தொழில்நுட்பம்
ஹூவாய் மேட் எக்ஸ்.எஸ்.

குறைந்த விலையில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்

Published On 2020-01-18 05:58 GMT   |   Update On 2020-01-18 05:58 GMT
ஹூவாய் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



ஹூவாய் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முந்தைய மாடலான மேட் எக்ஸ்-ஐ விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனின் ஹின்ஜ் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டு, உறுதியான டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.



மேட் எக்ஸ் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மேட் எக்ஸ்.எஸ். வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய மேட் எக்ஸ்.எஸ். முந்தைய ஸ்மார்ட்போனை விட அளவில் சிறியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் மட்டும் 2400 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,70,504) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை விட விலை அதிகம் ஆகும். 

ஹூவாய் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனில் ஹின்ஜ் மேம்படுத்தப்பட்டு, முன்பை விட உறுதியாக ஸ்கிரீன் வழங்கப்படும் என ஹூவாய் நுகர்வோர் குழும நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு ஏற்கனவே தெரிவித்தார். மேட் எக்ஸ் போன்றே புதிய மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனும் கூகுள் சேவைகள் மற்றும் செயலிகள் இன்றி வெளியாகும்.
Tags:    

Similar News