தொழில்நுட்பம்
டிக்டாக்

இந்தியாவில் 59 சீன செயலிகள் மீண்டும் செயல்பட்டால் தக்க நடவடிக்கை - மத்திய அரசு எச்சரிக்கை

Published On 2020-07-22 12:16 IST   |   Update On 2020-07-22 12:16:00 IST
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன செயலிகள் மீண்டும் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை.


இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, தடை உத்தரவை கடுமையாக பின்பற்ற சம்மந்தப்பட்ட செயலிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஜூன் 29 ஆம் தேதி இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இவை பயனர் விவரங்களை பகிர்தல், நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது பங்கம் விளைவித்தல் போன்ற காரணங்களால் தடை செய்யப்பட்டன.

இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அனைத்து நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 



இந்த கடிதத்தில் தடை உத்தரவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடை செய்யப்பட்ட செயலிகள் மீறுவது சட்ட விரோத நடவடிக்கை என்பதோடு தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் குற்ற செயல் ஆகும். மேலும் இந்த விதிமீறல் பல்வேறு பிரிவுகளில் கீழ் குற்ற செயலாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நிறுவனங்களும் மத்திய அரசு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் இதை மீறும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில், டிக்டாக், ஹெலோ, லைக், கேம்ஸ்கேனர், விகோ வீடியோ, எம்ஐ வீடியோ கால்-சியோமி, கிளாஷ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்டவை அதிக பயனர்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News