என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் வெளியாகி இருக்கும் சக்ரா படத்தின் விமர்சனம்.
    சென்னையில் சுதந்திர தினத்தன்று இரண்டு கொள்ளையர்கள் வரிசையாக 50 வீடுகளில் கொள்ளையடிக்கின்றனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர தினம் என்பதால் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர். 

    கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய 50 வீடுகளில் விஷாலின் வீடும் ஒன்று. கொள்ளையர்கள் தாக்கியதில் விஷாலின் பாட்டி மயக்கமடைந்து விடுகிறார். ராணுவத்தில் பணியாற்றி வரும் விஷால், இச்சம்பவம் குறித்து தெரிந்ததும் ஊருக்கு விரைகிறார். தனது தந்தை வாங்கிய சக்ரா மெடலும் திருடு போனதை அறியும் விஷால் கொள்ளையர்களை பிடிக்க முனைப்பு காட்டுகிறார். 

    சக்ரா விமர்சனம்

    தனது காதலியும், போலீஸ் உயர் அதிகாரியுமான நாயகி ஷ்ரத்தா தான், இந்த கொள்ளை வழக்கை விசாரிக்கிறார் என்பதை அறியும் விஷால், அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன. இறுதியில் அவர்கள் இந்த கொள்ளைக்கு பின்னால் உள்ள முக்கிய புள்ளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் விஷால், ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். மிடுக்கான உடற்கட்டுடன் திறம்பட நடித்திருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என அனைத்திலும் கலக்கி இருக்கிறார். கொள்ளையர்களை களையெடுக்க அவர் கையாளும் யுக்திகள்  அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது. 

    சக்ரா விமர்சனம்

    நாயகி ஷ்ரத்தா, வழக்கமான நாயகி போல் இல்லாமல், போலீஸ் அதிகாரியாக வந்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருக்கிறார். நாயகன் விஷாலுக்கு இணையாக போட்டி போட்டு நடித்துள்ளார். 

    படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது ரெஜினா தான், இத்தனை நாளா இந்த நடிப்பு திறமையை எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க என கேட்கும் அளவுக்கு மெர்சல் காட்டி உள்ளார். அவருடைய கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கே.ஆர்.விஜயா, மனோபாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள்.

    சக்ரா விமர்சனம்

    இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த், அவருக்கு இது அறிமுக படமாக இருந்தாலும், திரைக்கதையை திறம்பட கையாண்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக அமைந்தது படத்திற்கு கூடுதல் பலம். எதிர்பார்க்க முடியாத பல்வேறு டுவிஸ்டுகளை கொடுத்து படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார். 

    படத்தின் ஹைலைட் என்றால் அது யுவனின் இசை தான். குறிப்பாக பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் வலு சேர்த்திருக்கிறது. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு அட்டகாசம். 

    மொத்தத்தில் ‘சக்ரா’ அதிரடி.
    திரிஷ்யம் 2 வெளியாகி உள்ள நிலையில், தமிழில் பாபநாசம் 2 உருவாகுமா என்பது குறித்து அப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார்.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். பாபநாசம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. 

    தற்போது மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம் 2 படம் வெளியாகி உள்ளது. ஆதலால் தமிழிலும் பாபநாசம் 2 வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. மேலும் அதில் கமல் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.

    பாபநாசம் பட போஸ்டர்

    இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். அதில் அவர் கூறியதாவது: “கமல் அனுமதி கிடைத்தால் பாபநாசம் 2 படத்தை இயக்க தான் தயாராக இருக்கிறேன். கமலின் முடிவை பொறுத்தே ‘பாபநாசம் 2’ படம் உருவாகுமா? இல்லையா? என்பதை சொல்ல முடியும்” என அவர் கூறியுள்ளார்.
    8 நாட்கள் நடைபெறும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 53 நாடுகளை சேர்ந்த 91 படங்கள் திரையிடப்படுகிறது.
    18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது. இந்த விழாவில் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, ஐ.சி.ஏ.எப். பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பரை சேர்ந்த காட்டகர பிரசாத், ரவி கோட்டாரகரா, நடிகைகள் சுகாசினி, சுகன்யா, இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநரும் நடிகருமான மனோபாலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்களாக கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கலாச்சார தூதர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தோ சினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷன் நடத்தும் இந்த திரைப்பட விழாவை பி.வி.ஆர். இணைந்து வழங்குகிறது.

    சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்

    இந்தியன் பனோரமா பிரிவில் ‘பாஸ்வேர்டு’, ‘அக்கா குருவி’ உள்ளிட்ட 4 தமிழ்ப்படங்கள் இடம் பெறுகின்றன. மேலும், தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் ‘லேபர்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்பாதர்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்‘, ‘கன்னி மாடம்‘ ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் தமிழ்ப்பிரிவில் 17 படங்கள் இடம்பெறுகின்றன.

    மேலும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ஆப்பிள்ஸ்’, ‘குவூ வாடிஸ், ஆய்டா?’, ‘லிஸன்’, ‘தி ஸ்லீப் வாக்கர்ஸ்’, ஆக்னெஸ் ஜாய்’, ‘ரன்னிங் அகைன்ஸ்ட் தி விண்ட்’, ‘ரன்னிங் டு தி ஸ்கை’ ஆகிய படங்கள் பங்கேற்கின்றன. அதேபோல், கேன்ஸ் திரைப்பட விழா, பெர்லின், ஈரான், வெனீஸ், ரோட்டர்டாம், பூசான் சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற படங்களும் இடம்பெறுகின்றன. இந்தத் திரைப்பட விழா 8 நாட்கள் நடைபெற உள்ளது.
    சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் தற்போது சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கலைமாமணி விருது பெறும் நடிகர்கள் 

    ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கலைமாமணி விருது பெறும் நடிகைகள்

    பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோருக்கும், நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கலைமாமணி விருது பெறுவோர் பட்டியல்

    கலைமாமணி விருது பெறும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள்

    இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ஆகியோருக்கும்,  பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கலைமாமணி விருது பெறும் தயாரிப்பாளர்கள் 

    கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கு  கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

    கலைமாமணி விருது பெறுவோர் பட்டியல்

    கலைமாமணி விருது பெறும் இயக்குனர்கள் 

    கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகிய நால்வருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

    கலைமாமணி விருது பெறும் சீரியல் நடிகர்கள் 

    நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கலைமாமணி விருது பெறுவோர் பட்டியல்

    இதுதவிர ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி, அடுத்ததாக நடிக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.
    இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் ‘அன்பறிவு’. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார். 

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

    அன்பறிவு படக்குழு

    அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்கிறார். 
    ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் கயல் ஆனந்தி, ரோகித், பிரதாப் போத்தன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கமலி பிரம் நடுக்காவேரி படத்தின் விமர்சனம்.
    நடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார். ஆனந்தியின் தந்தை அழகம்பெருமாள் மகனை மேற்படிப்பு படிக்க வைக்கவும் மகளை விரைவில் திருமணம் செய்துகொடுக்கவும் திட்டமிடுகிறார். 

    இந்நிலையில் +2 தேர்வு முடிவு வருகிறது. அதில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற ரோகித்தின் பேட்டி வருகிறது. ரோகித்தை காதலிக்க தொடங்கும் ஆனந்தி அவரை சந்திப்பதற்காக சென்னை ஐஐடியில் படிக்க ஆசைப்படுகிறார். 

    இறுதியில் இந்திய அளவில் கடினமான ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தி எப்படி தயாராகிறார்? ஐஐடியில் ரோகித்திடம் அவரது காதலை சொல்ல முடிந்ததா? கிராமத்து பெண்ணான அவர் எப்படி சாதனை படைக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கமலி பிரம் நடுக்காவேரி விமர்சனம்

    பெண் கல்வி என்பதை மையமாக கொண்டு கதை அமைத்த ராஜசேகர் துரைசாமிக்கும், தயாரித்த துரைசாமிக்கும் படத்தை வெளியிடும் மாஸ்டர்பீஸ் நிறுவனத்துக்கும் பாராட்டுகள்.

