடம் கொடுத்து கொண்டிருக்கிறோம்.

    இதைத்தான் வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்த்தால் ஆதியாகமம் 4-ம் அதிகாரம் 7-ம் வசனத்தில் நீ, நன்மை செய்யாதிருந்தால் பாவம் உன் வாசற்படியில் படித்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே தேவ பிள்ளைகளே நாம் ஒவ்வொருவரும் மனஸ்தாபங்களோடு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்கிறவர்களாய் இருப்போமேயானால், இயேசுவின் முகவரியை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.

    உங்கள் வீட்டின் வாசலிலும் இப்படி வாசகத்தை எழுதி வைத்துள்ளர்களா? இப்போதே இந்த தவக்காலத்தில் தீர்மானம் செய்யுங்கள். இயேசுவே இவ்வீட்டின் தலைவர், என் உள்ளமும், என் வீடும் தான் இயேசுவின் முகவரி என்று சிந்தித்து செயல்படுங்கள். கடவுள்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    பாஸ்டர். சாம் கிப்ட்சன், நற்செய்தி ஊழியம், காங்கேயம்.
    கடவுளுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்க வேண்டிய அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஊட்டிய அவரோ, தன்னுடைய வாழ்க்கையை அவ்விதம் வைக்க விழிப்பாய் இருக்கவில்லை.
    தவக்கால சிந்தனை : முதலில் உன்னைப்பார்

    “என் சொந்த திராட்ச தோட்டத்தையோ நான் காக்க வில்லை - உன்னதப்பாட்டு 1:6”

    இரண்டு பெண்கள் பதநீர் பானைகளை சுமந்த படி சென்று கொண்டிருந்தனர். திடீரென்று ஒருத்தியின் கால் எங்கோ இடற தலையில் இருந்த பானை சாய்ந்தது. அதற்குள் மற்றவள்  அது விழுந்து விடாதபடி கைகளால் தாங்க சென்ற போது அந்த பானையும் விழுந்து உடைந்தது. இவள் தலையில் இருந்த பானையும் விழுந்து உடைந்தது. மற்றவளின் பானையை விழுந்து விடாதபடி தடுக்கப்போனது நல்லதுதான் ஆனால் தன் தலையிலும் பானை இருப்பதை அவள் நினையாமல் போனதால் இரண்டும் நஷ்டம் அடைந்தது.

    சில  நேரங்களில் மற்றவர்கள் தவறக்கூடாது, தடம் புரளக்கூடாது, தகாத விதமாய் போய்விடக்கூடாது என்று அதிகமாக நாம் ஜாக்கிரதை பட்டு செயல்படுகிறோம். ஆனால் மற்றவர்கள் சரியாக இருக்கும் படி எதிர்பார்ப்போடு செயல்படுகிற நாம் சரியாக இருக்கிறோமா என்பதை கவனித்து செயல்பட மறந்து விடுகிறோம். உண்மை, நேர்மை, நாணயம், அன்பு, பரிசுத்தம், தாழ்மை, ஒழுக்கம் என்ற மற்றவர்கள் செவ்வையாய் இருக்கும் படி பிரசங்கிக்கும் எத்தனையோ இறைப்பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் அவைகளை தவறவிட்டு விட்ட சிறப்பற்றவர்களாய் நிற்பதை காண்கின்றோம். மற்றவர்கள் மனம் திரும்பவில்லையே என்று மார்பில் அடித்து கொள்கிற எத்தனையோ பேர் தங்களுடைய வாழ்க்கையில் உண்மையான மனம் மாற்றம் ஏற்பட்டதா என்ற சிந்திக்காமல் இருக்கின்றனர்.

    சாலமோனுடைய நீதிமொழிகள் யாரையும் சிந்திக்கத்தூண்டும் தன்மையுள்ளவை. அவை மனிதன் எப்படி நடக்க வேண்டும், அவனுடைய நடவடிக்கைகள் எவ்விதம் இருந்தால் கடவுள் அவனை ஆசீர்வதிப்பார் என்ற தெளிவாக கூறுகின்றன.

