என் மலர்
சினிமா

சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஒப்பந்தமான முன்னணி நடிகை
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தில் த்ரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், மற்றொரு முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.
எனவே இந்த பாகத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்தது படக்குழு. தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் படக்குழுவில் இருந்து த்ரிஷா வெளியேறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து த்ரிஷாவுடன் படக்குழு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், த்ரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும், விரைவில் ஒரு பாடலுடன் படப்பிடிப்பு நிறைவு பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #SaamySquare #Vikram #AishwaryaRajesh
Next Story






