தொழில்நுட்பம்
இந்தியாவில் ஐகூ 5ஜி போன் டீசர் வெளியானது
ஐகூ பிராண்டின் 5ஜி ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஐகூ பிராண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க இருப்பதை சமீபத்தில் அறிவித்தது. விவோ நிறுவனத்தின் தனி பிராண்டாக ஐகூ சீனாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்திய சந்தையில் களமிறங்க இருக்கும் ஐகூ இங்கு தனது முதல் ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. ஐகூ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டீசருடன் புதிய ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்பதையும் தெரிவித்து இருக்கிறது. புதிய டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி புதிய ஐகூ ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளம் மட்டுமின்றி ஐகூ பிராண்டு தனியே வலைதளம் ஒன்றை துவங்கி புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை அதில் பதிவேற்றம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.