அறிந்து கொள்ளுங்கள்

முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் மரணம் - ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒத்திவைத்த சியோமி, ஐகூ!

Published On 2022-12-01 05:11 GMT   |   Update On 2022-12-01 05:11 GMT
  • சீன சந்தையில் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு சியோமி மற்றும் ஐகூ நிறுவனங்கள் தயாராகி வந்தன.
  • சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் ரத்தப் புற்றுநோய் மற்றும் உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.

சியோமி மற்றும் ஐகூ நிறுவனங்கள் தங்களின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வந்தன. இந்த நிலையில், புது ஃபிளாக்‌ஷிப் மாடல்களின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக சியோமி மற்றும் ஐகூ நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து இரு நிறுவனங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், சீனா உலக அரங்கில் இத்தனை வளர்ச்சியை அடைய உதவியர் எனும் பெருமைகளுக்கு உரித்தானவர் ஜியாங் ஜெமின். ரத்தப் புற்று நோய் காரணமாக, உடல் உறுப்புகள் செயலிழந்ததை அடுத்து இவர் உயிரிழந்தார். இவருக்கு வயது 96. இவர் உயிரிழந்த தகவல் வெளியானதும், சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெய்போவில் சியோமி 13 சீரிஸ் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

மேலும் புது ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது. சியோமி வரிசையில் ஐகூ நிறுவனமும் தனது ஐகூ 11 சீரிஸ் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்து இருக்கிறது. ஐகூ நிறுவனமும் தனது புது ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என சரியான தேதியை தற்போது அறிவிக்கவில்லை.

Tags:    

Similar News