    ஆனால் கடவுளுக்கு பயந்து  அவருடைய வழிகளில் நடக்க வேண்டிய அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஊட்டிய அவரோ, தன்னுடைய வாழ்க்கையை அவ்விதம் வைக்க விழிப்பாய் இருக்கவில்லை. அவர் மதியீனத்தை குறித்து பலரை எச்சரித்து கொள்டே மதியீமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். கடவுளுடைய வழிகளில் நடப்பதற்கு  அனேகருக்கு தூண்டுதல்கள் கொடுத்த அவரோ ஒருநாள் தேனுடைய வழிகளை விட்டு விலகிப்போய் கடவுளால் வரும் மகிமையை இழந்து போனார். தங்களை எந்த விதத்திலும் செவ்வை படுத்தாத பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் அதிக அக்கரை கொண்டு அவர்கள் ஒழுக்காக இருக்கும்படி அதிக ஜாக்கிரதை காண்பிக்கிறார்கள். ஆனால் பயனில்லை. பெற்றோர் வழியோ பிள்ளைகளும் போகிறார்கள். ஆம் மற்றவர்கள் மேல் கரிசனை கொள்வது நல்லது. அதே வேளையில் நம்மை குறித்தும தேவையான அளவு கரிசனை வேண்டும்.

    “உயர்ந்த கருத்துக்களை மனிதன் காதலிக்கிறான்.
    கரம் பிடிக்க சொன்னாலோ நைசாக நழுவி விடுகிறான்”

    சாம்சன்பால்.

    ‘கேளுங்கள் தரப்படும்’ என்று வாக்குரைத்த தேவன், இந்த செய்தியை வாசித்து, விசுவாசத்தோடு நீங்கள் கேட்கிறவைகளை கட்டாயம் அருளி செய்வார்.
    மனுக்குலத்தின் மீட்பிற்காகவும், இரட்சிப்பிற்காகவும் மனு அவதாரம் எடுத்த இயேசு பிரான் பூமியில் வாழ்ந்த நாட்களில் சிறுமைப்பட்ட, நொறுங்குண்ட, வியாதிபட்ட அநேகருக்கு விடுதலையும், சமாதானத்தையும், சுகத்தையும் அருளினார்.

    அவருடைய சொற்பொழிவுகளின் மூலம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டவர்கள் ஏராளம் ஏராளம். அவருடைய வார்த்தைகள் அநேகருக்கு ஜீவனையும், சமாதானத்தையும் கொண்டு வந்தது.

    துயரப்பட்டு கிடந்தவர்கள் அவருடைய வார்த்தையால் ஆறுதல் அடைந்தனர். நம்பிக்கையற்றோருக்கு அவருடைய வார்த்தைகள் நம்பிக்கையைக் கொண்டு வந்தது. இனி மரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வாழ்க்கையின் கடைசி நிமிடத்திற்கு வந்தவர்கள் கூட, புது வாழ்வு பெற்று, புதுப்பெலன் அடைந்து வாழ்க்கையில் எழும்பி பிரகாசிக்கும்படி அவருடைய வார்த்தைகள் வல்லமையுள்ளதாய் இருந்தது.

    காரணம், அவர் சர்வ வல்லவர் ஆயிற்றே. ஆகவேதான் வேதம் கூறுகிறது, ‘அவர் சொல்ல ஆகும்; அவர் கட்டளையிட நிற்கும்’ என்று.

    ஆம், அவருடைய வார்த்தையில் அவ்வளவு ஜீவன் உள்ளது.

    அவர் ஊழியம் செய்த நாட்களில் ஒரு முறை தன் சீடர்களுடன் எருசலேமிலிருந்து புறப்பட்டு எரிகோ என்னும் பட்டணத்திற்கு வந்தார். அந்தப் பட்டணத்தில் இறைப்பணியை செய்துவிட்டு எருசலேமுக்கு திரும்புகையில் திரளான ஜனங்கள் அவருக்கு பின்னால் சென்றனர்.

    அப்பொழுது எரிகோவின் வீதியில் கண் தெரியாத ஒருவன் பிச்சையெடுத்து வாழ்ந்துகொண்டிருந்தான். அவன் பெயர் பர்திமேயு. பார்வை இழந்த நிலையில் ஊனமுற்று இருந்ததால், தினமும் அவன் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்த வேண்டியிருந்தது. அவ்வாறு அவன் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கையில் இயேசுவும் அவருடைய சீடர்களும் அவனை கடந்து சென்றனர்.

