என் மலர்tooltip icon

    சினிமா

    வாழ்க்கை படத்தில் அம்பிகா சிவாஜியுடன் இணைந்து நடித்தார்
    X

    வாழ்க்கை படத்தில் அம்பிகா சிவாஜியுடன் இணைந்து நடித்தார்

    சிவாஜிகணேசனும், அம்பிகாவும் "வாழ்க்கை'' படத்தில், வயதான வேடத்தில் இணைந்து நடித்தனர்.

    சிவாஜிகணேசனும், அம்பிகாவும் "வாழ்க்கை'' படத்தில், வயதான வேடத்தில் இணைந்து நடித்தனர்.

    இளம் கதாநாயகர்களுடன் நடித்து வந்த அம்பிகா, முதன் முதலாக சிவாஜிகணேசனுடன் "கருடா சவுக்கியமா'' படத்தில் நடித்தார். ஜோடியாக அல்ல; மகளாக! பிறகு சிவாஜியுடன் "வெள்ளை ரோஜா'' படத்தில் நடித்தாலும், பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

    1984-ல் சித்ரா லட்சுமணனும், சித்ரா ராமுவும் தயாரித்த "வாழ்க்கை'' என்ற படத்தில், சிவாஜியும், அம்பிகாவும் ஜோடியாக நடித்தனர். இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற "அவதார்'' என்ற படத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. சி.வி.ராஜேந்திரன் டைரக்ட் செய்தார். வசனம்: பஞ்சு அருணாசலம். இசை: இளையராஜா.

    "வாழ்க்கை'' என்ற பெயரில், 1949-ல் ஏவி.எம். தயாரித்த படம் மகத்தான வெற்றி பெற்றது. இப்படத்தில்தான், வைஜயந்திமாலா அறிமுகம் ஆனார். பொதுவாக, பழைய படங்களின் பெயர்களில் மீண்டும் எடுக்கப்படும் படங்கள் சரியாக ஓடுவதில்லை. ஸ்ரீவள்ளி, நல்லதம்பி, கட்டபொம்மன், சந்திரலேகா முதலிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், சிவாஜி - அம்பிகா நடித்த "வாழ்க்கை'', வெற்றிப்படமாக அமைந்தது. வயதான தோற்றத்தில் சிறப்பாக நடித்தார், அம்பிகா.

    இந்த அனுபவம் பற்றி அம்பிகா கூறியதாவது:-

    "சிவாஜி சாருக்கு ஈடு கொடுத்து நடிக்க முடியுமா என்று பயந்தேன். இதை அறிந்து கொண்ட சிவாஜி, "எதற்கும் பயப்படாதே. தன்னம்பிக்கையுடன் இயல்பாக நடி'' என்றார். "நமக்கு திருமணம் ஆகி இன்றோடு 25 ஆண்டு ஆகிவிட்டது'' என்பதுதான் நான் பேசவேண்டிய முதல் வசனம். அதற்கு சிவாஜி, "நீ அன்றைக்கு எப்படி இருந்தாயோ, அதேபோல்தான் இப்போதும் இருக்கிறாய்!'' என்பார். இந்த முதல் காட்சி ஒரே `டேக்'கில் `ஓகே' ஆயிற்று. நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

    இந்தப் படத்தின்போது, நடிப்பின் பல்வேறு நுணுக்கங்களை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன். என்னை அருகில் உட்காரச் சொல்வார். `பெரிய சீனாக இருக்கிறதே என்று பயப்படாதே. ரிகர்சல் பண்ணு' என்று கூறுவார். "கஷ்டமாக இருந்தால் எழுதி வைத்து மனப்பாடம் செய்துகொள்'' என்பார். ஒரே வரியை எப்படி எப்படி எல்லாம் பேசலாம் என்று நடித்துக் காட்டுவார். அதன்பிறகு, `எப்படி பேசினால் சீனுக்கு சரியாக இருக்கும் என்பது உனக்குத் தெரியும். அதை செய்' என்பார். ஒருவர் டயலாக் பேசும்போது அருகில் நிற்பவரும் நடிக்க வேண்டும் என்று கூறுவார். `15 நிமிடத்திற்குள் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருங்கள்.

    30 நிமிடத்திற்கு மேல் ஆகும் என்றால் மேக்-அப் ரூமுக்கு போங்கள்' என்பார். அதை நான் இன்றும் கடைபிடிக்கிறேன். "வாழ்க்கை'' படத்தில், மகனுக்காக சிவாஜி சாரிடம் நான் மடிப்பிச்சை கேட்கும் காட்சி வரும். அதில் சிறப்பாக நடித்ததாக சிவாஜி பாராட்டினார். அதைப் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு வேடிக்கை. முன்பு எனக்கு ஜோடியாக நடித்த ரவீந்திரன், இதில் மகனாக நடித்தார்! பல படங்களில், தீபாவும், நானும் சிறுமிகளாக நடித்திருக்கிறோம். அந்த தீபா, எனக்கு மருமகளாக நடித்தார்!

    "வாழ்க்கை'' படத்துக்குப் பிறகு, சிவாஜியுடன் "திருப்பம்'', "தாம்பத்யம்'' ஆகிய படங்களில் நடித்தேன். 1984-ல், "நான் பாடும் பாடல்'' படத்தில், சிவகுமார் சாருடன் சேர்ந்து நடித்தேன். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாதது.

    "நான் பாடும் பாடல் படத்திற்கு 2 கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரு காட்சியில், சிவகுமார் சார் எனக்கு நெற்றியில் பொட்டு வைப்பார். அப்போது நான் அவரை கன்னத்தில் அடிக்க வேண்டும். அதற்கு எனது மாமனார், "ஏன் அவரை அடித்தாய்?'' என்று கேட்பார். "எனக்கு பொட்டு வைத்தார். அதனால் அடித்தேன்'' என்று கூறுவேன். அதற்கு மாமனார், "அவனை நீ அடித்ததால் அவனைத் தொட்டுவிட்டாய்'' என்று கூறுவார்.

    நான், "சிவகுமார் சார் கன்னத்தில் அடிக்கமாட்டேன்'' என்று கூறிவிட்டேன். ஆனால் சிவகுமார் பயப்படாமல் அடிக்கச் சொன்னார். "முடியாது'' என்றதால், என் கையை எடுத்து தனது கன்னத்தில் அடித்துக் காட்டினார். அதன் பின்னர் வேகமாக அடிப்பது போல கையை கொண்டு சென்று, கன்னத்தில் மெதுவாக அடித்து நடித்தேன்.

    அடிப்பதற்கு பயந்ததில் காரணம் இருந்தது. "அக்னிபர்வதம்'' என்ற படத்தில், சத்தார் என்பவர் நடித்தார். ஒரு காட்சியில் அவர் என்னை அடிக்க வேண்டும். அந்த காட்சியில் நிஜமாகவே பளார் என்று என் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். அவர் அடித்த அடியில் நான் ஆடிப்போய்விட்டேன். அந்த அடியை என்னால் மறக்கவே முடியாது. எனவேதான், அந்த வலி பிறருக்கு வரக்கூடாது என்று, நான் அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிக்காமலே கையை ஓங்கி பட்டும் படாமலும் நடித்து விடுவேன்.''

    இவ்வாறு அம்பிகா கூறினார்.
    Next Story
    ×