என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    வத்தலக்குண்டு அருகே புனித சவேரியாரின் கை எலும்பு கலசத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    வத்தலக்குண்டு அருகே மேலபெருமாள்கோவில்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை புரிந்து வருகின்றனர். இதனால் ராணுவ கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இயேசுவின் சீடரான பிரான்சிஸ் சேவியர் என்ற புனித சவேரியார் ஆவார். இவருடைய உடல் கோவாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பல ஆண்டுகளாக கெடாமல் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

    அவருடைய உடலில் இருந்து கையை மட்டும் ரோமாபுரிக்கு கொண்டு சென்றனர். அதன் ஒரு பகுதியை அங்கு இருந்து கொண்டு வந்து தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு என்னுமிடத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருடைய கை எலும்பின் ஒரு பகுதி ரோமாபுரியில் இருந்து மேலபெருமாள்கோவில்பட்டிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

    பின்னர் பங்கு தந்தை ஜெயராஜ் வீட்டில் இருந்து சவேரியாரின் கை எலும்பின் ஒரு பகுதியை கலசத்தில் வைத்து மலர்களால் அலங்கரித்து, அவருடைய திருவுருவச் சிலையுடன் ஊர்வலமாக ஆலயத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கலசத்தை ஆலயத்தில் வைத்தனர்.

    அங்கு மதுரை மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்கு தந்தை ஜெயராஜ், திருத்தொண்டர் ஆண்டனிசெழியன் மற்றும் மேலக்கோவில்பட்டி, ரெட்டியபட்டி, கீழக்கோவில்பட்டி, சின்னுபட்டி, கரட்டுப்பட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். 
    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள புனித ஆக்னேஷ் அன்னை ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இருதயபுரம் கிராமத்தில் புனித ஆக்னேஷ் அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா நடைபெற்று, ஆடம்பர தேர்பவனி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னேஷ் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.

    பின்னர் பங்கு தந்தை ஜெயராஜ் தலைமையில் தேர்பவனி நடைபெற்றது. தேர் பவனியானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    எப்போதெல்லாம் கர்த்தருடைய உயர்வு உங்களுக்கு வருகிறதோ உடனே உங்களை எதிர்க்க சத்துரு வருவான் என்பதை மறந்து போகாதீர்கள்.
    ‘கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார், அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை, நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்’. உபாகமம் 31:8

    எனக்கன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்களை அன்போடு வாழ்த்துகிறேன்.

    ‘அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமூகம் என்னோடே கூடச் செல்லாமற் போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்’. யாத்திராகமம் 33:15.

    ஆம் பிரியமானவர்களே, மோசேயின் இருதயமெல்லாம் கர்த்தருடைய சமூகம் அல்லது அவருடைய பிரசன்னத்தைக் குறித்தே இருந்தது. இஸ்ரவேல் ஜனங்களும், ஆரோனும் இணைந்து பொன் கன்றுக்குட்டியை செய்து வழிபட்டதன் விளைவாக கர்த்தருடைய கோபம்மூண்டது. ‘எனவே இனி நான் உங்களோடு வரேன், என் தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்புவேன்’ என்று மோசேயை பார்த்துக் கர்த்தர் கூறின போதுதான் யாத்திராகமம் 33:15 ல் “ஆண்டவரே உம்முடைய சமூகம் என்னோடுகூட செல்லாமல் போனால் எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டு போக வேண்டாம்” என மிகுந்த பாரத்தோடு கேட்டான்.

    கர்த்தருடைய பிள்ளைகளே! கர்த்தருடைய சமூ கத்தின் மேல் மிகுந்த ஆர்வமுடையவர்களாயிருங்கள். அவருடைய சமூகம் தான் உங்களுக்குப் பேரானந்தம்.

    ‘ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமூகத்தில் பரி பூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு’. சங்கீதம் 16:11

    உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக கர்த்தர் போவார்

    “கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.” II சாமுவேல் 5:20.

    கர்த்தர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி தாவீதை இஸ்ரவேலின் மேல் அபிஷேகம் பண்ணினார். கர்த்தர் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார் என பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது தாவீதை தேடுவதற்கு வந்தார்கள்.

    “தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது அவர்கள் எல்லோரும் தாவீதை தேடும்படி வந்தார்கள்: அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப் போனான்.” II சாமுவேல் 5:17

    கர்த்தருடைய பிள்ளையே, இவ்வாண்டு முழுவதும் கர்த்தருடைய சமூகம் எங்களுக்கு முன்பாக செல்லும் அதே வேளையில், உங்களுக்கு முன்பாக செல்லுகிற கர்த்தருடைய சமூகத்தை நீங்கள் அறிந்து கொள்ள உங்களுக்கு அவருடைய நடத்துதல் அவசியமாகும்.

    எப்போதெல்லாம் கர்த்தருடைய உயர்வு உங்களுக்கு வருகிறதோ உடனே உங்களை எதிர்க்க சத்துரு வருவான் என்பதை மறந்து போகாதீர்கள்.

    அன்றைக்கு தாவீதுக்கு விரோதமாய் பெலிஸ்தர் வந்தபோது அவர்களை என் கையில் ஒப்புக் கொடுப்பீரா என தாவீது விசாரித்தது போல, அவ்வப்போது உங்கள் வீடு களிலோ, பிள்ளைகள் வாழ்விலோ அல்லது உங்கள் வேலை மற்றும் தொழிலிலோ எதிர்ப்புகள் வரும்போது தாவீதைப் போல தேவனிடத்தில் விசாரிக்க மறவாதீர்கள். அன்றைக்கு தாவீது தேவனிடத்தில் விசாரித்தான். ஆகவே தண்ணீர் உடைந்து ஓடுவது போல கர்த்தர் சத்துருக்களை தாவீதுக்கு முன்பாக உடைந்து ஓடப்பண்ணினார்.

    வேதம் கூறுகிறது, “பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.” II சாமுவேல் 5:22 என்றாலும் மீண்டும் தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததாக II சாமுவேல் 5:23 சொல்லுகிறது.

    பிரியமானவர்களே, உங்களுக்கும், எனக்கும் முன்பாக என் ஆண்டவருடைய சமூகம் இவ்வாண்டு முழுவதும் செல்லப்போகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதே வேளையில் ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளையும் நம்முடைய சத்துருவை கர்த்தர் மேற்கொள்ள எந்த நேரத்தில் நமக்கு முன்பாக புறப்படுகிறார் என்ற வெளிப்பாடு எல்லா தேவபிள்ளை களுக்கும் தேவை.

    முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது சீக்கிரமாய் எழும்பிப்பேர், அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறியடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.” II சாமுவேல் 5:24

    ஆம் தேவனுடைய பிள்ளையே, யுத்தம் கர்த்தருடையதாக இருந்தாலும், உங்களுக்கும் எனக்கும் அவர் யுத்தம் செய்கிற தேவன் என்றாலும், அவர் நமக்கு முன்பாக செல்லுகிற வேளையை அறியும்போது சீக்கிரமாக எழும்பி செயல்பட வேண்டும் என கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.

    “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” I யோவான் 3:8 என்ற வசனத்தின்படி இவ்வாண்டு முழுவதும் உங்கள் ஆவி ஆத்மா சரீரத்திற்கு விரோதமாக உங்கள் குடும்பத்திற்கும் பொருளாதாரத்திற்கும் விரோதமாக அவன் கிரியை செய்ய தொடங்கும் முன்பே செல்வார். சத்துருவை முறியடித்து சகல ஆசீர்வாதங்களால் கிருபையாக நடத்துவார்.

    ஆகவே அனுதினமும் அவருடைய சமூகத்தை நாடுங்கள். அவருடைய சமூகம் இவ்வாண்டு முழுவதும் பேரானந்தமாக இருக்கும்.

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    விண்ணுலகில் நவ விலாச வான் தூதர்களின் தலைவர் புனித மிக்கேல். இவரது வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    விண்ணுலகில் நவ விலாச வான் தூதர்களின் தலைவர் புனித மிக்கேல். உலகம் படைக்கப்படும் முன்னர் தூதர்களின் விடிவெள்ளி என அழைக்கப்பட்டவன் லூசிபர். உலகிற்கு மீட்பர் தேவை மீட்பது தன் மைந்தன் என இறைவன் திருவுளமானார் அதிதூதராக தான் இருக்க. மனுவுரு எடுக்கும் மீட்பரை அராதிக்கமட்டேன் என்ற இறுமாப்பு லூசிபரில் எழுந்தது. அகங்காரம் கொண்டான் ஆணவத்தால் தேவனையே எதிர்த்தான். நல்வழி காட்ட மிக்கேல் அதிதூதர் விரைந்தார். அவரின் நல்லுரைகளை உதறித்தள்ளினான் லூசிபர்.

    "பரத்தில் பணிவதை விட நரகில் ஆட்சிபுரிவதே மேல் " என்றான்.

    இறைவனுக்கு நிகரானவன் யார்? என வீரமுழக்கமிட்டு போராடி லூசிபரையும் அவன் சகாக்களையும் எரிநரகில் வீழ்த்தினார் மிக்கேல் அதிதூதர். மிக்கேல் என்பதின் பொருள், இறைவனுக்கு நிகரானவன் யார் என்பதே.

    "வைகறைப் புதல்வனே, விடிவெள்ளியே, வானினின்று நீ வீழ்த்த வகைதான் என்னே!"(இசையாஸ் 14/12)

    "உன்னதருக்கு ஒப்பாக என்னை ஆக்கிக்கொள்வேன் என்று நீ உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய். ஆயினும் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய் படுகுழியின் ஆழத்தில் வீழ்த்தப்பட்டாய்.(இசையாஸ் 14/14,15)

    "பின்பு ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும், ஒரு பெரிய சங்கிலியையும் தன் கையில் பிடித்துக்கொண்டு, வானத்திலிருந்து இறங்கி வரக்கண்டேன், சாத்தானென்று சொல்லப்பட்ட ஆதிசர்ப்பமகிய பறவை நாகத்தை அவர் பிடித்து ஆயிரம் வருடமளவாக அவர் கட்டி வைத்து அது ஜனங்களை மோசம் போகாதபடிக்கு, அதை பாதாளத்தில் தள்ளியடைத்து, அதன் மேல் முத்திரையிட்டார்" (காட்சியாகமம் 20/1மூ 3)

    இங்கு ஆயிரம் வருடங்கள் என்பது அனேக யுகங்களைக் குறிக்கும், இவ்வாறு குறிப்பிடப்பட்ட தேவன் தூய மிக்கேலே

    காட்சியாகமம் 12/7 முதல் 9 வரை உள்ள வசனங்கள் வருமாறு :-

    "அன்றியும் வானத்திலே ஒரு பெரிய யுத்தம் உண்டாயிற்று. மிக்கேலும் அவர் தூதர்களும் பறவை நாகத்தோடு யுத்தம் செய்தார்கள். பறவை நாகமும் அவனுடைய தூதர்களும் யுத்தம் செய்தார்கள் அவர்கள் ஜெயங்கோள்ளவும் இல்லை. வானத்திலே அவர்கள் இருந்த இடம் அது முதல் காணப்படவுமில்லை. அப்படியே ஆதி சர்ப்பமாகிய அந்தப் பெரிய பறவை நாகம் வெளியே தள்ளப்பட்டது. அதற்கு பேய் என்றும் சாத்தான் என்றும் பெயர். அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது. அதன் தூதர்களும் தள்ளப்பட்டார்கள்."

    இதனால்தான் தூய மிக்கேல் அதிதூதரின் சொரூபத்தில், அவர் பாதத்தின் கீழ் பசாசு மிதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பசாசுக்கு அதிதூதர் மிக்கேல் என்றாலே நடுக்கம். அவரிடம் போரிட்டு வெற்றி கொள்ள அதனால் இயலாது அதிதூதர் மிக்கேல் வல்லமை மிக்கவர். ஆயினும் தாழ்ச்சியுடயவர். அவர் சமாதான தூதன்.

    மரண வேளையில் நம்முடனிருந்து பசாசுக்களை ஓட்டுபவர். உலகமுடிவில் எக்காளம் ஊதும் அதிதூதர், அவர் எனக் கருதப்படுகிறது இதனை:-

    "அக்காலத்தில் உன் இனத்தாருக்குக் காவலாக சேனைத் தலைவரான மிக்கேல் எழுப்புவார், மக்களினம் தோன்றியதுமுதல் அக்காலம்வரை இருந்திராத துன்ப காலம் வரும்."

    "யார் யார் பெயர் நூலில் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்ணில் உறங்குகிற பலருள் சிலர் முடிவில்லா வாழ்வடைவதற்கும் , சிலர் முடிவில்லா இழிவுக்கும், நிந்தைக்கும் ஆளாவதற்கும் எழுந்திருப்பார்கள்" (தானியேல் 12/1,2) என்ற வேதப்பகுதி உறுதிப்படுத்துகிறது.