    அப்பொழுது அவன் இயேசு கடந்து போகிறதை அறிந்ததும், ‘தாவீதின் குமரனே, எனக்கு இரங்கும்’ என்று சத்தமிட்டு கூப்பிட்டான். அருகிலிருந்த அநேகர் அவனை பேசாமலிருக்கும்படி அதட்டினர். ஆனால் அவனோ கூப்பிடுவதை நிறுத்தவில்லை. முன்னிலும் அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.

    ‘சத்தம் போடாதே’ என்று தன்னை அதட்டிய மனிதர்களின் சத்தத்திற்கு அவன் செவி சாய்க்காமல் தொடர்ந்து ஆண்டவரை நோக்கி சத்தமிட்டு கூக்குரலிட்டபோது, அவனுடைய சத்தம் இயேசு கிறிஸ்துவின் காதுகளில் விழுந்தது.

    இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவன் தன் மேல் வஸ்திரத்தை உதறி எறிந்துவிட்டு அவர் அருகில் வந்தான். யார் அவனை அதட்டினார்களோ, அவர்களே அவனை கூட்டிக்கொண்டு வந்து இயேசுவின் முன் நிறுத்தினர்.

    ஆண்டவர் அவனை பார்த்து, ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று இருக்கிறாய்’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் பார்வையடைய வேண்டும் ஆண்டவரே’ என்றான். அதற்கு இயேசு, ‘நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது’ என்றார். உடனே அவன் பார்வையடைந்து இயேசுவிற்குப் பின் சென்றான். (மாற்கு 10:46-52)

    எனக்கருமையானவர்களே, பார்வை இழந்தவனைப் பார்த்து ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்’ என்று அருள் நாதர் இயேசு கேட்டத்தைப் போல, உங்களை பார்த்துக் கேட்டு உங்கள் குறைவுகளை நிறைவாக்க அவர் விரும்புகிறார். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அந்த பார்வை இழந்தவன் செய்தது போல் ஆண்டவரை நோக்கி கூப்பிடுங்கள்.

    நிச்சயமாய் அவர் உங்களுக்கு உதவி செய்வார். அவரை நோக்கி கூப்பிட்டு அற்புதங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் ஏராளம் ஏராளம். இன்றைக்கே இப்பொழுதே உங்கள் தேவைகளை தெய்வத்திடம் தெரிவியுங்கள். தெய்வம் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்.

    உங்களை தடை செய்யும் மனிதர்களின் வார்த்தைகளைத் தள்ளிவிட்டு நம்பிக்கையோடு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். நிச்சயமாய் அவர் உங்கள் வேண்டுதலைக் கேட்டு உங்களுக்கு நன்மை செய்வார். ‘என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ’ என்று ஆண்டவர் நம்மை பார்த்து கேட்கிறார்.

    ஆம், அவரால் எல்லாம் செய்யக்கூடும்.

    ‘மனிதரால் கூடாதவைகள் தேவனால் கூடும்’ என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 19:26).

    மேலும், ‘தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை’ என்று வேதம் கூறுகிறது. (லூக்கா 1:37).

    ‘ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ’. (ஆதியாகமம் 18:13)

    ஆகவே, அவரை நம்பி, அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் உங்களுக்காக அற்புதங்களை செய்ய காத்திருக்கிறார். ‘கேளுங்கள் தரப்படும்’ என்று வாக்குரைத்த தேவன், இந்த செய்தியை வாசித்து, விசுவாசத்தோடு நீங்கள் கேட்கிறவைகளை கட்டாயம் அருளி செய்வார். நீங்களும் அந்த பார்வை இழந்தவனைப் போல் அற்புதங்களைப் பெற்று தலை நிமிர்ந்து நடப்பீர்கள். அல்லேலூயா.

    சகோ சி. சதீஷ், வால்பாறை.

    விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற, அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம்.
    விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற, அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம்.

    அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    இரண்டு, இந்த நூலிலுள்ள பெரும்பாலான செய்திகள் ஏற்கனவே அரசர்கள் முதல் நூல், அரசர்கள் இரண்டாம் நூல் இவற்றில் வாசித்தவையே.

    குறிப்பேடு நூலின் காலம் அரசர்களின் காலத்துக்கு முன்பு தொடங்கி, அரசர்களின் காலத்துக்குப் பின்பு நிறைவடைகிறது. பழைய எபிரேய நூலில் அரசர்கள் நூல் இறைவாக்கினர் வரிசையிலும், குறிப்பேடு நூல் வரலாற்று வரிசையிலும் வருவதால் இரண்டு விதமான பதிவுகள் ஏற்பட்டிருக்கின்றன எனலாம்.

