தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்

Published On 2020-05-29 09:36 GMT   |   Update On 2020-05-29 09:36 GMT
வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி அவர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை அபகரிக்கும் மோசடி கண்டறியப்பட்டுள்ளது.



வாட்ஸ்அப் தொழில்நுட்ப குழு என கூறிக் கொண்டு பயனர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை அபகரிக்கும் புதுவித மோசடி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் வாட்ஸ்அப் சார்பில் ஒரு அக்கவுண்ட்டில் இருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டு பயனர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை வழங்குமாறு கேட்கிறது. பயனர்களை நம்பவைக்கும் விதமாக இந்த அக்கவுண்ட் ப்ரோபைல் புகைப்படத்தில் வாட்ஸ்அப் லோகோ பயன்படுத்துகிறது.

வாட்ஸ்அப் செயலியின் புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை வெளியிடும் WABetaInfo, வாட்ஸ்அப் பெயரில் உலா வரும் புதிய மோசடி பற்றிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.



எனினும், வாட்ஸ்அப் நிறுவனம் செயலியை பயன்படுத்தி பயனர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யாது. மாறாக சமூக வலைதள அக்கவுண்ட் அல்லது வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைபக்கத்தின் மூலமாகவே முக்கிய விவரங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

வெரிஃபிகேஷன் கோட் கொண்டு வேறொரு புதிய சாதனத்தில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டினை ஆக்டிவேட் செய்ய முடியும். வாட்ஸ்அப் ப்ரோஃபைல் படம் இருப்பதால், விவரம் அறியாத பலர் இந்த மோசடியில் ஏமாற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

வாட்ஸ்அப் எப்போதும் பயனர்களுக்கு செயலி மூலம் குறுந்தகவல் அனுப்பாது. ஒருவேளை அனுப்பும் பட்சத்தில் பச்சை நிற வெரிஃபைடு சின்னம் தெரியும். மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் ஒருபோதும் பயனர் விவரங்களை வழங்க கோரி அதன் பயனர்களிடம் கேட்காது.
Tags:    

Similar News