என் மலர்
சினிமா

கவிஞர் முத்துலிங்கம் ரஜினி - கமல் படங்களுக்கு எழுதிய பாடல்கள்
ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த பல படங்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் பாடல்கள் எழுதியுள்ளார்.
ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த பல படங்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் பாடல்கள் எழுதியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன், மூன்று முகம், தங்க மகன், நல்லவனுக்கு நல்லவன், நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதினார். நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தில் பெரும்பான்மையான பாடல்களை எழுதியவர் முத்துலிங்கம்தான்.
"தங்கமகன்'' படத்தில் இவர் எழுதிய "வா... வா... பக்கம் பக்கம் வா!'' என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றதாகும்.
கமலஹாசன் நடித்து அண்மையில் வெளிவந்த "விருமாண்டி'' படத்தின் பெரும்பாலான படங்களை முத்துலிங்கம் எழுதியுள்ளார்.
அதில் கமலஹாசன் பாடுவதுபோல் ஓர் பாடல்:
"மாட விளக்கே -யாரு உன்னைத்
தெருவோரம் சாத்துனா
மல்லிகைப் பூவை - யாரு இப்போ
வேலியிலே சூட்டுனா'' என்று ஆரம்பம் ஆகும் அந்தப் பாடல். அதில் சரணத்தில் "ஆறாக நீ ஓட, உதவாக்கரை நானே'' என்ற வரி வரும். அந்த "உதவாக்கரை'' என்ற சொல்லை பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பதை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
கமலஹாசன் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான "உணர்ச்சிகள்'' படத்திலும் முத்துலிங்கம் பாடல் எழுதியுள்ளார்.
"காக்கிச்சட்டை'' படத்தில் வரும் "பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்'' என்ற பாடலும், "காதல் பரிசு'' படத்தில் வரும் "காதல் மகாராணி கவிதை பூ விரித்தாள்'' பாடலும் இவர் எழுதியவை.
தன்னுடைய திரையுலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
"எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, டி.ஆர்.பாப்பா, சங்கர் கணேஷ், கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, ஜெர்ரி அமல்தேவ், லட்சுமிகாந்த் பியாரிலால், மனோஜ் கியான், மரகதமணி, ஷியாம், அம்சலேகா, பாலபாரதி, சவுந்தர்யன் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களிடம் எழுதியிருக்கிறேன். இளையராஜா இசையில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை எழுதியிருந்தாலும், சில குறிப்பிட்ட பாடல்களை வாசகர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
1. ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ (பயணங்கள் முடிவதில்லை)
2. மணி ஓசை கேட்டு எழுந்து - நெஞ்சில் ஆசை கோடி சுமந்து (பயணங்கள் முடிவதில்லை)
3. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் (உதய கீதம்)
4. கூட்டத்திலே கோயில் புறா யாரை இங்கு தேடுதம்மா (இதயக்கோயில்)
5. ராகவனே ரமணா ரகுநாதா (இளமைக் காலங்கள்)
6. எம் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான் (கோபுரங்கள் சாய்வதில்லை)
7. சின்னச்சின்ன ரோஜாப்பூவே செல்லக்கண்ணே நீ யாரு (பூவிழி வாசலிலே)
8. சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே (முந்தானை முடிச்சு)
9. ஆறும் அது ஆழமில்லை - அது சேரும் கடலும் ஆழமில்லை (முதல் வசந்தம்)
10. செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா (செந்தூரப்பூவே)
11. இதயம் போகுதே எனையே பிரிந்தே (புதிய வார்ப்புகள்)
12. டாடி டாடி ஓ மை டாடி (மவுன கீதங்கள்)
13. இதழில் கதை எழுதும் நேரமிது (உன்னால் முடியும் தம்பி)
14. தண்ணி கொஞ்சம் ஏறியிருக்கு கம்மாக் கரையிலே (ஜுலி கணபதி)
15. போடு தாளம் போடு - நாங்க பாடாத தெம்மாங்கு ஏது (புதுவசந்தம்)
16. கேக்கலையோ கேக்கலையோ கண்ணனது கானம் (கஸ்தூரி மான்)
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் "புலன் விசாரணை பாகம்-2'', சேரன் இயக்கும் "மாயக்கண்ணாடி'' போன்ற பல படங்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இளையராஜா இசையமைக்கும் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து எழுதுகிறேன். அவர் ஒருவர்தான் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்து வருகிறார். அவருக்கு என் நன்றி.
எனக்கு ஒரே இடத்தில் அமர்ந்து எழுதினால் சிந்தனை வராது. நடந்து கொண்டேதான் சிந்திப்பேன். பெரும்பாலும் நான் நடந்து செல்வதற்கு காரணம் இதுதான். இல்லையென்றால் வீட்டில் மொட்டை மாடியில் சுருட்டுப் பிடித்துக்கொண்டே சிந்திப்பேன். இதுவரை ஆயிரத்து நானூற்றுப் பத்துப் பாடல்களை எழுதியிருக்கிறேன். இதில் நடந்து கொண்டும், சுருட்டு பிடித்துக்கொண்டும் எழுதிய பாடல்களில் இருநூற்றுப் பத்துப்பாடல்கள் ஹிட்டாகி இருக்கின்றன.
ஆனால் மொழி மாற்றுப் படங்களுக்குப் பாடல்கள் எழுதும்போது நான்கு மணி நேரம் ஆனாலும் ஒரே இடத்தில் அமர்ந்து எழுதினால்தான் எழுத முடியும். அப்போதுதான் உதட்டசைவு, காட்சி, பாடக்கூடிய பாத்திரத்தின் இயல்பு இவற்றிற்கேற்ப எழுத இயலும். அப்படித்தான் நான் எழுதியிருக்கிறேன்.
இதில் ஆரூர்தாஸ் வசனம் எழுதிய நூற்றுக்கணக்கான மொழி மாற்றுப்படங்களில் ஐம்பத்தைந்து படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். என்னை எழுத வைத்தவர் அவர். என் நன்றிக்குரியவர்களில் அவரும் ஒருவர். அதுபோல் கே.ஏ.வி.கோவிந்தன், மருதபரணி, ரவிசங்கர் போன்றவர்கள் வசனம் எழுதிய பல மொழி மாற்றுப்படங்களுக்கும் எழுதியிருக்கிறேன்.''
இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.
முத்துலிங்கத்தின் மனைவி பெயர் லட்சுமி. ஒரே மகள் மோகனவல்லி "எம்.எஸ்.சி'' பட்டதாரி.
கவிஞர் முத்துலிங்கம் எழுதிய திரைப்படப் பாடல்கள், "முத்துலிங்கம் திரை இசைப் பாடல்கள்'' என்ற பெயரில் 2 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மற்றும் "எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்'', "எம்.ஜி.ஆர். உலா'', "காற்றில் விதைத்த கருத்து'', "முத்துலிங்கம் கவிதைகள்'', "வெண்ணிலா'' உள்பட பல நூல்கள் எழுதியுள்ளார். ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான "எம்.ஜி.ஆர். கழகம்'', இவருக்கு "எம்.ஜி.ஆர். விருது'' ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளது.
Next Story






