அறிந்து கொள்ளுங்கள்

டுவிட்டருக்கு போட்டியாக புதிய வலைதளம் - மெட்டாவின் புதிய திட்டம்!

Published On 2023-05-20 10:37 GMT   |   Update On 2023-05-20 10:37 GMT
  • புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
  • புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.

சமூக வலைதள உலகில் மாற்றம் எப்போதும் மாறாத ஒன்று. முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், P92 அல்லது பிராஜக்ட் 92 பெயரில் புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய சமூக வலைதள சேவை உருவாக்கப்பட இருக்கிறது.

இந்த சமூக வலைதளம், "Instagram for your thoughts" எனும் டேக்லைன் கொண்டிருக்கிறது. இந்த வலைதளம் பிரத்யேக அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம் மெட்டா மற்றும் தேர்வு செய்யப்பட்ட கிரியேட்டர்களிடையே நடைபெற்ற ரகசிய உரையாடல்களை தொடர்ந்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த தளம் மாஸ்டோடான் போன்ற சேவைகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கும். இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு புதிய தளத்திலும் சைன்-இன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இன்ஸ்டாவில் உள்ள ஃபாலோயர்களை புதிய தளத்திலும் சின்க் செய்து கொள்ள முடியும்.

புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. மெட்டாவின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராமின் கிளை நிறுவனமாக புதிய வலைதளம் செயல்பட இருக்கிறது. இந்த வலைதளம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் தளத்தினை உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், டுவிட்டர் போன்று செய்திகளை பகிரும் நோக்கில், எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தின் ஆரம்பக்கட்ட சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாத வாக்கில் இந்த வலைதளம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

புதிய வலைதளத்தில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் கொண்ட பதிவுகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் இணைய முகவரிகளை பகிர்வது, புகைப்படம் அல்லது ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மற்ற சமூகவலைதளங்களில் இருப்பதை போன்றே, இதிலும் லைக், ரிப்ளை மற்றும் ரிபோஸ்ட் போன்ற வசதிகளும் வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News