என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    குழந்தை நட்சத்திரங்களில் அகில இந்தியப் புகழ் பெற்று விளங்கியவர், டெய்சி இராணி. இப்போது 3 குழந்தைகளின் தாயாராக மும்பையில் வசிக்கிறார்
    குழந்தை நட்சத்திரங்களில் அகில இந்தியப் புகழ் பெற்று விளங்கியவர், டெய்சி இராணி. இப்போது 3 குழந்தைகளின் தாயாராக மும்பையில் வசிக்கிறார்.

    அகில உலகப் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரத்தின் பெயர் ஷெர்லி டெம்பிள். ஆங்கிலத்தில் பேசும் படங்கள் வரத்தொடங்கியபோது, படங்களில் அற்புதமாக நடித்து "ஆஸ்கார்'' பரிசு பெற்றவர்.

    தமிழ்நாட்டில், 1937-ல் வெளிவந்த "தியாகபூமி'' படத்தில் நடித்த பேபி சரோஜா (டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் உறவினர்) மிகப் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். அந்தக் காலக்கட்டத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம், "சரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டது.

    1958-ல் "களத்தூர் கண்ணம்மா'' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், பெரும் பரபரப்பை உண்டாக்கினார். இளைஞனாக ஆன பிறகு, நடிப்பில் புதிய பரிணாமம் கண்டு, இன்று "உலக நாயகன்'' என்ற பட்டத்துடன் உலகப் புகழ் பெற்ற நடிகராக விளங்குகிறார்.

    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, ஸ்ரீதேவி ஆகியோரும், பின்னர் பிரபல நடிகைகளாக உயர்ந்தார்கள்.

    கமலஹாசன் திரை உலகுக்கு அறிமுகமாவதற்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், அகில இந்திய புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர், டெய்சி இராணி.

    1954-ல் அசோக்குமார் - மீனா குமாரி நடித்த "பந்திஷ்'' என்ற இந்திப் படத்தில், டெய்சி இராணி அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 4.

    அனாதைக் குழந்தையான டெய்சி, அசோக்குமாரை தன் தந்தை என்று நினைத்துக் கொண்டு, "அப்பா - அப்பா!'' என்று சுற்றி வருவதும், கடைசியில் அசோக்குமார் தன் அப்பா அல்ல என்று தெரிந்ததும் மனம் ஒடிந்து போவதும், பார்ப்போர் உள்ளத்தை நெகிழச் செய்தன.

    இந்தப்படம், சில ஆண்டுகளுக்குப் பின்னர் "யார் பையன்'' என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. திரைக்கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதினார். ஜெமினிகணேசன் - சாவித்திரியுடன் டெய்சியையும் நடிக்க வைத்தனர்.

    டெய்சிக்கு அப்படத்தில் "பூரி'' என்று பெயர். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் காதலர்கள். டெய்சி இராணி, ஜெமினிகணேசனை "அப்பா'' என்று அழைத்து, அவரை பிரிய மறுப்பதால், ஜெமினி மீது சாவித்திரி சந்தேகப்படுவார்.

    கடைசியில் உண்மை வெளிப்படும். டெய்சி இராணி வேறொரு காதல் ஜோடிக்கு பிறந்தவர். பெற்றோரை பிரிந்து, தாத்தாவிடம் வளர்வார். தாத்தா, ஜெமினிகணேசனை காட்டி, "அதுதான் உன் அப்பா!'' என்று கூறிவிடுவார். அதனால் ஜெமினியை ஒட்டிக்கொண்டு, சுற்றிச்சுற்றி வருவார். அவர் அப்பா இல்லை என்று அறிந்ததும், அழுது கொண்டே வீட்டை விட்டு ஓடுவார். ஜெமினியும், சாவித்தியும் ஓடிச்சென்று, டெய்சியை தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொள்வார்கள். டெய்சியின் இயல்பான நடிப்பு, தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

    திலீப்குமார், வைஜயந்திமாலா, டெய்சி இராணி நடித்த "நயாதவுர்'' என்ற படம், "பாட்டாளியின் சபதம்'' என்ற பெயரில் தமிழில் `டப்' செய்யப்பட்டு வெளிவந்தது. அந்தப் படமும், தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடியது.

    அசோக்குமார், மீனாகுமாரி, சுனில்தத் நடித்த "ஏக்-ஹி-ரஸ்தா'' என்ற இந்திப்படம், புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்டதாகும். அந்தப் படத்தில் டெய்சியின் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.

    டெய்சி முக்கிய வேடத்தில் நடித்த "ஜெய்லர்'' என்ற இந்திப்படம், "கைதி கண்ணாயிரம்'' என்ற பெயரில், தமிழில்

    தயாரிக்கப்பட்டது. தமிழ்ப்படத்தில் டெய்சி நடிக்கவில்லை.

    டெய்சி இராணியின் தங்கை ஹனி இராணியும், குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார்.

    டெய்சி சுமார் 125 படங்களில் நடித்தார். அதன்பின், 1971-ல் அவருக்குத் திருமணம் நடந்தது. கே.கே.சுக்லா என்ற கதை - வசன ஆசிரியரை மணந்தார்.

    இந்தத் தம்பதிகளுக்கு 3 குழந்தைகள்.

    திருமணம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப்பின் சுக்லா இறந்து போனார்.

    ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபட்ட அவர் மகன் காசிக்கு, பல சோதனைகள் ஏற்பட்டன. ஒரு சித்தருடன் காடுகளில் சில ஆண்டுகள் அலைந்து திரிந்தார்.
    ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபட்ட அவர் மகன் காசிக்கு, பல சோதனைகள் ஏற்பட்டன. ஒரு சித்தருடன் காடுகளில் சில ஆண்டுகள் அலைந்து திரிந்தார்.

    இதுகுறித்து காசி கூறியதாவது:-

    "1976-ம் ஆண்டில் எனக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டது. உடல் நிலை மோசமாகியது. 4 ஆண்டுகள் சிகிச்சை பெற்றேன். படத்தயாரிப்பு நின்று போயிற்று.

    இந்நிலையில் என் நண்பர்கள் ராமமூர்த்தி, சுவாமிநாதன் ஆகியோர் உதவியால், பெரம்பலூர் அருகே வாசம் செய்து கொண்டிருந்த தலையாட்டி சித்தர் என்ற மகானை சந்தித்தேன். அவர் காட்டிலும், மலையிலும் அலைந்து திரிபவர். அவருடன் சுற்றித்திரிந்தேன்.

    ஒருநாள் அவர் ஒரு பொட்டலத்தைப் பிரித்து, அதில் இருந்த அல்வாவை கொடுத்து சாப்பிடச் சொன்னார். "எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. நான் அல்வா சாப்பிடக்கூடாதே!'' என்றேன்.

    "உன் வியாதிக்கு இதுதான் மருந்து!'' என்றார்.

    நான் அந்த அல்வாவை சாப்பிட்டேன். ஆச்சரியப்படும் வகையில், சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டேன்.

    இதன் காரணமாக அவர் மீது பக்தி ஏற்பட்டது. அவருடனேயே சில ஆண்டுகள் தங்கினேன். அவர் போகிற இடங்களுக்கெல்லாம் சென்றேன்.

    ஒருநாள் அவர் என்னை அழைத்து, "நீ ஊருக்குப்போ. உனக்குள்ள கடன் பிரச்சினைகள் தீரும்'' என்றார்.

    ஜுபிடரின் பிற்காலப்படங்கள் சரியாக ஓடாததால், என் தகப்பனார் காலத்திலேயே ஜுபிடர் நிறுவனத்தின் மீது கடன் சுமை ஏறியிருந்தது. கம்பெனிக்கு சொத்துக்கள் இருந்தபோதிலும், கடனை தீர்க்க முடியாத நிலை.

    எனவே, "கடன் பிரச்சினை தீர வழி இல்லையே'' என்று சித்தரிடம் கூறினேன்.

    "பிரச்சினை தீரும நேரம் வந்துவிட்டது. ஊருக்குப்போ. வடக்கே இருந்து ஒருவர் வந்து கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்'' என்று சித்தர் கூறினார். எனவே, ஊருக்குத் திரும்பினேன்.

    சித்தர் சொன்னபடியே நடந்தது. மும்பையில் இருந்து, அதிகாரி ஒருவர் வந்தார். நிலங்களை விற்க அவர் வழி செய்தார். எங்கள் மீதிருந்த கடன் சுமைகள் அதிசயப்படத்தக்க வகையில் அகன்றன.

    1991-ல் சித்தர் சமாதியானார். பெரம்பலூர் பஸ் நிலையம் அருகே, அவர் இருந்த இடத்தில் சமாதியுடன் ஆசிரமம் கட்டியுள்ளோம். அங்கு பூஜை, வழிபாடு, அன்னதானம் செய்து வருகிறோம்.''

    இவ்வாறு காசி கூறினார்.

    "நெஞ்சம் மறப்பதில்லை'', "பாமா விஜயம்'' முதலிய படங்களை காசி தயாரித்த காலக்கட்டத்தில், அவரும் ஜுபிடர் மொகிதீன் மகன் ஹபிபுல்லாவும் சேர்ந்து கூட்டாக சில படங்களை தெலுங்கிலும், கன்னடத்திலும் தயாரித்தனர்.

    தமிழில் ஜுபிடர் எடுத்த "வால்மீகி''யை தெலுங்கில் தயாரித்தனர். இதில் என்.டி.ராமராவும், ராஜசுலோசனாவும் நடித்தார்கள்.

    "மர்மயோகி''யை தெலுங்கில் எடுத்தனர். தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் என்.டி.ராமராவும், மாதுரிதேவி நடித்த வேடத்தில் கிருஷ்ணகுமாரியும் நடித்தனர்.

    கன்னடத்து சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரையும், லீலாவதியையும் நடிக்க வைத்து, "வால்மீகி''யை கன்னடத்தில் எடுத்தார்கள்.