    ஆனந்திக்கு படத்தை தாங்கி பிடிக்கும் கதாபாத்திரம். படத்தின் எந்த காட்சியிலும் ஆனந்தியே தெரியவில்லை. கமலி மட்டுமே தெரிகிறார். இதுவே அவர் இந்த கதாபாத்திரத்துக்கு எத்தனை பொருத்தமானவர் என்பதை நிரூபிக்கிறது. குறும்புக்கார மாணவி, தான் கொண்ட லட்சியத்துக்காக எந்த கடின உழைப்பையும் கொடுக்கக்கூடிய பொறுப்புள்ள பெண், தன்னை முடக்கி போடும்போதும் கேலி, கிண்டல் செய்யும்போதும் எல்லா துன்பங்களையும் சிரித்துக்கொண்டே கடந்து அதில் இருந்து மீண்டு வந்து சாதிக்கும் கல்லூரி மாணவி என தனது நடிப்பால் அசத்துகிறார்.

    கமலி பிரம் நடுக்காவேரி விமர்சனம்

    ஆனந்திக்கு பக்கபலமாக இருந்து உதவும் பாத்திரத்தில் பிரதாப் போத்தன். ஆனந்திக்கு சொல்லி கொடுக்க மறுப்பது, ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தியை அணுஅணுவாக தயார் செய்வது, ஆனந்தியின் வெற்றியை தன் வெற்றியாக உணர்வது என மனிதர் தனது அனுபவ நடிப்பால் நெகிழ வைக்கிறார்.

    அழகம்பெருமாளும், ரேகா சுரேஷும்  நம் பெற்றோரை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். நாயகனாக வரும் ரோகித்தும் சரியான தேர்வு. இமான் அண்ணாச்சி கலகலப்பாக படத்தை நகர்த்துகிறார்.

    கமலி பிரம் நடுக்காவேரி விமர்சனம்

    ஆனந்தியின் பள்ளி தோழியாக வரும் ஸ்ரீஜா நாயகியாக நடிக்கலாம். அழகாகவும் இருக்கிறார். சிறப்பாகவும் நடிக்கிறார். அறைத்தோழியாக வரும் அபிதா வெங்கட்டும்  கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    பெண் குழந்தைகளின் முன்னேற்றம், பெண் கல்வியின் அவசியம் என அவர்களை ஊக்கப்படுத்தும் படமாக கமலி பிரம் நடுக்காவேரி அமைந்துள்ளது. சமூகத்துக்கு மிக அவசியமான கருத்தை காமெடி, காதல், குடும்பம் என அனைத்தையும் கலந்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் கமர்சியலாக சொன்ன விதத்தில் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் ராஜசேகர் துரைசாமி சேர்கிறார்.

    தீனதயாளனின் இசையில் பாடல்கள் கதையோட்டத்துக்கு உதவி இருக்கின்றன. பின்னணி இசையும் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. ஜெகதீஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு நடுக்காவேரியின் பசுமைக்குள்ளும், ஐஐடி வளாகத்தின் சூழலுக்குள்ளும் நம்மை கூட்டி செல்கிறது. 

    மொத்தத்தில் ‘கமலி பிரம் நடுக்காவேரி’ கவர்கிறாள்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, அடுத்ததாக ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம்.
    கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படங்கள் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன. 

