தொழில்நுட்பம்
ஐபோன் எஸ்.இ.

இணையத்தில் வெளியான ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்

Published On 2019-12-10 04:20 GMT   |   Update On 2019-12-10 04:20 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 பற்றிய விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் மாடலில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.

2016 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களில் ஹெட்போன் ஜாக் அம்சத்தை முதல் முறையாக நீக்கியது. அதன்பின் அந்நிறுவனம் வெளியிட்ட ஐபோன்களில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை. அந்த வரிசையில் ஐபோன் எஸ்.இ. 2 மாடலிலும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஐபோனில் ஆடியோ அம்சத்தை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் லைட்னிங் கேபிள் அல்லது ப்ளூடூத் போன்ற வசதிகளை பயன்படுத்த வேண்டி இருக்கும். மேலும் இந்த ஐபோனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.



இதே சிப்செட் சமீபத்திய 10.2 இன்ச் ஐபேட் 2019 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சிப்செட் ஐபோன் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

இதுதவிர புதிய ஐபோன் மாடலில் 3 ஜி.பி. ரேம், டச் ஐடி கைரேகை சென்சார், லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் ஆன்டெனா டிசைன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த டிசைன் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் வசதியை அதிகளவு மேம்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.

ஐபோன் எஸ்.இ. 2 மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் எஸ்.இ. 2 பிளஸ் ஸ்மார்ட்போனினை 2021 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய சாதனத்தில் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய மாடலின் பவர் பட்டனில் டச் ஐடி வசதியை வழங்க ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News