    அறிஞர் அண்ணா கதை - வசனம் எழுதி, ஜுபிடர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "வேலைக்காரி''யை கன்னடத்தில் தயாரித்தனர். தமிழில் கே.ஆர்.ராமசாமி நடித்த வேடத்தில் ராஜ்குமாரும், வி.என்.ஜானகியின் வேடத்தில் சவுகார் ஜானகியும், எம்.வி.ராஜம்மா நடித்த வேடத்தில் லீலாவதியும் நடித்தனர்.

    இந்த தெலுங்கு, கன்னடப் படங்கள் வெற்றிகரமாக ஓடின.

    ஜுபிடர் சோமுவின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் படத்தொழிலில் ஈடுபட்டனர்.

    ஜுபிடர் சோமுவின் இளைய மகன் (காசியின் தம்பி) எம்.எஸ்.செந்தில்குமார், பெங்களூர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஒளிப்பதிவாளராகப் பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர். பின்னர் 1974-ல் "பணத்துக்காக'' என்ற படத்தை தயாரித்து, டைரக்ட் செய்தார். இதில் சிவகுமார், தேங்காய் சீனிவாசன், சசிகுமார், ஜெய்சித்ரா, ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்தனர்.

    கமலஹாசன் இப்படத்தின் துணை நடன இயக்குனராக பணியாற்றியதுடன், வில்லனாகவும் நடித்தார்.

    கதை-வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். கண்ணதாசன் பாடல்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.

    "போலீஸ் அறியறது'' என்ற மலையாளப்படத்தையும் செந்தில்குமார் தயாரித்தார்.

    ஜுபிடர் சோமு இருந்தபோதே, அவர் மகள் பாலசவுந்தரியின் கணவர் ஏ.கே.பாலசுப்பிரமணியம் மற்றும் சிலருடன் சேர்ந்து சரவணபவா - யூனிட்டி பேனரில், "எதிர்பாராதது'' படத்தை தயாரித்தார். பெரிய வெற்றிப்படமான இதில் சிவாஜிகணேசன், பத்மினி ஆகியோர் நடித்தனர். ஸ்ரீதர் வசனம் எழுதினார்.

    சோமுவுடன் பணியாற்றிய சி.சுந்தரம்பிள்ளை, கேமராமேன் பி.ராமசாமி, ஒலிப்பதிவாளர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் இந்தப் பட நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிவாஜிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்த "வணங்காமுடி'', சிவாஜி, சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ் ஆகியோர் நடித்த "எல்லாம் உனக்காக'' ஆகியவையும் "சரவணபவா யூனிட்டி'' தயாரித்த படங்கள்.

    இதன்பின், பங்குதாரர்கள் தனித்தனியாகப் பிரிந்து, படங்களைத் தயாரித்தனர். பாலசுப்பிரமணியம் சில மலையாளப்படங்களைத் தயாரித்தார்.

    சோமுவின் மற்றொரு மகளான சுலோசனாவின் கணவர் வி.பி.எம்.மாணிக்கம், பகவதி பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனியை தொடங்கி, மலையாளப்படங்கள் தயாரித்தார்.

    (சோமுவின் இன்னொரு மகள் சரோஜாவின் கணவர் திருப்பூர் ஜி.எஸ்.ராமநாதன், "பனாமா'' என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கினார்.

    சோமுவின் தம்பியான எம்.கோபால், திருப்பூரில் ஜோதி தியேட்டர் என்ற திரையரங்கின் உரிமையாளராகவும், திரைப்பட விநியோகஸ்தராகவும் விளங்கினார்.

    ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பிறகு, அவர் மகன் எம்.எஸ்.காசி, படத்தொழிலில் இறங்கினார். ஸ்ரீதர் டைரக்ஷனில் "நெஞ்சம் மறப்பதில்லை'' படத்தைத் தயாரித்தார்.
    ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பிறகு, அவர் மகன் எம்.எஸ்.காசி, படத்தொழிலில் இறங்கினார். ஸ்ரீதர் டைரக்ஷனில் "நெஞ்சம் மறப்பதில்லை'' படத்தைத் தயாரித்தார்.

    காசி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் "பி.எஸ்.சி'' முதல் ஆண்டு படித்து வந்தபோது, தந்தை சோமுவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், தனக்கு உதவியாக மகன் காசியை படத்தொழிலில் இறக்கினார். 1959-ம் ஆண்டு "தங்கப்பதுமை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை காசி கவனித்தார்.

    இதன்பின் எம்.ஜி.ஆர். நடித்த "அரசிளங்குமரி'' தயாரிக்கப்பட்டு வந்தபோது, சோமு மரணம் அடைந்தார். இதனால், அந்தப்படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பை காசி ஏற்றார்.

    இந்த அனுபவம் பற்றி காசி கூறியதாவது:-

    "மாணவ பருவத்திலேயே, ஜுபிடர் படங்களின் படப்பிடிப்பை பார்த்திருக்கிறேன். எனவே, சின்ன வயதிலேயே எனக்கு சினிமா பற்றி ஓரளவு தெரியும்.

    என் தந்தை உடல் நலம் குன்றியதால், நான் படத்தொழிலுக்கு வந்தேன். படத்தயாரிப்பின் நுட்ங்கள் பற்றி, எனக்கு என் தந்தை பயிற்சி அளித்தார்.

    "அரசிளங்குமரி'' தயாராகி வந்தபோது என் தந்தை காலமாகிவிட்டதால், அந்தப் படத்தை முடிக்க எம்.ஜி.ஆர். செய்த உதவி மறக்க முடியாதது. கிட்டத்தட்ட பாதி படத்தை அவர்தான் டைரக்ட் செய்தார் என்று கூறவேண்டும்.

    ஒரு காரியத்தை எடுத்தால், அதை முடிக்கும் வரை சாப்பாடு, தூக்கம் எதைப்பற்றியும் எம்.ஜி.ஆர். நினைக்கமாட்டார். "எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்க வேண்டும்'' என்பதே அவர் கொள்கை. அவரிடமிருந்து நான் கற்ற முக்கிய பாடம் இது.''

    இவ்வாறு காசி கூறினார்.

    "அரசிளங்குமரி'' படத்திற்குப் பிறகு, ஜுபிடர் பிக்சர்ஸ் பேனரில் படம் எதுவும் தயாரிக்கப்படவில்லை.

    1963-ல், மனோகர் பிக்சர்ஸ் பேனரில் "நெஞ்சம் மறப்பதில்லை'' என்ற படத்தை காசி தயாரித்தார். அதன் கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஸ்ரீதர் கவனித்தார்.

    பூர்வஜென்மம் பற்றிய கதையைக் கொண்ட இப்படத்தில் தேவிகா, கல்யாண்குமார், நம்பியார் ஆகியோர் நடித்தனர்.

    இதுபற்றி காசி கூறுகையில், "நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எடுத்து முடிக்க ஸ்ரீதர் மிகவும் உதவினார். அவர் செய்த உதவிகளை மறக்க முடியாது. "நெஞ்சம் மறப்பதில்லை'' தரமான படம் என்று பெயர் பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை'' என்று கூறினார்.

    இதன் பிறகு கே.பாலசந்தரின் நாடகமான "பாமா விஜய''த்தை திரைப்படமாக காசி தயாரித்தார். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை பாலசந்தர் ஏற்றார். முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ஜெயந்தி நடித்த இப்படம், வெற்றிப்படமாக அமைந்தது.

    இந்தப்படத்தைத் தயாரிப்பதற்கு ஜெமினி எஸ்.எஸ்.வாசன் மிகவும் உதவினார். கதை விவாதத்திலும் கலந்து கொண்டார். படத்தையும் விநியோகித்தார்.

    இந்தப் படத்தின் திரைக்கதையை பாலசந்தர் மிக சிறப்பாக அமைத்திருந்தார். படத்தின் வெற்றிக்கு, அதுவே அடிப்படையாக அமைந்தது.

    இதுபற்றி காசி கூறுகையில், "இந்தப் படத்தயாரிப்பின்போது, வாசன் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மாமனிதர். அவருடைய சாதனைகளைப் பார்த்தபோது, `நாம் இன்னும் உழைக்கத் தொடங்கவே இல்லை' என்று தோன்றியது. என் தந்தை மீது அவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதன் காரணமாகவே அவர் எனக்கு உதவினார்'' என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து "சூதாட்டம்'' என்ற படத்தை காசி தயாரித்தார். ஜெய்சங்கர், முத்துராமன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் டைரக்டராக மதுரை திருமாறன் அறிமுகமானார்.

    பின்னர் `வாயாடி' என்ற படத்தை தயாரித்தார். படத்தின் கதையை கலைஞானம் எழுதினார். மதுரை திருமாறன் டைரக்ட் செய்தார். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர். படம் வெற்றி பெற்றது.

    இதன்பின் "திருடி'' என்ற படத்தை தயாரித்தார். கதையை "தங்கப்பதக்கம்'' மகேந்திரன் எழுதினார். திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்தார், மதுரை திருமாறன். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்தனர். படம் வெற்றிப்படமானது.

    1976-ம் ஆண்டு "தாய்வீட்டு சீதனம்'' என்ற படத்தை தயாரித்தார். படத்திற்கு கலைஞானம் கதை எழுதினார். திரைக்கதை வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர்.

    இதுபற்றி காசி குறிப்பிடுகையில், "இந்தப் படத்தை தயாரித்து முடிக்க கே.ஆர்.விஜயா, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பைனான்சியரும், பட அதிபருமான நந்தகோபால் செட்டியார், விநியோகஸ்தர் "போட்டோ லித்தோ'' சதாசிவம், திருப்பூர் நண்பர் லோகராஜ் ஆகியோர் உதவினார்கள். அவர்களை நான் மறக்க முடியாது'' என்றார்.

    1976-ல், சர்க்கரை நோயினால் காசி பாதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பு வரை சென்று தப்பினார். அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஆச்சரியமானவை.

    அற்புத படங்கள் பலவற்றை தயாரித்த ஜுபிடர் சோமு, தமது 53-வது வயதில் காலமானார். அவர் இறந்த அதிர்ச்சியில், மகளும் மரணம் அடைந்தார்.
    அற்புத படங்கள் பலவற்றை தயாரித்த ஜுபிடர் சோமு, தமது 53-வது வயதில் காலமானார். அவர் இறந்த அதிர்ச்சியில், மகளும் மரணம் அடைந்தார்.