    குறிப்பேடுகள் நூல் காலத்தால் பிந்தையது. அரசர்கள், சாமுவேல் நூல்கள் நிகழ்வு களை ஒட்டி எழுதப்பட்டவை. ஆனால் குறிப்பேடுகள் நீண்ட காலத்துக்குப் பின் எழுதப்பட்டவை.

    அரசர்கள் நூல் வட நாடான இஸ்ரேலையும், தென் நாடான யூதாவையும் கலந்து பேசியது. ஆனால் குறிப்பேடுகள் தென்நாடான யூதா நாட்டு மன்னர்களின் வரலாற்றையே பேசுகிறது. அதாவது தாவீது மன்னனையும், அவனது வழித்தோன்றல் களையும் தவிர எதையும் குறிப்பேடுகள் குறித்து வைக்கவில்லை. இந்த இரண்டு நூல்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடாய் இதைக் கொள்ளலாம்.

    அரசர்கள் மற்றும் சாமுவேல் நூல்களை விட குறிப்பேடுகள் நூல் ஆன்மிகப் பார்வையில் ஆழமாக இருக்கிறது. சிதைந்த நகரைக் கட்டியெழுப்பும் சிந்தனையும், செயல்பாடுகளும் குறிப்பேடுகளின் நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    அரசர்கள் நூலின் பார்வை இறைவாக்கினர் பார்வை என்று வைத்துக் கொள்ளலாம். மன்னர்களின் பிழையும் மக்களின் பிழையும் அதனால் விளையும் தண்டனைகளும் என அந்த நூல் பயணிக்கிறது. குறிப்பேடுகளை குருக்களின் பார்வை எனலாம்.

    ஆலயம் சார்ந்த, இறை சார்ந்த, குணாதிசயம் சார்ந்த விஷயங்களே இங்கே முக்கியப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, தாவீது மன்னன் கடவுளின் பேழையைக் கொண்டு வருவதையும், மக்களின் உற்சாகத்தையும் இந்த நூல் பேசுகிறது. எப்படி தாவீது மன்னன் கடவுளின் ஆலயத்துக்காக திட்டமிட்டார், எப்படியெல்லாம் பொருட்களைச் சேகரித்தார் போன்றவை எல்லாம் இந்த குறிப்பேடுகள் நூலில் தான் எழுதப்பட்டுள்ளன.

    தாவீதுக்குப் பின் சாலமோன் மன்னன் ஆலயத்தைக் கட்டுகின்ற நிகழ்வுகளும் குறிப்பேடுகளில் மிக விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சாலமோன் மன்னனைப் பற்றி எழுதப்பட்டுள்ளவற்றில் முக்கால்வாசி பகுதியில் ஆலயம் சார்ந்த விஷயமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.

    இன்னொரு சுவாரசியம், குறிப்பேடுகள் அரசர்களின் நல்ல பண்புகளை முன்னிலைப்படுத்த முயல்வது தான். சவுல் மன்னனை குறிப்பேடுகள் அப்படியே ஒதுக்கியிருப்பது இதனால் தான்.

    சவுல் மன்னனின் இறப்பு, தாவீது மன்னனின் அறிமுகத்துக்காக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாவீது மன்னனின் வாழ்க்கையை விரிவாகப் பேசும் குறிப்பேடுகள் அவருடைய எதிர் விஷயங்களை முழுமையாக விலக்கியிருக்கிறது.

    உதாரணமாக, சவுல் மன்னனுடனான தாவீதின் போராட்டம் குறிப்பேடுகளில் இல்லை. தாவீது மன்னனின் வாழ்வின் முக்கியமான கறையான பத்சேபாவுடனான நிகழ்வுகள் குறிப்பேட்டில் இல்லை.

    இந்த பின்னணி நமக்கு குறிப்பேடு களுக்கும், அரசர்கள் நூலுக்கும் இடையேயான வித்தியாசத்தை விளக்குகிறது. குறிப்பேடுகள் நூல் மொத்தம் எட்டு மன்னர்களைப் பற்றி பேசுகிறது. தாவீது, சாலமோன், ஆசா, யோசபாத்து, யோராம், யோவாஸ், எசேக்கியா மற்றும் யோசியா ஆகியோரே அந்த மன்னர்கள்.

