அறிந்து கொள்ளுங்கள்

ஒரே மாதத்தில் ரூ. 8 ஆயிரம் கோடி - இந்தியாவில் ஆப்பிள் செய்த சாதனை!

Published On 2023-01-23 12:45 GMT   |   Update On 2023-01-23 12:45 GMT
  • ஆப்பிள் நிறுவனம் சர்வதேச சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக இருக்கிறது.
  • கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த முதல் நிறுவனம் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. மத்திய அரசின் "மேக்-இன்-இந்தியா" திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரூ. 8 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்வதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இது குறித்த அரசு தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் முன்னணி மொபைல் போன் ஏற்றுமதியாளராக சாம்சங்கை முந்தி இருக்கிறது.

ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் ஹான் ஹாய், பெகட்ரான் மற்றும் விஸ்ட்ரன் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் ஆலைகளை தமிழ் நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இயக்கி வருகின்றன. இவற்றுக்கு மத்திய அரசின் ஸ்மார்ட்போன் ப்ரோடக்ஷன்-லின்க்டு-இன்செண்டிவ் (PLI) திட்டத்தின் கீழ் உள்ளன. இந்த திட்டம் ஏப்ரல் 2020 வாக்கில் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் PLI திட்டமானது இந்தியாவை ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதன உதிரிபாகங்களின் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் பங்கேற்க உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி , ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்க வேண்டும்.

மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தவிர, மேலும் சிறு இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் இருந்து ஐபோன்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. 2022-23 நிதியாண்டில் இந்தியா 9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய ஆண்டில் இருந்த 5.8 பில்லியன் டாலர்களை விட அதிகம் ஆகும். 

Tags:    

Similar News