    ஜுபிடர் இரட்டையர்களில் ஒருவரான மொகிதீன், "மனோகரா'' வெளியான சில நாட்களில் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து, அவர் மகன் அபிபுல்லா, ஜுபிடரின் பங்குதாரர் ஆனார்.

    நண்பரின் நட்பு, சோமுவை வெகுவாக பாதித்தது. எனினும், மனதை தேற்றிக்கொண்டு, தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார்.

    கோவையில், சென்ட்ரல் ஸ்டூடியோ ஜுபிடர் நிர்வாகத்தில் இருந்தது. ஜுபிடர் படங்கள் அங்குதான் தயாராகி வந்தன. அந்த ஸ்டூடியோவை குத்தகைக்கு விட்டு விட்டு, சென்னையில் இருந்த நெப்டியூன் ஸ்டூடியோவை (பிற்காலத்தில் சத்யா ஸ்டூடியோ) எடுத்து நடத்தினார்,

    சோமு.1957-ம் ஆண்டு "கற்புக்கரசி'' படத்தை ஜுபிடர் தயாரித்தது. ஜெமினிகணேசன், சாவித்திரி ஆகியோர் நடித்தனர். இந்த படத்தில்தான் முத்துராமன் அறிமுகமானார்.

    படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.

    1959-ம் ஆண்டு "அமுதவல்லி'' என்ற படத்தை சோமு தயாரித்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.என்.ராஜம், ஆர்.நாகேந்திரராவ், எஸ்.ஏ.நடராஜன் நடித்தனர். கதை-வசனத்தை அரு.இராமநாதன் எழுத, ஏ.கே.சேகர் இயக்கினார்.

    1959-ல், "தங்கப்பதுமை'' படத்தை சோமு தயாரித்தார். கண்ணகி - கோவலன் கதையின் சாயலில், இக்கதையை அரு.இராமநாதன் எழுதி, வசனத்தையும் அவரே எழுதினார். சிவாஜிகணேசன், பத்மினி, டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், ஈ.வி.சரோஜா ஆகியோர்

    நடித்தனர்.பாடல்களை உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மருதகாசி ஆகியோர் எழுதினர். டைரக்ஷன் ஏ.எஸ்.ஏ.சாமி.

    10-1-1959-ல் இப்படம் வெளிவந்தது. அருமையான கலைப்படைப்பாக விளங்கியது. "ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே, அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே'' என்ற பாடல் காட்சியில் சிவாஜியும், பத்மினியும் போட்டி போட்டு நடித்தனர்.

    அந்தப் பாட்டின் இடையில், சிவாஜிக்கு கண்கள் குருடாக்கப்பட்டு விட்டன என்பதை அறிந்து கொள்ளும் பத்மினி `வீல்' என்று அலறுவார். "உங்கள் கண்கள் எங்கே அத்தான்ப'' என்று அழுதவாறு கேட்பார்.

    "கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி...'' என்று பாட்டைத் தொடருவார், சிவாஜி.

    இந்தப்படம் அப்போது ஏனோ சரியாக ஓடவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டு, சக்கை போடு போட்டது.

    1960-ம் ஆண்டு "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்'' என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் ஜெமினிகணேசன், சரோஜாதேவி நடித்தனர். படத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி கதை, வசனம் எழுதினார்.

    ஜுபிடரின் கடைசி படம் "அரசிளங்குமரி.'' இப்படத்தில் எம்.ஜி.ஆர்., பத்மினி, ராஜசுலோசனா ஆகியோர் நடித்தனர்.

    கருணாநிதி வசனம் எழுதினார். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.

    எம்.ஜி.ஆர். பாடுவது போல் அமைந்த "சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா'' என்ற பாடல் இந்தப்படத்தில்தான் இடம் பெற்றது.

    "அரசிளங்குமரி'' படம் தயாரிப்பில் இருந்தபோதே, சோமுவின் உடல் நலம் குன்றியது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற மகன்கள் எம்.எஸ்.காசி, எம்.எஸ்.செந்தில் ஆகிய இருவரும் அரும்பாடுபட்டனர்.

    ஆயினும், சிகிச்சை பலன் இன்றி, 1960 நவம்பர் 17-ந்தேதி சோமு காலமானார். அப்போது அவருக்கு வயது 53.

    சோமு, தன் மகள் சாந்தாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இறப்பதற்கு முன் மகளிடம் அன்புடன் பேசினார். தண்ணீர் கொண்டு வருமாறு சொன்னார். தண்ணீர் கொண்டு வருவதற்குள் சோமுவின் உயிர் பிரிந்து விட்டது.

    தகவல் அறிந்து, கலை உலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    அதே நேரத்தில், வேலைக்காரி பக்கத்து அறைக்குச் சென்றபோது, சோமுவின் மகளும் இறந்து கிடந்ததைப் பார்த்து, பதறிக் கொண்டு ஓடி வந்து தகவல் தெரிவித்தார்.

    தந்தை இறந்த அதிர்ச்சி தாங்காமல், மகளும் இறந்த துயர நிகழ்ச்சியைக் கண்டு, கூடியிருந்தவர்கள் கண்ணீர் சிந்தினர்.

    சோமு இறந்து சில நாட்களுக்குப்பின் "அரசிளங்குமரி'' வெளியாயிற்று.

    ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களில் பங்கு கொண்ட 4 கலைஞர்கள், பிறகு தமிழக முதல்-அமைச்சர்களாக ஆனார்கள்.
    1946-ல் ஜுபிடர் தயாரித்த ஸ்ரீமுருகன் படத்தில், சிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

    அவரும், கே.மாலதியும் ஆடிய சிவ-பார்வதி தாண்டவம் புகழ் பெற்றது. இப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர் முருகனாக நடித்தார். படத்தை ஜுபிடர் சோமு டைரக்ட் செய்தார். ஏ.காசிலிங்கம், இணை டைரக்டராகப் பணியாற்றினார்.

    படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜுபிடரின் "ராஜகுமாரி.'' அவருடன் கே.மாலதி இணைந்து நடித்தார்.

    மற்றும் டி.எஸ்.பாலையா, இலங்கைக்குயில் தவமணிதேவி ஆகியோரும் நடித்தனர். கத்திச்சண்டை காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும் நிறைந்த படம்.

    இந்தப் படத்தை, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். இந்தப் படத்திற்குத்தான் முதன் முதலாக கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். எனினும், படத்தின் டைட்டிலில் "வசனம்: ஏ.எஸ்.ஏ.சாமி. உதவி: மு.கருணாநிதி'' என்று போடப்பட்டது.

    இந்தப் படத்துக்கு பாடல் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

    11-4-1947-ல் வெளியான "ராஜகுமாரி'', வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் வெற்றிப்பயணத்துக்கு வழிவகுத்தது.

    ஜுபிடரின் முக்கிய படங்களில் ஒன்றான அபிமன்யூ 6-5-1948-ல் வெளியாயிற்று.

    இதில் எஸ்.எம்.குமரேசன் அபிமன்யூவாக நடித்தார். அவருக்கு ஜோடி யூ.ஆர்.ஜீவரத்தினம். எம்.ஜி.ஆர். அர்ஜுனனாக நடித்தார்.

    ஜுபிடர் சோமுவும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர். திரைக்கதை - வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது என்றாலும், வசனத்தின் பெரும் பகுதியை எழுதியவர் கருணாநிதிதான். அவர் பெயர் போடப்படவில்லை.

    படத்தில் நரசிம்மபாரதி கிருஷ்ணனாக நடித்தார். என்.டி.ராமராவ் பட உலகுக்கு வருவதற்கு முன்பே கிருஷ்ணனாக நடித்து புகழ் பெற்றவர் நரசிம்மபாரதி. அழகிய தோற்றம் கொண்டவர்.

    மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.சந்தானலட்சுமி, கே.மாலதி ஆகியோரும் நடித்தனர்.

    வசனமும், இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின.

    1948-ல் ஜுபிடர் தயாரித்த மற்றொரு படம் "மோகினி.'' மாயாஜாலங்கள் நிறைந்த படம்.

    இதில் எம்.ஜி.ஆர் - வி.என்.ஜானகி இணைந்து நடித்தனர். மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், மாதுரிதேவி, மாலதி ஆகியோர் நடித்தனர்.

    திரைக்கதையை ஏ.எஸ்.ஏ.சாமி எழுத, எஸ்.டி.சுந்தரம் வசனம் எழுதினார். லங்காசத்யம் டைரக்ட் செய்தார்.

    31-10-1948-ல் இப்படம் வெளிவந்தது.

    இதன்பின் பேரறிஞர் அண்ணாவின் கதை-வசனத்தில், "வேலைக்காரி''யை ஜுபிடர் தயாரித்தது. இப்படம் 25-2-1949-ல் வெளிவந்தது.

    இதில் கே.ஆர்.ராமசாமி, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், வி.என்.ஜானகி, எம்.வி.ராஜம்மா ஆகியோர் நடித்தனர். பாடல்களை உடுமலை நாராயணகவி எழுத, சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்தனர். டைரக்ஷன்: ஏ.எஸ்.ஏ.சாமி.

    புரட்சிகரமான வசனங்களைக் கொண்ட "வேலைக்காரி'', மாபெரும் வெற்றிச்சித்திரமாக அமைந்தது. கே.ஆர்.ராமசாமி வக்கீலாக வந்து, "சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு'' என்று வாதாடிய கட்டம் சிறப்பாக அமைந்தது.

    1950 ஜனவரி 14-ந்தேதி பொங்கலுக்கு வந்த படம் ஜுபிடரின் "கிருஷ்ண விஜயம்.''

    இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், இந்தப் படத்தில்தான் டி.எம்.சவுந்தரராஜன் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார்.

    எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும், சிதம்பரம் ஜெயராமனும் இணைந்து இசை அமைத்தனர். நரசிம்மபாரதி கிருஷ்ணனாகவும், பிரபல பாடகி என்.சி.வசந்தகோகிலம் நாரதராகவும் நடித்தனர்.

