தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். விலையும் உயர்த்தப்படுகிறது

Published On 2019-11-21 09:46 GMT   |   Update On 2019-11-21 09:46 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.



பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்களும் சேவை கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்தன. உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்வு பற்றி அறிவித்தன.

அந்த வரிசையில் தற்சமயம் பி.எஸ்.என்.எல். கட்டண உயர்வு பற்றி அறிவித்துள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலாக இருக்கும் நிலையில், எத்தனை சதவிகிதம் கட்டணம் உயர்த்தப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.



சமீபத்திய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகையை (ரூ. 92,000 கோடி) செலுத்த உத்தரவிட்டது. எனினும், நிலுவை தொகையை செலுத்தும் பட்சத்தில் டெலிகாம் நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், தொகையை செலுத்த நிறுவனங்கள் சார்பில் சலுகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை பரிசீலனை செய்த மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்கள் நிலுவை தொகையை செலுத்த மார்ச் 2022 வரை அவகாசம் அளித்துள்ளது. 

முன்னதாக பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.29 ஆயிரத்து 937 கோடி ஒதுக்கும். இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, இரு நிறுவனங்களும் இணைக்கப்படும். அப்படி இணைக்கப்படும்வரை, பி.எஸ்.என்.எல்.லின் துணை நிறுவனமாக எம்.டி.என்.எல். செயல்படும். என மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
Tags:    

Similar News