தொழில்நுட்பம்

வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் இணைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது

Published On 2018-07-27 06:51 GMT   |   Update On 2018-07-27 06:51 GMT
வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைப்புக்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் உருவெடுக்கிறது. #Vodafone #idea


வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைப்புக்கு அரசு சார்பில் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன் மூலம் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் புதிய டெலிகாம் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கிறது. ஒட்டுமொத்த டெலிகாம் சந்தையில் 35 சதவிகித பங்கு மற்றும் 43 கோடி பயனர்களுடன் முதலிடம் பிடிக்கிறது. தற்சமயம் 34.4 கோடி பயனர்களுடன் பாரதி ஏர்டெல் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருக்கிறது.

இருநிறுவனங்கள் இணைப்பு சார்ந்த விவரம் தெரிந்த மூத்த டெலிகாம் அதிகாரி கூறும் போது, இருநிறுவனங்கள் இணைப்புக்கு இறுதி ஒப்புதல் அளித்து விட்டது. இனி இருநிறுவனங்களும் கம்பெனிகள் பதிவாளர் மூலம் ஏற்கனவே பெற்ற அனுமதிகள் மூலம் இறுதிகட்ட பணிகளை துவங்குகின்றன.

டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இதர நீதிமன்றங்களின் முடிவுகளுக்கு கட்டுப்படும் பட்சத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 9-ம் தேதி மத்திய டெலிகாம் துறை இருநிறுவனங்கள் இணைப்புக்கு நிபந்தணைகள் நிறைந்த ஒப்புதலை வழங்கி, இணைப்பை பதிவு செய்ய நிபந்தனைகளை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் ரூ.7,268.78 கோடியை அரசாங்கத்திற்கு செலுத்தின. இதில் ரூ.3,926.34 கோடி ரொக்கமாகவும், ரூ.3,342.44 கோடி வங்கி கியாரண்டி மூலம் செலுத்தப்பட்டன.

ஐடியா மற்றும் வோடபோன் இணைப்புக்கு பின் டெலிகாம் நிறுவன மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக தலைவராக குமார் மங்கலம் பிர்லாவும் புதிய தலைமை செயல் அதிகாரியாக பலேஷ் ஷர்மா செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த நிறுவனத்தில் வோடபோன் நிறுவனம் 45.1% பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமம் 26% மற்றும் பங்குதாரர்கள் 28.9 சதவிகித பங்குகளை வைத்திருப்பர்.  #Vodafone #idea
Tags:    

Similar News