தொழில்நுட்பம்
ஊழியர்களுக்காக பிரத்யேக முகக்கவசம் உற்பத்தி செய்த ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக பிரத்யேக முகக்கவசத்தை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வடிவமைக்கும் பொறியியல் குழுக்கள் ஒன்றிணைந்து புதிதாக முகக்கவசம் ஒன்றை வடிவமைத்து இருக்கின்றன. இந்த முகக்கவசங்கள் ஆப்பிள் ஊழியர்களுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய முகக்கவசங்களின் புகைப்படங்களை ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை. எனினும், இவை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதால் வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
மூன்று லேயர்களை கொண்டிருக்கும் ஆப்பிள் முகக்கவசங்களை அதிகபட்சம் ஐந்து முறை துவைக்க முடியும் என கூறப்படுகிறது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முகம் தெளிவாக தெரியும் படியான முகக்கவசங்களையும் வழங்குகிறது.
இந்த முகக்கவசங்கள் ஆப்பிள் கார்ப்பரேட் மற்றும் ரீடெயில் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்பட இருக்கின்றன.