தொழில்நுட்பம்
16 வயதில் ஆப்பிள் ஆப் ஸ்டோரை கலக்கும் இளம் டெவலப்பர்
ஆப் ஸ்டோரில் வெளியான ஒரு மாத காலத்தில் 16 வயதான ஹர்ஷிதா அரோரா உருவாக்கிய செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முன்னணி இடம் பிடித்திருக்கிறது.
மீரட்:
இந்தியாவின் சஹாரன்பூரை சேர்ந்த 16 வயதான ஹர்ஷிதா அரோரா உருவாக்கிய செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி வெளியான இந்த செயலி அதிகம் பயன்படுத்தப்படும் கட்டண செயலியாக இருக்கிறது.
உலகின் 32 நாடுகளை சேர்ந்த 1000-க்கும் அதிகமான க்ரிப்டோகரண்சிக்களின் மதிப்பு குறித்த விவரங்களை இந்த செயலி அப்டேட் செய்கிறது. 14 வயதில் பள்ளி கல்வியை நிறுத்திக் கொண்ட அரோரா கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வீட்டிலேயே கல்வி கற்பதாக தெரிவித்திருக்கிறார்.
2016-ம் ஆண்டில் க்ரிப்டோகரண்சி குறித்து கேள்விப்பட்ட அரோரா, மிகவிரைவில் பிட்காயின் மைனிங் மற்றும் க்ரிப்டோகிராஃபி உள்ளிட்டவற்றை செய்ய துவங்கியுள்ளார். சிறு வயதிலேயே ஆப்பிள் இயங்குதளத்திற்கான செயலியை வெளியிட்டிருப்பதால் இவர் மீது சந்தேகம் மற்றும் குற்றச்சாட்டுக்களை எழுந்து, அவற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறார்.
'எனது 13 வயது முதல் ஆயத்த பணிகளை துவங்கினேன். ஐ.டி. துறை இதழ்கள், துறை சார்ந்த வளர்ச்சிக்களை தொடர்ந்து கற்றுக் கொண்டு க்ரிப்டோகரண்சி எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொண்டேன். இணைய நண்பர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் உரையாடியதில் அவர்களுக்கு செயலியில் தேவைப்படும் தகவல்களை அறிந்து கொண்டு பின் இந்த செயலி வெளியிடப்பட்டது,' என அரோரா தெரிவித்திருக்கிறார்.
மசாசூட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற MIT லான்ச் நிகழ்வில் கலந்து கொண்டது செயலியை உருவாக்க உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். நான்கு வாரங்கள் நடைபெற்ற நிகழ்வில் துறை சார்ந்த விவரம் அறிந்த 15 முதல் 19 வயதுடையவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் உதவியுடன் இந்த செயலி உருவாகியிருக்கிறது.
ஜூன் மாத வாக்கில் அமெரிக்கா செல்ல இருக்கும் அரோரா, விரைவில் ஸ்டார்ட்அப்களை துவங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தற்சமயம் ஸ்னாப் ஃபுட் எனும் செயலியை உருவாக்கி வருவதாகவும், இந்த செயலி குறிப்பிட்ட உணவு வகை சார்ந்த தகவல்களை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.