search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2003 முதல் 2023 வரை.. கதைக்களம் ஒன்னுதான்.. ஆனால் கிளைமேக்ஸ்..?
    X

    2003 முதல் 2023 வரை.. கதைக்களம் ஒன்னுதான்.. ஆனால் கிளைமேக்ஸ்..?

    • உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டிலும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் போட்டிகள், அரையிறுதி என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று (நவம்பர் 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டுள்ளது.

    முன்னதாக 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பயன் பட்டத்தை வென்று அசத்தியது.

    2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இறுதிப் போட்டி நடைபெற்ற தினம், மைதானத்தை சுற்றி மேகமூட்டமாக காணப்பட்டதால், முதலில் பந்துவீசி எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி, போட்டியில் வெற்றி பெறலாம் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி திட்டமிட்டிருந்தார்.

    எனினும், மைதானத்தின் சூழல் யாரும் எதிர்பாராத வகையில் மாறிப் போக முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 350-க்கும் அதிக ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 250-க்கும் குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கோப்பையை வெல்லும் கனவை பறிக்கொடுத்தது.

    கடந்தமுறை போன்றே, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் மாலை பொழுதில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசினால் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிடலாம் என கணித்திருக்கிறார்.

    20 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சூழலில் சவுரவ் கங்குலியின் கணிப்பு தவறியதை போன்றே, பேட் கம்மின்ஸ்-இன் இன்றைய கணிப்பும் தவறி, இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    Next Story
    ×