    இதில் யோராம் மட்டுமே மோசமான மன்னன். இவர்களைத் தவிர யூதாவில் ஆண்ட மிக மோசமான பன்னிரண்டு மன்னர்களைப் பற்றி குறிப்பேடுகள் கண்டுகொள்ளவில்லை.

    ‘குறிப்பேடுகள்’ எனும் வார்த்தைக்கு ‘இந்த நாளின் நிகழ்வுகள்’ என்று பொருள். இந்த நூலை எழுதியது இறைவாக்கினர் எஸ்ராவாகவோ, அவரைச் சார்ந்த ஒருவராகவோ இருக்கலாம் என்பது மரபுச் செய்தி.

    கி.மு. 450-க்கும் கி.மு. 430-க்கும் இடைப்பட்ட காலத்தில் இது எழுதப்பட்டிருக்கலாம். 29 அதிகாரங்களும், 941 வசனங்களும், 20 ஆயிரத்து 369 வார்த்தைகளும் இந்த நூலில் உள்ளன.

    இந்த நூலும் மூல மொழியான எபிரேயத்தில் ஒரே நூலாக இருந்து கிரேக்க மொழிபெயர்ப்பின் போது இரண்டாகப் பிரிக்கப்பட்டது தான். முதல் ஒன்பது அதிகாரங்களில் உள்ள தலைமுறை அட்டவணை ஆதாம் முதல் தாவீது வரை விரிகிறது. அடுத்த இருபது அதிகாரங்கள் தாவீது மன்னனின் முப்பத்து மூன்று ஆண்டு கால ஆட்சியைப் பேசுகிறது.

    பாபிலோனிலிருந்து மக்கள் மீண்டும் எருசலேமுக்குத் திரும்பும் நம்பிக்கையின் நூலாக குறிப்பேடுகள் நூல் இருக்கிறது. எஸ்ரா ஒரு கூட்டம் மக்களை கொண்டு வருகிறார். அவர் ஒரு ஆன்மிகத் தலை வராய் மட்டுமின்றி, அரசியல் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்கிறது விவிலியம்.

    இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழவேண்டும் எனும் சிந்தனையையும், வாழ்வில் அனைத்திற்கும் முதன்மையாய் இறைவனே இருக்கவேண்டும் எனும் புரிதலையும் இந்த நூல் தருகிறது. 

    - சேவியர்.
    பத்துக்காணி குருசுமலை திருப்பயண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    அருமனை அருகே, பத்துக்காணி குருசுமலையில் திருப்பயண விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு திருவிழா கொடியை நெய்யாற்றின்கரை ஆயர் இல்லத்தில் இருந்து இருசக்கர வாகன பேரணியாக குருசுமலைக்கு கொண்டு வந்தனர். மேலும், கடையாலுமூட்டில் இருந்தும் குருசுமலைக்கு இருசக்கர வாகன பேரணி நடந்தது.

    பிற்பகல் 3 மணிக்கு ஆனப்பாறை ஆலயத்தில் இருந்து கொடிபயணம் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் விழா கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், கொல்லம் மாவட்ட ஆயர் பால் ஆன்டனி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அத்துடன், மலையின் உச்சியில் அருட்பணியாளர் அஜீஷ் கிறிஸ்துதாஸ் தலைமையில் கொடி ஏற்றப்பட்டு திருப்பலி நடந்தது.

    இரவு குருசுமலை திருவிழா பொதுக்கூட்டம் நடந்தது. சங்கனாசேரி மாவட்ட உதவி பேராயர் மார் தோமஸ் தலைமை தாங்கினார். ஆயர் வின்சென்ட் சாமுவேல், வின்சென்ட் பீட்டர், கேரள மாநில அறநிலையதுறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ஹரீந்திரன், சிவகுமார், வின்சென்ட், திருவனந்தபுரம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மது, குருசுமலை இயக்குனர் வின்சென்ட் பீட்டர் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, கத்தோலிக்க இளைஞர் ஆண்டு விழா நடந்தது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 7-ந் தேதி மாலை 4 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து கொடியிறக்கம், நிறைவு நாள் கூட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குருசுமலை விழா அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.
    ‘நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்’ (ஏசா.25:4).
    அகில உலகத்தையும் படைத்த கர்த்தர் பரலோகத்தின் சிங்காசனத்திலிருந்து மனுபுத்திரை கண்நோக்கி பார்க்கிறார். அவரிடத்தில் வாஞ்சையாய் இருக்கிற மனிதனின் எல்லா இக்கட்டான காலத்திலும் விடுவித்து அவனை உயர்ந்த ஸ்தானங்களில் வைக்கிறார்.