    தமிழில் இவர் நடித்துள்ள முதல் படம் சுல்தான். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது. இது தவிர இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

    ராஷ்மிகா

    இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு, ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு தேடி வந்துள்ளதாம். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க உள்ள புதிய படத்தில் ராஷ்மிகா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
    நடிகர் அஜித் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது ஏன் என்பது குறித்த ருசிகர பின்னணியை இந்த செய்தியில் காணலாம்.
    நடிகர் அஜித் நேற்று பகல் திடீரென்று சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வாடகை காரில் வந்து இறங்கினார். முககவசத்துடன், அரைக்கால்சட்டை, டீ சர்ட் அணிந்து வந்த அவரை முதலில் யாரும் அடையாளம் காணவில்லை. ரைபிள் கிளப் எங்கே இருக்கிறது என்று அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரிடம் அஜித் விசாரித்தார். 

    உடனே போலீசார் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆண், பெண் போலீசார் அனைவரும் அஜித்தை சூழ்ந்து கொண்டனர். பெரும் பரபரப்பானது. அஜித்தை சூழ்ந்து போலீசார் செல்போனில் செல்பி எடுத்து கொண்டனர்.

    பின்னர் எழும்பூரில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் துப்பாக்கிசுடும் பயிற்சி மையத்திற்கு (ரைபிள் கிளப்) அஜித் புறப்பட்டு சென்றார். அங்கு செல்வதற்கு பதிலாக அஜித், வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்துவிட்டது தெரியவந்தது. 

    ரசிகர்களுடன் செல்பி எடுத்த அஜித்

    அவர் வந்த வாடகை கார் டிரைவர், கமிஷனர் அலுவலகம் போக வேண்டும் என்று சொன்னவுடன், அவரை இங்கு அழைத்து வந்துவிட்டாராம். பழைய கமிஷனர் அலுவலகம் செல்வதற்கு பதிலாக, நடிகர் அஜித் புதிய கமிஷனர் அலுவலகம் வந்த சம்பவம், நேற்று ருசிகர தகவலாக சமூக வலைத்தளங்களில வைரலானது. அஜித் ரைபிள் கிளப்பில் உறுப்பினர் ஆவார். அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியில் பங்கேற்க வந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
    கூட்டத்தோடு கூட்டமாக "கோரஸ்'' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.
    கூட்டத்தோடு கூட்டமாக "கோரஸ்'' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.

    எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி இருக்கும், பாடும் முறையில் "கிக்'' இருக்கும். எனவே, லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.

    "இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்'' என்று கூறிய ஈஸ்வரி, தொடர்ந்து சொன்னார்:

    "ஏழ்மையில் பிறந்த நான், இந்த அளவு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் டி.எல்.ராஜேஸ்வரி. பரமக்குடிதான் எங்களுடைய பூர்வீகம். ஆனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை புதுப்பேட்டைதான்.

    எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் அந்தோணி தேவராஜ். தாயார் ரெஜினா மேரி நிர்மலா. எனக்கு அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் உண்டு.

    எனது தந்தை இளம் வயதிலேயே (36 வயது) இறந்து விட்டார். அப்போது எனக்கு வயது 6. வறுமையின் பிடியில் சிக்கி தவித்த எங்களது குடும்பத்தை எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடி, அதில் கிடைத்த மிக சொற்ப வருமானத்தைக் கொண்டு காப்பாற்றி வந்தார்.

    எப்படியோ கஷ்டப்பட்டு என் தாயார் என்னைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் கல்லூரிக்கு என்னை அனுப்பி படிக்க வைக்க முடியாத சூழ்நிலை எனது தாயாருக்கு. ஆகவே, எனது தாயாருக்கு உதவி செய்ய நான் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.

    அப்போது எனக்கு வயது 16. என் தாயார் சினிமாவில் கோரஸ் பாடச் செல்லும்போது, அவருடன் செல்வேன். அவர்கள் பாடுவதை கேட்டு அதே மாதிரி நானும் பாடுவேன்.

