தொழில்நுட்பம்
டிக்டாக் லோகோ

நாங்கள் அப்படி செய்யவில்லை, செய்யவும் மாட்டோம் - குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த டிக்டாக்

Published On 2019-07-03 07:32 GMT   |   Update On 2019-07-03 07:32 GMT
பயனர் விவரங்களை கையாள்வது பற்றிய காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் குற்றச்சாட்டுக்கு டிக்டாக் பதில் அளித்திருக்கிறது.



காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் பிரபல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வீடியோ செயலியான டிக்டாக் பயனர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு வழங்குவதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

குழந்தைகளின் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக, டிக்டாக் செயலி மீது அமெரிக்க அரசு 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்தது. சீனா டெலிகாம் உதவியுடன் டிக்டாக் செயலி பயனர் விவரங்களை பரிமாற்றம் செய்வதாக சசி தரூர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அரசாங்கம் உடனடியாக பயனர் விவரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், சசி தரூர் குற்றச்சாட்டுக்கு டிக்டாக் பதில் அளித்துள்ளது. அதில், சசி தரூர் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் டிக்டாக் செயலியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. டிக்டாக் செயலி கிடைக்கும் சந்தைகளில் உள்ளூர் சட்ட விதிகளை முறையாக பின்பற்றி வருகிறோம்.



சீனாவில் டிக்டாக் செயல்படவில்லை, மேலும் அந்நாட்டு அரசாங்கத்திடம் டிக்டாக் பயனர் விவரங்கள் எதுவுமில்லை. இதுதவிர டிக்டாக் மற்றும் சீனா டெலிகாம் இடையே எவ்வித ஒப்பந்தமும் போடப்படவில்லை, என டிக்டாக் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமான குறைந்த காலக்கட்டத்திலேயே டிக்டாக் செயலி அதிக டவுன்லோடுகளை பெற்று பிளே ஸ்டோரில் முன்னணி இடம் பிடித்தது. முன்னதாக டிக்டாக் செயலியை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பின் கடும் நிபந்தணைகளுடன் செயலி மீதான தடை நீக்கப்பட்டது. 

தடைக்கு பின் மீண்டும் அறிமுகமான டிக்டாக் பிளே ஸ்டோரில் அதிகளவு டவுன்லோடு செய்யப்பட்டது. சமீபத்தில் வெளியான விவரங்களின் படி பிளே ஸ்டோரில் அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகள் பட்டியலில் டிக்டாக் கடந்த ஐந்து காலாண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. 2019 முதல் காலாண்டில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலியாகவும் டிக்டாக் இருக்கிறது.
Tags:    

Similar News