    1951-ம் ஆண்டு "மர்மயோகி'' படத்தை ஜுபிடர் தயாரித்தது. இந்த படம் மர்மம் நிறைந்த காட்சிகளை கொண்டு தயாரிக்கப்பட்டதால், படத்திற்கு "ஏ'' சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் "ஏ'' படம் மர்மயோகிதான். படத்தில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்தார். அவருக்கு ஜோடியாக மாதுரிதேவி நடித்தார். அஞ்சலிதேவி, வில்லியாக நடித்தார்.

    "மர்மயோகி'', இந்தியில் "ஏக்தராஜா'' என்ற பெயரில் வெளியானது.

    "இது நிஜமா'' என்ற படத்தில் நடிகராக அறிமுகமான எஸ்.பாலசந்தரிடம் (பிற்காலத்தில் "வீணை'' எஸ்.பாலசந்தர்) ஏராளமான திறமைகள் குவிந்திருப்பதை கண்ட சோமு, அவரை ஜுபிடர் படங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்.

    எஸ்.பாலசந்தர் டைரக்ஷனில் "கைதி'' என்ற படம் உருவாகியது. இந்தப் படத்தின் கதை, இசை ஆகிய பொறுப்புகளையும் பாலசந்தர் கவனித்தார். டி.எஸ்.வெங்கடசாமி, கலைமணி, சீதாராமன் ஆகியோர் வசனம் எழுதினர். "சாண்டோ'' சின்னப்பதேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம் எடிட்டராகப் பணியாற்றினார்.

    பாலசந்தருக்கு ஜோடியாக மீனாட்சி, ரேவதி என்ற புதுமுகங்கள் நடித்தனர். மற்றும் எஸ்.ஏ.நடராஜன், எம்.கே.முஸ்தபா, ஜி.எம்.பஷீர் ஆகியோரும் இந்த மர்மப் படத்தில் நடித்தனர்.

    23-12-1951-ல் வெளிவந்த "கைதி'', ஓரளவு வெற்றிப்படமே

    1953-ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸ் "அழகி'', "இன்ஸ்பெக்டர்'', "நாம்'' ஆகிய 3 படங்களை வெளியிட்டது. இதில் `நாம்' படத்தை, மேகலா பிக்சர்சும், ஜுபிடரும் இணைந்து தயாரித்தன. இதில் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, பி.எஸ்.வீரப்பா ஆகியோர் நடித்தனர். படத்திற்கு கருணாநிதி கதை, வசனம் எழுதினார். டைரக்ஷன்: ஏ.காசிலிங்கம்.

    1954-ம் ஆண்டு டி.கே.எஸ்.சகோதரர்களின் அவ்வை புரொடக்ஷன்ஸ், ஜுபிடருடன் இணைந்து "ரத்தபாசம்'' படத்தை தயாரித்தது. இந்த படத்தின் மூலமாகத்தான் கதை-வசன கர்த்தாவாக பட உலகில் ஸ்ரீதர் அடியெடுத்து வைத்தார். படத்தை ஆர்.எஸ்.மணி டைரக்ட்

    செய்தார்.தொடர்ந்து ஜுபிடர் - லாவண்யா கூட்டு தயாரிப்பில் டி.கே.எஸ்.சகோ தரர்களின் பிரபல நாடகமான "மனிதன்'' திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இதில் டி.கே.சண்முகம், கிருஷ்ணகுமாரி நடித்தனர். கேமராமேதை கே.ராம்நாத் டைரக்ட் செய்தார்.

    வழுக்கி விழுந்த மனைவியை கணவன் ஏற்றுக்கொள்வதுபோல் அமைந்த கதையை (மூலம்: மலையாளம்) ரசிகர்கள் ஏற்காததால், படம் தோல்வி அடைந்தது.

    பம்மல் சம்பந்த முதலியாரின் கதையான "மனோகரா''வை 1954-ல் திரைப்படமாக ஜுபிடர் தயாரித்தது.

    கலைஞர் மு.கருணாநிதியின் வசனம், சிவாஜியின் உணர்ச்சிமயமான நடிப்பு, எல்.வி.பிரசாத்தின் இயக்கம் - இவை ஒன்று சேர்ந்து, மனோகராவை மகத்தான திரைக்காவியமாக்கின.

    கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கிரிஜா, ஜாவர் சீதாராமன், காக்கா ராதாகிருஷ்ணன், எஸ்.ஏ.நடராஜன், பண்டரிபாய் ஆகியோரும் சிறப்பாக நடித்தனர்.

    இந்தப்படம் இந்தியிலும் "டப்'' செய்யப்பட்டது. சிவாஜியின் நடிப்பாற்றலைக் கண்டு வடஇந்திய திரை உலகம் பிரமித்தது.

    "மனோகரா'' வெளிவந்த சில நாட்களில், ஜுபிடர் நிறுவனத்துக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அதன் அதிபர்களில் ஒருவரான மொகிதீன் காலமானார்.

    கண்ணகிக்கு அற்புதமாக வசனம் எழுதிய இளங்கோவன், பின்னர் "மஹாமாயா''வுக்கு வசனம் எழுதியதுடன், ஜுபிடர் சோமுவுடன் இணைந்து அந்தப் படத்தை டைரக்ட் செய்தார்.

    கண்ணகிக்கு அற்புதமாக வசனம் எழுதிய இளங்கோவன், பின்னர் "மஹாமாயா''வுக்கு வசனம் எழுதியதுடன், ஜுபிடர் சோமுவுடன் இணைந்து அந்தப் படத்தை டைரக்ட் செய்தார். ஜுபிடர் பிக்சர்ஸ் "கண்ணகி'' படத்தை அடுத்து தயாரித்த படம் "குபேரகுலேசா.'' குசேலர் கதை பலரும் அறிந்த ஒன்று.

    கிருஷ்ணபரமாத்மாவாவும், குசேலரும் பள்ளித் தோழர்கள். கிருஷ்ணன், மகாவிஷ்ணுவின் அவதாரம். துவாரகையைத் தலைநகராகக் கொண்டு, அரசராகி விடுகிறார். குசேலரோ, 27 குழந்தைகளுடன் வறுமையில் உழல்கிறார். "உங்கள் பால்ய நண்பர் கிருஷ்ணனை சந்தித்து, ஏதாவது உதவி பெற்று வாருங்கள்'' என்று, குசேலரை துவாரகைக்கு அனுப்பி வைக்கிறார், அவர் மனைவி. வெறுங்கையுடன் போகக்கூடாது என்பதால், ஒரு சிறு பையில் அவல் கொடுத்து அனுப்புகிறார். பழமோ, வேறு பரிசுகளோ வாங்க அவர்களிடம் பணம் இல்லை.

    குசேலரை அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார், கிருஷ்ணன். "அண்ணி ஏதாவது கொடுத்து அனுப்பி இருப்பாரே!'' என்று கிருஷ்ணன் கேட்க, அவலை எடுத்து நீட்டுகிறார், குசேலர். சிரித்துக்கொண்டே, ஒரு பிடி அவலை சாப்பிடுகிறார், கிருஷ்ணன். அவ்வளவுதான்! குசேலரின் குடிசை வீடு, பெரிய மாளிகை ஆகிவிடுகிறது! இன்னொரு பிடி அவலை கிருஷ்ணன் சாப்பிடுகிறார்.

    குசேலர் வீட்டில் இருந்த மண்பாண்டங்கள், தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன. வீடு நிறைய நகைகள் குவிகின்றன. மூன்றாவது பிடி அவலை கிருஷ்ணன் சாப்பிட போகும்போது, ருக்மணி தடுத்து விடுகிறாள். காரணம், அந்த மூன்றாவது பிடி அவலை சாப்பிட்டு விட்டால், குசேலர் பெரிய மாமன்னர் ஆகிவிடுவார் என்பது ருக்மணிக்கு தெரியும்! சில நாட்கள் கிருஷ்ணனின் விருந்தாளியாகத் தங்கியிருந்து விட்டு, சொந்த ஊருக்குத் திரும்புகிறார், குசேலர். கூச்சத்தின் காரணமாக, கிருஷ்ணனிடம் உதவி ஏதும் கேட்கவில்லை.

    ஊர் வந்து சேர்ந்த குசேலர், தன் குடிசை வீடு பெரிய மாளிகையாக மாறி இருப்பதைப் பார்த்து திகைத்து நிற்கிறார். வீட்டுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும், தங்கப் பாத்திரங்கள், தங்க நகைகள், தங்கக்காசுகள்! முன்பு கந்தல் சேலை அணிந்திருந்த குசேலரின் மனைவி, பட்டு சேலை அணிந்து, விலை உயர்ந்த ஆபரணங்கள் ஜொலிக்க எதிரே வருகிறாள்! கிருஷ்ணனின் மகிமையைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார், குசேலர்.

    இதுதான், புராணத்தில் உள்ள குசேலர் கதை. இதை "பக்த குசேலா'' என்ற பெயரில் டைரக்டர் கே.சுப்பிரமணியம் ஏற்கனவே தயாரித்தார். குலேசராக பாபநாசம் சிவன் நடித்தார். குசேலரின் மனைவியாகவும், கிருஷ்ணனாகவும் எஸ்.டி.சுப்புலட்சுமி இரட்டை வேடத்தில் நடித்தார். தரித்திர குசேலர், குபேர குசேலராக ஆன பிறகு என்ன நடந்திருக்கும்ப இதுபற்றி கற்பனை செய்தார், எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அளவுக்கு மீறி பணம் வந்த பிறகு குசேலர் சும்மா இருப்பாராப காயகல்பம் சாப்பிட்டு இளைஞர் ஆகிறார்.