    13-ம் சிங்கராயர் பாப்பிறை ஒரு தினம் திருப்பலி நிறைவேற்றி முடித்தவுடன் மூர்ச்சையானார், யாவரும் அவர் இறந்துவிட்டார் என எண்ணினர் வெகு நேரத்திற்குப்பின் அவர் சுயநினைவு பெற்றார். திருச்சபையின் மீது சாத்தானால் வர இருக்கும் தீதுகளை அவர் காட்சியாகக் கண்டு நடுங்கி விட்டார். தூய மிக்கேல் அதிதூதர் விரைந்துவந்து சாத்தானுடன் போர் செய்து, அதனையும் தோழர்களையும் நரகத்தில் தள்ளியதையும் அக்காட்சியில் அவர் கண்டார். உடனே தூய பிதா அவர் மீது ஒரு ஜெபத்தை எழுதி உலகமெங்கும் அது செய்யப்படவேண்டுமென ஆணையிட்டார்.

    திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே அவர் திருச்சபையின் காவற்தூதராகவே போற்றப்பட்டார். ஆயினும் 5-ம் நூற்றாண்டில்தான் அவர் திருநாள் செப்டம்பர் 29-ம் நாள் கொண்டாடப்படவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதிலிருந்தே மைக்கேல் மாஸ் விடுமுறை தோன்றியது.

    திருநாள் கொண்டாடிட நடந்த நிகழ்ச்சி சுவையானது.

    கி.பி.404-ல் தூயமிக்கேல் காட்சி தந்ததால் சிபான்றோ என்ற இடத்தில் உள்ள குகையொன்று சிறப்பு பெற்றது. சிபான்றோ மக்கள் மீது அண்டை நாட்டார் படையெடுத்திட முயற்சிகள் செய்தவண்ணம் இருந்தனர். பக்தியுள்ள ஆயர் தங்களை காத்திட அதிதூதர் தூயமிக்கேலிடம் மன்றாட மக்களைக் கேட்டுக்கொண்டார்.

    போருக்கு முந்தின இரவு அதிதூதர் ஆயருக்கு காட்சியளித்து, அடுத்தநாள் பகைவர்கள் தோற்று ஓடிடுவர் என்றார். அடுத்ததினம் யுத்தம் ஆரம்பமானதும் பெரும்புயல் வீசியது. பயங்கர இடியும் மின்னலும் ஏற்பட்டன. மின்னல் அம்புபோல் பாய்ந்து பகைவரை தாக்கின எதிரிகள் எதிர்க்க இயலாது படைக்களம் விட்டு பயந்து ஓட்டம்பிடித்தனர், புறமுதுகு காட்டி ஓடினர். இவ்வெற்றியின் நினைவாக அங்கு இருந்த கெபி ஒரு ஆலயமாக மாற்றியமைக்கபட்டது. பல புதுமைகள் இங்கு நடந்தேறின. திருச்சபையும் அவருக்கு திருநாள் அமைத்தது. செப்டம்பர் 29-ல் அவர் திருநாள் சிறப்பிக்கப்படுகிறது.

    பசாசுகளின் சகல மாய்கையிளிருந்தும் நம்மைக்காப்பவர் தூயமிக்கேல் அதிதூதர் போர் வீரர்களின் பாதுகாவலராகவும் அவர் புகழப்படுகிறார் உலகம் உடல். அலகை என்பனவற்றுடன் நாம் அன்றாடம் நடத்தும் போரில் வெற்றியடைய அவரின் உதவி நமக்குத்தேவை எனவே அவர்மீது பக்தி கொண்டு அவரை வேண்டுவது, சிறந்த பக்தி முயற்சியாகும்

    அதிதூதர் மிக்கேல் வலிமை பொருந்தியவர், திருச்சபைக்குப் பாதுகாவலர், கிறிஸ்தவ நாடுகளுக்கும், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பாதுகாவலர். அது மட்டுமின்றி, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் உதவியாளரும் புனிதமிக்கேலே! அவர்களைத் தேற்றுபவரும் புனிதமிக்கேலே! மரித்தோருக்கானத் திருப்பலியில்

    தேவரீர் முற்காலத்தில் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியாருக்கும் வாக்களித்த பேரின்ப ஒளிக்கு அவர்களை வெற்றிக்கொடி தாங்கும் தூயமிக்கேல் தூதர் அழைத்துச் செல்வாராக என வேண்டப்படுகிறது.

    நமது துன்ப வேளையில் தவறாது உதவும் நண்பர் தூயமிக்கேல் அதிதூதர். அணுகுவோரை ஆதரிப்பவர் தூயமிக்கேல் அதிதூதர்.

    வேண்டுவோரை வாழவைப்பவர் தூயமிக்கேல் அதிதூதர்.

    நமக்காகவும், நம் மறைக்காகவும் அவரை அனுதினமும் வேண்டிடுவோம்.
    பாபநாசம் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும்.
    நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியில் புகழ் பெற்ற தஞ்சாவூர் - கும்பகோணத்திற்கும் நடுவில் உள்ள தாலுகா நகரம் தான் பாபநாசம். இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் விளங்குகின்றார்.

    புனித செபஸ்தியார் வரலாறு

    புனித செபஸ்தியார் கிபி 285ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள நர்ப்போன் என்னும் நகரில் பிறந்தார்.

    அக்காலத்தில் ரோமில் கிறிஸ்வர்கள் துன்பப்படுவதைக் கண்ட செபஸ்தியார் உதவிகரம் நீட்டினார். இன்றும் ரோமாபுரியில் உள்ள புனித செபஸ்தியார் கல்லறையில் ஆயிரைக்கனக்கான மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

    திருத்தல வரலாறு

    இத்திருத்தலம் மேற்குப் பார்த்து அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் முதல் பங்கு தந்தையாக 1933ம் ஆண்டு. ஜே.சி.காப்பன் சுவாமிகள் பொறுப்பேற்றார்.

