தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி ஏ51

உலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Published On 2020-05-17 05:45 GMT   |   Update On 2020-05-16 11:28 GMT
உலக ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை பார்ப்போம்.



சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் உயர் ரக பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை ஒவ்வொரு முறையும் புதிய உச்சத்தை தொடுகிறது. இதன் காரணமாக பெரும்பாலானோர் சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களின் உயர் ரக மாடல்களை வாங்குகின்றனர்.

அந்த வகையில் ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 2020 முதல் காலாண்டு வாக்கில் உலகின் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல் சாம்சங் கேலக்ஸி ஏ51 என தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சியோமி ரெட்மி நோட் 8 மாடல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.



சாம்சங்கின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் முதல் ஆறு இடங்களில் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஃபிளாக்ஷிப் மாடல் மட்டுமே மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. உலகையே பாதித்து இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றும் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

எனினும், கொரோனா பாதிப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் விலை தற்போதைய கேலக்ஸி ஏ மற்றும் சியோமி ரெட்மி மாடல்களை விட குறைவு தான். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் ஸ்மார்ட்போன்களின் விலை பற்றி கவலை கொள்கின்றனர்.

ஆப்பிள் நிறுவனத்தை பொருத்தவரை ஐபோன் 11 மாடல் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இதன் உயர் ரக ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே ஆறு மற்றும் பத்தாவது இடங்களை பிடித்து இருக்கின்றன.
Tags:    

Similar News