அறிந்து கொள்ளுங்கள்

பணிநீக்கம் எதிரொலி - வீதியில் இறங்கி போராடிய கூகுள் ஊழியர்கள்

Published On 2023-04-06 06:32 GMT   |   Update On 2023-04-06 06:32 GMT
  • சுவிட்சர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தொழிற்சங்க உறுப்பினர்கள், கூகுள் நிறுவனம் பிரச்சினைகளை தவிர்க்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

இங்கிலாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள், அந்நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு உலகம் முழுக்க சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது. இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள கூகுள் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்து கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கம் தொடர்பான பிரச்சினைகளை கூகுள் நிறுவனம் தவிர்த்து விட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தின் பாங்ராஸ் சதுரங்க அலுவலகத்தின் வெளியில் போராட்டம் நடத்தப்பட்டது.

 

சர்வேதச பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவர் என கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனம் ஊழியர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

எனினும், இது போன்ற பேச்சுவார்த்தைகளில் தொழிற்சங்க நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாமல் இருப்பதை கூகுள் உறுதிப்படுத்தி வருகிறது. ஊழியர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. முன்னதாக சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News