    டி.ஆர்.ராஜகுமாரியை காதலிக்கிறார்! அதனால் அவர் குடும்பத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களையும், திருப்பங்களையும் வைத்து, பி.எஸ்.ராமையா எழுதிய கதைதான், "குபேர குசேலா.'' ஜுபிடர் சோமுவும், மொகிதீனும் தயாரித்த இப்படத்தில் குசேலராக பாபநாசம் சிவன் நடித்தார். காயகல்பம் சாப்பிட்டு இளைஞனாக மாறிய பிறகு, பி.யு.சின்னப்பா நடித்தார். கிருஷ்ணனாக நடித்தவர் பி.எஸ்.கோவிந்தன். (பிற்காலத்தில் "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி''யின் கதாநாயகன்.) கதை-வசனத்தை பி.எஸ்.ராமையா எழுதினார். கண்ணகியை டைரக்ட் செய்த சோமு, ஆர்.எஸ்.மணி ஆகிய இருவரும், இந்தப் படத்தையும் இணைத்து டைரக்டர் செய்தனர். படம் 14-6-1943-ல் வெளியாயிற்று. இது வெற்றிப்படம் என்றாலும், "கண்ணகி'' போல மகத்தான வெற்றிப்படம் அல்ல. "கண்ணகி'' படத்தை "மகத்தான காவியம்'' என்று புகழ்ந்த பத்திரிகைகள், "குபேர குலேசா'' பற்றி மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டன."படம் நன்றாக இருக்கிறது; பார்க்க விறுவிறுப்பாக இருக்கிறது'' என்று பொதுவாக கூறப்பட்டாலும், "குசேலர் கதை புராணத்தில் உள்ளது.

    அவர் சிறந்த பக்திமான். அவர் காயகல்பம் சாப்பிட்டு விட்டு, இளைஞனாக மாறி பெண் பித்தன் போல் நடந்து கொள்வதாகக் கற்பனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று, பல பத்திரிகைகள் கண்டித்திருந்தன. ஜுபிடரின் மூன்றாவது படம் "மஹா மாயா.'' ஹர்சர் காலத்து சரித்திர நிகழ்ச்சிகளை வைத்து, கற்பனை செய்யப்பட்ட கதை இது. இளங்கோவன் எழுதினார். கண்ணகியின் வெற்றி ஜோடியான பி.யு.சின்னப்பாவும், கண்ணாம்பாவும் மீண்டும் இப்படத்தில் இணைந்தனர். கண்ணகியில் மாதவியாக நடித்த எம்.எஸ்.சரோஜாவும் இதில் நடித்தார். படத்தை டி.ஆர்.ரகுநாத்தும், இளங்கோவனும் இணைந்து டைரக்ட் செய்தனர்.

    பிற்காலத்தில் பிரபல டைரக்டராக புகழ் பெற்ற காசிலிங்கம் எடிட்டிங்கை கவனித்தார். எப்.நாகூர், கலை டைரக்டராகப் பணியாற்ற, மிகச்சிறந்த கேமராமேன் மார்க்ஸ் பார்ட்லே ஒளிப்பதிவு செய்தார். பாடல்களை சுந்தரவாத்தியாரும், கம்பதாசனும் எழுதினார்கள். இசை அமைப்பை எஸ்.வி.வெங்கட்ராமன் (பிற்காலத்தில் "மீரா'' படத்துக்கு இசை அமைத்தவர்) கவனித்தார்.

    பெரும் எதிர்பார்ப்புடன் 16-10-1944-ல் (தீபாவளி) வெளிவந்த "மஹாமாயா'' எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. காரணம், "மஹாமாயா''வை "கண்ணகி''யுடன் ரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்த்ததுதான்! ("மஹாமாயா'' வெளிவந்த அதே தீபாவளி தினத்தில்தான், பாகவதரின் "ஹரிதாஸ்'' படமும் வெளிவந்து இமாலய வெற்றி பெற்றது.) தமிழ்த்திரை உலகில், சிறந்த வசனத்துக்கு முன்னோடி "இளங்கோவன்.''

    இவருடைய இயற்பெயர் தணிகாசலம். "மணிக்கொடி'' இலக்கியப் பத்திரிகை மூலம் புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா போன்றவர்கள் புகழ் பெற்றபோது, இவரும் புகழ் பெற்றார். புதுமைப்பித்தனும், இளங்கோவனும் ஒரே காலக்கட்டத்தில் "தினமணி''யில் துணையாசிரியர்களாகப் பணியாற்றினர். 1931-ல் தமிழின் முதல் பேசும் படமான "காளிதாஸ்'' வெளிவந்தது. அப்போது, சமஸ்கிருத சொற்கள் அதிகம் கலந்த மணிப்பிரவாள நடையில், வசனங்கள் எழுதப்பட்டன. 1937-ல் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த "அம்பிகாபதி'' படத்துக்கு, இளங்கோவன் முதன் முதலாக வசனம் எழுதினார்.

    இலக்கிய நயம் மிக்க வசனம், முதன் முதலாகத் தமிழ்த்திரையில் ஒலித்தது. அதுமுதல், "சிறந்த வசனம் என்றால் இளங்கோவன்'' என்று பெயர் பெற்றார்."திருநீலகண்டர்'', "அசோக்குமார்'', "சிவகவி'' ஆகிய படங்களுக்கு சிறந்த முறையில் வசனம் எழுதிய இளங்கோவன், 1942-ல் "கண்ணகி'' படத்துக்கு வசனம் எழுதினார். இளங்கோவனின் அற்புத வசனங்களை சின்னப்பாவும், கண்ணாம்பாவும் பேசியபோது, ரசிகர்கள் மெய் சிலிர்த்தனர். குறிப்பாக, பாண்டியனின் அவையில், தன் கணவன் கள்வன் அல்ல என்று நிரூபிக்க கண்ணாம்பா பேசியபோது, இளங்கோவனின் வசனங்கள் சிகரத்தைத் தொட்டன.

    பிறகு மஹாமாயா, ஹரிதாஸ், சுதர்சன் போன்ற படங்களுக்கு இளங்கோவன் வசனம் எழுதினார். பிற்காலத்தில், எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள்'' படத்துக்கு வசனம் எழுதினார். வசனத்தில் மன்னனாக விளங்கிய இளங்கோவன், இறுதிக்காலத்தில் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டார். இளங்கோவனின் வசனங்களை பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் பாராட்டியுள்ளனர். "கண்ணகி''க்கு இளங்கோவன் எழுதிய வசனம், என்றென்றும் சிரஞ்சீவியாக வாழும்.
    ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த பல படங்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் பாடல்கள் எழுதியுள்ளார்.

    ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த பல படங்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் பாடல்கள் எழுதியுள்ளார்.

    ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன், மூன்று முகம், தங்க மகன், நல்லவனுக்கு நல்லவன், நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதினார். நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தில் பெரும்பான்மையான பாடல்களை எழுதியவர் முத்துலிங்கம்தான்.

    "தங்கமகன்'' படத்தில் இவர் எழுதிய "வா... வா... பக்கம் பக்கம் வா!'' என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றதாகும்.

    கமலஹாசன் நடித்து அண்மையில் வெளிவந்த "விருமாண்டி'' படத்தின் பெரும்பாலான படங்களை முத்துலிங்கம் எழுதியுள்ளார்.

    அதில் கமலஹாசன் பாடுவதுபோல் ஓர் பாடல்:

    "மாட விளக்கே -யாரு உன்னைத்
    தெருவோரம் சாத்துனா
    மல்லிகைப் பூவை - யாரு இப்போ
    வேலியிலே சூட்டுனா'' என்று ஆரம்பம் ஆகும் அந்தப் பாடல். அதில் சரணத்தில் "ஆறாக நீ ஓட, உதவாக்கரை நானே'' என்ற வரி வரும். அந்த "உதவாக்கரை'' என்ற சொல்லை பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பதை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

    கமலஹாசன் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான "உணர்ச்சிகள்'' படத்திலும் முத்துலிங்கம் பாடல் எழுதியுள்ளார்.

    "காக்கிச்சட்டை'' படத்தில் வரும் "பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்'' என்ற பாடலும், "காதல் பரிசு'' படத்தில் வரும் "காதல் மகாராணி கவிதை பூ விரித்தாள்'' பாடலும் இவர் எழுதியவை.

    தன்னுடைய திரையுலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

    "எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, டி.ஆர்.பாப்பா, சங்கர் கணேஷ், கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, ஜெர்ரி அமல்தேவ், லட்சுமிகாந்த் பியாரிலால், மனோஜ் கியான், மரகதமணி, ஷியாம், அம்சலேகா, பாலபாரதி, சவுந்தர்யன் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களிடம் எழுதியிருக்கிறேன். இளையராஜா இசையில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

    ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை எழுதியிருந்தாலும், சில குறிப்பிட்ட பாடல்களை வாசகர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    1. ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ (பயணங்கள் முடிவதில்லை)

    2. மணி ஓசை கேட்டு எழுந்து - நெஞ்சில் ஆசை கோடி சுமந்து (பயணங்கள் முடிவதில்லை)

    3. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் (உதய கீதம்)

    4. கூட்டத்திலே கோயில் புறா யாரை இங்கு தேடுதம்மா (இதயக்கோயில்)

    5. ராகவனே ரமணா ரகுநாதா (இளமைக் காலங்கள்)

    6. எம் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான் (கோபுரங்கள் சாய்வதில்லை)

    7. சின்னச்சின்ன ரோஜாப்பூவே செல்லக்கண்ணே நீ யாரு (பூவிழி வாசலிலே)

    8. சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே (முந்தானை முடிச்சு)

    9. ஆறும் அது ஆழமில்லை - அது சேரும் கடலும் ஆழமில்லை (முதல் வசந்தம்)

    10. செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா (செந்தூரப்பூவே)

    11. இதயம் போகுதே எனையே பிரிந்தே (புதிய வார்ப்புகள்)

    12. டாடி டாடி ஓ மை டாடி (மவுன கீதங்கள்)

    13. இதழில் கதை எழுதும் நேரமிது (உன்னால் முடியும் தம்பி)

    14. தண்ணி கொஞ்சம் ஏறியிருக்கு கம்மாக் கரையிலே (ஜுலி கணபதி)

    15. போடு தாளம் போடு - நாங்க பாடாத தெம்மாங்கு ஏது (புதுவசந்தம்)

    16. கேக்கலையோ கேக்கலையோ கண்ணனது கானம் (கஸ்தூரி மான்)

    ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் "புலன் விசாரணை பாகம்-2'', சேரன் இயக்கும் "மாயக்கண்ணாடி'' போன்ற பல படங்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இளையராஜா இசையமைக்கும் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து எழுதுகிறேன். அவர் ஒருவர்தான் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்து வருகிறார். அவருக்கு என் நன்றி.

