தொழில்நுட்பம்
கொரோனா பரிசோதனைக்கான கூகுள் அம்சம்
கொரோனா வைரஸ் பரிசோதனையை செய்ய வழிவகுக்கும் கூகுள் அம்சம் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனா வைரஸ் தொடர்பாக சரியான விவரங்களை வழங்க கூகுள் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு இருக்கிறது. தற்சமயம் ஐசிஎம்ஆர் (ICMR) மற்றும் எம்வைஜிஒவி (MyGov) உள்ளிட்டவற்றுடன் இணைந்து கூகுள் சர்ச், அசிஸ்டண்ட் மற்றும் மேப்ஸ் சேவைகளில் புதிய அம்சம் ஒன்றை கூகுள் நிறுவனம் இணைத்து இருக்கிறது.
புதிய அம்சம் மூலம் பயனர்கள் நாடு முழுக்க இயங்கி வரும் கொரோனா பரிசோதனை மையங்களை கண்டறிந்து கொள்ளலாம். இந்த அம்சம், பயனர்கள் கொரோனா வைரஸ் சார்ந்த வார்த்தைகளை கூகுளில் தேடினால் புதிதாக டெஸ்டிங் (Testing) எனும் டேப் தெரியும். இத்துடன் தேடலுக்கான பதில்களும் இடம்பெற்று இருக்கும்.
இதுதவிர கொரோனா பரிசோதனை சார்ந்து பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள், தேவையான விவரங்கள் உள்ளிட்டவற்றையும் கூகுள் தெரிவிக்கிறது. இவற்றில்:
கொரோனா பரிசோதனைக்கு செல்லும் முன் தேசிய அல்லது மாநில உதவி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
மருத்துவர் வழங்கிய பரிசோதனை செய்யக் கோரும் மருந்து சீட்டை எடுத்து செல்ல வேண்டும்.
பரிசோதனை நிபந்தனைகள்.
பரிசோதனை மையம் அரசாங்கத்தால் இயக்கப்படுகிறதா அல்லது தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறதா என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
கூகுள் மேப்ஸ் சேவையில் தேடும் போது, முதலில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் விவரங்கள் மற்றும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் அடங்கிய கூகுள் சர்ச் பக்கத்திற்கான இணைய முகவரி காண்பிக்கப்படுகிறது.
தற்சமயம் கூகுள் நிறுவனம் சர்ச், அசிஸ்டண்ட் மற்றும் மேப்ஸ் சேவையில் நாடு முழுக்க 300 நகரங்களில் மொத்தம் 700 பரிசோதனை மையங்களின் விவரங்களை வழங்குகிறது. இந்த அம்சம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, மராத்தி, குஜராத்தி, இந்தி மற்றும் பெங்காலி என எட்டு இந்திய மொழிகளில் கிடைக்கிறது.