அறிந்து கொள்ளுங்கள்

ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை உருவாக்கும் ஆப்பிள்

Published On 2023-02-07 12:47 GMT   |   Update On 2023-02-07 12:47 GMT
  • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
  • முன்னதாக வெளியான தகவல்களில் இந்த தொழில்நுட்பம் ஐபோன் 14 சீரிசில் வழங்கப்படும் என கூறப்பட்டது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் நீண்ட காலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. எனினும், ஆப்பிள் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும் தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்களில் இந்த தொழில்நுட்பத்தை வழங்கலாம் என கூறப்படுகிறது.

முழுமையான ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஐபோன்களில் வழங்குவதற்கான பணிகளை ஆப்பிள் இதுவரை நிறைவு செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் ஸ்மார்ட்போனினை வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஆக மாற்றி விடும். இதை கொண்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட இதர சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.

அதாவது உங்களின் மொபைல் போன் கொண்டு ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அல்லது வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட சிறிய மின்சாதனங்களை சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கும் என கூறப்பட்டது.

எனினும், இந்த தொழில்நுட்பத்தை வழங்க ஆப்பிள் தவறிவிட்டதாக தெரிகிறது. இந்த முறை ஆப்பிள் பொறியாளர்கள், வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை வழங்கி முடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்திற்கான மென்பொருள் ஆப்டிமைசேஷன்கள் உருவாக்கப்படுகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் பைலேடரல் வயர்லெஸ் சார்ஜிங் என்றும் அழைக்கப்படுகிறது.

ஐபோன் 12 சீரிசில் இருந்தே ஆப்பிள் நிறுவனம் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வழங்குவதற்கான உபகரணங்களை பயன்படுத்த துவங்கிவிட்டது. எனினும், இந்த அம்சம் பல்வேறு காரணங்களால் செயலிழக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை முழுமையாக வழங்கியதும், ஐபோன்களில் இந்த அம்சம் வழங்கப்படலாம். புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் பட்சத்தில் இதை கொண்டு ஐபோன் மூலம் ஏர்பாட்ஸ்-ஐ சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News