    எனக்கு ஒரே இடத்தில் அமர்ந்து எழுதினால் சிந்தனை வராது. நடந்து கொண்டேதான் சிந்திப்பேன். பெரும்பாலும் நான் நடந்து செல்வதற்கு காரணம் இதுதான். இல்லையென்றால் வீட்டில் மொட்டை மாடியில் சுருட்டுப் பிடித்துக்கொண்டே சிந்திப்பேன். இதுவரை ஆயிரத்து நானூற்றுப் பத்துப் பாடல்களை எழுதியிருக்கிறேன். இதில் நடந்து கொண்டும், சுருட்டு பிடித்துக்கொண்டும் எழுதிய பாடல்களில் இருநூற்றுப் பத்துப்பாடல்கள் ஹிட்டாகி இருக்கின்றன.

    ஆனால் மொழி மாற்றுப் படங்களுக்குப் பாடல்கள் எழுதும்போது நான்கு மணி நேரம் ஆனாலும் ஒரே இடத்தில் அமர்ந்து எழுதினால்தான் எழுத முடியும். அப்போதுதான் உதட்டசைவு, காட்சி, பாடக்கூடிய பாத்திரத்தின் இயல்பு இவற்றிற்கேற்ப எழுத இயலும். அப்படித்தான் நான் எழுதியிருக்கிறேன்.

    இதில் ஆரூர்தாஸ் வசனம் எழுதிய நூற்றுக்கணக்கான மொழி மாற்றுப்படங்களில் ஐம்பத்தைந்து படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். என்னை எழுத வைத்தவர் அவர். என் நன்றிக்குரியவர்களில் அவரும் ஒருவர். அதுபோல் கே.ஏ.வி.கோவிந்தன், மருதபரணி, ரவிசங்கர் போன்றவர்கள் வசனம் எழுதிய பல மொழி மாற்றுப்படங்களுக்கும் எழுதியிருக்கிறேன்.''

    இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.

    முத்துலிங்கத்தின் மனைவி பெயர் லட்சுமி. ஒரே மகள் மோகனவல்லி "எம்.எஸ்.சி'' பட்டதாரி.

    கவிஞர் முத்துலிங்கம் எழுதிய திரைப்படப் பாடல்கள், "முத்துலிங்கம் திரை இசைப் பாடல்கள்'' என்ற பெயரில் 2 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மற்றும் "எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்'', "எம்.ஜி.ஆர். உலா'', "காற்றில் விதைத்த கருத்து'', "முத்துலிங்கம் கவிதைகள்'', "வெண்ணிலா'' உள்பட பல நூல்கள் எழுதியுள்ளார். ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான "எம்.ஜி.ஆர். கழகம்'', இவருக்கு "எம்.ஜி.ஆர். விருது'' ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளது.
    மீனவ நண்பன் படம் கடைசி கட்டப் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். கட்டளைப்படி கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் சேர்க்கப்பட்டது.

    இதுபற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-

    "ஒருமுறை எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்தியா ஸ்டூடியோ சென்றிருந்தேன். அப்போது "மீனவநண்பன்'' படத்திற்குப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும், "இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எது?'' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். "நான் எழுதவில்லை'' என்றேன். "ஏன்?'' என்றார். "என்னை யாரும் அழைக்கவில்லை'' என்றேன்.

    அப்போது புரொடக்ஷன் மானேஜர் வந்தார். "முத்துலிங்கத்தை வைத்துப் பாடல் எழுதச் சொன்னேனே! ஏன் அதன்படி செய்யவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார். "நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை'' என்றார். "இப்போது வந்துவிட்டார் அல்லவா? இவரை வைத்து ஒரு பாடல் எழுதி வாருங்கள்'' என்றார். "படம் முடிந்து விட்டதே'' என்றார்.

    உடனே, டைரக்டர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச்சொன்னார். அவர்கள் வந்ததும், "இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைத்து ஒரு கனவுக்காட்சி பாடலை எழுதுங்கள். அதற்குப்பிறகு படப்பிடிப்பு நடத்தலாம்'' என்றார். அவர்களும் புரொடக்ஷன் மானேஜர் சொன்னது மாதிரி "அதற்கான சிட்டுவேஷன் (சம்பவம்) இல்லையே'' என்றார்கள். "ட்ரீம் சீன் பாடலுக்கு என்ன சிட்டுவேஷன் வேண்டும்? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வருவதுதானே ட்ரீம்சாங்? அதற்குத் தனியாக என்ன சிட்டுவேஷன்? பாடல் எழுதுங்கள்; அதன் பிறகு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்'' என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார். அதன்பிறகு நான் எழுதிய பாடல்தான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலாக அமைந்தது.

    "தங்கத்தில் முகமெடுத்து

    சந்தனத்தில் உடலெடுத்து

    மங்கையென்று வந்திருக்கும் மலரோ - நீ

    மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ''

    என்ற பாடல்தான் அது.

    இந்தப் படத்திற்குப் பாடல்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று தெரிந்திருந்தும் என்னை வைத்துப் பாடல் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஏன் கூறினார்? தன்னை நம்பி இருப்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.''

    இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் படங்களுக்கு மட்டுமின்றி, பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற டைரக்டர்கள் இயக்கிய முக்கிய படங்களுக்கும் கவிஞர் முத்துலிங்கம் பாடல் எழுதியுள்ளார். "16 வயதினிலே'' படத்துக்குப்பிறகு பாரதிராஜா உருவாக்கிய படம் "கிழக்கே போகும் ரெயில்'' (1978). ராதிகா - சுதாகர் நடித்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.

    இந்தப் படத்தில் இடம் பெற்ற "மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ! வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ!'' என்ற பாட்டு, பெரிய சூப்பர் ஹிட் பாடலாகும். இதை எழுதியவர் முத்துலிங்கம்.  ஒன்றரை மணி நேரத்தில் இந்தப் பாடலை முத்துலிங்கம் எழுதி முடித்தார்.

    1978-79-ம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதை முத்துலிங்கத்திற்கு இந்தப் பாடல் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா கமலா திரையரங்கில் நடைபெற்றபோது, இந்தப் பாடலைத் தாளம் போட்டுப் பாடி "இதைப்போல எங்கள் படங்களுக்குப் பாடல் போடக்கூடாதா?'' என்று இளையராஜாவைப் பார்த்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கேட்டார். எனக்குக் கேடயம் கொடுக்கும்போது என்னை முதுகில் தட்டி பாராட்டினார். இந்தப் பாடலை டைரக்டர் ஸ்ரீதர் மிகவும் பாராட்டியதாக இளையராஜா என்னிடம் கூறினார்.

    இதைப்போல் `வயசுப் பொண்ணு' என்ற படத்தில் நான் எழுதிய

    "காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து

    தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும் - அந்தத்

    திருமகளும் உன்னழகைப் பெறவேண்டும்''

    என்ற பாடலும் தமிழக அரசின் பாடலாசிரியருக்கான விருதை எனக்குப் பெற்றுத் தந்தது. இது முழுக்க முழுக்க நான் எழுதி, அதன் பிறகு மெட்டமைக்கப்பட்ட பாடல்.

    நான் இரண்டு மணி நேரத்தில் எழுதிய இப்பாடலுக்கு முக்கால் மணி நேரத்தில் இசையமைத்தவர் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன். "காஞ்சிப் பட்டுடுத்தி'' என்ற வார்த்தையை வைத்துப் பாட்டைத் தொடங்கு என்று எனக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் அந்தப் படத்தின் இயக்குனர் கே.சங்கர். ஆனால் இந்தப்பாட்டை அந்தப் படத்தின் பைனான்சியர் சடையப்பச் செட்டியார் வேண்டாம் என்று முதலில் நிராகரித்துவிட்டார். "பாட்டில் வேகம் இல்லை. அதனால் வேண்டாம். வேறு பாட்டுப் போடுங்கள்'' என்றார்.

    இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான் மிகவும் வலியுறுத்தி, "இந்தப் பாட்டைப் படத்தில் இடம் பெறச் செய்யுங்கள். நான் ஹிட் பண்ணிக்காட்டுகிறேன்'' என்றார். அதன் பிறகு செட்டியார் ஒப்புக்கொண்டார்.

    அந்தப்படம் ஓடவில்லை. ஆனால் இந்தப் பாட்டுத்தான் அந்தப் படத்தின் பேர் சொல்லிக்கொண்டிருக்கிறது. சொன்னதுபோல் எம்.எஸ்.வி. அந்தப் பாடலை ஹிட்டாக் கினார்.

    அதுபோல் "எங்க ஊரு ராசாத்தி'' என்ற படம் ஓடவில்லை. அந்தப் படத்தில் இடம் பெற்ற "பொன்மானைத்தேடி - நானும் பூவோடு வந்தேன்'' என்ற எனது பாடல்தான் படத்தின் பேரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகாத நாளே இல்லை என்று சொல்லும் வண்ணம் தொடர்ந்து ஒலிபரப்பினார்கள்.''

    இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.
    நடிகை அம்பிகா "மாவீரன்'' படத்தில் குதிரை சவாரி செய்தபோது விபத்தில் சிக்கி, அதிசயமாக உயிர் தப்பினார்.

    நடிகை அம்பிகா "மாவீரன்'' படத்தில் குதிரை சவாரி செய்தபோது விபத்தில் சிக்கி, அதிசயமாக உயிர் தப்பினார்.

    சிவாஜிகணேசனுடன், "வாழ்க்கை'' (1984) படத்தில் வயதான தோற்றத்தில் நடித்ததால், "இனி அம்மா வேடத்தில் தான் நடிக்க வேண்டி இருக்கும்'' என்று சிலர் அம்பிகாவை பயமுறுத்தியது, தவறாக முடிந்தது. ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகுமார், மோகன் என்று இளம் நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார்.  அதுமட்டுமல்ல; தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்தார்.

