தொழில்நுட்பம்
ஏர்டெல்

டெலிகாம் துறைக்கு ஒரு லட்சம் கோடி நிலுவை தொகை - தீவிர ஆலோசனையில் ஏர்டெல், வோடபோன்

Published On 2020-02-17 05:05 GMT   |   Update On 2020-02-17 05:05 GMT
மத்திய டெலிகாம் துறைக்கு கொடுக்க வேண்டிய ஒரு லட்சம் கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்துவது பற்றிய ஆலோசனையில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.



பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட 15 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்படி பாக்கித்தொகையை கடந்த 14-ந் தேதி நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த கட்டண பாக்கியில் ஒரு பகுதியை பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் ஆகிய 3 நிறுவனங்கள் இன்று (பிப்ரவரி 17) செலுத்த தீர்மானித்து உள்ளன. இந்த தொகையின் அடிப்படையில் மேற்படி நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் கூறினர்.



மொத்த தொகையில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இந்த 3 நிறுவனங்களும் செலுத்த வேண்டியிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முன்னதாக தங்கள் கட்டண பாக்கியில் ரூ.10 ஆயிரம் கோடியை பிப்ரவரி 20-ந் தேதிக்குள் செலுத்த அனுமதிக்குமாறு பாரதி ஏர்டெல் நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் இதற்கு மேல் எந்த அவகாசமும் வழங்கப்படாது என தொலை தொடர்புத்துறை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை பற்றிய கணக்கீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் நிலுவை தொகையில் ஒருபகுதியை செலுத்துவதாக தெரிவித்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய தொலை தொடர்புத்துறைக்கு சுமார் 53,038 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News