என் மலர்tooltip icon

    சினிமா

    ஜுபிடர் காசியின் அதிசய அனுபவங்கள்
    X

    ஜுபிடர் காசியின் அதிசய அனுபவங்கள்

    ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபட்ட அவர் மகன் காசிக்கு, பல சோதனைகள் ஏற்பட்டன. ஒரு சித்தருடன் காடுகளில் சில ஆண்டுகள் அலைந்து திரிந்தார்.
    ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபட்ட அவர் மகன் காசிக்கு, பல சோதனைகள் ஏற்பட்டன. ஒரு சித்தருடன் காடுகளில் சில ஆண்டுகள் அலைந்து திரிந்தார்.

    இதுகுறித்து காசி கூறியதாவது:-

    "1976-ம் ஆண்டில் எனக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டது. உடல் நிலை மோசமாகியது. 4 ஆண்டுகள் சிகிச்சை பெற்றேன். படத்தயாரிப்பு நின்று போயிற்று.

    இந்நிலையில் என் நண்பர்கள் ராமமூர்த்தி, சுவாமிநாதன் ஆகியோர் உதவியால், பெரம்பலூர் அருகே வாசம் செய்து கொண்டிருந்த தலையாட்டி சித்தர் என்ற மகானை சந்தித்தேன். அவர் காட்டிலும், மலையிலும் அலைந்து திரிபவர். அவருடன் சுற்றித்திரிந்தேன்.

    ஒருநாள் அவர் ஒரு பொட்டலத்தைப் பிரித்து, அதில் இருந்த அல்வாவை கொடுத்து சாப்பிடச் சொன்னார். "எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. நான் அல்வா சாப்பிடக்கூடாதே!'' என்றேன்.

    "உன் வியாதிக்கு இதுதான் மருந்து!'' என்றார்.

    நான் அந்த அல்வாவை சாப்பிட்டேன். ஆச்சரியப்படும் வகையில், சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டேன்.

    இதன் காரணமாக அவர் மீது பக்தி ஏற்பட்டது. அவருடனேயே சில ஆண்டுகள் தங்கினேன். அவர் போகிற இடங்களுக்கெல்லாம் சென்றேன்.

    ஒருநாள் அவர் என்னை அழைத்து, "நீ ஊருக்குப்போ. உனக்குள்ள கடன் பிரச்சினைகள் தீரும்'' என்றார்.

    ஜுபிடரின் பிற்காலப்படங்கள் சரியாக ஓடாததால், என் தகப்பனார் காலத்திலேயே ஜுபிடர் நிறுவனத்தின் மீது கடன் சுமை ஏறியிருந்தது. கம்பெனிக்கு சொத்துக்கள் இருந்தபோதிலும், கடனை தீர்க்க முடியாத நிலை.

    எனவே, "கடன் பிரச்சினை தீர வழி இல்லையே'' என்று சித்தரிடம் கூறினேன்.

    "பிரச்சினை தீரும நேரம் வந்துவிட்டது. ஊருக்குப்போ. வடக்கே இருந்து ஒருவர் வந்து கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்'' என்று சித்தர் கூறினார். எனவே, ஊருக்குத் திரும்பினேன்.

    சித்தர் சொன்னபடியே நடந்தது. மும்பையில் இருந்து, அதிகாரி ஒருவர் வந்தார். நிலங்களை விற்க அவர் வழி செய்தார். எங்கள் மீதிருந்த கடன் சுமைகள் அதிசயப்படத்தக்க வகையில் அகன்றன.

    1991-ல் சித்தர் சமாதியானார். பெரம்பலூர் பஸ் நிலையம் அருகே, அவர் இருந்த இடத்தில் சமாதியுடன் ஆசிரமம் கட்டியுள்ளோம். அங்கு பூஜை, வழிபாடு, அன்னதானம் செய்து வருகிறோம்.''

    இவ்வாறு காசி கூறினார்.

    "நெஞ்சம் மறப்பதில்லை'', "பாமா விஜயம்'' முதலிய படங்களை காசி தயாரித்த காலக்கட்டத்தில், அவரும் ஜுபிடர் மொகிதீன் மகன் ஹபிபுல்லாவும் சேர்ந்து கூட்டாக சில படங்களை தெலுங்கிலும், கன்னடத்திலும் தயாரித்தனர்.

