என் மலர்tooltip icon

    கார்

    ஹூண்டாய் நிறுவனம் தனது வாகனங்களுக்கு ஆன்லைன் ஃபைனான்ஸ் சலுகையை பயன்படுத்த புதிய கூட்டணி அமைத்துள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஆன்லைனில் கார் ஃபைனான்ஸ் வழங்க ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணி மூலம் வாடிக்கையாளர்கள் புதிய வாகனங்களுக்கு நிதி சலுகையை பெற்று கொள்ள முடியும்.

    புதிய திட்டம் வாடிக்கையாளர்கள் நிதி சலுகையை பெற ஹெச்டிஎஃப்சி வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியத்தை போக்குகிறது. முன்னதாக நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக ஹூண்டாய் நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய க்ளிக் டூ பை எனும் தளத்தை துவங்கியது.

    இதன் தொடர்ச்சியாக கார் விற்பனையை ஊக்குவிக்கும் நிதி திட்டங்களையும் ஆன்லைனிலேயே வழங்க ஹூண்டாய் புதிய கூட்டணியை அமைத்து இருக்கிறது. 

    ஹூண்டாய்

    ஹூண்டாய் க்ளிக் டூ பை சேவையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களின் கேள்வி மற்றும் இதர சந்தேகங்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பதில்களை வீட்டில் இருந்தபடி அறிந்து கொள்ள முடியும்.

    மேலும் இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் நிறுவன வாகனங்களை ஆன்லைனிலேயே வாங்கிக் கொள்ள முடியும். முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி பகுதியில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது.

    புதிய ஆன்லைன் சேவை மூலம் எதிர்கால வாகனங்கள் விற்பனையை டிஜிட்டல் முறையில் மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. ஆல்லைன் விற்பனை தளம் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக விற்பனை மையங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான இகியூசி வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யுவியான இகியூசி மாடலை விரைவில் இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்டின் ஸ்கிவென்க் புதிய இகியூசி இந்தியாவில் இரண்டு வாரங்களில் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.

    முன்னதாக மெர்சிடிஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான ஜிஎல்எஸ் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.  புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி

    புதிய இகியூசி இந்தியாவில் வெளியாகும் முதல் ஆடம்பர எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். புதிய இகியூசி மாடலின் வடிவமைப்பு ஜிஎல்சி எஸ்யுவியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரின் கிரில் பகுதியில் இலுமினேட் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பேட்ஜிங், புதிய ஹெட்லைட்களில் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    பின்புறம் மெல்லிய டெயில் லேம்ப்கள் பூட் லிட் மீது பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் புதிய காரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாற்றங்களை செய்து கொள்ள கூடுதல் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் ஏஎம்ஜி மாடல்களில் உள்ளது போன்றே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி இ63 எஸ் 2021 ஆண்டிற்கான அப்டேட் பெற்றுள்ளது. எனினும் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. தற்சமயம் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மாடல் இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய 2021 மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் முன்புறம் புதிய ஏஎம்ஜி மாடலில் பான்-அமெரிக்கா கிரில் புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் பெரிய ஏர் கர்டெயின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் லிப் ஸ்பாயிலர் மற்றும் குவாட் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ்

    2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 595 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    சக்திவாய்ந்த என்ஜினுடன் 9 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய பென்ஸ் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தினை 3.3 நொடிகளில் எட்டிவிடும். 
    ஹோண்டா நிறுவனத்தின் 2020 ஹோண்டா சிட்டி மாடல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.