    நூற்றாண்டு விழா:

    1990ம் ஆண்டு திருத்தலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 1992ல் கோவில் முழுவதும் புதுப்பிக்கும் பணி நடைப்பெற்று கோயிலுக்கு பின்புறம்
    உள்ள அடர்ந்த காடுகளை அகற்றி புனித செபஸ்தியார் மணிமண்டபமும், புனித செபஸ்தியார் கலையரங்கமும் கட்டினர். கோயிலின் உள்ளே வடபுறத்திலும், தென்புறத்திலும் படுக்கை நிலையில் உள்ள செபஸ்தியாருக்கும், நின்று கொண்டிருக்கும் செபஸ்தியாருக்கும் தனித்தனியாக பீடங்கள் அமைத்தார். மர வேலைபாடுகளுடன் தேர் போல் அமைத்து புனிதரின் சுரூபத்தை (சிலை) நிறுவியுள்ளார். மேலும் கேரளாவிலிருந்த கொண்டு வரப்பட்ட முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட பழமை வாய்ந்த ஆளுயுர சுரூபத்தை ஆலய வளாகத்தி்ல் வைத்து சிறப்பித்துள்ளார்.

    திருவிழாவின்சிறப்பு :


    ஓவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது ஈஸ்டர் சண்டே (உயிர்ப்பு ஞாயிறு) பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. 
    அற்புதமான ஒரு சிறுகதையை வாசிக்கும் உணர்வை இந்த பரபரப்பான நூல் நமக்குத் தருகிறது. இதன் பழமைக்காகவும், அதில் தெறிக்கும் இலக்கிய புலமைக்காகவும் இந்த நூலை வாசிப்பவர்களும் உண்டு.
    விவிலியத்தில் மூன்று நூல்கள் பெண்களின் பெயரால் வருகின்றன. அவற்றில் ரூத்து, எஸ்தர் போன்றவை பழைய ஏற்பாட்டிலும், யூதித்து எனும் நூல் இணை திருமறையிலும் வருகிறது.

    ரூத்து நூல் எபிரேய மொழியில்‘ மெஹில்லாத் ரூத்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு ‘ரூத்து பற்றிய சுருளேடு’ என்று பொருள்.

    மேலோட்டமான வாசிப்புக்கு எளிமையான ஒரு இனிய கதை போலத் தோன்றினாலும் இந்த நூல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

    இந்த ரூத்துதான் தாவீது மன்னனின் முப்பாட்டி. அந்தத் தாவீது மன்னனின் வழிமரபாக வந்தவர்கள்தான் இயேசுவின் மண்ணுலகத் தந்தையர் யோசேப்பும், மரியாவும்.

    இயேசுவின் வழிமரபோடு இணைந்திருப்பதாலேயே இந்த நூல் பல ஆன்மிக அர்த்தங்களை உள்ளடக்கியதாய் மதிக்கப்படுகிறது.

    இதை எழுதியவர் யார் என்பது தெளிவாக இல்லை. இறைவாக்கினர் சாமுவேல் எழுதியதாக சிலர் சொல்வதுண்டு. ஆனால் சாமுவேலின் காலத்திற்குப் பிந்தைய செய்திகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது அந்த வாதத்தை வலுவிழக்கச் செய்கிறது.

    ஆனால் இது நீதித் தலைவர்களின் காலத்தில் எழுதப்பட்ட நூல் என்பதில் மட்டும் மாற்றுக் கருத்து இல்லை.

    நகோமிக்கு இரண்டு மகன்கள், ஓர்பா, ரூத்து என இரண்டு மருமகள்கள். காலம் வலிகளை அவளுக்குப் பரிசளிக்கிறது. மோவாபு எனும் அன்னிய நாட்டில் வாழ்கின்றனர். கணவன் இறக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின் மகன்களும் இறந்து விடுகின்றனர்.

    இரண்டு மருமகள்களோடு நிராயுதபாணியாகும் நகோமி மருமகள்களை அனுப்பி விடுகிறார். இரண்டு மருமகள்களும் இஸ்ரயேல் குலத்தைச் சாராத அன்னிய பெண்கள்.

    ஓர்பா மாமியாரின் சொற்படி அவரை விட்டு விலகிச் செல்கிறார். ரூத்தோ அவரை ஓர் அன்னையைப் போலப் பற்றிக் கொண்டு விலக மறுக்கிறார். இனிமேல் உங்கள் தேசமே என் தேசம், உங்கள் கடவுளே என் கடவுள் என அவர் நகோமியோடு பெத்லேகேமுக்குப் பயணிக்கிறார்.

    இந்த பெத்லேகேம்தான் தாவீது பிறந்த ஊர். இந்த பெத்லேகேம்தான் இயேசு பிறந்த ஊர்.

    அந்நாட்களில் கைம்பெண்கள் கவனிப்பாரின்றி விடப்பட்டனர். அவர்களுக்குரிய பாதுகாப்பு கிடைப்பதும் கேள்விக்குறியாய் இருந்தது. ஆனால் ஆண்டவரை நம்பி வரும்போது அனைவரையும் அவர் பரிவுடன் ஆதரிக்கிறார்.

    அந்நாட்களில் வயல்களில் அறுவடை நடக்கும் போது சிந்துகின்ற கதிர்களைப் பொறுக்க ஏழைகள் வருவதுண்டு. கிடைக்கின்ற சொற்ப தானியத்தைக் கொண்டு அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஓட்டுவார்கள். அவர்களுக்கு பல இன்னல்கள் நேரவும், பணியாளர்களால் தொந்தரவு நேரவும் வாய்ப்புகள் உண்டு.

    ரூத்து தன்னையும், மாமியாரையும் காப்பாற்ற கதிர் பொறுக்கச் செல்கிறார். உழைப்பின் தேவையை ரூத்தின் செயல் விளக்குகிறது. புதிய தேசம். புதிய நிலம். புதிய மனிதர்கள். எனினும் துணிச்சலாய் செல்கிறார் ரூத்து.

    மனிதனின் முயற்சிகளின் வழியில்தான் இறைவனின் அருள் வழங்கப்படுகிறது. சோம்பேறி களின் வாசலில் இறையருள் பொழியப்படுவதில்லை.

    இறைவனின் அருளால் அவர் செல்வது போவாசு எனும் ஒருவருடைய வயலுக்கு. அவர் நகோமியின் நெருங்கிய உறவினர். ரூத்தை மணந்து கொள்ள தகுதி யுடைய உறவினர்.

    அந்நாட்களில் கணவர் இறந்தால், கணவனின் சகோதரர் அல்லது நெருங்கிய உறவினர் அவளை மணந்து, வாழ்வு கொடுக்கலாம் எனும் சட்டம் இருந்தது.