    ‘அவன் என்னிடத்தில் வாஞ்சையாய் இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன். என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்’ (சங்.91:14)

    தேவனுடைய நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம். வேதத்தை வாசித்து அதன்படி ஜீவிதம் அமையும் போது உன் சத்துருக்களை துரத்தி, தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்.

    ‘மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்’ (நீதி. 29:25)

    யோபு சொன்னார், ‘என்னைக்கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்’ என்று.

    நாம் அவர்மேல் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும். நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள். நம்மை கர்ப்பத்திலிருந்து எடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.

    மனுஷன் மேல் நாம் நம்பிக்கை வைத்தால் சமாதானத்தை இழந்து போவோம். மனுஷனை நம்பினால் நமக்கு கெடுதல் செய்வார்கள். நீங்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, நித்திய ராஜியத்தின் மேல் நம்பிக்கை வையுங்கள்.

    ‘என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும். என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்’ (சங்.59:1)

    அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். மான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல உன்னை தப்புவிப்பார். மலைகளின் இடுக்கில் வசிக்கும் முயல்களை தப்புவிக்கும் தேவன் உன்னை தப்புவியாமல் இருப்பாரோ?.

    உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாக எழும்பும்போது, அவர்களால் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் செயல் இழந்து போகும். ஒரு வழியாய் உனக்கு எதிராக புறப்பட்டு வருவார்கள். ஆனால், ஆண்டவர் உனக்கு அடைக்கலமாக இருக்கும்போது ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்.

    இயேசுவை நோக்கிக் கூப்பிடும் போது, நெருக்கப்படுகிற நாளில் பெலனாக இருப்பார். தீங்கு நாளில் அடைக்கலமாக இருப்பார். ஆபத்து நாளில் அரணான கோட்டையாக இருப்பார். நீ சமாதானமுள்ள தேசத்திலே குடியிருப்பாய்.

    ‘ஜனங்களே எக்காலத்திலும் அவரை நம்புங்கள். அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள். தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார்’. (சங்.62:8)

    நீ தனிப்பட்டவனாக வாழ்க்கை நடத்தினாலும், குடும்பத்தாரால் நீ ஒதுக்கப்பட்டாலும், உன்னை அன்பு செய்ய யாரும் இல்லாது இருந்தாலும் உன் இருதயத்தை ஊற்றி தேவன் மேல் நம்பிக்கை வைத்து ஜெபிக்கும் போது, நீ சந்தோஷத்தில் மகிழ்ந்து தேவஅன்பில் நிலைத்திருப்பாய்.

    அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன் என்று சொல்லுவாய். அவர் உனக்கு அடைக்கலம் ஆனதால் நீ அசைக்கப்படுவதில்லை. அவர் மகிமை உனக்கு பெலனாகும். அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள். சிறுமைப்பட்டவர்களுக்கு அடைக்கலமானவர்.

    ‘நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்’ (ஏசா.25:4).

    அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார். ஏழைக்கு நமது கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும். ஏழையின் கூலியை பொழுதுபோகுமுன்னமே கொடுத்துவிட வேண்டும். பகலிலே வெயிலுக்கு நிழலாக இருப்பார். பெருங்காற்றுக்கும், மழைக்கும் அடைக்கலமாய் இருப்பார். ஏழை எளியவர்களுக்கு உன் கையைத் தாராளமாய் திறந்து தான தர்மஞ்செய். உன் தலைமுறை பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் பெருகும்.

    வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான். அவன் நீதி என்றும் நிற்கும். அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர். ஏழைகள் சுகமாய் இருப்பார்கள். ஏழைக்கு இரங்குகிறவன் தேவனுக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். ஏழை எளியவர்களின் கண்ணீரை துடைப்பார். உன் துக்க நாட்கள் முடிந்துபோகும், ஆமென்.

    ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி. பூமணி, சென்னை-50.
    இந்த தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையை மாற்றவும், கடவுளுக்கு ஏற்றதாக நம்முடைய இதயத்தை மாற்றவுமே இந்த நாட்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
    கடவுளுக்கும் நமக்கும் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டு மனமாற்றத்தை நாம் பெற வேண்டி தங்களையே தயார்படுத்திக்கொள்ளக்கூடிய காலம் தான் இந்த தவக்காலம். இந்த மனமாற்றத்தை பெற நாம் என்ன செய்யவேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.

    இந்த தவக்காலத்தில் சிலர் நான் சாப்பிடாமல் உபவாசம் இருக்கிறேன். நீங்கள் எப்படி? என்று கேள்வி கேட்டுக்கொள்வார்கள். இன்னும் சிலர் நான் பல்வேறு கெட்ட பழக்கங்களை விட்டு விட்டேன். இந்த 40 நாட்களிலாவது அதை செய்யாமல் இருக்கிறேன் என்று சொல்வார்கள். இப்படியெல்லாம் பேசி விட்டு பின்னர் லெந்து நாட்கள் முடிந்தவுடன் தீய பழக்கங்களை மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள்.

    எனவே உபவாசம் இருப்பது என்றால் 3 வேளை உணவை ஒருமுறை, இரண்டு முறை அல்லது மூன்று முறையும் சாப்பிடாமல் இருப்பது, இன்னும் சிலர் தீய பழக்கங்களில் இருந்து விலகி இருப்பது மட்டுமல்ல, ஆத்ம தியாகத்துடன் உபவாசம் இருக்க வேண்டும். இதைத்தான் இயேசுவும் கல்வாரி சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்பு உபவாசம் இருந்து தன் ஆத்மாவை தேவனிடத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தார் என்று வேதாகமத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே ஆத்ம தியாகம் என்றால் தினமும் வேதம் வாசிக்க வேண்டும். கடவுளிடம் தினமும் நம்முடைய வேண்டுதல்களை ஜெபம் செய்ய வேண்டும். அவர் நமக்காக கல்வாரி சிலுவையில் பட்ட கஷ்டங்கள் குறித்து ஆராய வேண்டும். நம்முடைய இதயத்தை கடவுளுக்கென்று மாற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் கடைபிடித்தால் கடவுள் நமக்கு நல்ல மனமாற்றத்தை தர வல்லவராய் இருக்கிறார்.

    இப்படி செய்யாமல் நான் இந்த 40 நாட்கள் மட்டும்தான் உபவாசம் இருப்பேன், தீய பழக்கங்களை விட்டு விடுவேன். பின்னர் திரும்பவும் பழைய மனிதாக மாறி விடுவேன் என்பது அல்ல. இந்த தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையை மாற்றவும், கடவுளுக்கு ஏற்றதாக நம்முடைய இதயத்தை மாற்றவுமே இந்த நாட்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து போகக்கூடாது. எனவே நம்முடைய மனதில் மாற்றம் அடைந்து கிறிஸ்துவுக்குள்ளாய் வாழ தேவன்தாமே நமக்கு கிருபை செய்வாராக ஆமென்.

    சகோ.ஜான்பீட்டர், ராக்கியாபாளையம், திருப்பூர்.
    சங்கரன்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து கிளைப்பங்கு சம்சிகாபுரம் புனித லொயெலா இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு தவக்கால நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
    கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலம் கடந்த 6-ந் தேதி துவங்கியது. அன்று சாம்பல் புதன் என அழைக்கப்படுகிறது. இந்த 40 நாள் தவக்காலத்தின் பயனை விளக்கும் வகையில் அனைத்து ஆலயங்களிலும் புனித நடைபயணம் செய்து வருகின்றனர். சங்கரன்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து கிளைப்பங்கு சம்சிகாபுரம் புனித லொயெலா இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு தவக்கால நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்கரன்கோவில் வட்டார அதிபர் மற்றும் பங்குத்தந்தை சாக்கோவர்கீஸ் தலைமையில் இரு ஆலயங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    தவக்கால நடைபயணம் சம்சிகாபுரம் கிளை பங்கில் நிறைவு பெற்றது. பின்னர் தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை சம்சிகாபுரம் கிளை இறைமக்கள் செய்திருந்தனர்.
    ×