    தமிழில் ஜுபிடர் எடுத்த "வால்மீகி''யை தெலுங்கில் தயாரித்தனர். இதில் என்.டி.ராமராவும், ராஜசுலோசனாவும் நடித்தார்கள்.

    "மர்மயோகி''யை தெலுங்கில் எடுத்தனர். தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் என்.டி.ராமராவும், மாதுரிதேவி நடித்த வேடத்தில் கிருஷ்ணகுமாரியும் நடித்தனர்.

    கன்னடத்து சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரையும், லீலாவதியையும் நடிக்க வைத்து, "வால்மீகி''யை கன்னடத்தில் எடுத்தார்கள்.

    அறிஞர் அண்ணா கதை - வசனம் எழுதி, ஜுபிடர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "வேலைக்காரி''யை கன்னடத்தில் தயாரித்தனர். தமிழில் கே.ஆர்.ராமசாமி நடித்த வேடத்தில் ராஜ்குமாரும், வி.என்.ஜானகியின் வேடத்தில் சவுகார் ஜானகியும், எம்.வி.ராஜம்மா நடித்த வேடத்தில் லீலாவதியும் நடித்தனர்.

    இந்த தெலுங்கு, கன்னடப் படங்கள் வெற்றிகரமாக ஓடின.

    ஜுபிடர் சோமுவின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் படத்தொழிலில் ஈடுபட்டனர்.

    ஜுபிடர் சோமுவின் இளைய மகன் (காசியின் தம்பி) எம்.எஸ்.செந்தில்குமார், பெங்களூர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஒளிப்பதிவாளராகப் பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர். பின்னர் 1974-ல் "பணத்துக்காக'' என்ற படத்தை தயாரித்து, டைரக்ட் செய்தார். இதில் சிவகுமார், தேங்காய் சீனிவாசன், சசிகுமார், ஜெய்சித்ரா, ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்தனர்.

    கமலஹாசன் இப்படத்தின் துணை நடன இயக்குனராக பணியாற்றியதுடன், வில்லனாகவும் நடித்தார்.

    கதை-வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். கண்ணதாசன் பாடல்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.

    "போலீஸ் அறியறது'' என்ற மலையாளப்படத்தையும் செந்தில்குமார் தயாரித்தார்.

    ஜுபிடர் சோமு இருந்தபோதே, அவர் மகள் பாலசவுந்தரியின் கணவர் ஏ.கே.பாலசுப்பிரமணியம் மற்றும் சிலருடன் சேர்ந்து சரவணபவா - யூனிட்டி பேனரில், "எதிர்பாராதது'' படத்தை தயாரித்தார். பெரிய வெற்றிப்படமான இதில் சிவாஜிகணேசன், பத்மினி ஆகியோர் நடித்தனர். ஸ்ரீதர் வசனம் எழுதினார்.

    சோமுவுடன் பணியாற்றிய சி.சுந்தரம்பிள்ளை, கேமராமேன் பி.ராமசாமி, ஒலிப்பதிவாளர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் இந்தப் பட நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிவாஜிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்த "வணங்காமுடி'', சிவாஜி, சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ் ஆகியோர் நடித்த "எல்லாம் உனக்காக'' ஆகியவையும் "சரவணபவா யூனிட்டி'' தயாரித்த படங்கள்.

    இதன்பின், பங்குதாரர்கள் தனித்தனியாகப் பிரிந்து, படங்களைத் தயாரித்தனர். பாலசுப்பிரமணியம் சில மலையாளப்படங்களைத் தயாரித்தார்.

    சோமுவின் மற்றொரு மகளான சுலோசனாவின் கணவர் வி.பி.எம்.மாணிக்கம், பகவதி பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனியை தொடங்கி, மலையாளப்படங்கள் தயாரித்தார்.

    (சோமுவின் இன்னொரு மகள் சரோஜாவின் கணவர் திருப்பூர் ஜி.எஸ்.ராமநாதன், "பனாமா'' என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கினார்.

    சோமுவின் தம்பியான எம்.கோபால், திருப்பூரில் ஜோதி தியேட்டர் என்ற திரையரங்கின் உரிமையாளராகவும், திரைப்பட விநியோகஸ்தராகவும் விளங்கினார்.

    Next Story
    ×