    ஒரு நாள் ஏ.பி.நாகராஜன் தயாரித்த "வடிவுக்கு வளைகாப்பு'' என்ற படத்திற்கு கோரஸ் பாட எனது தாயார் சென்றபோது, நானும் அவருடன் சென்றேன். பாடலின் இடையே "ஹம்மிங்'' கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக நான் அந்தப் பாட்டுக்கு "ஹம்மிங்'' கொடுத்தேன். இதுதான் நான் முதன் முதலில் சினிமாவிற்கு கொடுத்த குரல்.

    இதைக்கேட்ட அங்கிருந்த ஏ.பி.நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் "உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய், பார்!'' என்று மிகவும் பாராட்டினார்கள்.

    இதைக்கேட்டவுடன் அந்த நிமிடமே எங்களது குடும்ப கஷ்டமெல்லாம் பறந்து விட்டதுபோல் உணர்ந்தேன். இது எனக்கு வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

    "வடிவுக்கு வளைகாப்பு'' படத்தை அடுத்து ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து "லட்சுமி பிக்சர்ஸ்'' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி, "நல்ல இடத்து சம்பந்தம்'' என்ற படத்தைத் தயாரித்தனர். அதில் கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது.

    "புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு; உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு.''

    "பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே.''

    "இவரேதான் அவரு அவரேதான் இவரு''

    "துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்'' என்ற 4 பாடல்கள் பாடுமë வாய்ப்பை எனக்கு ஏ.பி.நாகராஜன் வழங்கினார்.

    எனது பெயர் டி.எல்.ராஜேஸ்வரி என்று இருந்ததை சுருக்கமாக "எல்.ஆர்.ஈஸ்வரி'' என்று மாற்றி வைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான்.

    அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அக்காலத்தில் அது பெரிய தொகை. வறுமையில் வாடிக்கொண்டிருந்த என் குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது'' என்றார் எல்.ஆர்.ஈஸ்வரி.
    கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜ வம்சம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ''ராஜ வம்சம்" படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர், நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை. இயக்குனர் கதிர்வேலு, நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்ற இயக்குனர் சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்.

    ராஜவம்சம்

    இந்த படத்தில் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49 கலைஞர்கள் நடித்துள்ளனர்.

    செந்தூர் பிலிம்ஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள இப்படம் மார்ச் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
    தமிழில் தூத்துக்குடி என்கிற படம் மூலம் பிரபலமான கார்த்திகா தற்போது இரு மொழி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    தமிழில் தூத்துக்குடி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப்படத்திற்கு பிறகு ‘தூத்துக்குடி கார்த்திகா’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.

    குறிப்பாக அந்தப்படத்தின் ‘கருவாப்பையா’ என்கிற பாடலை கேட்கும்போதே, இப்போதும் கார்த்திகாவின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். அதேபோல ‘பிறப்பு’ படத்தில் அவர் ஆடிப்பாடிய, ‘உலக அழகி நான் தான்’ பாடல், அந்த சமயத்தில் பள்ளிக்குழந்தைகளின் மேடை நடனத்துக்கான பொருத்தமான பாடலாக அமைந்தது.

    கார்த்திகா

    இடையில் சில நாட்கள் திரையுலகை விட்டு ஒதுங்கி மும்பை சென்றுவிட்ட கார்த்திகா, தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்ய இருக்கிறார்.
    மெட்டி ஒலி சீரியல் மூலம் பல ரசிகர்களை பெற்ற இயக்குனர் திரு முருகன், 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படம் இயக்க இருக்கிறார்.
    மெட்டி ஒலி தொடர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்களின் ஆரவார செல்வாக்கைப் பெற்றது. இந்த நாடகத்தை இயக்கி அதில் முக்கியக் கதாபாத்திரமான கோபி எனும் கேரக்டரில் நடித்தார் இயக்குனர் திருமுருகன்.

    இதையடுத்து அவர் பரத், கோபிகா மற்றும் நாசர் நடிப்பில் உருவான எம் மகன் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் பரத்தை வைத்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி நாதஸ்வரம் உள்ளிட்ட தொடர்களை இயக்கினார்.

    திரு முருகன்

    தற்போது 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×