    தென்னிந்திய மொழிகளில் அம்பிகா புகழ் பெற்று விளங்கிய அதே காலக்கட்டத்தில், அவர் தங்கை ராதாவும் கொடிகட்டிப் பறந்தார். லலிதா - பத்மினி சகோதரிகளுக்குப் பின்னர், தென்னிந்தியாவின் புகழ் பெற்ற நட்சத்திர சகோதரிகளாக அம்பிகாவும், ராதாவும் விளங்கினர். "எங்கேயோ கேட்ட குரல்'', "வெள்ளை ரோஜா'', "இதயக்கோவில்'', "மனக்கணக்கு'', "காதல் பரிசு'', "தாம்பத்யம்'', "அண்ணாநகர் முதல்தெரு'' முதலான படங்களில், இந்த சகோதரிகள் சேர்ந்து நடித்தனர்.

    ரஜினிகாந்துடன் அம்பிகா நடித்த படங்களில் "படிக்காதவன்'' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் சிவாஜிகணேசனும் நடித்தார். அவர், ரஜினிக்கு அண்ணனாக நடித்தார்.

    அம்பிகாதான் ரஜினிக்கு ஜோடி. அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தது. நிறை கர்ப்பிணிபோல வேடம் போட்டு, வயிற்றில் சாராய பாட்டில்களை மறைத்துக் கடத்தும் வேடத்தில் திறமையாக நடித்து, ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றார்.

    ரஜினியுடன் அம்பிகா நடித்த "நான் சிகப்பு மனிதன்'', "மிஸ்டர் பாரத்'' ஆகிய படங்களும், கமலுடன் நடித்த "விக்ரம்'', "காதல் பரிசு'', "காக்கிச்சட்டை'' ஆகிய படங்களும் பெரிய வெற்றிப்படங்கள். சிவகுமாருடன் "கற்பூரதீபம்'', விஜயகாந்துடன் "தண்டனை'', சத்யராஜுடன் "மக்கள் என் பக்கம்'' ஆகிய படங்களில் அம்பிகா நடித்தார். "மாவீரன்'' படத்தில் நடிக்கும்போது, அம்பிகா பெரிய விபத்தில் சிக்கி தப்பினார். இந்தப் படத்தில் வரும் "நீ கொடுத்ததை தருவேன்'' என்ற பாடல் காட்சி, மைசூரில் படமாக்கப்பட்டது. ரஜினிகாந்த் வேகமாக குதிரையில் செல்லும்போது, அம்பிகாவையும் தூக்கி குதிரையில் உட்கார வைத்துக்கொண்டு போவார்.

    அப்போது நடந்த விபத்து பற்றி அம்பிகா குறிப்பிடுகையில், "நைலான் துணியில் தைத்த உடையை எனக்கு கொடுத்திருந்தார்கள். குதிரையில் ஏறியபோது, துணி வழுக்கி நான் கீழே விழுந்துவிட்டேன். குதிரை சிறிது தூரம் என்னை இழுத்துச் சென்றுவிட்டது. நல்லவேளையாக, காயத்துடன் தப்பினேன்'' என்றார். இதேபோல, "கடல் மீன்கள்'' படப்பிடிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடந்தபோதும், குதிரையில் இருந்து விழுந்துவிட்டார்.

    தன் திரை உலக அனுபவங்கள் பற்றி அம்பிகா கூறியதாவது:-

    "என்னை `ஐ.ஏ.எஸ்' ஆக்கவேண்டும் என்று என் தந்தை விரும்பினார். சட்டம் பயில வேண்டும் என்பது என் விருப்பம். சினிமாவுக்கு வராமல் இருந்தால், வக்கீலாகியிருப்பேன். சினிமா நடிகையானதில் மகிழ்ச்சி அடைகிறேன். மறுபிறவி என்று ஒன்று இருக்குமானால், இதே குடும்பத்தில், இதே பெற்றோருக்கு மகளாக, இதே சகோதரிகளுடன் பிறக்கவேண்டும்; இதே மாதிரி சினிமா நட்சத்திரமாக புகழ்பெறவேண்டும். இதுவே என் ஆசை.

    நானும், என் சகோதரி ராதாவும், ஒரே சமயத்தில் சினிமாவில் நடித்தபோதிலும் எங்களுக்குள் போட்டியோ, பொறாமையோ கிடையாது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசமும், அன்பும் வைத்திருந்தோம். ஒரு சமயம், சிவகுமார் சார் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "ராதா மிகச்சிறந்த நடிகை'' என்று குறிப்பிட்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிவகுமார் கூறியதை ராதா விடம் சொல்லி பெருமைப்பட்டேன்.

    சினிமாத்துறையில் அனைத்து கதாநாயகர்களுடனும் நடித்து விட்டேன். என் கலைப்பயணம் தொடர்ந்து நடைபெறும்.''

    இவ்வாறு அம்பிகா கூறினார்.
    சிவாஜிகணேசனும், அம்பிகாவும் "வாழ்க்கை'' படத்தில், வயதான வேடத்தில் இணைந்து நடித்தனர்.

    சிவாஜிகணேசனும், அம்பிகாவும் "வாழ்க்கை'' படத்தில், வயதான வேடத்தில் இணைந்து நடித்தனர்.

    இளம் கதாநாயகர்களுடன் நடித்து வந்த அம்பிகா, முதன் முதலாக சிவாஜிகணேசனுடன் "கருடா சவுக்கியமா'' படத்தில் நடித்தார். ஜோடியாக அல்ல; மகளாக! பிறகு சிவாஜியுடன் "வெள்ளை ரோஜா'' படத்தில் நடித்தாலும், பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

    1984-ல் சித்ரா லட்சுமணனும், சித்ரா ராமுவும் தயாரித்த "வாழ்க்கை'' என்ற படத்தில், சிவாஜியும், அம்பிகாவும் ஜோடியாக நடித்தனர். இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற "அவதார்'' என்ற படத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. சி.வி.ராஜேந்திரன் டைரக்ட் செய்தார். வசனம்: பஞ்சு அருணாசலம். இசை: இளையராஜா.

    "வாழ்க்கை'' என்ற பெயரில், 1949-ல் ஏவி.எம். தயாரித்த படம் மகத்தான வெற்றி பெற்றது. இப்படத்தில்தான், வைஜயந்திமாலா அறிமுகம் ஆனார். பொதுவாக, பழைய படங்களின் பெயர்களில் மீண்டும் எடுக்கப்படும் படங்கள் சரியாக ஓடுவதில்லை. ஸ்ரீவள்ளி, நல்லதம்பி, கட்டபொம்மன், சந்திரலேகா முதலிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், சிவாஜி - அம்பிகா நடித்த "வாழ்க்கை'', வெற்றிப்படமாக அமைந்தது. வயதான தோற்றத்தில் சிறப்பாக நடித்தார், அம்பிகா.

    இந்த அனுபவம் பற்றி அம்பிகா கூறியதாவது:-

    "சிவாஜி சாருக்கு ஈடு கொடுத்து நடிக்க முடியுமா என்று பயந்தேன். இதை அறிந்து கொண்ட சிவாஜி, "எதற்கும் பயப்படாதே. தன்னம்பிக்கையுடன் இயல்பாக நடி'' என்றார். "நமக்கு திருமணம் ஆகி இன்றோடு 25 ஆண்டு ஆகிவிட்டது'' என்பதுதான் நான் பேசவேண்டிய முதல் வசனம். அதற்கு சிவாஜி, "நீ அன்றைக்கு எப்படி இருந்தாயோ, அதேபோல்தான் இப்போதும் இருக்கிறாய்!'' என்பார். இந்த முதல் காட்சி ஒரே `டேக்'கில் `ஓகே' ஆயிற்று. நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

    இந்தப் படத்தின்போது, நடிப்பின் பல்வேறு நுணுக்கங்களை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன். என்னை அருகில் உட்காரச் சொல்வார். `பெரிய சீனாக இருக்கிறதே என்று பயப்படாதே. ரிகர்சல் பண்ணு' என்று கூறுவார். "கஷ்டமாக இருந்தால் எழுதி வைத்து மனப்பாடம் செய்துகொள்'' என்பார். ஒரே வரியை எப்படி எப்படி எல்லாம் பேசலாம் என்று நடித்துக் காட்டுவார். அதன்பிறகு, `எப்படி பேசினால் சீனுக்கு சரியாக இருக்கும் என்பது உனக்குத் தெரியும். அதை செய்' என்பார். ஒருவர் டயலாக் பேசும்போது அருகில் நிற்பவரும் நடிக்க வேண்டும் என்று கூறுவார். `15 நிமிடத்திற்குள் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருங்கள்.

    30 நிமிடத்திற்கு மேல் ஆகும் என்றால் மேக்-அப் ரூமுக்கு போங்கள்' என்பார். அதை நான் இன்றும் கடைபிடிக்கிறேன். "வாழ்க்கை'' படத்தில், மகனுக்காக சிவாஜி சாரிடம் நான் மடிப்பிச்சை கேட்கும் காட்சி வரும். அதில் சிறப்பாக நடித்ததாக சிவாஜி பாராட்டினார். அதைப் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு வேடிக்கை. முன்பு எனக்கு ஜோடியாக நடித்த ரவீந்திரன், இதில் மகனாக நடித்தார்! பல படங்களில், தீபாவும், நானும் சிறுமிகளாக நடித்திருக்கிறோம். அந்த தீபா, எனக்கு மருமகளாக நடித்தார்!

    "வாழ்க்கை'' படத்துக்குப் பிறகு, சிவாஜியுடன் "திருப்பம்'', "தாம்பத்யம்'' ஆகிய படங்களில் நடித்தேன். 1984-ல், "நான் பாடும் பாடல்'' படத்தில், சிவகுமார் சாருடன் சேர்ந்து நடித்தேன். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாதது.