    ஹோண்டா நிறுவனம் 2020 ஹோண்டா சிட்டி மாடலின் முழு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. புதிய செடான் மாடல் இம்மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் ஜப்பான் நாட்டு பாரம்பரியத்தை பரைசாற்றும் கட்டானா ரக வாள் வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய சிட்டி மாடல் அதிநவீன ஏரோடைனமிக் வடிவம் கொண்டிருக்கிறது. இதில் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல் இன்டகிரேட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் எல்இடி டர்ன் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி

    காரின் பின்புறம் இசட் வடிவம் கொண்ட ராப்-அரவுண்ட் எல்இடி டெயில்-லேம்ப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 ஹூண்டாய் கிரெட்டா மாடல் இந்திய முன்பதிவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா கார் முன்பதிவில் 30 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்தியாவில் அறிமுகமான மூன்றே மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

    தற்போதைய கொரோனா ஊரடங்கிலும் 2020 கிரெட்டா மாடல் 30 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. மற்ற ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களை போன்று ஹூண்டாய் நிறுவனமும் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது. எனினும், வாடிக்கையாளர்கள் புதிய எஸ்யுவியை வாங்க ஆர்வம் செலுத்தியது தெரிகிறது.

    ஹூண்டாய் கிரெட்டா

    தற்சமயம் முன்பதிவான மாடல்களில் 55 சதவீதம் டீசல் என்ஜின் கொண்டவை என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை வைத்து வாடிக்கையாளர்கள் டீசல் என்ஜின் வாகனங்களை வாங்க அதிக விருப்பம் செலுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.

    புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் காரின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய கார் ஆகும். இது சிறிய ஐந்து பேர் அமரக்கூடிய மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் விலை ரூ. 33.12 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. மார்ச் மாதம் அறிமுகமான போதும், இதன் விநியோகம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமானது. தற்சமயம், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் விநியோகம் துவங்கும் என தெரிகிறது.

    ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்

    புதிய கார் விற்பனையகங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனை தனியார் செய்தி நிறுவனம் புகைப்படங்களுடன் தெரியப்படுத்தி இருக்கிறது. இதனால் புதிய கார் விநியோகம் சில நாட்களில் துவங்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.

    டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார் மாடல்களுக்கு விடை கொடுத்திருக்கிறது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் ஜெடிபி மற்றும் டியாகோ ஜெடிபி மாடல்களை இந்திய சந்தையில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறது. 

    இரு மாடல்களும் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெயம் ஆட்டோமோடிவ் நிறுவனங்களிடையேயான கூட்டணியை தொடர்ந்து வெளியிடப்பட்டது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் 2017 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 2018 ஆம் ஆண்டு டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி மாடல்கள் வெளியிடப்பட்டன.

    டாடா டிகோர் ஜெடிபி

    இந்திய சந்தையில் தற்போதைய சூழல் சரியில்லாததும், இரு மாடல்களின் விற்பனை தொடர்ந்து சரிந்ததை தொடர்ந்து இவை விலக்கிக் கொள்ளப்படுகின்றன. முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்குவதாக அறிவித்தது. 

    டாடா டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி மாடல்களில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருந்தன. இவை 114 பிஹெச்பி பவர் வழங்கின. சக்திவாய்ந்த என்ஜின் தவிர இரு மாடல்களும் சிறப்பான டிசைன் செய்யப்பட்டு மெக்கானிக்கல் அப்டேட்களும் செய்யப்பட்டன.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ பிஎஸ்6 புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
     


    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் செலரியோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. புதிய மாருதி சுசுகி செலரியோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் விலை ரூ. 5.61 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வெர்ஷன்களை விட ரூ. 81 ஆயிரம் வித்தியாசம் ஆகும்.

    செலரியோ மிட்-ரேன்ஜ் மாடல்களான VXi மற்றும் VXi(o) மாடல்களில் சிஎன்ஜி வேரியண்ட் கிடைக்கிறது. இவற்றுடன் மாருதி சுசுகி செலரியோ டூர் வேரியண்ட்டிலும் சிஎன்ஜி ஆப்ஷன் கிடைக்கிறது. புதிய சிஎன்ஜி வசதி தவிர இந்த காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    மாருதி சுசுகி செலரியோ

    மாருதி சுசுகி செலரியோ பெட்ரோல் வெர்ஷன்களில் உள்ளஅனைத்து அம்சங்கள் மற்றும் உபகரங்கள் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டிலும் வழங்கப்படுகிறது. 

