அறிந்து கொள்ளுங்கள்

நீண்ட காலம் வழங்காமல் இருந்த அம்சம்.. ஒருவழியாக மனம் மாறிய ஆப்பிள்..

Published On 2023-11-17 08:29 GMT   |   Update On 2023-11-17 08:29 GMT
  • அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
  • சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஆப்பிள் நம்பிக்கை.

ஆப்பிள் நிறுவனம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி வழங்கிய ஆப்பிள் நிறுவனம் தற்போது ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (ஆர்.சி.எஸ்.) ரக மெசேஜிங் வசதியை வழங்க இருக்கிறது. இது தொடர்பான தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதன்படி அடுத்த ஆண்டு முதல் ஐபோன்களில் ஆர்.சி.எஸ். வசதி வழங்கப்படும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் ஆர்.சி.எஸ். வழிமுறை வழக்கமான எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.-களுடன் ஒப்பிடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐபோன்களில் ஆர்.சி.எஸ். ஐமெசேஜ் உடன் வழங்கப்பட இருக்கிறது. இது ஆப்பிள் பயனர்களுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான மெசேஜிங் அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் ஆர்.சி.எஸ். மெசேஜிங்கை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் ஏற்கனவே உள்ள ஐமெசேஜ் சேவையை நீக்காமல், கூடுதலாக ஆர்.சி.எஸ். சேவையை வழங்க இருக்கிறது. ஐபோன் பயனர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு ஐமெசேஜ் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆர்.சி.எஸ். அறிமுகம் செய்யப்பட்டாலும் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும். 

Tags:    

Similar News