    "நான் பாடும் பாடல் படத்திற்கு 2 கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரு காட்சியில், சிவகுமார் சார் எனக்கு நெற்றியில் பொட்டு வைப்பார். அப்போது நான் அவரை கன்னத்தில் அடிக்க வேண்டும். அதற்கு எனது மாமனார், "ஏன் அவரை அடித்தாய்?'' என்று கேட்பார். "எனக்கு பொட்டு வைத்தார். அதனால் அடித்தேன்'' என்று கூறுவேன். அதற்கு மாமனார், "அவனை நீ அடித்ததால் அவனைத் தொட்டுவிட்டாய்'' என்று கூறுவார்.

    நான், "சிவகுமார் சார் கன்னத்தில் அடிக்கமாட்டேன்'' என்று கூறிவிட்டேன். ஆனால் சிவகுமார் பயப்படாமல் அடிக்கச் சொன்னார். "முடியாது'' என்றதால், என் கையை எடுத்து தனது கன்னத்தில் அடித்துக் காட்டினார். அதன் பின்னர் வேகமாக அடிப்பது போல கையை கொண்டு சென்று, கன்னத்தில் மெதுவாக அடித்து நடித்தேன்.

    அடிப்பதற்கு பயந்ததில் காரணம் இருந்தது. "அக்னிபர்வதம்'' என்ற படத்தில், சத்தார் என்பவர் நடித்தார். ஒரு காட்சியில் அவர் என்னை அடிக்க வேண்டும். அந்த காட்சியில் நிஜமாகவே பளார் என்று என் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். அவர் அடித்த அடியில் நான் ஆடிப்போய்விட்டேன். அந்த அடியை என்னால் மறக்கவே முடியாது. எனவேதான், அந்த வலி பிறருக்கு வரக்கூடாது என்று, நான் அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிக்காமலே கையை ஓங்கி பட்டும் படாமலும் நடித்து விடுவேன்.''

    இவ்வாறு அம்பிகா கூறினார்.
    தமிழ்ப் பட உலகின் எல்லாப் பிரபல நடிகர்களுடனும் அம்பிகா இணைந்து நடித்தார். ரஜினியுடன் நடித்த "எங்கேயோ கேட்ட குரல்'', "கமலஹாசனுடன் நடித்த "சகலகலா வல்லவன்'' ஆகியவை, ஒரே நாளில் (14-8-1982) வெளிவந்து சக்கை போடு போட்டன.

    தமிழ்ப் பட உலகின் எல்லாப் பிரபல நடிகர்களுடனும் அம்பிகா இணைந்து நடித்தார். ரஜினியுடன் நடித்த "எங்கேயோ கேட்ட குரல்'', "கமலஹாசனுடன் நடித்த "சகலகலா வல்லவன்'' ஆகியவை, ஒரே நாளில் (14-8-1982) வெளிவந்து சக்கை போடு போட்டன. "அந்த 7 நாட்கள்'' படத்தைத் தொடர்ந்து, அம்பிகாவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன.

    அந்தக் காலக்கட்டத்தில், "ஆக்ஷன் ஹீரோ''வாகவும், ஸ்டைல் மன்னனாகவும் வலம் வந்து கொண்டிருந்த ரஜினிகாந்த், முற்றிலும் மாறுபட்ட குணச்சித்திர வேடத்தில் "எங்கேயோ கேட்ட குரல்'' படத்தில் நடித்தார்.

    முற்பகுதியில் கிராமத்து இளைஞனாகவும், பிற்பகுதியில் வயோதிக "கெட்டப்''பிலும் நடித்தார். அவருடைய மனைவியாக அம்பிகா நடித்தார். ரஜினியுடன் அம்பிகா நடித்த முதல் படம் இதுதான். அது மட்டுமல்ல; அம்பிகாவின் தங்கை ராதாவும், இந்தப் படத்தில் முதன் முதலாக அக்காவுடன் சேர்ந்து நடித்தார். புதுமையான கதை அமைப்பைக்கொண்டது "எங்கேயோ கேட்ட குரல்.'' அதிகம் படிக்காத - கிராமத்து இளைஞனை (ரஜினியை) மணக்கும் கதாநாயகி (அம்பிகா) கணவனை வெறுக்கிறாள்.

    அந்த வெறுப்பினால், வேறொருவனுடன் ஓடிப்போக முடிவு செய்கிறாள். வீட்டை விட்டு வெளியேறிய பின் மனம் மாறுகிறது. வீட்டுக்குத் திரும்பி வந்து, கணவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள்.

    அவளை கணவன் மன்னித்தபோதிலும், மீண்டும் ஒன்றாக வாழமுடியாது என்று கூறி, ஊருக்கு வெளியே ஒரு குடிசை போட்டுக் கொடுத்து, அங்கே வசிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பார். படத்தின் இறுதியில் கதாநாயகி இறந்து போவாள். அவள் உடலைத் தூக்க எவரும் வரமாட்டார்கள். அவள் உடலை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி ரஜினி இழுத்துச் செல்வார். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதிய இப்படத்தின் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன். ரஜினிக்கு முற்றிலும் மாறுபட்ட படம்.

    வயோதிக தோற்றத்தில் ரஜினியை அவருடைய ரசிகர்கள் ஏற்பார்களா என்று முதலில் சந்தேகம் இருந்தது. ஆனால், படம் மனதைத் தொடும்படி அமைந்ததால், சகல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, நூறு நாட்கள் ஓடியது. இளம் நடிகையான அம்பிகா, கனமான வேடத்தை ஏற்று சிறப்பாகச் செய்திருந்தார்.  அம்பிகாவின் தங்கையாக ராதாவும் நன்கு நடித்திருந்தார்.

    இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி அம்பிகா கூறியதாவது:-

    "ரஜினி சாருடன் நான் நடித்த முதல் படம் "எங்கேயோ கேட்ட குரல்.'' அப்போது எனக்கு 20 வயதுதான் இருக்கும். வயதான `கெட்டப்'பில் நடித்தேன். "வயதான வேடத்தில் நடித்தால், தொடர்ந்து அந்த மாதிரியான வேடங்களையே தருவார்கள்'' என்று சிலர் பயமுறுத்தினார்கள்.

     ஆனால், அப்படியெல்லாம் நடக்கவில்லை. படம் பெரிய வெற்றி பெற்று, எனக்குப் புகழ் தேடித்தந்தது. படத்தின் இறுதிக் காட்சியில், ரஜினி காலில் விழுந்து கதறும் காட்சியில் "கிளிசரின்'' போடாமல் நடித்தேன். நான் இறந்து கிடக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, என் தந்தை வந்திருந்தார். நான் பிணம் போல் கிடந்தேன்.

    என் மீது வரட்டிகளை அடுக்கினார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த என் தந்தைக்கு கோபம் வந்துவிட்டது. "இனி இந்த மாதிரி காட்சிகளில் நடிக்காதே. கதை சொல்லும்போது, இந்த மாதிரி காட்சி ஏதாவது வருகிறதா என்று கேட்டுத்தெரிந்து கொள்'' என்றார். இப்போது கூட இந்தப் படத்தைப் பார்த்தால், இந்த சீன் வரும்போது என் தாயார் அழுதுவிடுவார்.''

    இவ்வாறு கூறினார்,  அம்பிகா.

    "எங்கேயோ கேட்ட குரல்'' திரைக்கு வந்த அதே நாளில் கமலஹாசனுடன் அம்பிகா இணைந்து நடித்த ஏவி.எம்.மின் "சகலகலா வல்லவன்'' படமும் ரிலீஸ் ஆயிற்று. "சகலகலா வல்லவன்'' படத்துக்கு முன்பே ஸ்ரீதரின் "நானும் ஒரு தொழிலாளி'' என்ற படத்தில் நடிக்க கமலஹாசனும், அம்பிகாவும் ஒப்பந்தம் ஆனார்கள். ஆனால், அந்தப்படம் முடிவடைந்து வெளிவருவதற்கு, மிகவும் காலதாமதம் ஆயிற்று.

    கமல்-அம்பிகா நடித்து முதலில் வெளிவந்த படம் "சகலகலா வல்லவன்''தான். இதில் முற்பகுதியில் கட்டுக் குடுமியுடன் பட்டிக்காட்டு வாலிபனாக வரும் கமல், பிற்பகுதியில் நவநாகரீக இளைஞனாக வந்து அசத்துவார். பணக்காரப் பெண்ணான அம்பிகா அவரை காதலிப்பார். ஆட்டம் - பாட்டம் நிறைந்த, "சகலகலா வல்லவன்'' வசூலில் சக்கை போடு போட்டது.

    கமலஹாசனுடன் நடித்த அனுபவம் பற்றி அம்பிகா குறிப்பிடுகையில், "நான் சிறுமியாக இருந்தபோது ஒரு படப்பிடிப்பில் கமல் சாரை சந்தித்தேன். `நீ அழகாக இருக்கிறாய். படத்தில் நடித்தால், எதிர்காலத்தில் பெரும் புகழ் பெறுவாய்' என்று கூறினார். படப்பிடிப்பில் நாங்கள் சந்தித்துக்கொண்டபோது, அதை நினைவூட்டிய கமல், நான் சொன்னபடி நடந்து விட்டது அல்லவா?' என்று கூறிச் சிரித்தார். உண்மையில் அவர் வாக்கு பலித்துவிட்டது'' என்றார்.

    தொடர்ந்து "காக்கிச்சட்டை'', "உயர்ந்த உள்ளம்'', "விக்ரம்'', "காதல் பரிசு'', "கடல் மீன்கள்'' முதலிய படங்களில் கமலுடன் அம்பிகா நடித்தார்.
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது.அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்:

    "அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.

    பாவலர் அண்ணனுக்கு கம்ïனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார்.

    இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார். இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார்.

    நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல்
    அமர்க்களப்படும்.சோதனை நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை. நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

    ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.

    நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார். அவர்கள் அண்ணனை நம்பினார்கள்.

    இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.

    ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்?

    அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.

    இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா.

    அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''

    இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-

    இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும்.

    ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மிïசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார். இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்ïமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார்.

    "அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன்.

    ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார், அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும்.

    அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.

    இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார்.

    அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும்.

    அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''

    ×