    போவாசு, ரூத்தின் நல்லெண்ணத்தையும், இறை பக்தியையும், மாமியாரை நேசிக்கும் இதயத்தையும், சுயநலமற்ற சிந்தனையையும் கண்டு அவரை மணந்து கொள்கிறார் என கதை அழகாக நகர்கிறது.

    போவாசு காட்டிய பரிவு, போவாசை மணந்து கொள்ள நகோமி சொன்ன யோசனை, ரூத்தின் துணிச்சல் என பல செய்திகள் இந்த நூலில் மிக அற்புத இலக்கியச் சுவை யுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    பழங்கால செவி வழிச்செய்திகளும், மரபுக் கதைகளும் போவாசு-ரூத் வாழ்ந்த இடமே பின்னர் இயேசு பிறந்த இடம் என்கின்றன. போவாசும், ரூத்தும் மணமுடிப்பது அந்த பரம்பரையில் இறைமகன் இயேசு எனும் மீட்பரின் வரவுக்கான மறைவுச் செய்தியாய்ப் பார்க்கப்படுகிறது.

    பெத்லேகேமுக்குக் கிழக்கே ஒரு மைல் தொலைவில் ஒரு நிலப்பரப்பு உண்டு. அது “போவாஸ் நிலப்பரப்பு” என அழைக்கப்படுகிறது. இங்கேதான் ரூத்து கதிர் பொறுக்கினார் என்கிறது மரபுச் செய்தி.

    இதே நிலப்பரப்பில்தான் இயேசுவின் பிறப்பை தூதர்கள் இடையர்களுக்கு அறிவித்தார்கள் எனும் சுவாரசியச் செய்தியும் காணக்கிடைக்கிறது.

    இறைவனின் மீது அன்பு கொள்கின்ற யாரையும் அவர் அரவணைத்துக் கொள்கிறார். யாரையும் கைவிடுவதில்லை. அவர் எந்த இனமாய் இருந்தாலும், எந்த தேசமாய் இருந்தாலும் அவர்களை அரவணைக்கிறார்.

    அற்புதமான ஒரு சிறுகதையை வாசிக்கும் உணர்வை இந்த பரபரப்பான நூல் நமக்குத் தருகிறது. இதன் பழமைக்காகவும், அதில் தெறிக்கும் இலக்கிய புலமைக்காகவும் இந்த நூலை வாசிப்பவர்களும் உண்டு.

    எனினும் இது இலக்கியச் சுவையைத் தாண்டி மீட்பின் செய்தியையும், இறைவனின் அன்பினையும் சொல்லும் நூல் என்பதே உண்மையாகும்.

    - சேவியர்
    புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியருக்கு உகந்த ஜெபத்தை இங்கு பார்க்கலாம்.
    புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே! தூய்மை துலங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! விண்ணுலக மண்ணுலக காவலரே!

    கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

    மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!

    எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.

    நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?

    தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே! தயைக்கடலே! தவிப்பவர்களுக்குத் தடாகமே! தனித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.

    எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ? ஐயா எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும்.

    - ஆமென்.
    ஆண்டவரின் இந்த மீட்பின் மறையுண்மையை ஏற்றுக் கொள்வது நம்முள் குடியிருக்கும் ஆவிக்குரிய இயல்புதான். எனவே நமது ஆவிக்குரிய இயல்பு. அதாவது உள் மனிதன் வல்லமை பெற வேண்டுமெனத் தூய ஆவியாரிடம் மன்றாடுவோம்.
    லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து பவுல் பேசியதைக் கேடடுக் கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப் பார்த்து உரத்த குரலில், நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும் என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார் (திப 14 8 – 10).

    திருத்தூதர் பவுல் வழியாக நடந்த ஓர் அற்புதம் தான் இது. பவுல் நற்செய்தி அறிவித்த போது கால் ஊனமுற்றவர் அதைக் கேட்க முன்வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும்.

    திருத்தூதர் பவுல் அவருடைய வெளிப்படையான உடல் ஊனத்தை மட்டுமல்ல, கண்ணுக்குப் புலப்படாத உள் மனிதனின் ஊனத்தையும் கண்டார். உள் மனிதன் விசுவாசத்தால் நிறைந்த போது பவுல் அவருக்குக் கட்டளையிட்டார். உள் மனிதன் வெளிப்படையான மனிதனுக்குக் க ட்டளை கொடுத்தான். வெளிப்படையான மனிதன் நலம் பெற்று எழுந்து நடந்தான்.

    மனிதரில் இருவித இயல்புகள் இருப்பதாகத் திருவிவிலியம் கற்பிக்கின்றது. 1. ஆவிக்குரிய இயல்பு. 2. ஊனியல்பின் இயல்பு (உரோ 7 : 18 – 23; 8 : 1 – 14). ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆவிக்குரிய மனிதன் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது நோய் நீங்குகின்றது.

    ஊனியல்புக்குரிய மனிதன் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ள மறுப்பதால்தான் நோய் குணமாகாமல் போகின்றது. முழுமனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே (நீமொ 3 : 5)

    நோய் நீங்க வாய்ப்பே இல்லாமல் சாவின் வாயிலில் நின்ற ஒரு பெண்ணின் அனுபவம் இது. அவருக்குக் குடலில் புற்றுநோய் வந்தது. இனி எதுவும் செய்ய முடியாது என்று நவீன மருத்துவம்கூட கைவிட்டது. அதிகபட்சம் 180 நாள்தான் உயிரோ இருப்பார் என்றது. அப்பெண் ஒரு காகிதத்தில் 1 முதல் 180 வரை எழுதி ஒவ்வொரு நாளும் எண்களை ஒவ்வொன்றாக வெட்டி வாழ் நாட்கள் குறைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    அவர் கணவருக்கு ஒரு சாதாரண வேலைதான் இருந்தது. பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தனர். அவருடைய கணவரும் பிள்ளைகளும் போய்விட்டால் அவர் தனிமையில் கண்ணீர் சிந்துவார்.

    அவ்வாறு அழுது கொண்டிருந்த போது ஒரு நாள் அவருக்கு பைபிள் வாசிக்க வேண்டும் என்ற அகத் தூண்டுதல் ஏற்பட பைபிளை எடுத்து திறந்தார். அப்போது அவருக்குப் பின்வரும் மறைவாக்கு கிடைத்து: சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார்; நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார்.

    அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள் (1 பேது 2 : 24) இம்மறைவாக்கை அவர் மீண்டும் மீண்டும் வாசித்தார். ஒவ்வொரு முறை வாசித்த போதும் அவரது நம்பிக்கை ஆழமானதாயிற்று.