    செலரியோ சிஎன்ஜி வெர்ஷனில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 58 பிஹெச்பி பவர், 79 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் 68 பிஹெச்பி மற்றும் 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை தார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. புதிய தார் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இது நடைபெறவில்லை.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரு மாதங்களாக ஆட்டோ துறை முற்றிலும் முடங்கி இருந்தது. முந்தைய தகவல்களின் படி புதிய தலைமுறை தார் மாடல் நாட்டில் ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய தார் மாடல் வெளியீடு மேலும் தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

    மஹிந்திரா நிறுவனத்தின் 2019-2020 நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது, அந்நிறுவன நிர்வாக இயக்குனர் பவன் கோயன்கா, அடுத்த தலைமுறை பாரம்பரிய ஆஃப்-ரோடர் மாடல் இந்திய சந்தையில் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    மஹிந்திரா தார்

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய தார் மாடல் தற்போதைய மாடலை விட நீளமாகவும், உயரமாகவும் இருக்கிறது. 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஆஃப் ரோடு எஸ்யுவி நீண்ட செங்குத்தான கிரில், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    2020 மஹிந்திரா தார் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. இத்துடன் கன் மெட்டல் ஷேட் அலாய் வீல்கள் கொண்டிருக்கிறது. இதில் வழக்கமான வடிவமைப்பு அம்சங்கள், 7 ஸ்லாட் கிரில், வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப்களை கொண்டிருக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் கோனா எலெக்ட்ரிக் காரை கடந்த ஆண்டு ஜிலை மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 23.7 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஹூண்டாய் நிறுவனம் மற்றொரு பிரம்மாண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சியோன் சியோப் கிம் தெரிவித்தார்.

    ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

    இதுதவிர குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவும் ஹூண்டாய் திட்டமிட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் 2022 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 முதல் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிகிறது. 

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் சிஎன்ஜி மாடல் கார் விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் சிஎன்ஜி கார் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை 1,06,443 எஸ் சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்துள்ளது.

    நிறுவனம் சார்பில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் கொண்ட வாகனங்களை அதிகம் விற்பனையான நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுசுகி பெற்று இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சிஎன்ஜி விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் 15.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    மாருதி சுசுகி ஆல்டோ எஸ் சிஎன்ஜி

    இந்தியாவில் காற்று மாசை குறைக்கும் திறன் கொண்ட வாகனங்களை ஊக்குவிக்க மாருதி சுசுகி நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மிஷன் கிரீன் மில்லியன் எனும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின கீழ் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது அதிவேகமாக பத்து லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்ஆர், எர்டிகா மற்றும் ஈகோ போன்ற மாடல்களில் சிஎன்ஜி வேரியண்ட்களை வழங்கி வருகிறது.
    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் விசேஷ சலுகையை அறிவித்து இருக்கிறது.



    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் மாடல் கார்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ரெனால்ட் நிறுவனத்தின் மூன்று மாடல்களுக்கும் ரூ. 60 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    என்ட்ரி லெவல் க்விட் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 4 ஆயிரத்திற்கு கார்ப்பரேட் சலுகை மற்றும் ரூ. 4 ஆயிரம் கூடுதல் சலுகை உள்ளிட்டவை அடங்கும். கூடுதல் சலுகை ஊரக பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் சலுகை

    ரெனால்ட் டிரைபர் எம்பிவி மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரத்திற்கு லாயல்டி பலன்களும், ரூ. 7 ஆயிரத்திற்கு கார்ப்பரேட் சலுகை மற்றும் ரூ. 10 ஆயிரம் சலுகை ஊரக பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரத்திற்கு எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 20 ஆயிரத்திற்கு லாயல்டி பலன்கள், ரூ. 20 ஆயிரத்திற்கு கார்ப்பரேட் சலுகை மற்றும் ரூ. 10 ஆயிரத்திற்கு ஊரக பலன்கள் வழங்கப்படுகிறது.
    ×