தொழில்நுட்பம்
கேலக்ஸி இசட் ஃபிளிப்

நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்

Published On 2020-02-22 04:42 GMT   |   Update On 2020-02-22 04:42 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை நிமிடங்களில் முடிந்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ. 1,09,999 விலையில் விற்பனை செய்யப் போவதாக அறிவித்தது. விலை அறிவிப்புடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்கப்பட்டது. முதல் நாளில் காலை 11.00 மணிக்கு முன்பதிவு துவங்கியதை அடுத்து நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாக சாம்சங் அறிவித்துவிட்டது.

இதுதவிர சாம்சங் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்தது. முன்பதிவின் போதே வாடிக்கையாளர்கள் முழு பணத்தை செலுத்த வேண்டும் என சாம்சங் தெரிவித்து இருந்தது. சாம்சங் இ ஸ்டோரில் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு பிரத்யேக விநியோகம் செய்யப்படும் என சாம்சங் அறிவித்தது.

அந்த வகையில் முதல் நாளில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 26-ம் தேதி விநியோகம் செய்யப்பட்டு விடும். இதன்பின் இரண்டாம் கட்ட முன்பதிவுகள் பிப்ரவரி 26-ம் தேதி துவங்கி அதற்கான விநியோகம் மார்ச் மாதத்தில் நடைபெறும் என தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு விபத்து காப்பீடு, ஒரு முறை ஸ்கிரீன் பாதுகாப்பு, ஒரு வருடத்திற்கு சாம்சங் கேர் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் ஒருமுறை ஸ்கிரீன் பாதுகாப்பு சேவை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கப்படுகிறது.



இதுதவிர நான்கு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சேவைக்கான சந்தா மற்றும் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த டிஸ்ப்ளேவினை இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கிறது. இதில் மிக மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை 200,000 அதிக முறை மடிக்க முடியும்.

கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300x112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலை போன்றே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இதில் பிரத்யேக ஃபிளெக்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் செயலிகளை பாதியாக பிரித்து, கீழ்புறம் கண்ட்ரோல்கள் கொண்டது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டுள்ளது.

இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News