    இயேசுவின் துன்பங்களாலும் சிலுவைச் சாவாலும் தான் நலமடைந்ததாக அவர் நம்பினார் அவருடைய மனதில் அதற்கு முன் ஒருபோதும் அவர் அனுபவத்திராத அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்தன.

    அன்று மாலை அவருடைய கணவர் வீடு திரும்பிய போது அவர் தமது மனைவி அவரை வரவேற்க வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டார். என்னே அதிசயம் தம்மைக் காண வந்தவர்களிடம் அவர் தமக்குக் கிடைத்த மறைவாக்கையும், அதைத் திரும்பத் திரும்ப வாசித்ததால் நலம் பெறறதை வர்ணிப்பதையும் அவருடைய கணவர் கண்டார்.

    ஆனால் உண்மையில் அவருக்குப் புற்று நோய் இருந்தது. அவரோ நோய் குணமாயிற்று என்று நம்பினார். அதனால் அவரது ஆரோக்கிய நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் தமது வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினார். பின்னர் செய்து கொண்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்குப் புற்று நோய் இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்று மருத்துவ நிபுணர் ஆச்சரியத்தோடு அறிவித்தார்.

    ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் (லூக் 1 : 45). புற்று நோயாளியான அவர் இறைவார்த்தையை நம்பினார். அறிவுக்கு அப்பாற்பட்ட இறை வல்லமையை ஏற்றுக் கொண்டார். அதனால் நோய் நீங்கப் பெற்றார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

    எவராவது இந்த மலையைப் பார்த்து, பெயர்ந்து கடலில் வழு எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால் அவர் சொன்ன வாறே நடக்கும். ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் இறைவனிடம் வேண்டும் போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும் (மாற் 11 : 23 – 24). இயலாதவற்றையும் சாத்தியமாக்க இறைவன் தந்த அருட்கொடைதான் நம்பிக்கை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா? (யோவா 11 : 40) ஐம்புலன்கள் அறிந்திராத மீட்பு மறை உண்மை அருளப்பட்டுள்ளது.

    இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளுர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் அவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர் (உரோ 10 : 9 – 10).

    ஆண்டவரின் இந்த மீட்பின் மறையுண்மையை ஏற்றுக் கொள்வது நம்முள் குடியிருக்கும் ஆவிக்குரிய இயல்புதான். எனவே நமது ஆவிக்குரிய இயல்பு. அதாவது உள் மனிதன் வல்லமை பெற வேண்டுமெனத் தூய ஆவியாரிடம் மன்றாடுவோம்.
    உங்களுக்குள் இருக்கும் எந்த பிரச்சினைக்காகவும் உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாமல், உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு ஆவியில் நிறைந்து கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்.
    ‘அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. எரே.1:19

    பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுக்கு இச்செய்தியின் மூலம் பலத்த ஆசீர்வாதங்களை தருவார்.

    ஒருவர் கப்பலில் பயணம் செய்ய பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்து பயணத்தைத் ெதாடங்கினார். ஒவ்வொரு உணவு உட்கொள்ள வேண்டிய வேளை வந்தபோது அனைத்துப் பயணிகளும் உணவு பரிமாறுகிற இடத்திற்கு சென்று தங்களுக்கு விருப்பமான உணவை உட்கொண்டார்கள்.

    இந்த மனிதரோ காலை, பிற்பகல், மாலை மற்றும் இரவு அந்நாள் முழுவதும் ஒன்றும் உட்கொள்ளாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார்.

    இவர் ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறதை அறிந்து கப்பல் பணியாளர் ‘ஏன் ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்?’ என வினவியபோது, ‘பயணச்சீட்டிற்கு மட்டும் தான் கையில் பணம் இருந்ததே தவிர உணவிற்கு என்னிடம் பணம் இல்லாததினால் நான் ஒன்றும் சாப்பிடவில்லை’ என்றார்.

    ‘நீங்கள் கொடுத்த பணம் பயணச்சீட்டிற்கு மட்டுமல்ல உணவிற்கும் சேர்த்து தான்’ என விளக்கி கூறினார் அந்தப் பணியாளர். அதுவரை இந்த தகவல் அந்த மனிதருக்குத் தெரியாமலேயே கப்பலில் பயணம் செய்தார்.

    கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது, ‘உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்’ (1 யோவான் 4:4), மட்டுமல்ல ‘ஆவியானவர் தமது சித்தத்தின்படியே வரங்களை பகிர்ந்து கொடுக்கிறார்’ என 1 கொரி. 12:11 கூறுகிறது.

    கிறிஸ்தவ மார்க்கத்தில் இணைந்திருக்கிற ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்கும் யுத்தங்கள் உண்டு, போராட்டங்கள் உண்டு, பிரச்சினைகள் உண்டு. ஆனால் அவைகள் ஒருபோதும் உங்களை பாதிக்காது.

    ஏனெனில், எப்போது ஆண்டவராகிய இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களோ, அப்போதே பிசாசின் சகல வல்லமைகளை மேற்கொள்ளுகிற அதிகாரத்தை கர்த்தர் உங்களுக்குக் கொடுத்துவிட்டார்.

    அதே நேரத்தில் சாத்தானை மேற்கொள்ளவும், முறியடிக்கவும் வேதம் நமக்கு சொல்லுகிற வல்லமையான ஆலோசனைகளை நீங்கள் கவனித்துப் பாருங்கள்.

    கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்

    ‘மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள், அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்’. (யாத்.17:11)

    பொதுவாக ஜெபம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதே வேளையில் வேதாகமத்திலுள்ள தேவனுடைய மனிதர்கள் ஒவ்வொரு விதமான போராட்டங்களின் மத்தியிலும் எப்படி ஜெபம் பண்ணி சத்துருவை ஜெயித்தார்கள் என்று நாம் கவனிக்க வேண்டும்.

    அன்றைக்கு 430 ஆண்டுகள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஆண்டவர் விடுவித்து, மோசேயின் மூலமாக வனாந்தர வழியாக வழிநடத்திக் கொண்டு வரும்போது, ரெவிதீம் என்ற இடத்தில் இஸ்ரவேலரோடு அமலேக்கியர் யுத்தம் பண்ணினார்கள்.

    அந்த யுத்தத்திற்கு மோசே, யோசுவாவையும் மற்ற மனிதரையும் அனுப்பிவிட்டு மலை உச்சியிலே ஏறி தன் இரண்டு கைகளையும் வானத்திற்கு நேரே ஏறெடுத்தான் என வாசிக்கிறோம்.

