என் மலர்tooltip icon

    சினிமா

    ஜுபிடர் சோமு மறைந்தார்
    X

    ஜுபிடர் சோமு மறைந்தார்

    அற்புத படங்கள் பலவற்றை தயாரித்த ஜுபிடர் சோமு, தமது 53-வது வயதில் காலமானார். அவர் இறந்த அதிர்ச்சியில், மகளும் மரணம் அடைந்தார்.
    அற்புத படங்கள் பலவற்றை தயாரித்த ஜுபிடர் சோமு, தமது 53-வது வயதில் காலமானார். அவர் இறந்த அதிர்ச்சியில், மகளும் மரணம் அடைந்தார்.

    ஜுபிடர் இரட்டையர்களில் ஒருவரான மொகிதீன், "மனோகரா'' வெளியான சில நாட்களில் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து, அவர் மகன் அபிபுல்லா, ஜுபிடரின் பங்குதாரர் ஆனார்.

    நண்பரின் நட்பு, சோமுவை வெகுவாக பாதித்தது. எனினும், மனதை தேற்றிக்கொண்டு, தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார்.

    கோவையில், சென்ட்ரல் ஸ்டூடியோ ஜுபிடர் நிர்வாகத்தில் இருந்தது. ஜுபிடர் படங்கள் அங்குதான் தயாராகி வந்தன. அந்த ஸ்டூடியோவை குத்தகைக்கு விட்டு விட்டு, சென்னையில் இருந்த நெப்டியூன் ஸ்டூடியோவை (பிற்காலத்தில் சத்யா ஸ்டூடியோ) எடுத்து நடத்தினார்,

    சோமு.1957-ம் ஆண்டு "கற்புக்கரசி'' படத்தை ஜுபிடர் தயாரித்தது. ஜெமினிகணேசன், சாவித்திரி ஆகியோர் நடித்தனர். இந்த படத்தில்தான் முத்துராமன் அறிமுகமானார்.

    படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.

    1959-ம் ஆண்டு "அமுதவல்லி'' என்ற படத்தை சோமு தயாரித்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.என்.ராஜம், ஆர்.நாகேந்திரராவ், எஸ்.ஏ.நடராஜன் நடித்தனர். கதை-வசனத்தை அரு.இராமநாதன் எழுத, ஏ.கே.சேகர் இயக்கினார்.

    1959-ல், "தங்கப்பதுமை'' படத்தை சோமு தயாரித்தார். கண்ணகி - கோவலன் கதையின் சாயலில், இக்கதையை அரு.இராமநாதன் எழுதி, வசனத்தையும் அவரே எழுதினார். சிவாஜிகணேசன், பத்மினி, டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், ஈ.வி.சரோஜா ஆகியோர்

    நடித்தனர்.பாடல்களை உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மருதகாசி ஆகியோர் எழுதினர். டைரக்ஷன் ஏ.எஸ்.ஏ.சாமி.

    10-1-1959-ல் இப்படம் வெளிவந்தது. அருமையான கலைப்படைப்பாக விளங்கியது. "ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே, அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே'' என்ற பாடல் காட்சியில் சிவாஜியும், பத்மினியும் போட்டி போட்டு நடித்தனர்.

    அந்தப் பாட்டின் இடையில், சிவாஜிக்கு கண்கள் குருடாக்கப்பட்டு விட்டன என்பதை அறிந்து கொள்ளும் பத்மினி `வீல்' என்று அலறுவார். "உங்கள் கண்கள் எங்கே அத்தான்ப'' என்று அழுதவாறு கேட்பார்.

    "கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி...'' என்று பாட்டைத் தொடருவார், சிவாஜி.

    இந்தப்படம் அப்போது ஏனோ சரியாக ஓடவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டு, சக்கை போடு போட்டது.

    1960-ம் ஆண்டு "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்'' என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் ஜெமினிகணேசன், சரோஜாதேவி நடித்தனர். படத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி கதை, வசனம் எழுதினார்.

    ஜுபிடரின் கடைசி படம் "அரசிளங்குமரி.'' இப்படத்தில் எம்.ஜி.ஆர்., பத்மினி, ராஜசுலோசனா ஆகியோர் நடித்தனர்.

    கருணாநிதி வசனம் எழுதினார். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.

    எம்.ஜி.ஆர். பாடுவது போல் அமைந்த "சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா'' என்ற பாடல் இந்தப்படத்தில்தான் இடம் பெற்றது.

    "அரசிளங்குமரி'' படம் தயாரிப்பில் இருந்தபோதே, சோமுவின் உடல் நலம் குன்றியது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற மகன்கள் எம்.எஸ்.காசி, எம்.எஸ்.செந்தில் ஆகிய இருவரும் அரும்பாடுபட்டனர்.

    ஆயினும், சிகிச்சை பலன் இன்றி, 1960 நவம்பர் 17-ந்தேதி சோமு காலமானார். அப்போது அவருக்கு வயது 53.

    சோமு, தன் மகள் சாந்தாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இறப்பதற்கு முன் மகளிடம் அன்புடன் பேசினார். தண்ணீர் கொண்டு வருமாறு சொன்னார். தண்ணீர் கொண்டு வருவதற்குள் சோமுவின் உயிர் பிரிந்து விட்டது.

    தகவல் அறிந்து, கலை உலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    அதே நேரத்தில், வேலைக்காரி பக்கத்து அறைக்குச் சென்றபோது, சோமுவின் மகளும் இறந்து கிடந்ததைப் பார்த்து, பதறிக் கொண்டு ஓடி வந்து தகவல் தெரிவித்தார்.

    தந்தை இறந்த அதிர்ச்சி தாங்காமல், மகளும் இறந்த துயர நிகழ்ச்சியைக் கண்டு, கூடியிருந்தவர்கள் கண்ணீர் சிந்தினர்.

    சோமு இறந்து சில நாட்களுக்குப்பின் "அரசிளங்குமரி'' வெளியாயிற்று.

    Next Story
    ×