தொழில்நுட்பம்
கொரோனா வைரஸ் பாதிப்பை டிராக் செய்ய புதிய செயலியை வெளியிட்ட மத்திய அரசு
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பை டிராக் செய்யும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆரோக்யசேது எனும் செயலி வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆரோக்யசேது எனும் மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவன கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய செயலி கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை டிராக் செய்ய முடியும்.
இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும்.
இன்ஸ்டால் செய்யப்பட்டதும் இந்த செயலி ஏற்கனவே ஆரோக்யசேது இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள சாதனங்களை கண்டறியும். பின் இன்ஸ்டால் செய்யப்பட்ட சாதனங்களை பயன்படுத்துவோரில் எவரேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரா என்பதை கண்டறிந்து பயனரின் அபாய அளவை கணக்கிடும்.
இந்த செயலியை கொண்டு மக்கள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வைக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பின் பயனர் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா என்பது போன்ற விவரங்களையும் இந்த செயலி வழங்குகிறது.
மத்திய அரசின் ஆரோக்யசேது செயலியை பயன்படுத்த மக்கள் ப்ளூடூத், லொகேஷன் மற்றும் டேட்டா விவரங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை செயலிக்கு வழங்க வேண்டும்.
செயலி சேகரிக்கும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த செயலி 11 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் இதனை பயன்படுத்த முடியும்.