    மோசேயின் கரம் உயர்த்தப்படும்போது யோசுவா ஜெயமெடுத்தான். அதே வேளையில் மோசேயின் கரம் தாழ விழுகையில் அமலேக்கியர் ஜெயமெடுத்தார்கள். அந்நாட்களில் மோசே வயது முதிர்ந்த நிலையில் இருந்ததால், ஆரோனும், ஊரும் நிரந்தரமாய் மோசேயின் கையை உயர்த்திப் பிடித்தார்கள். அப்போது அமலேக்கியர் முற்றிலும் சங்கரிக்கப்பட்டார்கள்.

    தற்போது நீங்கள் சந்தித்து வருகிற பிரச்சினை என்ன? ஒருவேளை அது நீண்டகால போராட்டமாக இருக்கலாம் அல்லது வியாதி, வறுமையாக இருக்கலாம்.

    எதுவானாலும் சரி இவைகள் உங்களை மேற்கொள்ள முடியாது. நீங்கள் கர்த்தருடைய சமூகத்தில் முழங்கால்படியிட்டு உங்கள் கைகளை உயர்த்தி ஆவியில் நிறைந்து ஜெபித்துப் பாருங்கள்.

    ‘பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலும் ஜெபம் பண்ணுங்கள்’. (1 தீமோ.2:8)

    ‘இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருக்கிறது’. (சங்.77:2)

    ‘உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறேடு’. (புலம்.2:19)

    மேற்கண்ட வசனங்கள் எல்லாம் நாம் கைகளை உயர்த்தி ஜெபம் பண்ணி போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்துகிறது.

    ஆகவே, உங்களுக்குள் இருக்கும் எந்த பிரச்சினைக்காகவும் உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாமல், உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு ஆவியில் நிறைந்து கைகளை உயர்த்தி ஜெபியுங்கள். எந்த போராட்டங்களும் உங்களை மேற்கொள்ளாது. உங்களை இரட்சிக்கும்படி கர்த்தர் உங்களோடு கூட இருப்பார். அல்லேலூயா.

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    திட்டுவிளையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    திட்டுவிளையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு ஜெபமாலையும், மாலை 6.30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கனடா நாட்டை சேர்ந்த பேரருட் பணியாளர் மார்சலின் டி போரஸ் கொடியேற்றி வைக்கிறார். அமெரிக்க நாட்டை சேர்ந்த பேரருட் பணியாளர் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.

    மார்ச் 2-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. 3-ந்தேதி காலை 8.30 மணிக்கு நாஞ்சில் நாதம் இயக்குனர் செல்வன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியை தொடர்ந்து கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி பணிக்குழு இயக்குனர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். காரியாங்கோணம் சாந்தி ஆசிரம நிர்வாகி அருட்பணியாளர் கிறிஸ்பின் ஆச்சாரியா அடிகளார் ஜெபம் நடத்துகிறார். பகல் 2 மணிக்கு தேர்பவனி இரவு 7.30 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.
    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.
    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.

    வரலாறு

    1628ல் இளவரசி பொலிக்சேனா (1566-1642) பிராகா நகர் கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இந்தச் சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1] அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்தச் சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது.

    குழந்தை இயேசு பக்தியால் பல்வேறு அற்புதங்களைப் பெற்றுக்கொண்ட இளவரசி பொலிக்சேனா, தன்னிடம் இருந்த குழந்தை இயேசு சொரூபத்துக்கு அரச உடைகளும், மணிமகுடமும் அணிவித்து அழகு பார்த்தார். அரசர் 2ம் பெர்டினான்ட், தனது தலைநகரை பிராகாவிலிருந்து வியன்னாவுக்கு மாற்றியபோது, பொலிக்சேனா இந்தக் குழந்தை இயேசு சொரூபத்தை கார்மேல் சபைத் துறவிகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் குழந்தை இயேசு பக்தியை மக்களிடையே பரப்பினர். போர் உள்ளிட்ட சில காரணங்களால், துறவிகள் வாழ்ந்த கார்மேல் மடம் சிறிது காலம் மூடப்பட்டது. அக்காலத்தில் இந்தச் சொரூபம் மறைவான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது.

    1637ஆம் ஆண்டு, கரங்கள் சேதமடைந்த குழந்தை இயேசுவின் இந்தச் சொரூபத்தை அருட்தந்தை சிரிலஸ் மீண்டும் கண்டெடுத்தார். அவர் குழந்தை இயேசு முன்பாகச் செபித்துக் கொண்டிருந்த வேளையில், "எனக்குக் கரங்களைக் கொடு; நீ என்னை மகிமைப்படுத்தினால், நான் உனக்கு அமைதியும் உயர்வும் தருவேன்" என்ற குரலைக் கேட்டார். அதன் பிறகு குழந்தை இயேசுவின் கரங்கள் சரிசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்நகரில் பரவிய கொள்ளை நோய் நீங்கியது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது.

    இயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பருவத்தைத் தியானிக்கும் பக்திமுயற்சியாக இது அமைந்துள்ளது.

    இன்றளவும், பிராகா நகர் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகா குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன.

    முற்காலத்தில், அயர்லாந்து நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளின்போது காலநிலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் தங்கள் இல்லத்தின் முன்பாகப் பிராகா நகர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.[2]

    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரேகு நகர் குழந்தை இயேசுவின் இரண்டு மரச் சொரூபங்கள் செய்யப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூர் குழந்தை இயேசு ஆலயத்திலும், பெரம்பூர் புனித தெரேசா ஆலயத்திலும் இந்தச் சொரூபங்கள் உள்ளன. 
    வாசிப்புக்கு பரபரப்பும் சுவாரசியமும், வியப்பும், அதிர்ச்சியும் தரக்கூடிய ஒரு அற்புதமான நூலாக இந்த நீதித்தலைவர்கள் நூல் இருக்கிறது.
    விவிலிய நூல்களில் ஏழாவதாக வருகின்ற நூல் இந்த நீதித்தலைவர்கள் எனும் நூல். இது பழைய மொழிபெயர்ப்பில் ‘நியாயாதிபதிகள்’ என அழைக்கப்பட்டு வந்தது.

    தலைப்புக்கு ஏற்ப இந்த நூலில் நீதித்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆன்மிகப் பார்வையில் குறிக்கப்பட்டுள்ளது. பதினைந்து நீதித் தலைவர்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நீதித்தலைவர்கள் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தியவர்கள்.

