தொழில்நுட்பம்
ஏர்டெல்

பெரும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர்டெல்-வோடாபோன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன

Published On 2019-11-15 11:32 GMT   |   Update On 2019-11-15 11:32 GMT
உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெரும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர்டெல் வோடாபோன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.



ஒரு காலத்தில் லாபத்தை அள்ளி கொட்டிய செல்போன் தகவல் தொடர்பு நிறுவனங்கள் இன்று பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவைகள் 2016-ம் ஆண்டு அறிமுகமானது. அந்த நிறுவனம் வழங்கிய அதிரடி சலுகைகள் மற்றும் வசதிகளால் வாடிக்கையாளர்கள் அந்த பக்கம் தாவினார்கள்.

எனவே அதை சமாளிக்க முடியாமல் மற்ற தனியார் செல்போன் நிறுவனங்கள் தத்தளித்தன. இதனால் அதன் வருமானம் பெருமளவு குறைந்தது. பல நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது வோடாபோன், ஏர்டெல், ஜியோ ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் மட்டுமே செல்போன் சேவையாற்றி வருகின்றன.

செல்போன் நிறுவனங்கள் 2 வகையான கட்டணங்களை மத்திய டெலிபோன் துறைக்கு வழங்க வேண்டும். அதாவது லைசென்சு கட்டணம், அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) கட்டணம் என செலுத்த வேண்டும். அந்த நிறுவனங்களின் செல்பாடு அடிப்படையில் இந்த இரு கட்டணங்களும் நிர்ணயிக்கப்படும். 

இந்த கட்டணங்களை நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் செல்போன் சேவை வருவாயில் இருந்து மட்டும் கட்டிவந்தன. ஆனால் மத்திய டெலிபோன் துறை அவர்கள் விற்கும் போன்கள், பங்கு சந்தை வருமானங்கள், பழைய பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள் என அனைத்தையும் கணக்கிட்டு கட்டணங்களை நிர்ணயித்தது.

ஆனால் இவ்வாறு பணம் செலுத்த அந்த நிறுவனங்கள் முன்வரவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 15 நிறுவனங்கள் இவ்வாறு பணத்தை செலுத்த வேண்டியிருந்தது. அந்த நிறுவனங்கள் டெலிபோன் துறை கூறிய கணக்கின் படியே பணத்தை கட்ட வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 24-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.



இதன் காரணமாக இந்த நிறுவனங்கள் சுமார் 92 ஆயிரம் கோடி கட்ட வேண்டியது இருந்தது. அதாவது லைசென்சு கட்டணம், அலைக்கற்றை கட்டணம், 16 ஆண்டுகளாக இவை நிலுவையில் இருந்ததால் அதற்கான வட்டி, வட்டிக்கான அபராதம் மற்றும் அபராத தொகை என மொத்தமாக சேர்ந்து இவ்வளவு தொகையை கட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் வோடாபோன் நிறுவனம் ரூ.46,150 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ. 28,450 கோடியும் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க முடியாமல் திண்டாடிய இந்த நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் இன்னும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த பணத்தை 3 மாத காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது. எனவே நிறுவனங்கள் அந்த தொகையை கணக்கிட்டு கடந்த காலாண்டுக்கான லாப நஷ்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. அதாவது ஜூலையில் இருந்து செப்டம்பர் மாதம் வரை உள்ள காலாண்டில் அந்த நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கூறியுள்ளது.

இதன்படி வோடாபோன் நிறுவனம் ரூ.50,921 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ.23,405 கோடியும் நஷ்டமடைந்து இருப்பதாக கூறியுள்ளது. இதனால் இரு நிறுவனங்களையும் தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு நிலைமை சென்றுள்ளது.

எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு பல சலுகைகளை வழங்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. அதாவது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அவ்வளவு தொகையை எங்களால் கட்ட முடியாது. அதில் எங்களுக்கு விலக்கு தாருங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

மத்திய அரசு இதற்கு விலக்கி அளித்தால் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடியும். இல்லை என்றால் செயல்படுத்துவது கடினம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News