தொழில்நுட்பம்
இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் பிழையை கண்டறிந்த சென்னை இளைஞருக்கு ரூ. 21 லட்சம் பரிசு

Published On 2019-07-20 04:39 GMT   |   Update On 2019-07-20 04:39 GMT
இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய பிழையை கண்டறிந்த சென்னை இளைஞருக்கு அந்நிறுவனம் ரூ. 21 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.



ஃபேஸ்புக்குக்கு அடுத்த படியாக அதிக பயனாளர்களை கொண்ட முக்கிய வலைத்தளம் இன்ஸ்டாகிராம். திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை சென்னை சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்து சுட்டிக்காட்டி உள்ளார். இதற்காக அந்த இளைஞருக்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் ரூ. 21 லட்சத்தை பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த லட்சுமண் முத்தையா தொழில்நுட்பம் சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்படிதான் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை அவர் கண்டுபிடித்தார்.



இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பயனாளர்களின் கணக்குகளை எளிதில் ஹேக் செய்ய அனுமதித்த பிழையை லட்சுமண் கண்டுபிடித்தார். இன்ஸ்டாகிராம் பயனாளர் தனது பாஸ்வேர்டை (கடவு சொல்) மாற்றுவதற்கு தேவைப்படும் ரிக்கவரி கோடு மூலம் அவரது கணக்கை ஹேக் செய்ய முடியும் என்பதை லட்சுமண் முத்தையா செய்து காட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் இது குறித்து இன்ஸ்டாகிராமை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவுக்கு இந்த தகவலை அனுப்பினார். இதனை ஆராய்ந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பாதுகாப்பு குறைபாட்டை உடனடியாக சரி செய்தனர்.

மேலும், பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து தெரியப் படுத்திய லட்சுமண் முத்தையாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு 30,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 லட்சம்) பரிசாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் வழங்கியது.
Tags:    

Similar News