    இந்த நூலை எழுதியவர் இறைவாக்கினர் சாமுவேல் என்பது மரபுச்செய்தி. ஆனால் முழுமையாக அவர் எழுதியிருக்க முடியாது என்றும், நூலின் சில பாகங்களை அவர் எழுதியிருக்கலாம் எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இஸ்ரயேலர்களின் வரலாற்றின் நானூற்று எண்பது ஆண்டு கால வாழ்க்கை இந்த சுருக்கமான நூலில் காணக்கிடைக்கிறது. இந்த நூலில் 21 அதிகாரங்களும் 618 வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

    இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டைக் கைப்பற்றிய காலம் தொடங்கி, அவர்களிடையே அரச வரலாறு தொடங்கியது வரையிலான நிகழ்வுகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

    இந்தக் காலகட்டத்தில் இறைவனே மக்களை நேரடியாக வழிநடத்தி வந்தார். அவர் களுக்கு அரசர்கள் இல்லை. நீதித் தலைவர்கள் எனும் ஆன்மிக வழிகாட்டிகள் மூலமாக மக்களை இறைவன் வழி நடத்தி வந்தார்.

    இந்த நீதித்தலைவர்களில் பலர் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். நாற்பது என்பது விவிலியத்தில் ஒரு சிறப்பான எண். தெபோராள், பாராக், கிதியோன், ஒதானியேல், ஏகூத் என எல்லோரும் நாற்பது ஆண்டுகள் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.

    இந்த ஆன்மிகத் தலைவர்கள் ஞானம் நிறைந்தவர்களாகவும், இறைவனோடு நேரடித் தொடர்பு கொண்டவர்களாகவும், சிலர் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தார்கள்.

    இந்த நூலின் காலகட்டத்தில் சுமார் முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு பயந்து அவருடைய வழியில் நடந்தார்கள். மிச்ச காலத்தில் இறைவனை விட்டு விலகிச் சென்றார்கள்.

    இறைவனை விட்டு மக்கள் விலகிச் செல்லும்போது இறைவன் அவர்களைக் கண்டித்தும், தண்டித்தும் திருத்துகிறார். மனம் திரும்பி இறைவனிடம் வருகையில் அவர் பகையை மறந்து பரிவுடன் அரவணைக் கிறார். இந்த செய்திகளே இந்த நூலின் மையமாக அமைந்துள்ளன.

    ஆண்டவரின் பார்வையில் தீமையானதைச் செய்வதும், கடவுள் அவர்களை எதிரி களிடம் ஒப்படைப்பதும், மக்கள் மனம் திருந்தி இறைவனை வேண்டுவதும், அவர்களை மீட்க இறைவன் ஒரு தலைவரை எழுப்புவதும், மீட்பிற்குப் பின் மீண்டும் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீமையானதைச் செய்வதும்… என இந்த வட்டம் சுழன்று கொண்டே இருப்பதை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

    உண்மை இறைவனை விட்டு விட்டு பாகால் மற்றும் அஸ்தரோத்துகள் எனும் தெய்வங்களை மக்கள் நாடிச்செல்கின்றனர். ‘பாகால்’ என்பது அன்னியக் கடவுளுக்கான ஒரு பொதுப் பெயர் தான். பெரும்பாலும் மழையின் கடவுளை அது குறிப்பிட்டது. ‘அஸ்தரோத்துகள்’ நிலம் மற்றும் வளமைக்கான பெண் தெய்வங்களாக இருந்தன. இந்த தெய்வங்களை மக்கள் நாடிச் சென்றது தான் இறைவன் பார்வையில் மிகப் பெரிய பிழையாய் இருந்தது.

    தெபோராள், சிம்சோன், கிதியோன், அபிமெலேக்கு, யப்தா உட்பட முக்கியமான பல தலைவர்களின் வரலாற்றை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. அதில் தெபோராள் பெண். ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணை இறைவன் நீதித்தலைவியாக ஏற்படுத்தி, அவர் மூலமாக இஸ்ரயேல் மக்களை மீட்ட செய்தி விவிலியத்தின் மிக முக்கியமான பகுதியாகும். அவர் இறைவாக்கு உரைத்தார், தலைமை ஏற்றார், நீதி வழங்கினார், போரை முன்னின்று நடத்தினார் என அவரது வரலாறு அற்புதமாக விவரிக்கப்பட்டுள்ளது.

    அதே போல கிதியோனின் வாழ்க்கையும் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைத்தூதர் கிதியோனைச் சந்திப்பது, அவரை வாழ்த்துவது, கிதியோன் தான் தகுதியற்றவன் என தம்மைத் தாழ்த்துவது, ஆண்டவர் அவருக்கு தெளிவும் வலிமையும் கொடுப்பது, அடையாளங்களைக் கொடுப்பது, அவரை ஒரு மாபெரும் தலைவராக மாற்றுவது என நிகழ்வுகள் சிலிர்ப்பான வாசிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன.

    இப்தா எனும் தலைவரின் வாழ்க்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வெற்றியுடன் வருகையில் என் வீட்டு வாசலில் இருந்து என்னை நோக்கி முதலில் வரும் நபரை கடவுளுக்கு எரிபலியாக்குவேன் என நேர்ச்சை செய்கிறார் அவர்.

    வெற்றியுடன் வருகையில் வருவதோ அவருடைய ஒரே மகள். இறைவனின் வாக்கை நிறைவேற்றுகிறார் இப்தா.

    சிம்சோன் எனும் மாவீரன் எதிரிகளை சகட்டு மேனிக்கு அழிக்கும் ஆற்றல் படைத்த நீதித் தலைவன். அவன் எப்படி ஒரு பெண்ணால் வீழ்கிறான் எனும் வரலாறு பரபர திருப்பங்களுடனான ஒரு நாவல் போல இந்த நூலில் விவரிக்கப்படுகிறது.

    வாசிப்புக்கு பரபரப்பும் சுவாரசியமும், வியப்பும், அதிர்ச்சியும் தரக்கூடிய ஒரு அற்புதமான நூலாக இந்த நீதித்தலைவர்கள் நூல் இருக்கிறது. உலகில் யார் ஆட்சியமைத்தாலும் இறைவனே அனைவருக்கும் தலையாய் இருக்கிறார் எனும் ஆறுதலையும் இந்த நூல் தருகிறது.

    சேவியர்
    ×