தொழில்நுட்பம்
கிரின் 990 5ஜி

5ஜி சிப்செட் உருவாக்க சாம்சங், மீடியாடெக் உடன் கூட்டு சேரும் ஹூவாய்

Published On 2020-04-09 08:37 GMT   |   Update On 2020-04-09 08:37 GMT
ஹூவாய் நிறுவனம் 5ஜி சிப்செட்களை உருவாக்க சாம்சங் மற்றும் மீடியாடெக் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர இருக்கிறது.



ஹூவாய் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்ற சூழல் நிலவும் நிலையில், சீன தொழில்நுட்ப நிறுவனம் புதிய கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடபட துவங்கி இருக்கிறது. ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே தனது போன்களில் சொந்த சிப்செட்களை பயன்படுத்தி வரும் நிலையில், 5ஜி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர திட்டமிட்டுள்ளது.

குவால்காம் நிறுவனத்துடன் கூட்டு சேர முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதால், ஹூவாய் நிறுவனம் மற்ற இரண்டு முன்னணி நிறுவனங்களான சாம்சங் மற்றும் மீடியாடெக் உடன் கூட்டு சேர முயற்சிக்கலாம். சாம்சங் நிறுவனம் சொந்தமாக எக்சைனோஸ் 990 5ஜி பிராசஸரையும், மீடியாடெக் டிமென்சிட்டி 1000 5ஜி சிப்செட்டையும் உருவாக்கி இருக்கின்றன.  

ஸ்மார்ட்போன் பிராசஸர் உருவாக்கும் நான்கு முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஹூவாய் இருக்கிறது. ஹூவாய் தவிர குவால்காம், மீடியாடெக் மற்றும் சாம்சங் போன்றவை முன்னணி சிப்செட் உற்பத்தியாளர்களாக திகழ்கின்றன. ஹூவாய் நிறுவனம் 5ஜி பிராசஸர்களை உருவாக்கி அவற்றை ஹைசிலிகான் கிரின் 5ஜி பிரிவில் விநியோகம் செய்கிறது.



ஹைசிலிகான் கிரின் 5ஜி பிராசஸர்களை தாய்வான் செமிகன்டக்டர் மேனுபேக்ச்சரிங் கம்பெனி உற்பத்தி செய்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபக்கம் இருக்க. 5ஜி சந்தை மெல்ல விரிவடைய துவங்கிய நிலையில், தற்போதைய சூழலிலும் 5ஜி சந்தை அதிகளவு பாதிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு சூழலிலும் 5ஜி சந்தை பெருமளவு பாதிக்கப்படவில்லை என குவால்காம் நிறுவன துணை தலைவர் ஹௌ மிங்ஜூவான் தெரிவித்தார். தற்போதைய சூழலிலும் இந்த ஆண்டு 5ஜி சந்தை அதிக தட்டுப்பாடு மற்றும் வளர்ச்சியை பதிவு செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த ஹூவாய் நிறுவனத்திற்கு அதிகப்படியான 5ஜி சிப்செட்கள் தேவைப்படும். விரைவில் இந்த தொழில்நுட்பம் ஃபிளாக்ஷிப் மட்டுமின்றி மிட் ரேன்ஜ் சாதனங்களிலும் வழங்கப்படலாம். சாம்சங் மற்றும் மீடியாடெக் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கும் நிலையில், ஹூவாய் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Tags:    

Similar News